உள்ளடக்கத்துக்குச் செல்

கலிங்க ராணி/கலிங்க ராணி 23

விக்கிமூலம் இலிருந்து


23


"ண்பர்களே! நள்ளிரவிலே நாம் வந்த காரியம் முடிந்துவிட்டது. பாசறை சென்று படுத்திருங்கள். பகலிலே நாட்டின் எதிர்கால அமைப்பு ஏற்பாடாகும். அரசியார் பணிந்துவிட்டார்! முழு விவரத்தையும் கொலுமண்டபத்தில் கூறுகிறேன்" என்று கூறினார். படையின் சந்தோஷ ஆரவாரம் அதிகரித்தது. ஜெயசோஷம் கடலொலிபோல் ஆகிவிட்டது. படை, பிரிவு பிரிவாகப் பாசறை சென்றன. அரசியோ, அதையும் கவனியாமல் பீடத்திலே கரிமுகனை இருக்கக்கூறி, பலப்பல காதற் சம்பவங்களைக் கூறிக் கொண்டே வந்தாள்.

"புதிய மலர்த்தோட்டத்திலே, உலவும்போது என் மேனி பொன்னிறமானது என்று நீ கூறவில்லையா?"

"கவனமிருக்கிறது! சொன்னேன். ஆனால் அது காதலுக்காகக் கூறவில்லையே. அன்று, ஆரியன் அவன் பூஜிக்கும் தேவியின் சிலை பொன்னால் செய்யவேண்டுமென்று கூறினான். 'பொன் சிலையைப் பூஜிப்பானேன். பொன்னிற மேனி கொண்ட எமது அரசியாரே எமக்குத் தேவி!' என்று சொன்னதுண்டு. அதற்காகக் காதலித்தேன் என்று அர்த்தமா?"

"அதுமட்டுந்தானா? 'ஒரு மண்டலத்தைத் தங்கள் காலடியிலே கொண்டுவந்து காணிக்கை செலுத்துவேன்' என்று ஒருநாள் சொல்லவில்லையா? அதன் பொருள் என்ன?'

"படை பலத்தைக் காட்டவே அது கூறினேன். காதலுக்காக அல்லவே."

"இரவு பகல் எந்த நேரமும் தங்களைப் பற்றியே எண்ணி எண்ணி ஏங்குகிறேன்" என்று சொன்னதுண்டா, இல்லையா? அதுகூடக் காதல் மொழியல்லவா?"

"சொன்னதுண்டு! தாங்கள் அரச காரியத்தைக் கவனிக்கவில்லை. மலர்புரியின் கீர்த்தியைப் பரப்ப முயலவில்லை என்று ஏங்கியே அதைக் கூறினேன். மாலை சூட்ட அல்லலவே!"

"நான் எதை எதைக் காதற்பேச்சு என்று நம்பினேனோ அவைகளை எல்லாம் நீ மறுத்துப் பேசுகிறாயே, கரிமுகா! என்மீது பிறந்த காதலை, தொல்லை நிரம்பிய அரசுக்காக, அநியாயமாகக் கொன்றுவிடாதே" என்று மலர்புரி அரசி கூறினது கேட்டு கரிமுகனின் மனம் மருண்டுவிட்டது. 'நாம் எண்ணியது ஒன்று; நடப்பது நேர்மாறாக இருக்கிறது! இதென்ன விபரீதம்?" என்று எண்ணித் திகைத்தான். அரசி எதிர்ப்பாள். இல்லையேல் கதறுவாள் என்று எதிர்பார்த்தானேயொழிய காதல்மொழி பேசுவாள் என்று கனவுகூடக் கண்டதில்லை. அவன் மாதரிடம் நெருங்கிப் பழகியுமறியாதவன். அதிலும் அரசியிடம், அவன் ஒருநாளும் இதை எதிர்பார்த்தவனல்ல. எனவே கரிமுகன் ஒன்றும் தோன்றாது விழித்தான். அவன் திகைப்பது தெரிந்த அரசி, மேலும் மேலும் காதல் பற்றியே பேசலானாள். கர்ணகடூரமாகிவிட்டது கரிமுகனுக்கு.

அகழிக்கு வெளியே, வீரமணியின் படைகள் ஆர்ப்பரிப்பதை அறிந்து, கரிமுகனாட்களில் சிலர், அரண்மனைக்கு வந்தனர். மாடிமீது நின்றபடியே கரிமுகன், "என்ன விஷயம்?" என்று கேட்டான். "மணியின் படைகள் அகழிக்கு வெளியே இருக்கின்றன." என்றுரைத்தனர். கரிமுகன் பதில் கூறுமுன் அரசி அவனிடம் "கரிமுகா! வீணாக நமது ஆட்கள் ஒருவரையொருவர் வெட்டி வீழ்த்திக் கொள்ள வேண்டாம். மணியின் படை தேவிக்குச் சொந்தம்; அதை எதிர்ப்பது பாவம்" என்றுரைத்தாள்.

"தேவியும் அவள் திருவடி தாங்கியான ஆரியனும், அவனுக்குத் துணையாக உள்ள மணியின் படையும் என்ன யோக்யதை கொண்டன என்பதை நானறிவேன். நீர் குறுக்கிட வேண்டாம். கொஞ்சுமொழி பேசி என் கோபத்தைத் தணிக்க முடியாது. நிச்சயமாகக் கூறுகிறேன். நான் உன்னைக் காதலித்ததுமில்லை; இனிக் காதலிக்கப் போவதுமில்லை. அரசு ஆளும் திறனை நீ இழந்துவிட்டாய், ஆகவே முடிதுறந்துவிடத்தான் வேண்டும். இதுவே என் முடிவான பேச்சு" என்று கூறிவிட்டு, "மணியின் படைகள்மீது இப்பக்கமிருந்தே எரி அம்புகளைச் சொரியுங்கள். அகழியைச் சுற்றிலும் காவலரைச் சுறுசுறுப்பாக இருக்கச் செய்யுங்கள்." என்று படைவீரருக்கு உத்தரவிட்டான்.

தனது தந்திரப் பேச்சு, கரிமுகனைப் பதட்டமாக ஏதும் செய்யவொட்டாது தடுத்திடப் பயன்பட்டதேயன்றி, அவனுடைய மூலநோக்கத்தை தன்னால் மாற்றமுடிய வில்லை என்பதை அவள் உணர்ந்து சற்று அஞ்சினாள். மணிவீரனின் படைகளும் தனக்கு உதவி செய்ய முடியாத நிலைமையிலிருப்பதையும், ஆரியன் ஏதும் செய்யாதிருப்பதையும் எண்ணி ஏங்கினாள். விடியுமட்டும் பேசினாலும், கரிமுகன் தன் தீர்மானத்தை மாற்றிக்கொள்ள மாட்டான் என்பது தெரிந்து திகைப்புற்று நின்றாள்.

இப்போது மீண்டும் அவன் பேசலானான்:

"அரசியாராக நீர் இருத்தல் கூடாதென்று மட்டும் கூறுகின்றேனே தவிர அதற்காக உமக்கு வாழ்க்கை வசதியைத் தரவோ, மதிப்புத் தரவோ, நான் மறுக்கவில்லை. மலர்புரியின் நிலைமையை உத்தேசித்து, மலர்புரியின் புகழ் மங்கி வருவதைப் போக்க வேண்டுமென்பதற்காகவே நான் இக்காரியத்தைச் செய்யத் துணிந்தேன்" என்று கரிமுகன் தன் நோக்கத்தை விளக்கினான்.

—இப்படி, இங்கே சொல்லம்புகள் பறந்து கொண்டிருந்தபோது, அங்கு அகழ் வாயிலில் எரி அம்புகள் பறந்து கொண்டிருந்தன. வீரமணி அகழியைக் கடக்கப் பலவித முயற்சிகள் செய்து பார்த்தான்; முடியவில்லை. 'கரிமுகனின் படை உள்ளே என்னென்ன காரியம் செய்கிறதோ, அரசியைக் காவலில் வைத்துவிட்டதோ, அரசியின் உயிருக்கே ஏதேனும் ஆபத்து நேரிட்டதோ' என்றெல்லாம் வீரமணி எண்ணித் துடித்தான்.

ஆரியன் தேவி கோயிலிலே கொலுமண்டபத்திலே கோலாகலமாக வீற்றிருந்தான். அவனுடைய சூது பலித்து வருவது கண்டு சந்தோஷித்தான். கரிமுகனைக் கொண்டு அரசியின் கர்வத்தை அடக்கிவிட்டோம். கரிமுகனின் செயலைக் கண்டு வெறுப்படைந்துள்ள மக்களைக் கொண்டு இனி கரிமுகனை அடக்க வேண்டும் என்று தீர்மானித்து, 'பொழுது விடியட்டும்' என்று எண்ணினான்.

அரசியைக் கரிமுகன் அரண்மனையிலே காலங் கடத்தவிடவில்லை. அப்போது அரசிக்கு வேறோர் வழி தோன்றிற்று. "சரி! என் முடியைத் துறப்பதானால் அதை அரசவம்சத்தாருக்கே தரவேண்டும். நீ படைத்தலைவன். ஆகவே, தேவி சன்னதியிலே என் கீரீடத்தை வைத்துவிடுகிறேன். நீ உன் அரசிக்குக் கேடு செய்ததுபோல, தேவி கோயிலிலும் உன் துடுக்குத் தனத்தைக் காட்டி, முடியை எடுத்து அணிந்துகொண்டு, மலர்புரிக்கு நான்காவது அரசனாக இரு" என்று வெறுத்துக் கூறுபவள்போல் பேசினாள். கரிமுகன் அதற்கு இசைந்தான். உடனே இருவரும் தேவி கோயிலுக்குச் சென்றனர்.

ஆனந்தமாக உள்ளே அமர்ந்திருந்த ஆரியன், இந்த எதிர்பாராத சம்பவத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டான்; ஏதுமறியாதான்போலக் கரிமுகனை நோக்கி, "அரசியைக் கைதியாக்கியா இங்கு கொண்டுவந்தாய்? உன் அக்ரமம் அரண்மனையோடு நிற்கட்டும்; ஆலயத்திலுமா நுழைவது? உன் பேச்சைக் கேட்டுப் படை நடக்கவும், பயந்த மக்கள் பதுங்கிக் கொள்ளவும், நீ கொக்கரிக்கவும், அரசி துயருறுதலுமான காலம் வந்ததே, இதற்கென்ன செய்வது?" என்று கூறினான். ஆரியனின் மொழிகேட்டு, அரசியின் மனம் உருகிற்று.'என்ன வாஞ்சை இவருக்கு! ஒரு ராஜ்யத்தை அபகரிக்கும் அக்ரமக்காரனிடம் அச்சமின்றிப் பேசுகிறாரே! தேவியின் அருள் பெற்றவரிடம் இவன் என்ன செய்யமுடியும்?' என்று எண்ணி, துக்கத்தையும் மறந்து புன்சிரிப்புடன் ஆரியனின் பாதத்தில் வீழ்ந்து வணங்கி, "ஆலய அரசே! கரிமுகனின் படைபலம் என் பட்டத்தைத் தட்டிப்பறிக்க வேண்டுமென்பது; தேவியின் திருவுள்ளமும் அதுவாக இருப்பின் நான் அதை மாற்ற முடியுமா? அவள் ஆணைப்படி நடக்கட்டும்" என்றபடி கைகூப்பி நின்றாள்.

கரிமுகன், ஆரியனை நோக்கி, "கூறுமய்யா கோயிற்காவலரே! தேவியின் கட்டளையைக் கூறும்" என்று பேசினான். ஆரியன் சற்றுத் திகைத்தான். தன் ஏற்பாட்டின் படியே கரிமுகன் இப்புரட்சியை நடத்தினானென்ற போதிலும், கரிமுகனின் கரம் வலுத்துள்ள அந்த நேரத்தில் அவன் என்ன முடிவுடன் ஆலயம் வந்துள்ளானோ என்று அச்சமாகத்தான் இருந்தது. கரிமுகனைத் 'துரோகி' 'புரட்சிக்காரன்' என்று மக்கள் கருதவேண்டிய அளவுதான் புரட்சி இருக்க வேண்டுமென்று ஆரியன் நினைத்தான்.

ஆனால் மக்கள் ஒரே அடியாக அடங்கிவிடுவர் என்று ஆரியன் கருதவில்லை. பெருத்த அமளி நடக்கும். ஊர் மக்களின் எதிர்ப்பு கரிமுகனின் படைபலத்தை ஒடுக்கிவிடும் என்றே எண்ணியிருந்தான். கரிமுகனின் கரம் மிக அதிகமாக ஓங்கிவிட்டதே என்று கலங்கினான். இந்தச் சமயத்திலே தேவி சேனையை வெளியே அனுப்பியதும் தவறு என்று எண்ணி வருந்தினான். ஆலயத்துக்குள் இந்த நிலையில் இருக்கையில், 'தீ!தீ!தீ!' என்று பெருங்கூசசில் கேட்டது. மலர்புரி வீதியிலே, பல இடங்களிலே நெருப்புப் பிடித்துக்கொண்டு விட்டது. தீ பரவியபடி இருந்தது; ஊர் மக்கள் ஓவெனக் கூவிக்கொண்டு அல்லோல கல்லோலப்பட்டனர். பாசறைகளிலே ஆயுதங்களைப் போட்டுவிட்டு படைவீரர்கள், தீயணைக்க முனைந்தனர்.

'கரிமுகனின் புரட்சியை அடக்கப் போதுமான ஆயுத பலம் இல்லையே' என்று எண்ணி ஏங்கிய மக்கள் சிலர் கூடிப்பேசித் தத்தம் வீடுகளுக்குத் தீயிட்டுக் கொள்வதென்றும், தீ பரவினால் ஊரிலே படையிடம் உண்டான அச்சமும் பறந்து போகும் அளவு, குழப்பம் ஏற்படும்; அச்சமயத்திலே, படைவீரர்களும் ஏமாறுவர்; அதே நேரத்தில் பாசறை புகுந்து ஆயுதங்களை எடுத்துக்கொள்வதென்றும், தந்திரத் திட்டம் வகுத்து, அதன்படியே, சில தன்னலமற்ற தியாக புருஷர்கள், எத்தகைய கஷ்ட நஷ்டமேற்கவும் துணிவு கொண்டு, தத்தமது மாளிகைகளிலே தீ மூட்டிவிட்டனர். தீயணைக்கப் பலர் கூடுமுன், தீ பரவலாயிற்று. அவர்கள் எண்ணியபடியே ஊர் மக்கள், புரட்சியையும் கரிமுகன் படையையும் மறந்து, 'தீ! தீ!' எனக் கூவிக்கொண்டு, பெண்டு பிள்ளைகளைக் காப்பாற்றவும், பேழைகளைத் தேடவுமாயினர். தமது வீட்டு மக்களைக் காப்பாற்றும் நினைப்புமின்றி, அந்தத் தியாக புருஷர்கள், ஓடோடிச் சென்று, பாசறை புகுந்து, ஆயுதங்களை வாரி வாரி எடுத்துத் தமது தோழர்களுக்குக் கொடுத்தனர்.

ஆயுதங்கள் கிடைத்ததும், மக்கள் சந்தோஷ ஆரவாரம் புரிந்து, "தீர்ந்தான் கரிமுகன்!" என்று கூவிக்கொண்டு ஆயுதங்களைச் சுழற்றினர். இதற்குள், தீயணைப்பு வேலையும் ஒருவாறு முடிந்தது. கோயிலுக்குள்ளே குமுறிக் கிடந்தவர்கள் ஒரு பக்கம் தீ அணைக்கப்படுவதையும், மற்றோர்புறம், ஆயுத ஒலி எழுப்புவதையும் கேட்டு, விஷயம் விளங்காது திகைத்தனர். இதனிடையில் அகழி வாயிலில் அமளியைக் கண்ட ஆயுதம் தாங்கிய அறப்போர் வீரர்கள், கரிமுகனின் கட்டளையால் போரிட்ட கூட்டத்தைத் தாக்கி, அகழிப் பாலத்தைப் பழையபடி பொருத்தினர், மணிவீரனின் படைகள் வீராவேசத்துடனும், களிப்புடனும் நகருக்குள் பிரவேசித்தன.

ஆயுதமிழந்த கரிமுகன் ஆட்கள், ஆயுதந் தாங்கிய மக்களின் எதிர்ப்புக்கும் மற்றோர்புறம்; மணிவீரனின் படை தரும் உதைபட்டு, மூலைக்கு மூலை ஓடவும், பதுங்கவும், மண்டை நொறுங்கிச் சாகவும் ஆயினர். வெற்றி தன் காலடியிலே கிடப்பதாக எண்ணி ஆழ்ந்திருந்த கரிமுகன், எதிர்பாராத விதமாகத் தீயும், தெருச்சண்டையும், பாசறைச் சூறையாடலும், படையின் திணறலும், மணிவீரனின் பிரவேசமும் நடந்திடக் கண்டு. மனம் மருண்டு, கோயிலைவிட்டு வெளியே ஓடினான். ஆத்திரமடைந்த மக்களின் ஆயுதங்கள் பல, அவன் அங்கங்களைச் சிதைத்தன. கோபங்கொண்ட கூட்டத்தால் மிதிபட்டு மாண்டான். 'அரசி வாழ்க! வாழ்க மணிவீரன்! வாழ்க தீ! தீ மூட்டிய வீரர் வாழ்க!' என்ற உற்சாகக் கூச்சலுடன் மக்கள் மணிவீரன் தலைமையில் ஊர்வலமாகக் கோயில் சென்றனர். எதிர்பாராது இத்தனை சம்பவங்கள் நடந்ததால், மலர்புரி அரசியின் மனம் குழம்பி, மயங்கி, பிரக்ஞையின்றிக் கீழே கிடக்க அங்கே ஆரியன், அரசியின் முகத்தில் நீர் தெளித்துச் கொண்டிருப்பதை வீரமணி கண்டு, வாளை உருவினான், இவ்வளவு அமளிக்கும் அக்ரமத்துக்கும் காரணமாக இருந்த ஆரியனை வெட்டி வீழ்த்துவது என்ற முடிவுடன்.

வீரமணி ஓங்கிய வாள் மட்டும் ஆரியனின் கழுத்திலே விழுந்திருந்தால், மலர்புரியைப் பிடித்த பீடை தொலைந்திருக்கும்; தமிழகத்தை அரிக்கும் புழு செத்திருக்கும். கூரிய அந்த வாள், ஆரியனின் சிரத்தைச் சோதிக்கத் துடித்தது. உறையைவிட்டு வெளிவந்த அவ்வாள், புற்றிலிருந்து சீறி வெளிக்கிளம்பிய நாகம் போலவும், குகையை விட்டுக் கூச்சலுடன் பாய்ந்தோடி வந்த புலிபோலும் இருந்தது. ஆனால் வீரமணியின் கரத்திலிருந்த வாள், திடீரென வீரமணியின் கரத்திலிருந்து, தடுக்க முடியாத சக்தியினால், பிடுங்கப்பட்டு, சரேலென மேலுக்குக் கிளம்பி, கோயில் கூடச்சுவர் நடுவேபோய் ஒட்டிக்கொண்டு நின்றது. வீரமணி ஆச்சரியத்தால், 'அஃதென்ன!' என்று கூவினான். ஆரியன் சிரித்துவிட்டு, 'அவள் ஆணையடா தம்பி! தீபத்தை அணைக்க உன்னால் முடியுமா? தேவியின் புதல்வனை உன் வாள் என்ன செய்யும்? அதோ பார், அது தொங்குவதை! ஏன், உன் உடல் பதறுகிறது? முட்டாளே, என்னைக் கொல்ல உன்னால் முடியுமா? உன் வீரம் எங்கே? வாள் எங்கே?" என்று கெம்பீரமகப் பேசினான். வீரமணி ஆச்சரியத்தால் திக்பிரமை அடைந்திருந்ததால், பதிலுரைக்க நா எழவில்லை. உருவிய வாள், உயரப்பறந்து சென்று கூரையிலே தொங்குவதைக் கண்டு, அவன் ஏதும் புரியாமல் திகைத்தான். கரத்தைவிட்டு கட்கத்தை ஓர் சக்தி இழுத்ததும், அதைத் தடுக்கத் தனக்குச் சக்தி இல்லாமற் போனதும், அவனுக்கு ஆச்சரியத்தை மட்டுமல்ல, மிரட்சியையும் கொடுத்தது.

ஒருவேளை, "தேவி"க்கு இத்தகைய சக்தி இருக்கிறதா என்று சந்தேகித்துத் திகைத்தான். ஆரியனுக்கு ஆபத்து வருவது அறிந்தே "தேவி" தன் கரத்திலிருந்த கட்கத்தைப் பிடுங்கி விட்டாளோ என்று எண்ணினான். ஆரியப் புரட்டை அவன் அறிவான். ஆனால், கத்தி எப்படி தன் கரத்தைவிட்டு உயரத்தாவிச்சென்று விட்டது என்பது விளங்காததால், அவன் மனம் மருண்டது. வீரமணி ஆச்சரியத்தால் தாக்குண்டு நின்ற சமயம். அரசியின் கண்கள் திறந்தன; சைகூப்பினாள். ஆரியன் ஆசிர்வதித்து, 'அரசியே! அன்னை பராசக்தியின் அருளால், நீ காப்பாற்றப்பட்டாய். அவள் மலரடி வணங்கு. இதோ பார், மேலே தொங்கும் கத்தியை. இது என் கழுத்தைத் தேடி வந்தது. தேவி அதனை மேலுக்கு அழைத்துக் கொண்டாள். இதனை, என்மீது வீசினான், வீராதிவீரன்! இதோ, தலைகுனிந்து நிற்கிறானே, இந்த மணி! கேள் அவனை! பார் அவன் முகத்தை! வீசிய கத்தியின் சக்தி எங்கே? வீரா, உன் கத்தி வீச்சு, தேவியின் கண் வீச்சின் முன் எம்மாத்திரம்" என்று ஆரியன் கேலிச் சிரிப்புடன் கூறினான். வீரமணியை அரசி கோபத்தோடு நோக்கி "என்ன துணிவு உனக்கு? மணிவீரா! நீயுமா கரிமுகன்போல் கெடுமதி கொண்டாய்? அவன் என் அரசைக் கவிழ்க்கப் பார்த்தான். நீ ஆரிய முனியைக் கொல்லத் துணிந்தாயே. ஏன் இவ்வளவு பாதக எண்ணங்கள் பிறந்தன" என்று கோபமும் சோகமும் ததும்பக் கேட்டாள். வீரமணியின் செவியிலே இவை ஏதும்படவில்லை. வெடுக்கென்று வாளை இழுத்தது எது? அந்தச் சக்தியின் மர்மம் என்னவென்று எண்ணுவதிலேயே அவனுடைய சிந்தனை புதைந்து விட்டது. ஆரியன், அரசியிடம், "அரசி! இவன் ஆணவத்தைத் தேவி அழித்தாள். நான் வாழவேண்டும் என்பது அவள் சித்தமாக இருக்கும்போது, இந்தப் பித்தன் என்னைக் கொல்ல முடியுமா? அதுதான் நடக்குமா? "நெருப்பைக் கரையான் அரிக்குமா?" என்று கூறி கடகடவெனச் சிரித்தான்.