உள்ளடக்கத்துக்குச் செல்

கலிங்க ராணி/கலிங்க ராணி 36

விக்கிமூலம் இலிருந்து


36


ன் தந்தை அண்ணனைப் பார்த்து உருக்கமாகச் சொன்னார்:

"பாண்டிய நாட்டுப் பார்த்திபனாக வரவேண்டியவனடா நீ! படுமோசச் செயலைப் புரியலாகாது"

"படுமோசம் நான் புரியவில்லை. இப்பாவையை மணக்க விரும்புகிறேன். சிங்காதனம், இச்சிங்காரியுடன் நான் வீற்றிருக்க இடமளித்தால் சரி! இல்லையேல், எனக்கு அது வேண்டாம்."

"தவமணி, யோகி வேடந்தாங்கியிருந்த கள்ளனுக்குப் போகப் பொருளாக இருந்தாள். அவளை நீ உன் அன்புக்கு இருப்பிடமாக்கினால், நம் குடும்ப விளக்காக அவள் இருக்க முடியுமா?"

"அன்பு இல்லாத இடத்தில் மணம் இல்லை."

"நாடாளப் பிறந்தவன் நீ. வெறும் ஏட்டாளனாக இராதே. தவமணி இங்கு தங்கட்டும். அவளுடைய இல்லம் உனக்கு இன்ப மாளிகையாக இருக்கட்டும்; ஆனால், அரச மாளிகைக்கு வேறு ஒருத்தி இருந்தே தீர வேண்டும். அது தான் முறை."

"தந்தையே! உமது வார்த்தையை மீறுவதற்காக மன்னிக்க வேண்டுகிறேன். அவள் ஒரு காமுகனின் சேட்டையால் சிதைந்தாள். அது அன்னவள் குற்றமல்ல. என்றைய தினம் நான் அவளை உண்மையாகக் காதலிக்கத் தொடங்கினேனோ, அன்றே நான் அவளை ஆஸ்ரமத்திலிருந்து அழைத்துக் கொண்டு வந்திருக்க வேண்டும். தவமணியை நான் அங்கு விட்டதனால்தான், தகப்பனாக நடித்த அந்தத் தறுதலை தகாத செயல் புரிந்தான். அவனுக்குத் தண்டனை தந்தாய்விட்டது. இவள் செய்த குற்றமென்ன? ஏன் இவளை என்னிடமிருந்து பிரிக்க வேண்டும்?"

"நீ அரசன் மகன்! அதுவும் மூத்த புதல்வன்; இளைய அரசன், நாளை அரசாளவேண்டியவன். அது கவனமிருக்கட்டும்!"

"இவளோடு, பாண்டிய நாடு என்னை ஏற்றுக் கொண்டால் நானிங்கு இருப்பேன்; இல்லையேல், அரசும் வேண்டேன்; வேறு எதுவும் வேண்டாம்."

இந்த உறுதியான பேச்சைக் கேட்ட என் தந்தை கோபமேலிட்டு, "பாண்டிய நாடே எனக்குப் பெரியது; உன் பிடிவாதமல்ல! என் ஆணையே பெரிது; உன் ஆசையல்ல. பல கோடி மக்களின் பாதுகாவலனாக இருக்கும் பணியே சிறந்தது; ஒரு பாவையுடன் புரண்டுகிடக்கும் போகமல்ல, அரச நீதியின் அடையாளம்; பொறுப்பின் சிகரம்; போகத்தின் தூதனல்ல; காரியமும் வீரியமும் மிளிர அவன் விளங்க வேண்டும்; காதலுக்காகக் கண்ணீரும் கம்பலையுமாக நிற்கலாகாது. பாண்டிய நாட்டுப் பார்த்திபனின் மகன் இப்படி, பழுதுபட்ட ஓர் பாவைக்காகத் தனது பரம்பரைப் பண்பு, பாராளும் உரிமை, தந்தையின் வேண்டுகோள் எனும் இவற்றைத் தட்டத் துணிவது மடமை; கொடுமை. இதை நான் அனுமதியேன். நாடு அனுமதிக்காது; வேண்டாம் பிடிவாதம். எப்படியோ இந்த மங்கைக்கும் உனக்கும் சம்பந்தம் உண்டாகிவிட்டது. அதற்காக வேண்டி, நீ மக்களுக்குச் செய்ய வேண்டிய தொண்டு என்ன என்பதையும் அந்தத் தொண்டு புரிய எது தகுதியான முறை என்பதையும் மறவாதே. தந்தை தனயனிடம் தர்க்கிக்க வேண்டிய விஷயமுமல்ல இது. நீ உனது நிலைமையை உணர்ந்து நட" என்று தந்தை கூறினார்.

"தந்தையே, காதல் என்பது தர்க்கத்துக்குக் கட்டுப்படாதது. அதனை அளக்கும் கோல் கிடையாது. நிறுத்திடும் துலாக்கோலும் இல்லை. இதுபற்றி அதிகம் பேசிடவோ எனக்கு மனம் இல்லை. ஒன்றுமட்டும் உரைப்பேன். உத்தமோத்திரராகிய தாங்கள் அறியாததல்ல, நான் கூறப்போவது. அரும்பு மலர முகூர்த்தம் குறிப்பாரில்லை. யார் எவ்வளவு முயன்றாலும் அரும்பை அவரிஷ்டத்துக்கு இணங்க வைத்து மலராகும்படி செய்ய முடியாது. பகலோனைக் கண்டதும், மலர்ந்திடும் பங்கஜத்தைப் பட்டத்தரசனுங்கூட சட்டமிட்டுத் தடுத்திட முடியாது. முடிவேந்தனானாலும், ஓர் மயிலை ஆடு என்று கட்டளையிட்டுத் தொகையை விரித்தாடச் செய்யவும் முடியாது. அதுபோல், தானாகக் களிகொண்டு ஆடிடும் மயிலையும், "நிறுத்து, உன் நடனத்தை என்று கூறிட முடியாது. அதுபோலவே, தர்க்கமும், தடை உத்தரவும், தண்டனையும், நிபந்தனையும். வம்பும் வல்லடியும் வாலிப உள்ளத்திலே மலரும் அந்தக் காதல் எனும் உணர்ச்சியைப் பறித்துவிட முடியாதல்லவா?

தந்தையே! தவமணியின் காவிய உடையாலேயே என்னைத் தடுக்க முடியவில்லை. ஆஸ்ரமமாயிற்றே! அங்கு ஆத்மாவுக்கும் ஆண்டவனுக்கும் பரஸ்பரம் ஏற்பட வேண்டுமே ஒழிய, ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆலிங்கனம் உண்டாவது முறையா என்று தர்க்கிக்க என்மனம் இசையவில்லை. காரணம், காலம் விளைவு முதலிய எதனையும் பொருட்படுத்தாது திடீரெனக் கிளம்பும் ஜோதியன்றோ காதல்" என்று என் அண்ணன் கூறினார்.

"அது ஜோதியோ, என்னவோ, எனக்குத் தெரியாது. இவள் இந்த மண்டலத்துக்கே பெருந்தீயானாள். தந்தைக்கும் மகனுக்குமிடையே, சண்டை மூட்டுகிறாள். பாண்டிய குடும்பத்தின் ஒளியை மாசாக்குகிறாள். பாண்டிய நாட்டுக்கு ஓர் பழிச்சொல் ஏற்படச் செய்துவிட்டாள். வன்னெஞ்சக்காரி! வளர்த்த தகப்பனின் காமக்கூத்துக்கு இடமளித்த வேசி!" என்று என் தந்தை தவமணி எனும் பெண்ணைக் கடிந்துரைத்தார். என் அண்ணன், அச்சொல் கேட்டு வெகுண்டு, "தந்தையே! அரச நீதியின்படியும், பாண்டிய நாட்டுப் பரம்பரை முறைப்படியும், இவள், பட்டத்தரசியாகும் உரிமை இழந்தவளாகலாமே தவிர, பழிச்சொல் கேட்டுத் தீரவேண்டுமென்று நியதி இல்லை. அவளை நான் மனமார என் பிரிய நாயகியாகக் கொண்டுவிட்டேன். எனவே இனி யார் அவளைப் பற்றி இழிவாகப் பேசத் துணிந்தாலும் சகியேன்" என்று கூறினார்.

பிறகு அங்கு நடைபெற்ற சோக ரசமான சம்பவங்களை நான் சுருக்கமாகவே கூறுகிறேன். "நடனா! என் தந்தை கெஞ்சியது மட்டுமல்ல, தவமணியும் எவ்வளவோ இதமாக என் அண்ணனுக்குப் புத்தி சொன்னாள். நானும் என்னால் கூடுமான மட்டும் அவரைத் திருப்ப முயன்றேன். அவர் பிடிவாதம் குறைவதாகத் தெரியவில்லை. பிறகு என் தந்தை ஓர் பயங்கரமான முடிவுக்கு வந்தார். தலைமீது கரங்களால் மோதிக் கொண்டார், தடதடவென ஓடினார். மடமடவென ஏதேதோ பேசினார். பிறகு "கடைசி முறை என் சொல்லைக் கேள்" என்று கூறினார். என் அண்ணன், முடியாது என்பதைத் தெரிவிக்கத் தன் தலையைக் கெம்பீரமாக அசைத்தார். அந்தக் கெம்பீரம், என்னைத் தூக்கிவாரிப்போட்டது. ஒரு அரசனின் கோபம், ஒரு தந்தையின் ஆத்திரம், அதுமட்டுமா, அரசபோகம் பறிமுதலாகும் என்ற நிலை எதுவும், துச்சமெனக் கருதிய அவருடைய துணிவுக்குக் காரணம், ஒரு துடியிடையாள்தான்!