நற்றிணை 1/109
109. கழியும் பொழுது!
- பாடியவர் : மீளிப் பெரும்பதுமனார்.
- திணை : பாலை.
- துறை : பிரிவிடை ஆற்றாளாய தலைமகளது நிலைகண்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
[(து–வி.) பிரிவுக் காலத்தினிடையே தலைமகளது துன்ப நிலையினைக் கண்டு கலங்கிய தோழிக்கு, அத் தலைமகள் தன்னுடைய இடர்மிகுந்த நிலையைக் கூறுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]
'ஒன்றுதும்' என்ற தொன்றுபடு நட்பின்
காதலர் அகன்றெனக் கலங்கிப் பேதுற்று
'அன்ன வோஇந் நன்னுதல்?' நிலை என,
வினவல் ஆனாப் புனையிழை! கேள், இனி
உரைக்கல் ஆகா எவ்வம்; இம்மென
5
இரைக்கும் வாடை இருள்கூர் பொழுதில்,
துளியுடைத் தொழுவின் துணிதல் அற்றத்து
உச்சிக் கட்டிய கூழை ஆவின்
நிலைஎன ஒருவேன் ஆகி
உலமர, கழியும்இப் பகல்மடி பொழுதே!
10
"ஒன்றுபட்டே வாழ்வோம்' என்றுரைத்துக் கூடிய தொன்மைப்பட்ட நட்பினுக்குரியவர் நம் காதலர். அவர் நம்மைப் பிரிந்தார் என்று கலங்கி மயக்கமுற்று, இந்த நல்ல நெற்றியையுடையாளின் நிலைதான் என்னவாகுமோ?" என நினைத்துக் கேட்கின்றாளான புனைத்த இழைகளைப்பூண்டுள்ள தோழியே! இதனையும் கேளாய்:
இம்மென்று ஒலித்து வந்தடையும் வாடைக்காற்றோடு இருளும் மிகுதியாகின்ற பொழுதிலே, மழைத்துளிகளாற் சேறுபட்ட தொழுவிடத்தினின்றும் பெயர்த்துக் கட்டுதற்கு உரித்தான எல்லையிலே, உச்சிப்பக்கமாத் தலைக்கயிற்றைக் கட்டியிருக்கப் பெற்றதாகிய கூழைப்பசுவினது துயரநிலையினைப்போல், யானும் தனிமையாட்டியாக இருந்து வருத்தமுறுமாறு, இந்தப் பகலானது சென்று மடிதலான அந்திப் பொழுதும் இனிக் கழிந்துபோகும். இனி, இரவிடையே எடுத்துச் சொல்லுதற்கும் முடியாதபடியான துன்பமும் என்னை வந்தடையுமே! அதற்கு யான் யாது செய்வேனோ?
கருத்து : 'இரவின் வருகையோடு மிகுதியாக வந்தடையும் பிரிவுத்துயருக்கு எப்படி ஆற்றியிருப்பேன்' என்பதாம்.
சொற்பொருள் : தொன்றுபடு நட்பு – பிறவிதோறும் தொடர்ந்து வருகின்றதான நட்பு பேதுறல் – மயக்கங்கொள்ளுதல். இரைக்கும் - இரைச்சவிட்டு வீசும். இருள்கூர் பொழுது – இருள் மிகுதியாகும் பொழுது. துளி – நீர்த்துளி. துணிதல் அற்றம் – கட்டவிழ்த்துப் பெயர்த்துக் கட்டுதற்குரிய நேரத்தின் எல்லை.
விளக்கம் : துளியுடைத் தொழுவென்றது மழைத்துனிகளின் வீழ்ச்சியால் ஈரமிகுந்த தொழுவத்து தரையினையும், தன்மையையும், அதனிடத்து ஆவிற்கு இருப்புக் கொள்ளதென்பது வெளிப்படை. 'உச்சிக் கட்டிய' என்றது, அதன் தலைக்கயிறு உச்சிப்புறத்தே அசையாது கட்டியிருப்பதனை. இதனால், மழைத்துளிக்கு ஒதுங்கும் வாய்ப்பும் அதற்கில்லை. 'துணிதல் அற்றத்து நிலை' என்றது, மாட்டிற்கு உடையான் அதனை அவிழ்த்துப் பெயர்த்துக் கட்டுதற்கு உரித்தாகிய பொழுதினை அவன் வரவினை அது எத்துணை ஆவலுடன் எதிர்பார்த்துத் துடித்துக் கதறுமோ, அப்படிப்பட்ட நிலையிலே புலம்பி வாடியிருந்தவள் தலைவியென்பது அறியப்படும். குறித்த காலத்து வந்து துயரைத் தீர்த்தற்கு உரியான் வாராது போயதன் காரணத்தாலே, அவளது உயிரானது நிலைத்தற்கு இயலாதாய் மெலிவுற்று, உடற்கூட்டினைவிட்டு அகலுதற்கும் வழியற்றுத் துடிக்கின்றது என்பதும் இதனால் உணரப்படும். 'ஒருவேன் ஆகி உலமர' என்றது, அதுபோது துணையாயமைந்த தோழியும் தன்னில்லிற்குப் போய்விடத் தான் தனித்திருந்து அலமருதற்கு நேரிடும் என்பதனை துளியுடைத் தொழு – ஒழுக்கமுடைய தொழுவும் ஆம். 'நன்னுதல்' என்றது, பண்டிருந்த அழகுச் செவ்வியைச் சுட்டியது. 'ஒன்றுதும்' என்ற சொல், இயற்கைப் புணர்ச்சி பெற்ற காலத்து, அவளைத் தெளிவிப்பானாய், அவன் கூறிய 'சூளுரை' யாகும். 'உரைக்கல் ஆகா எவ்வம்' என்றது, சொல்லால் சொல்லிக்காட்டவியலாதபடி மிகுதிப்பட்ட துயரம் என்பதாம்.
தனிமைத் துயராலே நைந்து வாட்டமுறும் தன்னுடைய துயரநிலைக்கு, 'உச்சிக்கட்டிய கூழை ஆயின்' துயரநிலையினைக் கூறும் உவமைத்திறம் சிறப்பு உடையதாகும்.