உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/070

விக்கிமூலம் இலிருந்து

70. அன்போ? மறதியோ?

பாடியவர் : வெள்ளி வீதியார்.
திணை : மருதம்.
துறை : காமம் மிக்க கழிபடர் கிளவி.

[(து–வி.) தலைமகனின் பிரிவினாலே காமநோய் மிகுதியுற்றாளான தலைவியொருத்தி, நாரையை நோக்கித் தன் துயரைக் கூறுகின்றாள். இதனை வெள்ளிவீதியாரின் சொந்த அநுபவமாகவும் கொள்ளலாம்.]

சிறுவெள்ளாங் குருகே! சிறுவெள்ளாங் குருகே!
துறைபோகு அறுவைத் தூமடி அன்ன
நிறங்கிளர் தூவிச் சிறுவெள்ளாங் குருகே!
எம்ஊர் வந்துஎம் உண்துறைத் துழைஇச்
சினைக்கெளிற்று ஆர்கையை அவர்ஊர்ப் பெயர்தி; 5
அனையஅன் பினையோ, பெருமற வியையோ,
ஆங்கண் தீம்புனல் ஈங்கண் பரக்கும்
கழனி நல்ஊர் மகிழ்நர்க்குஎன்
இழைநெகிழ் பருவரல் செப்பா தோயே?

வெள்ளிய சிறு குருகே! வெள்ளிய சிறு குருகே! நீர்த்துறையிடத்தே ஒலித்தற்குப் போய்வந்த வெள்ளாடையின் தூய மடியினைப்போல விளங்கும், வெண்ணிறம் ஒளிசெய்யும் சிறகினையுடைய வெண்மையான சிறு குருகே! அவருடைய ஊராகிய அவ்விடத்து இனிதான புனலே இவ்விடத்தும் வந்து பரக்கின்ற, கழனியையுடைய நல்ல ஊரிடத்தாராகிய என் காதலருக்கு, என்னுடைய கலன்கள் நெகிழ்ந்து வீழ்கின்ற துன்பத்தை இதுகாறும் சொல்லாத குருகே ! அவரூரிடத்திருந்து எம் ஊரிடத்திற்கு வந்து, எம்முடைய உண்ணும் நீரினையுடைய பொய்கைத் துறையிடத்தே புகுந்து துழாவிச் சினைகொண்ட கெளிற்றுமீனைத் தின்றாயாய், மீண்டும் அவரது ஊருக்கே நீயும் செல்கின்றாய். அவரைப் போலவே பெற்ற உதவியை மறக்கும் அன்பினை நீயும் உடையையோ? அல்லது, பெரிதும் மறதியை உடையையோ?

கருத்து : 'இன்றேனும் அவரிடத்து என் குறையை எடுத்துக் கூறுவாயாக' என்பதாம்.

சொற்பொருள் : துறை – ஒலித்தல் துறை. மடி – மடிக்கப் பட்ட ஆடை. உண்துறை – உண்ணு நீர்ப் பொய்கையின் துறை. மறவி – மறதி. இழை – கலன்.

விளக்கம் : 'ஆங்கண் தீம்புனல் ஈங்கண் பரக்கும் கழனி நல்லூர் மகிழ்நர்' என்றது இவ்வூரின் நீர்வளத்திற்கு உதவும் ஊரனாயிருந்தும் எனக்கு மட்டும் உதவும் அருளற்ற கொடுந்தன்மையினன் ஆயினனே என்றதாம். 'மகிழ்நன்' மகிழ்வைத் தருபவன், காதலன். 'இழை நெகிழ் பருவரல்' உடல் மெலிதலால் வந்துற்ற துன்பம்; இதனால் தன் மேனியது நலிவைக் கூறுகின்றனள். 'இவ்வூர் வந்து சினைக் கெளிற்றை உண்டு போகும் நீதான், பெண்களைத் துன்புறுத்திச் சாகச்செய்து இன்புறுதலன்றி எனக்கு உதவும் அத்தகைய அன்பினை உடையை ஆவையோ?' என அதன்பாலும் நொந்து கொள்ளுகின்றாள். 'அது, தன்னை நுகர்ந்து இன்புற்றுக் கைவிட்டுப்போகிய தன் இன்ப நுகர்வையன்றிக் காதலியின் நலனைக் கருதாத தலைவனின் ஊரினின்றும் வந்ததால் உண்டாகிய தன்மையோ?' என்று குறித்தனளும் ஆம். 'பெருமறவியை’ என்றது. அவனும் என்னை மறந்தனன்; அவ்வாறு நீயும் மறதி உடையையோ?' என்றதாம்.

குருகு மீனுண்ணும் இயல்பிற்றாயினும் தன் ஆற்றாமையினாலே அது சினைக்கெளிற்றை உண்ணக் கண்டதும் அதன்பால் இப்படிக் கூறி நொந்து உரைக்கின்றாள் தலைவி. ' துறை போகு அறுவைத் தூமடி அன்ன நிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே' என்றது. 'உடலிடத்துத் தூய்மை உடையையாயினும் நின் உள்ளத்திடத்தே தூய்மையை உடையை அல்லை' என்றதுமாம்.

மேற்கோள் : 'காப்புச் சிறைமிக்க கையறு கிளவி' என்னும் துறைக்கு இச்செய்யுளை மேற்கோளாகக் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள். 111 உரை) பிற பாடங்கள் 'ஒண்துறை துழைஇ'

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/070&oldid=1731477" இலிருந்து மீள்விக்கப்பட்டது