நற்றிணை 1/137
137. அறியது எய்தினை போலும்!
- பாடியவர் : பெருங் கண்ணனார்.
- திணை : பாலை,
- துறை : தலைவன் செலவு அழுங்கியது.
[(து–வி.) வினைவயிற் செல்லுமாறு தூண்டிய தன் நெஞ்சிற்குத் தலைவன் தலைவியது அருமை கூறியவனாக அறிவு தெருட்டித் தன் செலவை நிறுத்துகின்ற முறையில் அமைந்த செய்யுள் இது.]
தண்ணிய கமழும் தாழிருங் கூந்தல்,
தடமென் பணைத்தோள்; மடநல் லோள்வயின்
பிரியச் சூழ்ந்தனை ஆயின், அரியது ஒன்று
எய்நினை வாழிய நெஞ்சே! செவ்வரை
அருவி ஆன்ற நீர்இல் நீள் இடை,
5
கயந்தலை மடப்பிடி இயங்குபசி களைஇயர்,
பெருங்களிறு தொலைத்த முடத்தாள் ஓமை
அருஞ்சுரம் செல்வோர்க்கு அல்குநிழல் ஆகும்
குன்ற வைப்பின் கானம்
சென்றுசேண் அகறல் வல்லிய நீயே!
10
நெஞ்சமே! செவ்விதான மலையிடத்திருந்து வீழும் அருவியிடத்துப் பொருந்திய நீர் இல்லாதே போயிருக்கும் தன்மையுற்ற நெடிதான நெறி; அந்நெறியிடத்தே, மென் தலையினை உடைய தன் இளம்பிடி வருத்தமுறுகின்ற பசி நோயினைப் போக்கும் பொருட்டாகப் பெரிய களிற்று யானையானது, வளைந்த அடியைக் கொண்ட ஓமை மரத்தை முறித்துத் தள்ளியிருக்கும். அத் தன்மை கொண்ட செல்லற்கரிய சுரநெறியிடத்தே, அவ்வோமை மரங்களே செல்வார்க்குத் தங்கும் நிழலாகவும் விளங்கும். இடையிடையே குன்றுகளைக் கொண்ட அத்ததைய காட்டுவழியாகச் சென்று, நெடுந்தொலைவுக்கு அகன்று போதற்கும் நீதான் வலிமையுற்றனை. அத்தகைய நீதான், தண்மணம் கமழ்கின்றதும், பிடரியிடத்துத் தாழ்ந்து கிடப்பதுமான கருகூந்தலையுடையாளும், பருத்த மென்மை கொண்ட தோள்களையும் இளமைப் பருவத்தையும் உடையாளுமான நம் தலைவியைப் பிரிதற்கும் கருதினை. அஃது உண்மையாயின், அவளிலுங் காட்டில் எமக்குப் பெறுதற்கு அரிதான ஒன்றனை நீதான் அடைந்தனை ஆவாய். அங்ஙனம் அடைந்த அதனோடேயே நீயும் சென்று இனி வாழ்வாயாக!
கருத்து : 'நீ விரும்பும் பொருள் தான் இவளினும் சிறந்தது அன்று' என்பதாம்.
சொற்பொருள் : செல்வரை – செவ்விய மலை: செங்குத்தான மலை. ஆன்ற நீர் – அமைந்த நீர், சூழ்ந்தனை – கருதினை. கயந்தலை – மென்மை கொண்ட தலை. ஓமை – ஓமை மரம். அல்குதல் – தங்குதல். வல்லிய –வன்மையுற்ற.
விளக்கம் : ஒன்றை இழக்கத் துணிவதென்றால், அதனினும் சிறந்த மற்றொன்றை அடைதல் வேண்டும். தலைவியை நீத்துச் செல்லத் துணியும் நீயோ, அருவிகள் நீரொழிந்தவையாகத் தோற்றுவதும், ஓமையின் புள்ளி நீழலன்றி நறுநிழல் இல்லாதிருப்பதும், கடத்ததற்கரியதும், களிறுகளை உடையதுமான காட்டுவழியினைக் காட்டுகின்றாய். இவளை விட்டுப் பெறுவன அவையாயின், யாம் அவற்றை விரும்பேம். நீயே சென்று பெறுக. இப்படிச் சொல்லுவதாக அமைத்துக்காண்க.
தண்ணிய கமழும் தாழிருங் கூந்தற்குச் செவ்வரை ஆன்ற நீரில் அருவிதான் இணையாமோ? தடமென் பணைத்தோளின் இனிமைக்கு முடத்தாள் ஓமையின் நிழல்தான் ஒப்பாமோ? அந்த நிழலும் பிடியின் பசியைப் போக்கக் களிறு சிதைத்த மரத்து நிழலாக, அதன் பாசத்துச் செவ்வி தலைவியை விட்டுப் பிரிந்து வருத்தத்திற்கு உட்படுத்திய பொருந்தாச் செயலை நினைவூட்டுமன்றோ? இப்படியெல்லாம் கேட்பதாகவும் தொடர்புபடுத்திக் கருதுக.
உள்ளுறை : 'மடப்பிடியது துயரைப் போக்குதற்கு ஓமையை முறித்து உண்ணத் தருகின்ற களிற்றது பெருந்தன்மை போல, நாமும் பெருந்தன்மை கொள்வதற்கு மாறாக, நாமே அவட்கு வருத்தத்தை உறுவிப்பது எவ்வளவு பொருத்தமற்றது', என்பதாம். 'நீரற்ற அருவிபோலவும், நிழலற்ற கானம் போலவும், அவளும் தன் நலனிழந்து உயிர் கெடுவாள்' என்பதுமாம்.