நற்றிணை 1/116
116. இன்னும் கைவிட்டார்!
- பாடியவர் : கந்தரத்தனார்.
- திணை : குறிஞ்சி.
- துறை : வரைவு நீட்டிப்ப ஆற்றாளாய தலைவி தோழிக்கு வன்புறை எதிரழிந்து சொல்லியது.
[(து–வி.) வரைபொருளுடன் விரைவிலே வந்துவிடுவதாகக் கூறிக் காதலன் பிரிந்து சென்றான். அவன் சொன்ன நாளின் கெடுக்கழிந்தபின், தலைவியின் ஆற்றாமை மிகுதியாகின்றது. 'அவன் சொற்பிழையான்; விரைய வந்து சேர்வான்' என வற்புறுத்திக் கூறித் தெளிவுபடுத்த முயலுகின்றாள் தோழி. அவளுக்குத் தலைவி உரைப்பதாக அமைந்திருப்பது இச் செய்யுள்.]
'தீமை கண்டோர் திறத்தும் பெரியோர்
தாம் அறிந்து உணர்க' என்ப மாதோ;
வழுவப் பிண்டம் நாப்பண் ஏமுற்று
இருவெதிர் ஈன்ற வேல்தலைக் கொழுமுனை
சூல்முதிர் மடப்பிடி நாள்மேயல் ஆரும்
5
மலைகெழு நாடன் கேண்மை பலவின்
மாச்சினை துறந்த கோள்முதிர் பெரும்பழம்
விடர்அளை வீழ்ந்துஉக் காஅங்கு தொடர்பறச்
சேணும் சென்றுஉக் கன்றே; அறியாது
ஏகல் அடுக்கத்து இருள்முகை இருந்த
குறிஞ்சி நல்லூர்ப் பெண்டிர்
10
இன்னும் ஓவார் என்திறத்து அலரே!
'தீமையே இயல்பாகக் காணப்படுவாரது வகையிலும், நாம் அவற்றின் கூறுபாடுகளை முற்றவும் ஆராய்ந்து அறித்ததன் பின்னரே, அவரைத் தீயவரென உணர்தல் வேண்டும்' என்று சான்றோர் கூறுவார்கள்.
சூல் முதிர்ந்த இளம்பிடியானது, தனது அறியாமையினாலே இறுமாப்புற்றதாய்த் தன் வயிற்றுக் கருப்பிண்டம் வழுவி வீழுமாறு, பெருமூங்கில்களிலே துளிர்த்திருக்கும் வேல்முனை போன்ற கொழுமையான முளைகளை, விடியற்காலை வேளையிலே சென்று தின்னும். அத்தகைய மலைப்பகுதி விளங்கும் நாட்டிற்கு உரியோன் நம் தலைவன். அவனிடம் நாம் கொண்ட நட்பானது—
பலாலினது பெரிதான கிளையினை விட்டு நீங்கிய காய் முதிர்ந்த பெரும்பழமானது, மலைப்பிளப்புக்களின் இடைக்கண் உள்ள சுனையிடத்தே வீழந்து அழிந்தாற் போல முற்றவும் தொடர்பு அறுமாறு நெடுநாட்களும் சென்று ஒழிந்தது. அதனைத் தாம் அறியாராய்,பெரிதான மலைச்சாரலிடத்தே அமைந்த இருளடர்ந்த குவட்டிடத்தேயுள்ள இக் குறிஞ்சிச் சிற்றூராகிய நல்ல ஊரிடத்துப் பெண்கள், எம் திறத்துக் கூறப்படும் பழியுரைகளை இன்னும் கைவிடாதிருக்கின்றனரே!'
கருத்து : 'அவர் நட்புப் பிழைத்தனர்; அதனை யான் மறக்க முயலினும், அவரையும் என்னையும் சார்த்தி இவ்வூரவர் கூறும் பழியுரைகளால் என் நோய் மிகுதிப்படுகின்றதற்கு யான் என்செய்வேனோ?' என்பதாம்.
சொற்பொருள் : தீமை – தீய தன்மை; குளுரை பொய்த்தல். பிண்டம் – முதிராத சூல். நாள்மேயல் –விடியற் காலத்துச் சென்று மேய்தல். மாச்சினை – பெரிய கிளை: கருமையான கிளையும் ஆகும்; கிளைக்கணுக்களிலே பலாக் காய்ப்பதாகிய உண்மையும் இதனால் அறியப்படும். கோள் முதிர் – காய் ஊழ்த்து முதிர்தல்.
விளக்கம் : 'நட்பானது உயர்வான நோக்கத்தோடு பிறந்து முதிர்ந்ததாயினும், பலாப்பழம் விடர் அளை வீழ்ந்து அழிந்தாற்போலப் பயனற்றுக் கழிந்தது' என்கின்றாள் தலைவி, 'தீமை கண்டோர் திறத்தும், பெரியோர் தாமறிந்து உணர்க' என்பது அறவிதி. இங்ஙனமாகத் 'தீமையற்ற என்பாலேயும் இவ்வூரவர் அறியாது பழி கூறுகின்றனர்' என்கின்றாள்.
'வாய்ச்சுவையே கருதி வயிற்றுச்சூலை வீழச்செய்யும் மூங்கில் முளையைத் தின்னும் பிடியினைக் கொண்ட மலை நாட்டான்' என்றது, அவனும் 'பொருள்கருதி நிலையான இன்பத்தை இழக்கும் அறியாமை உடையவனாயினான், என்பதாம். தன் நோயின் மிகுதியைத் தான் மறைத்தற்கு முயன்றாலும், ஊரவர் உரைக்கின்ற அலருரைகளின் மிகுதியினாலே அதுதான் நாளும் நாளும் பெருகி வளருகின்றது என்பதுமாம்.
உள்ளுறை : 'சூல் முற்றிய யானை, தன் வயிற்றுப் பிண்டம் கலைந்து விழுமென்பதை அறியாதாய்ச் சென்று மூங்கில் முளைகளைச் சுவை கருதித் தின்னும்' என்றது, அவ்வாறே என் உயிரானது அவர் உறவினது பயனாலே உடலை விட்டு வழுவிப்போம் என்பதனை அறியாராய், இவ்வூரவர் அலர் எடுத்துத் தூற்றுவர் என்கின்றாள்.