உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/114

விக்கிமூலம் இலிருந்து

114. யாறு அஞ்சுவல்!

பாடியவர் : தொல் கபிலர்.
திணை : குறிஞ்சி.
துறை : ஆறு பார்த்து உற்ற அச்சத்தால், தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ச் சிறைப்புறமாகச் சொல்லியது.

[(து–வி) தலைமகன் இரவுக்குறியை விரும்பினனாக வருகின்ற வழியினது தன்மையை நினைந்து வருந்துவாள்போலச் சிறைப்புறத்திருக்கும் தலைவன் கேட்குமாறு இவ்வாறு தோழி கூறுகின்றனள். இரவுக்குறி மறுத்து வரைவு வேட்டல் இதன் கருத்தாகும்.]

வெண்கோடு கொண்டு வியலறை வைப்பவும்
பச்சூன் கெண்டி வள்ளுகிர் முணக்கவும்
மறுகுதொரு புலாவும் சிறுகுடி அரவம்
வைகிக் கேட்டுப் பையாந் திசினே;
அளிதோ தானே தோழி! அல்கல் 5
வந்தோன் மன்ற குன்ற நாடன்
துளிபெயல் பொறித்த புள்ளித் தொல்கரைப்
பொருதிரை நிவப்பின் வரும்யாறு அஞ்சுவல்
ஈர்ங்குல் உருமின் ஆர்கலி நல்லேறு
பாம்புகவின் அழிக்கும் ஓங்குவரை பொத்தி 10
மையல் மடப்பிடி இணையக்
கையூன்றுபு இழிதரு களிறுஎறிந் தன்றே.

தோழீ! நேற்றிராப் போதிலே, மலைநாட்டானாகிய தலைவனும் வந்தனன்காண். துளிகளாகப் பெய்த பெயலானது பொறித்த புள்ளிகளோடே விளங்கும் பழங்கரையினைப் பொருதும் அலைகளோடு மேலெழுந்து பெருகிவருகின்ற யாற்றினை நினைந்து யானும் அஞ்சுவேன். ஈரிய குரலினதான இடியின் பேராரவாரத்தைக் கொண்ட நல்ல ஏறானது, பாம்பின் கவினாக விளங்கும் அதன் தலையினை அழிக்கின்ற தன்மையுடைய உயர்ந்த வரையிடத்தே பொருந்திநின்றபடி, தன்பாற் காதலுடைய இளம்பிடியானது வருத்திப் புலம்ப, அதற்கு ஆதரவாகத் தன் கையை ஊன்றியபடியே களிறானது இறங்கிவர, அந்தக் களிற்றைக் கொன்று இழுத்துச் சென்றது அவ்யாறு. வெள்ளத்தோடு வந்த அதனது வெள்ளிய கோட்டினை வெட்டி எடுத்துக்கொணர்ந்து, அகன்ற பாறையிடத்தே வைப்பார்கள் குன்றவர் சிலர். அதன் பசிய ஊனைக் கிளைத்துத் தோண்டிப் பெரிதான அதன் நகத்தினைக் கொண்டு வந்து புதைத்து வைப்பார்கள் சிலர். இதனால், தெருக்கள்தோறும் புலால் நாற்றம் கவியும் தன்மைத்தாயிருந்தது நம் சிறுகுடி. அதனிடத்து, அதுகாலை எழுந்த ஆரவாரத்தினை இவ்விடத்திலிருந்து கேட்டவாறு, தலைவனை நினைந்து யானும் வருத்தமுற்றிருந்தேன். அதுதான் பெரிதும் இரங்குதற்குரியது அல்லவோ!

கருத்து : 'இரவுக் குறியைக் கைவிட்டுத் தலைவியை மணந்து கூடிவாழ்தலே நன்றாகும்' என்பதாம்.

சொற்பொருள் : வியல் அறை – அகன்ற பாறை. கெண்டி – கிளைத்துத் தோண்டி. முணக்கல் – புதைத்தல். மருகு – தெரு. சிறுகுடி – சிறிதான குடியிருப்பு; சிற்றூர். பையாப்பு – வருத்தம். அல்கல் – இரவு. பொறித்த – புள்ளியுண்டாக்கிய. நிவப்பு – உயர்வு. ஈர்ங்குரல் – ஈரியகுரல்; ஈரிய – இரண்டாகப் பிளந்து சென்ற.

விளக்கம் : ஆற்றிலிறங்கிய பிடியானது. ஆற்றின் இழுப்பினாலே தளர்வுற்றுப் பாறையைப் பற்றி நிற்க, அதனைக்காத்தற்கு இறங்கிய களிற்றினை ஆறு அடித்துச் சென்றது. என்பது, தலைவியது பிரிவாகிய கலக்கத்தைத் தீர்க்கக் கருதிய தலைவன், தன் துயரைப் பொருட்டாக்காது இரவுப்போதில் வருவானாயினும், அவனுக்கு இடையூறு நேருமோவெனத் தாம் கலங்குவேம் என்பதனை உணர்த்துவதாம். இரவுக்குறி நாடி வருதலை நினைந்தும் வருந்துவோம்; பிரிதலையும் பொறுக்கேம்; ஆதலின், இனி வரைந்து மணந்து கொள்ளுதலில் அவன் உளஞ் செலுத்துதலே செயத்தகுந்தது என்கின்றாளுமாம். 'வைகித் கேட்டு' என்றது, தான் துயிலொழிந்திருந்த நிலையைக் கூறியதாம். இதனால், இவர்களது மனப்பாங்கை அறியலுறும் தலைவன் தலைவியை மணந்து பெறும் இல்வாழ்வினை நாடுபவனாவான் என்பதும் விளங்கும். ஆற்றுப் புதுவெள்ளத்தைக் கண்டு அடைந்த அச்சத்தினாலே தோழி இப்படி உரைப்பதாகவும் கொள்ளலாம். இரவுக்குறி இடையிடுபட்ட காலத்துப் பிற்றை நாளிலே உரைத்ததாகவும் கொள்க.

'மையல் மடப்பிடி இனையக் கையூன்றுபு இழிதரு களிற்றைப்போலக் காமநோயாலும் பிரிவுத்துயராலும் வழியின் ஏதத்திற்கு நடுங்குதலானும் நலிந்திருக்கும் தலைவிக்கு உதவுமாறு தலைவன் விரைந்து மணவினையின் நாட்டஞ்செலுத்தி, அவளுக்கு உறுதுணையாக அமைதல் வேண்டும், என்பதுமாம்.

பிற பாடம் : புலாவம் சிறுகுடி; மையின் மடப்பிடி.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/114&oldid=1731663" இலிருந்து மீள்விக்கப்பட்டது