உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழைத்து ஓடாகிப் போனவர்கள், துன்பத்திலும் துயரத்திலும் அழுந்திப் போனவர்கள், வேசிகள், பிச்சைக்காரர்கள், எழுத்தாளர்கள், வாழ்க்கைச் சோதனைகளைத் தாங்க முடியாத அபலைகள், கிராமவாசிகள், சாமியார்கள், முதியோர்கள், வெவ்வேறு ஜாதி மதங்களைச் சேர்ந்தவர்கள், சீர்திருத்தக்காரர்கள், புரட்சிவாதிகள் என்று பலர் வருகிறார்கள். புராணக் கதாபாத்திரங்களும் அதீத கற்பனை உலகங்களில் வாழ்பவர்களும் கடவுள்களும் வருகிறார்கள். வேதாளம், பதுமைகள், கட்டில், பிரம்மராக்ஷஸ், முயல், நரி, நாய் இவற்றை எல்லாம் கதாபாத் திரங்களாக்கிப் புதுமைப்பித்தன் உலாவ விட்டிருக்கிறார்.

இவ்வாறு பல்வேறுபட்ட கதாபாத்திரங்களைப் படைத்து நடமாட விடும் புதுமைப்பித்தனிடம் அவரது சுய அனுபவம் சார்ந்து இரண்டு உலகங்கள் தெள்ளத் தெளிவாக மேலெழுந்து வருகின்றன. ஒன்று நெல்லை மண். மற்றொன்று சென்னை நகரம். இவ்விரு உலகங்கள் சார்ந்த அனுபவங்கள் கதைகளில் பிரதிபலிக்கும்போது அவை பொதுவாக அழுத்தம் கொள்கின்றன. அவரது உணர்வுகள் சார்ந்து இந்த உலகங்கள் எதிரும் புதிருமாக இருக்கின்றன. நெல்லை ஆசை சார்ந்த உலகமாகவும் சென்னை நிராசை சார்ந்த உலகமாகவும் உருவாகின்றன. நெல்லையில் காலம் மனிதனுக்குச் சேவகம் செய்யும்போது சென்னையில் காலம் அவனை முடுக்கி ஓரிடத்தில் நிற்கவிடாமல் விரட்டியவண்ணம் இருக்கிறது. நெல்லை மண்ணுக்குரிய சாலைகளில் இரட்டைக் காளை வண்டிகள் ஜல்ஜல் என்று ஓடும்போது சென்னையில் டிராமின் கணகணப்பு; மோட்டாரின் ஓலம்; பஸ்சின் இரைச்சல். நெல்லையில் தாமிரவருணி; சென்னையில் கூவம்.

சுமார் பன்னிரண்டு வயதில் நெல்லை மண்ணுக்கு வந்து தனது இருபத்தைந்தாவது வயதுவாக்கில் குடும்பப் பின்னணி சார்ந்த மன முறிவுகளுக்கு ஆட்பட்டு அவர் நெல்லையை விட்டு நிர்ப்பந்த வெளியேற்றம் கொள்கிறார் என்றாலும் நெல்லையை மனத்தில் வைத்துத் தான் அவர் சென்னையையும், ஒரு எல்லை வரையிலும் வாழ்க்கைக் கஷ்டங்களையுமே சகித்துக்கொண்டிருந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. நெல்லை பசுமையாக அவர் மனத்தில் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. நோய்வாய்ப்பட்ட நிலையில் செல்லம்மாள் 'ஊருக்கு ஒருக்க போய்ப் போட்டு வரலாம்' என்கிறாள் (செல்லம்மாள்). புதுமைப் பித்தனின் குரலும் இதற்குள் இருக்கிறது. 'கலியாணி' கதையில் சுப்புவய்யர் பதினேழு வயது கலியாணி கண் முன் இருக்க மறைந்து போய் விட்ட மூத்தாளை நினைத்துக் கொண்டிருப்பதுபோல் சென்னை வாழ்வில் நெல்லையின் ஞாபகம் அவரை வாட்டுகிறது என்றே சொல்லலாம். சுலோசன முதலியார் பாலம், குறுக்குத்துறை, சிந்துபூந்துறை, மாவடியாபிள்ளை வளைவு, சிங்கிகுளம் போன்ற இடங்களைப் பற்றியெல்லாம் அவர் கூறும்போது வெறும் இடங்களின் பெயர்களைச் சொல்வதாக நமக்குத் தோன்றுவதில்லை. அவையெல்லாம் அவரது நினைவுகள் சுவைக்கும் கரும்புகளின் அடிக் கணுக்களாக நம் மனத்தில் விரிகின்றன.

இவ்வளவு கனவுகள் இருந்தும் ஏதும் மிகையின்றி நெல்லை மண்ணின் குணங்களை மட்டுமல்ல குறைகளையும் தீவிரப் பரிசீலனைக்கு

45