உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/103

விக்கிமூலம் இலிருந்து

103. தெரிந்து கூறுக!

பாடியவர் : மருதனிளநாகனார்.
திணை : பாலை.
துறை : பொருள்வயிற் பிரிந்த தலைவன் இடைச்சுரத்து ஆற்றாதாகிய நெஞ்சினைக் கழறியது.

[(து–வி.) பொருளீட்டுதலை மேற்கொண்டானாகத் தலைவியைப் பிரிந்து செல்பவனாகிய தலைவன், இடைவழியில் தலைவியை மறக்கவியலாது கவலும் தன் நெஞ்சிற்குக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது]

ஒன்று தெரிந்து உரைத்திரின்—நெஞ்சே! புன்காற்
சிறியிலை வேம்பின் பெரிய கொன்று
கடாஅம் செருக்கிய கடுஞ்சின முன்பின்
களிறுநின்று இறந்த நீர்அல் ஈரத்துப்
பால்அழி தோல்முலை அகடுநிலம் சேர்த்திப் 5
பசிஅட முடங்கிய பைங்கட் செந்நாய்
மாயா வேட்டம் போகிய கணவன்
பொய்யா மரபின் பிணவுநினைந்து இரங்கும்
விருந்தின் வெங்காட்டு வருந்துதும் யாமே;
ஆள்வினைக்கு அகல்வாம் எனினும் 10
மீள்வாம் எனினும் நீதுணிந் ததுவே.

நெஞ்சமே! புல்லிய கம்புகனிற் சிற்றிலைகளைக் கொண்டிருக்கும் வேம்பினது பெருங்கிளைகளை முறித்து, மதவெறியினாலே செருக்குற்றலைந்த, கடுங்கோபத்தையும் வலியையும் கொண்ட களிற்றியானையானது நின்று நீங்கிப்போயின இடத்தே தோன்றும், நீரற்றதான ஈரங்கொண்ட இடத்திலே, பாற்சுரப்புக் கழிந்துபோய்த் தோற்பட்ட முலையையுடைய தன் அடிவயிற்றை ஈரநிலத்தொடும் சேரவைத்துக் கொண்டதாய்ப் பசிநோய் வருத்துதலினாலே சோர்வுற்று முடங்கிக்கிடந்தது பசுங்கண்களையுடைய செந்நாய் ஒன்று. தப்பாத வேட்டையினைக் குறித்ததாகக் காட்டிடத்தே அதனை நீங்கிச்சென்ற அதன் கணவன், தன்பாற்கொண்ட அன்பிலே பொய்த்தலில்லாத மரபினையுடையதான தன் பிணவினை நினைந்ததாய்ப் பெரிதும் இரக்கங்கொள்ளும். இத் தன்மையுடைய புதுவழியான வெங்காட்டிடத்தே நின்று யாமும் அவளை நினைந்து வருந்துகின்றேம். பொருள் தேடுதலான முயற்சியினைக் குறித்து மேற்கொண்டு செல்வோம் என்றாலும், அல்லாதே அதனைக் கைவிட்டு இல்லிற்கே மீள்வோம். என்றாலும், நீ முடிவுசெய்தது எதுவோ அந்த ஒன்றனையே ஆராய்ந்து எனக்கும் கூறுவாயாக.

கருத்து : 'அவளை இப்போது நினைவூட்டிக் கலக்கமுறச் செய்யும் நீதான், எதற்காகப் பொருளார்வத்தைத் தூண்டினையாய், இக் காட்டுவழியிடை என்னைச் சேர்த்தனை?' என்பதாம்.

சொற்பொருள் : 'பெரிய' – பெருங்கிளை; பெருமரமும் ஆம். முன்பு – வலிமை 'நீரல் ஈரம்' என்றது. களிறு தான் நின்றவிடத்துச் சிறுநீர் கழித்ததனாலே உண்டாகிய ஈரமாகும். மாயா வேட்டம் – தப்பாத வேட்டை. பிணவு – செந்நாயின் பெட்டை, 'விருந்தின் காடு' – பழகிய வழியில்லாதாய்க் கிடக்கும் காடு.

விளக்கம் : 'பாலவி தோல்முலைப் பிணவு' என்றது. கோடையின் வெம்மை மிகுதியை விளக்குதற் பொருட்டு. அதன் கணவன் அதனை நினைந்து இரங்குதலைக் காணும், தன்பாலும் தலைவிபாற் சென்று சேர்தற்கான நினைவு எழுதலை இவ்வாறு கூறுகின்றான். இனி 'வேட்டம் போகிய கணவனை நினைந்தபடி பெண்நாய் இரங்கும்' என்று கொண்டு, 'அவ்வாறே தன்னைப் பிரிந்த தலைவியும் வருந்தி நலனழிந்திருப்பாள்' என்பதுமாம். பைங்கட் செந்நாயினத்தின் பசியட முடங்கிய பொய்யாமரபின் பிணவானது, தன் துயரத்தை நினையாதாய்த் தன் கணவன் வேட்டம்போகிய விடத்து, வெம்மையால் துன்புறும் துயரத்தை நினைந்து இரங்குமாறுபோலத் தலைவியும் பிரிவால் நலிந்தழிந்த தன் நிலையைக் கருதாளாய்த், தலைவனது வழியிடை உண்டாகும் நலிவை நினைந்தே கலங்கியிருப்பாள் என்று கூறுவதாகவும் கொள்க.

உள்ளுறை : 'செந்நாயின் ஆணும் தான் பிரிந்துவந்த பிணவினை நினைந்து இரங்கும் வெங்காடு' என்றது. அதற்குள்ள காதற் பாசமும் இல்லாதே தான் தலைவியை நீத்துப் பிரிந்துவந்த கொடுஞ்செயலை நினைந்து கூறியதாம்.

பிறபாடம் : சிறியிலை வேலம்: வேலம் – கருவேலம் : முள்மர வகையுள் ஒன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/103&oldid=1731574" இலிருந்து மீள்விக்கப்பட்டது