உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/037

விக்கிமூலம் இலிருந்து

37. என் பரம் அன்று!

பாடியவர் : பேரிசாத்தனார்.
திணை : பாலை.
துறை : வரைவிடை வைத்துப் பிரிவின்கண் தோழி சொல்லியது.

[(து–வி.) வரைபொருளைத் தேடிவருதற் பொருட்டாகச் செல்ல முடிவு செய்த தலைவன், தலைவியின் தோழியிடம் “நான் வரும்வரை தலைவிக்கு ஆறுதல் கூறி இருக்க", என்றான். அவனுக்குத் தோழி சொல்லுவதாக அமைந்தது இது.]

பிணங்குஅரில் வாடிய பழவிறல் நனந்தலை
உணங்குஊண் ஆயத்து ஓர்ஆன் தெள்மணி
பைபய இசைக்கும் அத்தம் வைஎயிற்று
இவளொடும் செலினோ நன்றே; குவளை
நீர்சூழ் மாமலர் அன்ன கண்அழக் 5
கலையொழி பிணையின் கலங்கி மாறி
அன்பிலிர் அகறிர் ஆயின் என்பரம்
ஆகுவது அன்று இவள் அவலம் — நாகத்து
அணங்குடை அருந்தலை உடலி, வலன்ஏர்பு
ஆர்கலி நல்ஏறு திரிதரும் 10
கார்செய் மாலை வரூஉம் போழ்தே

.

ஒன்றோடொன்று பின்னிக்கொண்டுகிடக்கின்ற சிறு தூறுகளும், பழையதான நல்ல தோற்றங்களும், வாடிப் போய்க் கிடக்கும் அகன்ற இடத்தைக் கொண்டிருப்பது காடு. அவ்விடத்து, உணவில்லாதுபோயினதனாலே வாட்டமுற்ற நிரையினின்றும் அகன்று செல்லும், ஒற்றைப் பசுவினது தெளிந்த மணியோசையானது மெல்லென ஒலித்துக் கொண்டிருக்கும் ஒலியினயும் உளதாயிருக்கும். அவ்வழியாகக் கூரிய பற்களையுடைய இவளையும் நும்முடன் அழைத்துச் செல்பவராக, நீயிர் பொருளினைத் தேடி வருவதற்குச் சென்றீராயின் நலமாயிருக்கும். கலைமானைப் பிரிந்த பிணையினைப்போலக் கலக்கமுற்றுக் குவளையின் நீர் நிரம்பிய கரிய மலரைப்போன்ற இவள் கண்களினின்றும் நீர் வடியுமாறு இவளோடும் மாறுபட்டு, அன்பில்லாதீராக நீர் பிரிந்து செல்லாதீர். அப்படிப் பிரிந்து போயினீராயின், பாம்பினது வருத்துகின்ற அரிய தலையானது துண்டுபட்டு வீழும்படியாகச் சினந்து வலமிட்டு எழுந்து, மிக்க முழக்கத்தோடும் நல்ல இடியேறானது திரிகின்றதான கார்ப்பருவத்து மாலைக்காலமானது வந்தடையும் அந்தப் பொழுதிலே, இவள் துயரத்தை மாற்றி இவளைக் காத்திருப்பது என்பது, என் பொறுப்பாகத் தாங்கக் கூடியதன்று. இதனை அறிவீராக!

கருத்து : 'இவளைப் பிரிந்து அகன்றீராயின், இவள் அந்தப் பிரிவைத் தாங்காதே இறந்து போவாள்' என்பதாம்.

சொற்பொருள் : பிணக்கம் – பின்னிக்கிடத்தல். விறல் – வெற்றி; பழைதான காட்டது அழகுத் தோற்றங்கள். மாறி – மாறுபட்டு; அன்பினின்றும் மாறுபட்டு. பரம் – பாரம்; பொறுப்பு. உடலி – சினந்து. கலி – முழக்கம்.

விளக்கம் : 'பிணங்கு அரில் வாடிய பழவிறல் நனந்தலை, உணங்கு ஊண் ஆயத்து, ஓர் ஆன் தெள்மணிபைபய இசைக்கும் அத்தம்' என்றது, அவ்வாறே பொலிவழிந்த இவள், இவளது ஊரும் ஆயமும் இவளது மெலிவிற்குச் சோர்ந்திருப்ப, இவள் மட்டும் நின் நினைவாலே கண்ணுறங்காளாய் மெல்ல மெல்ல நடந்து நின் வரவை நோக்கிச் சாம்பியபடியே இருப்பவள்' என்பதாம். அதனால், இவளை நின்னுடனேயே அழைத்துப் போய்விடுக என்பதுமாம். கண் அழுகையால் நீர் நிரம்புதலுற்று விளங்கிய தன்மைக்குக் 'குவளை நீர் சூழ் பாமலர்' என்றனள்.

'கலை ஒழி பிணையின் கலங்கி' என்றது, பிணையது மடப்பம் நிரம்பிய மென்மைத் தன்மையினைத் தலைவியின் தகைமைக்குப் பொருத்திக் கூறியதுமாகும்.

மேற்கோள் : இச் செய்யுளை இத்துறைக்கே மேற்கோளாகக் காட்டுவர் ஆசிரியர் நச்சினார்க்கினியர் (தொல்.பொருள். சூ.114 உரை.)

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/037&oldid=1731388" இலிருந்து மீள்விக்கப்பட்டது