நற்றிணை 1/119
119. மலையினும் பெரிது!
- பாடியவர் : பெருங்குன்றூர் கிழார்.
- திணை : குறிஞ்சி.
- துறை : சிறைப்புறமாகத் தோழி செறிப்பு அறிவுறீஇயது.
[(து–வி) தலைவியது கூட்டத்தை வேண்டி வந்து ஒருசார் ஒதுங்கி நிற்கின்றான் தலைவன். அவனது உள்ளத்தை விரைய வரைந்து கொள்ளுதலிற் செலுத்துதற்குத் தோழி கருதுகின்றாள். அவன் கேட்டு உணருமாறு தனக்குள் சொல்வாள்போல இப்படிக் கூறுகின்றாள்.]
தினையுண் கேழல் இரியப் புனவன்
சிறுபொறி மாட்டிய பெருங்கல் அடாஅர்
ஒண்கேழ் வயப்புலி படூஉம் நாடன்
ஆர்தர வந்தனன் ஆயினும், படப்பை
இன்முசுப் பெருங்கலை நன்மேயல் ஆரும்
5
பன்மலர்க் கான்யாற்று உம்பர், கருங்கலைக்
கடும்புஆட்டு வருடையொடு தாவன உகளும்
பெருவரை நீழல் வருகுவன் குளவியொடு
கூதளம் ததைந்த கண்ணியன் யாவதும்
முயங்கல் பெறுகுவன் அல்லன்;
10
புலவி கொளீஇயர், தன் மலையினும் பெரிதே.
புனத்திற்கு உரியோனாகிய குன்றவன், தினையுண்ணும் விலங்குகளை அகப்படுத்தக் கருதி அமைத்துவைத்த சிறிய பொறியிடத்துள்ள பெருங்கல்லின் கீழாகத், தினைப்பயிரை உண்டுகொண்டிருக்கும் காட்டுப் பன்றிகள் அஞ்சியோடுமாறு, ஒள்ளிய நிறத்தையும் வலிமையையும் கொண்ட புலியானது வந்து அகப்பட்டுக் கொள்ளுகின்ற நாட்டினன் தலைவன். அவன், யாராலே தரப்பட்டு நம்பால் வந்தனனாயினும் ஆகுக! இனிய முசுவினது பெரிதான ஆணானது கொல்லையிடத்தே நல்ல உணவினைப் பெற்று உண்பதான, பல்வகை மலர்களோடும் வரும் காட்டாற்றினது மேற்புறத்தை, கரிய கலைமானானது வருடைமானின் கூட்டத்துடனே தாவிக் குதித்தபடி செல்லாநிற்கின்ற, பெரிய மூங்கிற்புதரின் நிழலினிடத்தே அவன் வருவான்! அவன் மலைப் பச்சையுடனே கூதளத்து மலரையும் சேர்த்துக் கட்டிய கண்ணியுடனும் திகழ்வான்! ஆயினும், எவ்வளவேனும், தலைவியது முயக்கத்தை இனிப் பெறுவான் அல்லன். தன் மலையினுங் காட்டில் பெரிதாக அவன் புலந்து கொள்ளினும் கொள்ளுக!
கருத்து : 'இனி, அவள் மணந்து கொண்டன்றித் தலைவியைக் களவானே அடைவது இயலாது' என்பதாம்.
சொற்பொருள் : கேழல் – பன்றி. புனவன் – புனத்திற்கு உரியோன். பொறி – எந்திர அமைப்பு. கேழ் – நிறம், மேயல் – மேய்ச்சல். சுடும்பு - கூட்டம்; ஆட்டு மந்தை, வரை – மூங்கில். மலைப்புறமும் ஆம். குளவி – காட்டு மல்லிகையும் ஆம்; மலைப் பச்சை – கூதளம் - கூதளம் பூ; 'கூவிளம்' என்றும் பாடம்; பொருள் வில்வம்'.
இறைச்சி : (1) 'கருங்கலை கடும்பாட்டு வருடையொடு தாவன உகளும் நீழல் வருகுவன்' என்றது, வேற்று வரைவு நேரின் அதற்கு ஒத்திசையாது வேறுபடத் தோன்றுவாளாகிய தலைவியை அவன் நினையானாயினன் என்பதாம்.(2) 'முசுப் பெருங்கலை நன் மேயல் ஆரும்' தகைமை போல, வரைந்து மணந்து கொள்ளின் அவனும் தலைவியோடு பேரின்பம் துய்த்துக் களித்தல் வாய்க்கும் என்பதாம்.
உள்ளுறை : தினை கவரும் கேழலை அகப்படுத்தவைத்த பொறியுள்ளே வயப்புலி சிக்கினாற்போல, விரும்பிய இவனை இழப்பினும், இவனினும் சிறந்தானாகிய தலைவன் ஒருவன் தலைவியை வரைந்து மணத்தலைக்கருதி வந்தனன் என்பதாம்.
விளக்கம் : அவன் வரைந்து கொள்ளுதலில் முயலாததன் பயனே, அவன் இன்பமிழப்பதும், தலைவிக்குத் துயரிழைப்பதும் ஆதலின், அவனது புலவியை அது எத்துணைப் பெரிதாயினும் யாம் பாராட்டேம் என்பதாம்.
மேற்கோள் : "தினையுண் கேழல் இரிய என்னும் நற்றிணையுள், 'யாவது, முயங்கல் பெறுகுவன் அல்லன், புலவிகோள் இறீயதன் மலையினும் பெரிதே' என்பது நொதுமலர் வரைவு சிறைப்புறமாகக் கூறியது" எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள். பொருளியல் சூ. 16 உரை மேற்கோள்.) 'குளவியொடு கூதளம் ததைந்த கண்ணியன்' எனவும், 'பன்மலர்க் கான்யாற்று உம்பர்' எனவும் வருதல், கார்காலம் வந்ததைக் காட்டுவதாம்.