உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/106

விக்கிமூலம் இலிருந்து

106. அறிதலும் அறிதியோ?

பாடியவர் : தொண்டைமான் இளந்திரையன்.
திணை : நெய்தல்.
துறை : பருவரவின்கண் பண்டு நிகழ்ந்ததோர் குறிப்புணர்ந்து தலைவன், அதனைக்கண்டு தாங்ககில்லானாய் மீள்கின்றான், தேர்ப்பாகற்குச் சொல்லியது.

[(து–வி.) சென்ற வினையினை முடித்ததன் பின்னர்த்தன் நாட்டினை நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கின்றான் தலைவன் ஒருவன். அவன் மனத்தே, அவளோடு உறவு கொண்ட காலத்துத் தலைவிபால் தோன்றிய குறிப்புகளுள் ஒன்று எழுகின்றது. அதனை உரைத்தானாகத் தேரினை விரையச் செலுத்துமாறு பாகனிடம் கூறுகின்றான்.]

அறிதலும் அறிதியோ—பாக!—பெருங்கடல்
எறிதிரை கொழீஇய எக்கர் வெறிகொள
ஆடுவரி அலவன் ஓடுவயின் ஆற்றாது
அசைஇ, உளஒழிந்த வசைதீர் குறுமகட்கு
உயவினென் சென்று யான், உள்நோய் உரைப்ப, 5
மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள், நறுமலர்
ஞாழல் அம்சினைத் தாழ்இணர் கொழுதி
முறிதிமிர்ந்து உதிர்த்த கையள்
அறிவுஅஞர் உறுவி ஆய்மட நிலையே?

பாகனே! பெருங் கடலிடத்தினின்றும் மோதுகின்ற அலைகள் குவித்துச் சேர்த்த மணல்மேட்டிடம் மிகுமணம் கொள்ளுமாறு விளையாடியிருந்த புள்ளிகளைக் கொண்ட நண்டானது ஓடுதலைப் பின்தொடர்ந்து ஓடிப்பற்றி விளையாடுதற்கு மாட்டாதாளாய்ச் சோர்வுற்று நின்றனள். அவ் விளையாட்டையும் உள்ளத்திருந்து அகற்றி நின்றாளான, குற்றமற்ற அவ்விளையோளுக்கு வருத்தமுற்றேனாய் யானும் அவள்பாற் சென்றேன். சென்ற யான், என் உள்ளத்து எழுந்து வருத்தும் காமநோயைப் பற்றிக் கூறினேன். கூறவும் அதற்கு எதிருரை சொல்வதற்கும் அவள் ஆற்றாதாளாயினள். நல்மலர்களையுடைய ஞாழலது அழகான சினைக்கண்ணே தாழ்ந்து தொங்கிய ஒரு பூங்கொத்தினைக் கோதலுமாயினள். இளந்தளிர்களோடு அம் மலரிதழ்களையும், உதிரச் செய்த கையினளாக, அறிவு மயக்கத்தை அடைந்தவளாக, அவள் அருகே நின்றாள். ஆராய்ந்து இன்புறுதற்கு உரித்தான அத்தகைய மடப்பஞ் செறிந்த நிலையினைப், பாகனே! அனுபவித்து அறிதலான அறிவுப்பாட்டினை நீயும்கண்டு அறிவாயோ?

கருத்து : 'அவள்பால் விரைந்து சென்றடைதற்கு உதவியாகத் தேரினை இன்னும் விரையச் செலுத்துக' என்பதாம்.

சொற்பொருள் : கொழீஇய – கொழிக்கப்பட்ட; கொண்டு குவிக்கப்பெற்ற. வெறிகொள்ளல் – மிகுதியான மணத்தினைக் கொள்ளல்; எக்கர் – மணல் மேடு. ஆடு – விளையாடு. அசைஇ – சோர்வுற்றுக் கலங்கி. வசை – குற்றம்; பழியும் ஆம். உயவு – வருத்தம். முறி – தளிர் அஞர்உறுதல் – மயக்கம் அடைதல்.

விளக்கம் : 'எக்கர் வெறி கொண்டது', அவள் உதிர்த்த ஞாழற் பூக்களினின்றும் எழுந்து பரவிய நறுமணத்தால் என்று கொள்க. 'ஆடுவரி அலவன் ஓடுவயின் ஆற்றாது அசைஇ' என்றது, நண்டலைத்து விளையாடும் நெய்தல்நில மகளிரது சிறுபருவ விளையாட்டினை. 'பொன்வரி அலவன் ஆட்டிய ஞான்று" (குறு : 303] எனவும், 'ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட ஆய்ந்த அலவன் (குறு : 316: 5.6) எனவும், 'திணி மணல் அடைகரை அலவன் ஆட்டி' (அகம்: 208.3) எனவும் வருவன பிறவற்றாலும் இவ் விளையாட்டினது இயற்கை விளங்கும். 'வசைதீர் குறுமகள்' என்றது, குறைப்படாத கற்புத் தன்மையினள் என்பதனாலாம். அவளை விரையச் சென்றடைதலை விரும்பினமாதலின், தேரினை விரையச் செலுத்துக என்கின்றனன். இனி, நண்டலைத்து விளையாடும் பருவத்தேயே அவளைக் காதலித்த தன்னுடைய காதற்செறிவினைக் கூறினனுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/106&oldid=1731590" இலிருந்து மீள்விக்கப்பட்டது