உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/036

விக்கிமூலம் இலிருந்து

36. எதனை இழந்தது!

பாடியவர் : சீத்தலைச் சாத்தனார்.
திணை : குறிஞ்சி.
துறை : இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி கூறியது.
[(து–வி.) வரைந்து மணந்துகொள்ளும் முயற்சியினை நினையாதானாகிய தலைவன் ஒருவனுக்கு அறிவுறுத்தக் கருதினளான தோழி, இவ்வாறு தலைவியிடம் கூறுவாள் போல. ஒரு சார் செவ்விநோக்கி ஒதுங்கிநிற்கும் அவனும் கேட்கக் கூறுகின்றாள்.]

குறுங்கை இரும்புலிக் கோள்வல் ஏற்றை,
பூநுதல் இரும்பிடி புலம்பத் தாக்கித்
தாழ்நீர் நனந்தலைப் பெருங்களிறு ஆடூஉம்
கல்லக வெற்பன் சொல்லின் தேறி
யாம்எம் நலன் இழந் தனமே; யாமத்து 5
அலர்வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றி
புரை இல் தீமொழி பயிற்றிய உரைஎடுத்து
ஆனாக் கௌவைத்து ஆக,
தான்என் இழந்தது, இவ் அழுங்கல் ஊரே?

கொல்லுதல் தொழிலிலே வல்லமைகொண்ட பெரிய புலியேறானது குறியவான முன்னங்கால்களைக் கொண்டது. நீரற்ற அகன்ற காட்டினிடத்தே, அழகிய நெற்றியையுடைய கரிய பிடியானது புலம்புமாறு, அப் புலியேறு அப்பிடியினது பெரிய களிற்றினைத் தாக்கிக் கொல்லா நிற்கும். அத்தகைய மலையிடத்தையுடைய வெற்பன் தலைவன். அவனுடைய சொல்லினை வாய்மையே எனத் தெளிந்து அவனை ஏற்றதனாலே, யாம் எம் நலனையும் இழந்தோம்; பழி தூற்றும் வாயினராகிய அயற்பெண்டிரது அம்பலோடு சேர்ந்து ஆரவாரமிக்க இவ்வூரும், மேன்மையற்ற தீச்சொற்களைக் கூறுவதற்கு வேண்டிய பேச்சுக்களை மேற்கொண்டது. அமையாத பழிமொழிகளை உடையதாக, இந்த இரவின் யாமத்தும், இது துயிலொழிந்ததாயிற்று. இதுதான் எதனை இழந்து என்னைப் போலத் துயிழொழிந்ததோ?

கருத்து : 'வழியின் ஏதமும் ஊரவர் அலருரையும் நினைந்து நாம் படும் துயரைத் தீர்த்தற்கு, அவர் நம்மை மணந்து கோடலே இனிச் செய்யத்தக்கது' என்பதாம்.

சொற்பொருள் : பூநுதல் – அழகிய நெற்றி; பொலிவு பெற்ற நெற்றியும் ஆம். புரை – மேன்மை. தீமொழி – தீய சொற்கள். கௌவை – பழிச்சொல்.

விளக்கம் : தலைவனை வரைந்து கோடற்குத் தூண்டு வாளாகத் தோழி, வழியிடை ஏதம், தலைவியின் எழில் கெட்டது, ஊரலர் பரந்தது, ஊர் கண்ணுறங்காமை ஆகியவற்றால், இரவுக்குறி வாய்த்தல் அரிதாகும் என்பதனை நயமுடன் உணர்த்துகின்றாள். தலைவனின் சொற்களை அந்நாளிலே வாய்மையானவை எனத் தெளிந்த தன் பயனாலே, இன்று யாம் துயருற்று உறக்கமும் இழந்தவராயினேம். எம்மைப் போல இவ்வூரும் அலர்உரை பயிற்றித் துயிலொழித்திருப்பது எதனாவோ? என்கின்றனள். இதனைக் கேட்கும் தலைவன், விரைவாகத் தலைவியை மணந்து இல்லறத்தே இன்புற்று வாழ்தலைச் செய்தற்கு முற்படுவான் என்பதாம்.

உள்ளுரை : 'பிடி புலம்புமாறு அதனது களிற்றைப் புலி தாக்கிக் கொல்லாநிற்கும் நாடன்' என்றது, இரவுக்குறி வரும் தலைவனைத் தான் துன்புற்றுப் புலம்புமாறு அவனுக்கு ஏதமுண்டாக்கும் நெறி என்பதாம். அதனால், இரவுக்குறி தவிர்தலையும், தலைவியை மணந்து கோடலையும் விரும்பினளாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/036&oldid=1731384" இலிருந்து மீள்விக்கப்பட்டது