உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/139

விக்கிமூலம் இலிருந்து

139. பொருந்தி உலாவுக!

பாடியவர் : பெருங் கௌசிகனார்.
திணை : முல்லை.
துறை : தலைவன், வினைமுற்றி வந்த பள்ளியிடத்தானாகப் பெய்த மழையை வாழ்த்தியது.

[(து–வி.) தலைவியைப் பிரிந்து வினைமேற் சென்றிருந்த தலைவன், வினைமுடித்தானாகத் திரும்பிவந்து தலைவியுடன் கூடி இன்புற்றிருக்கின்றான். அவ்வேளை, உலகுய்யப் பெய்யும் மழையினன் நோக்கி இப்படி வாழ்த்துகின்றான்.]

உலகிற்கு ஆணி யாகப் பலர்தொழப்
பலவயின் நிலைஇய குன்றின் கோடு தோறு
ஏயினை உரைஇயரோ! பெருங்கலி எழிலி!
படுமலை நின்ற நல்யாழ் வடிநரம்பு
எழீஇ யன்ன உறையினை முழவின் 5
மண்ஆர் கண்ணின் இம்மென இமிரும்
வணர்ந்துஒலி கூந்தல் மாஅ யோளோடு
புணர்ந்தினிது நுகர்ந்த சாரல் நல்ஊர்
விரவுமலர் உதிர வீசி
இரவுப்பெயல் பொழிந்த உதவி யோயே! 10

பேராரவாரத்துடன் முழங்கி வருகின்ற மேகமே! மத்தளத்தின் மார்ச்சினை வைத்த கண்ணிடத்தைப்போல இம்மென்னும் ஒலியோடு முழங்கும் இடிகளை உடையாய்! கடைகுழன்று தாழ்ந்த கூந்தற் செவ்வியையுடைய மாமை நிறத்தாளான இவளோடும் கூடியிருந்து, இனிதாக யான் அநுபவித்த இன்பத்தினைத் தந்த மலைச்சாரலிடத்ததான இந்த நல்ல ஊரிடத்தே, பலவண்ண மலர்கள் பலவும் உதிரும்படியாக மோதி, இரவுப்போதிலே பெயலைப் பொழிந்த உதவியையும் உடையோயே! நிலைபெறுதலையுடைய நல்ல யாழினது வடித்தலைப் பொருந்திய நரம்புகளிடத்திருந்து, 'படுமலைப் பாலை' என்னும் பண் எழுந்து வந்தாற்போல. ஒலியோடு வீழும் துளிகளையும் கொண்டோயே! உலகிற்கு ஆதாரமாகக் கொண்டு பலரும் தொழுது போற்ற, ஆங்காங்கே பற்பல இடங்களிலுமாக நிலைநிற்கின்ற குன்றுகளின் கொடிமுடிகள் தோறும் சென்று சென்று பொருந்தினையாய் நீயும் உலாவருவாயாக!

சொற்பொருள் : ஆணியாக ஆதாரமாக, கடையாணியாக, பலவயின் – பலவிடத்தும். கோடு – கொடுமுடி; சிகரம் – உரைஇயரோ – உலவுவாயாக. படுமலை – படுமலைப்பாலைப்பண், வடிநரம்பு – வடித்தல் பொருந்திய நரம்பு. உறை – துளி, முழவு – மத்தளம். மண்ணார் கண் – மார்ச்சனை வைத்த கண். இமிரும் – ஒலிக்கும். விரவு மலர் – கலப்பான பன்மலர்.

கருத்து : 'மழையே! எனக்கு உதவிய நின்னைப் போற்றுவேன்' என்பதாம்.

விளக்கம் : உலகை உருளாகவும், அந்த உருளிற் பொருந்தி ஆதாரமாக விளங்கும் கடையாணியாக மழையினையும் கொள்ளுக. 'பலர்' என்றது, பற்பல நாட்டினரையும் ஆம். மழையைப் பலரும் தொழுதல், அதனாற் பெற்று வாழ்கின்ற பெரும்பயனுக்கு நன்றிகடனாக கார்காலத்தே மீண்டுவந்து இன்புற்றிருக்கும் தலைவனும் தான் பெறுகின்ற இன்பத்தை நினைந்து மழையை வாழ்த்துகின்றான் எனலாம். 'முழவின் மண்ஆர் கண்ணின் இமிரும்' என்ற நினைப்புத் தலைவன் அரசவினையினை மேற்கொண்டு சென்று வெற்றி முழக்கோடு திரும்பியவன் என்பதனைக் காட்டுவதாகும்.

உள்ளுறை : உலகிற்கு ஆணியாக விளங்கும் மழையினது தன்மைபோலத் தன் வாழ்விற்கு ஆதாரமாக விளங்குவது தலைவியது தண்ணளியோடு கூடிய கூட்டம்' என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/139&oldid=1731729" இலிருந்து மீள்விக்கப்பட்டது