நற்றிணை 1/105
105. நெடுஞ்சேண் பட்டனை!
- பாடியவர் : முடத்திருமாறன்.
- திணை : பாலை,
- துறை : இடைச்சுரத்து மீளலுற்ற நெஞ்சினைத் தலைமகன் கழறியது.
[(து–வி.) பொருள் தேடிவருதலை விரும்பினனாகத் தலைவியைப் பிரிந்து வேற்றுநாட்டினை நோக்கி வழிநடந்து கொண்டிருக்கின்றான் தலைவன். வழியிடையிலே, அவன், மனத்தெழுந்த தலைவியது நினைவினாலே வாட்டமுற்றுத் தன் நெஞ்சுக்குக் கூறிக்கொள்வதாக அமைந்த செய்யுள் இது.)
முளிகொடி வலந்த முள்ளரை இலவத்து
ஒளிர்சினை அதிர வீசி விளிபட
வெவ்வளி வழங்கும் வேய்பயில் மருங்கில்
கடுநடை யானை கன்றொடு வருந்த
நெடுநீர் அற்ற நிழலில் ஆங்கண்
5
அருஞ்சுரக் கவலைய என்னாய்; நெடுஞ்சேண்
பட்டனை, வாழிய—நெஞ்சே!—குட்டுவன்
குடவரைச் சுனைய மாஇதழ்க் குவளை
வண்டுபடு வான்போது கமழும்
அஞ்சில் ஓதி அரும்படர் உறவே.
10
நெஞ்சமே! காய்ந்த கொடிகள் சுற்றிக்கொண்டிருப்பதான, முட்கள் விளங்கும் கிளைகள் அதிர்ச்சி கொள்ளுமாறு வீசியதாகவும். அக்கிளைகளுட் சில முறிந்து வீழுமாறு மோதியதாகவும் வெங்காற்று வழங்கிக் கொண்டிருக்கும் மூங்கில்கள் அடர்த்திருக்கும் வழிப்பக்கத்திலே—
கடிய நடையுடைய யானை தன் கன்றோடும் சேரநின்று வருந்தியிருக்க, நெடுகிலும் நீரற்றும் நிழலற்றும் கிடக்கின்றதான அவ்விடத்திலே, கடத்தற்கரிதான சுரநெறிதான் கவர்த்த பல வழிகளை உடைத்தாயிருக்கும். அதனையும் நீ கருதமாட்டாய்.குட்டுவனது மேற்குமலையிடத்துச் கனைக்கண்ணுள்ள கரிய இதழ்களையுடைய குவளைமலர்களது வண்டுமொய்க்கும் பெருமலரைப்போல நறுநாற்றம் கமழும், அழகிய சிலவாக முடித்த கூந்தலையுடைய காதலியானவள் தீர்த்தற்கரிதான துன்பத்தைப் பொருந்துமாறு, நெடுத்தொலைவுக்குப் பிரிந்து செல்வதற்கும் துணிந்தனை. அத்தகைய நீதான் நெடிது வாழ்வாயாக!
கருத்து : 'பொருளாசை காட்டி அவளைப் பிரியச்செய்த நீதான். இடைவழியிலே அவளாசையை எழுப்பி என்னை நலிவிப்பதேனோ! அதனைவிட்டு என்னைப் பொருளின் பாலேயே செலுத்துக' என்பதாம்.
சொற்பொருள் : முளி – காய்ந்த. வலந்த – சுற்றிப் படர்ந்தேறிய. ஒளிர்சினை – விளங்கும் கிளைகள்; விளக்கம் விளங்கும் மலர்களால் வருவது. கவலை – கவர்த்த நெறி. குட்டுவன் – சேர நாட்டுள் ஒரு பகுதிக்கு உரியவன். குடவரை – மேற்கு மலை.
விளக்கம் : 'அவள் அரும்படர் உறுமாறு நெடுஞ்சேண் பட்டனை; இந்நாள் எனக்கேனும் உறுதுணையாகாதே அவள்பாற் செல்லலுற்றாயாய் என்னையும் கைவிட்டனை; இத்தகைய நீதான் வாழ்க' என்கின்றாள். 'கவலைய என்னாய்' என்றது, 'கவர்த்த வழிகளுள் எதனைப்பற்றிச் செல்வதென்பதைக் கருதாயாய்' என்றதாம். 'யானை கன்றொடு வருந்த' வழங்கும் கோடையைக் காண்பவனின் உள்ளத்தே, புதல்வனோடு தன்னை நினைந்தபடி துயருற்றுச் சாம்பி இல்லிடத்திருப்பவளான தலைவியின் நினைவு தோன்றுகின்றது. இலவம் கோடையிற் செந்நிறப் பூக்களுடன் தோன்றும் அழகினையும் செய்யுள் காட்டுகின்றது.
இறைச்சிகள்: (1) அழகனைத்தும் வீழத் தலைவி பிரிவின் தாக்குதலால் நலிவுற்றிருக்கும் நிலையை நினைப்பானாய், இலவத்தின் ஒளிர்சினை வீழ்ந்துபடக் காற்று வீசும் கொடுமையைக் கூறுகின்றனன்.
(2) புதல்வனைப் பெற்றிருக்கும் தலைவியைப் பேணாது பிரிந்துவந்த கொடுமையைக் கருதினனாய், அவளை நினைந்து, யானை கன்றொடு நின்று வருந்தும் வருத்தத்தைக் கூறுகின்றான்.