உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/121

விக்கிமூலம் இலிருந்து

121. புறவிற்று !

பாடியவர் : ஒருசிறைப் பெரியனார்
திணை : முல்லை.
துறை : வினைமுற்றி மறுத்தரும் தலைமகற்குத் தேர்ப்பாகன் சொல்லியது.

[(து–வி) வினை முடித்தவனாகத் தேர்மீது அமர்ந்து வருகின்ற தலைவன், தலைவியின் நினைவாற் சோர்வு அடைகின்றான். அவனைத் தேற்றுவானாகப் பாகன் உரைப்பது போல அமைந்த செய்யுள் இது]

விதையர் கொன்ற முதையல் பூமி
இடுமுறை நிரப்பிய ஈர்இலை வரகின்
கவைக்கதிர் கறித்த காமர் மடப்பிணை
அரலைஅம் காட்டு இரலையொடு வதியும்
புறவிற்று அம்ம, நீ நயந்தோள் ஊரே; 5
'எல்லிவிட் டன்று வேந்து' எனச் சொல்லுபு
பரியல்; வாழ்க நின் கண்ணி! காண்வர
விரியுளைப் பொலிந்த வீங்குசெலற் கலிமா
வண்பரி தயங்க எழீஇத், தண்பெயற்
கான்யாற்று இகுமணற் கரைபிறக்கு ஓழிய 10

இல்லிருந்து அயரும் மனைவி
மெல்லிறைப் பணைத்தோள் துயில்அமர் வோயே!

அழகுபெற விரிந்த தலையாட்டம் அமைத்ததும், விரைந்த செலவினையும் கனைத்தலையும் கொண்டதுமான வளமையான பரிமாவானது விளங்க எழுந்து, தண் பெயலினாலே பெருகிய காட்டாற்றினது சொரியும் மணற்கரையானது பிற்படச் செல்லும்படியாகச் சென்று, இரவுப் போதிலே நின் புதுவரவை விரும்பி ஏற்றளாகக் களிக்கும் நின் மனைவியது. மென்மையான சந்தினைக் கொண்ட பணைத்த தோளிடத்தே கிடந்து துயில்கொள்ளுதலை விரும்புவோனாகிய தலைவனே! நம் வேந்தன் நேற்றிரவு தான் வினைமுடித்த நினக்கு விடைதந்தனன் எனச் சொல்லி வருந்தல் வேண்டா! நின் கண்ணி வாழ்வதாக! நீ விரும்புகின்ற தலைவியது ஊரானது, விதையிடுவார் அழித்த பழங்கொல்லைப் புழுதியிடத்தே முறையே இடப்பெற்று நிரம்பிய ஈரிய இலைகளைக் கொண்டே வரகுப் பயிரினது கவைத்த கதிர்களைத் தின்ற விருப்பம் வருகின்ற இளைதாகிய மான்பிணையானது, மரல்வித்துக்கள் உதிர்ந்து கிடக்கும் அழகிய காட்டிடத்துத் தன் கலையோடு சேர்ந்து தங்கியிருக்கும் இப் புறவத்தின் கண்ணேதான் உள்ளது.

கருத்து : 'நின் மனையிடத்தே விரைய நின்னைச் சேர்ப்பேன்' என்பதாம்.

சொற்பொருள் : விதையர் – விதை விதைப்பாராகிய ஆயர். கொன்ற – கொன்று அழித்த. முதையல் – பழங் கொல்லை. எல்லி – நேற்றிரவு. வேந்து – வேந்தன். உளை – தலையாட்டம். கண்ணி – தலைமாலை, கலி – கனைத்தலாகிய ஆரவாரம். பரி – பரிமாவாகிய குதிரை. இகுமணல் – சரியும் மணல்.

விளக்கம் : தேரினை விரையர் செலுத்தும் பாகன், அதனிலும் விரையச் சென்று தலைவியைக் காணத்துடித்த தலைவனது குறிப்பைக் கண்டு இவ்வாறு கூறுகின்றான்.

இறைச்சி : 'கவைக்கதிர் கறித்த பிணை இரலையோடு வதியும் புறவிடத்து அவளூர்' ஆதலின், நின் இல்லிடதிருந்து வாழும் அவளும் நின்னொடு கலந்து இந்நாளிரவின் கண், இன்புறுவாள்' என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/121&oldid=1731685" இலிருந்து மீள்விக்கப்பட்டது