நற்றிணை 1/038
38. வருத்தம் தருகின்றதே!
- பாடியவர் : உலோச்சனார்.
- திணை : நெய்தல்.
- துறை : தலைவி வன்புறை எதிரழிந்து சொல்வியது.
[(து–வி.) தலைவன் பிரிந்து சென்றிருந்தான். தலைவி, பிரிவுப் பெருநோயாற் பெரிதும் நலிகின்றாள். அதுகண்ட தோழி. 'இவ்வாறு மெலியின் நின் களவைப் பிறர் அறிவர்; அதனால் அலர் எழும்; ஆகவே ஆற்றியிரு' எனக்கூறி வற்புறுத்துகின்றாள். அவட்குத் தலைவி கூறுவது இதுவாகும்.]
வேட்டம் பொய்யாது வலைவளம் சிறப்பப்
பாட்டம் பொய்யாது பரதவர் பகர
இரும்பனந் தீம்பிழி உண்போர் மகிழும்
ஆர்கலி யாணர்த்து ஆயினும், தேர்கெழு
மெல்லம் புலம்பன் பிரியின் புல்லெனப்
5
புலம்புஆ கின்றே-தோழி! கலங்குநீர்க்
கழிசூழ் படப்பைக் காண்ட வாயில்
ஒலிகா வோலை முள்மிடை வேலிப்
பெண்ணை இவரும் ஆங்கண்
வெண்மணற் படப்பை எம் அழுங்கல் ஊரே.
10
தோழி! கலங்கலான நீர்வளத்தைக் கொண்ட கழிகள் சூழ்ந்திருக்கும் தோட்டக்கால்களையுடையது, 'காண்ட வாயில்' என்னும் நம் ஊர். ஒலித்தலைக் கொண்ட முற்றிய பனையோலைகளோடு முள்ளையும் சேர்த்துக் கட்டப்பெற்ற வேலிகளைக் கொண்டன, அத் தோட்டங்கள். அவற்றிடத்தேயுள்ள பனைமரங்கள் உயர்ந்து வளர்ந்திருக்கும் அவ்விடத்ததாகிய வெள்ளிய மணல்மேட்டினைக் கொண்டு விளங்குவது எம்முடைய ஆரவாரத்தையுடைய சேரியாகும். கடலிடத்து மீன்வேட்டை பொய்ப்படாது வலைவளம் என்றும் எம்மூரிற் சிறப்புற்றிருக்கும். எம்மூர்ப் பரதவர்கள், தாம் தருதற்குரிய பாட்டத்தினைப் பொய்யாதாராய்க், கிடைத்த மீன்களை விலை கூறி விற்றவராயிருப்பர். அவ்விடத்தே, கரிய பனையினது இனிதான கள்ளினை உண்போர் அதனாற் களித்து ஆரவாரித்திருப்பர். இவ்வாறான, நிரம்பிய ஆரவாரத்தையும் புதுவருவாயினையும் உடையதுதான் நம் ஊர் என்றாலும் தேரூர்ந்துவந்து அருளுகின்ற சிறப்புடையானாகிய, மெல்லிதான கடல் நாட்டானாகிய நம் தலைவன், நம்மைப் பிரிந்தானாயின், இவையனைத்தும் பொலிவழிந்தாற்போல நமக்கு வருத்தத்தைத் தருவனவும் ஆகின்றதே! இதற்கு என் செய்வேன்?
கருத்து : தலைவன் பிரியின், ஊரும் அதன் வளமும் எனக்கு வருத்தத்தையே மிகுவிக்கின்றன' என்பதாம்.
சொற்பொருள் : வேட்டம் – மீன்வேட்டை. வகை வளம் – வலைப்படும் மீனின் மிகுதி. பாட்டம் – அரசுக்கும் ஊருக்கும் தரும் இறைப்பகுதி. தீம்பிழி – இனிதான கள் 'காண்ட வாயில்' – ஓர் ஊர். 'பாட்டம்' மழைவளமும் ஆகும்.
விளக்கம் : கடல்வளமும் மழைவளமின்றி ‘அமையா தாதலின், 'பாட்டம் பொய்யாது' என்பதற்கு, மழைவளமும் கடல்வளம் பெருகுதற்கு உதவும் வகையினாலே, பொய்படாது மிகுந்திருக்கும் எனவும் கொள்ளலாம். மீன்விலை பகர்வாரது ஆரவாரமும், கள்ளுண்டு களித்தாரது ஆரவாரமுமாக, ஊர்மன்றம் 'ஆர்கலி யாணர்த்தா'யிற்று. வேட்டம் பொய்யாது வலைவளம் சிறப்பவும், பாட்டம் பொய்யாது பரதவர் பகரவும் நிகழ்கின்றதேனும், தலைவன் நம்மை மணம்வேட்டு வருவதென்பது பொய்த்தது; நம்மவர் நம்மை அவனுக்குத் தருவரென்பதும் பொய்யாயிற்று; பனந்தீம்பிழி உண்போர் மகிழ்தலைப்போல யாம் அவனுடன் காமவின்பத்தை உண்டுகளிப்பேம் என்பதும் வாயாதாயிற்று என்று தலைவி நோகின்றாள்
பிற பாடம் : 'தேர்கெழு' என்பது, 'தோடு கெழு' எனவும் கூறப்படும். அதற்குத் 'தொகுதி விளங்கிய' என்று பொருள். 'தொகுதி விளங்கலாவது', இன்னின்னார்க்குரியது என்ற வரையோடு விளங்கும் கடற்கரைப் பகுதியாகும்.