உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/104

விக்கிமூலம் இலிருந்து

104. நினைவோர் உளரோ!

பாடியவர் : பேரிசாத்தனார்.
திணை  : குறிஞ்சி
துறை : தலைவி ஆறுபார்த்து உற்ற அச்சத்தால் சொல்லியது.

[(து–வி.) இரவுப்போதிலே, கொடிய காட்டு வழியூடு தலைவன் வருந்துகின்றதனை நினைந்த தலைவி, அவன் வரும் வழியது ஏதத்தை நினைந்து கவலையுற்று நலிகின்றாள். அந்த வழியை நினைத்தபடி அவள் கூறுவதாக அமைந்த செய்யுள் இது]

பூம்பொறி உழுவைப் பேழ்வாய் ஏற்றை,
தேம்கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே
துறுகல் மீமிசை உறுகண் அஞ்சாக்
குறக்குறு மாக்கள் புகற்சியின் எறிந்த
தொண்டகச் சிறுபறைப் பாணி அயலது 5
பைந்தாட் செந்தினைப் படுகிளி ஒப்பும்
ஆர்கலி வெற்பன் மார்புநயந்து உறையும்
யானே அன்றியும், உளர்கொல் — பானாள்,
பாம்புடை விடர ஓங்குமலை மிளிர,
உருமுச் சிவந்து எறியும் பொழுதொடு, பெருநீர் 10
போக்குஅற விலங்கிய சாரல்,
நோக்குஅநஞ் சிறுநெறி நினையு மோரே?

தேன் மணம் கமழ்த்து கொண்டிருப்பதான புதுமலர்களையுடைய காட்டினிடத்தே, அழகான கோடுகளையும் அகன்ற வாயினையும் கொண்ட புலியேறானது. தன்னை எதிர்ப்பட்ட களிற்றோடும் போரிடுதலைத் தொடங்கும். அவற்றால் தமக்குத் துன்பம் விளையுமென நினைத்து அஞ்சாதாரான குறவரது இளஞ்சிறார்கள், அவ்விடத்தேயுள்ள பெரிதான பாறைக்கல்லின் உச்சிமேலாக ஏறி நின்ற படி, மனச்செருக்கோடு தம் கையகத்துத் தொண்டகப் பறையினை அடித்து முழக்கியபடியே, அந்தப் போரைக் கண்டு இன்புற்றிருப்பர். அப் பறைமுழக்கின் ஒலியானது, அவ் விடத்துக்கு அயலேயுள்ள பசுந்தாட்களையுடைய தினைப் பயிரது சிவந்த கதிர்களிடத்தே வந்து படியுங் கிளிகளை அச்சுறுத்தி ஓட்டுதலைச் செய்யும், நிரம்பிய ஆரவாரத்தைக் கொண்ட அத்தன்மை கொண்ட வெற்புக்கு உரியவன் தலைவன். அவனுடைய மார்பினைத் தழுவிப்பெறுகின்ற அந்த இன்பத்தை விரும்பியவளாக, இவ்விடத்தே வந்து தங்கியிருப்பவள் யான்.

பாம்புகளைக் கொண்ட மலைப்பிளப்புகளையும். உயர்ந்த கொடுமுடிகளையும் கொண்ட மலையிடமெல்லாம், இரவின் நடுமயாமத்தும் ஒளிகொள்ளும்படியாகச் சினத்து முழக்கும் இடியோடுங்கூடிய மின்னலும் இதுகாலை எழுகின்றது. இத்தகைய மழைக்காலப் பொழுதோடு பெய்யும் மழையாற் பெருகிய பெருவெள்ளம் கடந்து போகாமற்படிக்குத் குறுக்கிட்டுக் கிடப்பது மலைச்சாரல். இத்தகைய சாரலின் கண்ணே நோக்குதற்கும் அரிதான உச்சியிடத்தே அமைந்த சிறிதான நெறியினை நினைந்திருப்பவர் என்னையன்றியும், பிறரும் எவரேனும் இவ்வுலகில் உளராமோ?

கருத்து : 'வரும் வழியது கொடுமையை நினைந்து என் மனம் பெரிதும் கலங்குகின்றது; இதுதீர அவர் என்னை மணந்து கொள்ளாரோ?' என்பதாம்.

சொற்பொருள் : பேழ்வாய் – அகன்ற வாய். துறுகல் – வட்டக்கல்லாகத் தோன்றும் பாறை. சிலம்பு – மலைச்சாரல். புகற்சி – மனச் செருக்கு. தொண்டகம் – பறை வகையுள் ஒன்று: குறிஞ்சிக்கு உரியது. பெருநீர் – பெரு வெள்ளம்; மழையினாலே ஏற்பட்டது. விலங்கல் – குறுக்கிட்டுக் கிடத்தல்.

விளக்கம் : புலியும் களிறும் எதிர்ப்பட்ட ஞான்று தம்முட்போரிடும் இயல்பின. 'வரிவயம் பொருத வயக்களிறு போல' (புறம் 100:7) என்பது, இதனை வலியுறுத்தும் குறச்சிறாரின் அஞ்சாமைச் செயலைக் கூறினாள், தலைவன் ஆற்றது ஏதத்திற்கு அஞ்சானாய் வருகின்ற திண்மை கொண்டவன் என்பதனை நினைந்து. 'தொண்டக முழக்கினைக் கேட்டுத் தினையிற்படியும் கிளிகள் அஞ்சி அகலும்' என்றாள், வழியேகத்தினை நினைந்து களவின்பத்தை நாடிவந்து இரவுக் குறியிடத்தே இருக்கின்ற தான் அஞ்சும் அச்சத்தினை நினைந்து.

இங்ஙனம் தோழிபாற் சொல்லும் தலைவியது பேச்சைக் கேட்கும் தலைவன், இரவுக்குறியினை நாடிவருதலைக் கைவிட்டானாகத் தலைவியை மணந்து கொள்ளும் இல்லற வாழ்வினை விரைய மேற்கொள்ளுவதற்கான முயற்சிகளைச் செய்யத் தொடங்குவான் என்பது இதன் பயனாகும்

உள்ளுறை : புலியும் களிறும் பொருதக்கண்டு இன்புறும் குறச்சிறாரைப் போலத் தானும் தலைவனும் கொண்ட உறவை அறியாத பெற்றோர் வேற்றான் ஒருவனுக்குத் தன்னைத் தருதற்குக் கூறியதனால், உளப்போர் பெற்று நலியும் தன்னைக் குறித்தும் சுற்றத்தார் மணவிழா வந்ததென்று ஆரவாரிப்பர் என்பதாம். அந்த ஆரவாரமானது தன் உயிரை உடலினின்றும் அகன்றுபோகச் செய்யும் கொடுமையது என்பதுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/104&oldid=1731577" இலிருந்து மீள்விக்கப்பட்டது