உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/140

விக்கிமூலம் இலிருந்து

140. இன்னும் இரப்பாம்!

பாடியவர் : பூதங்கண்ணனார்;
திணை : குறிஞ்சி.
துறை : துறை மறுக்கப்பட்ட தலைவன் தன் நெஞ்சினை நெருங்கியது.

[(து–வி.) தோழிபாற் குறையிரந்து நின்று, அவளால் மறுத்துரை கூறப்பெற்றுத் தளர்த்த தலைவன், தன் நெஞ்சுக்குக் கூறுவதாக அமைந்தது இச்செய்யுள்.]

கொண்டல் மாமழை குடக்கேர்பு குழைத்த
சிறுகோல் இணர பெருந்தண் சாந்தம்
வகைசேர் ஐம்பால் தகைபெற வாரிப்
புலர்விடத்து உதிர்த்த துகள்படு கூழைப்
பெருங்கண் ஆயம் உவப்பத் தந்தை 5
நெடுந்தேர் வழங்கும் நிலவுமணல் முற்றத்துப்
பந்தொடு பெயரும் பரிவி லாட்டி
அருளினும் அருளாள் ஆயினும், பெரிதழிந்து
பின்னிலை முனியல்மா!—நெஞ்சே—என்னதூஉம்
அருந்துயர் அவலம் தீர்க்கும்
மருந்துபிறிது இல்லை, யான்உற்ற நோய்க்கே. 10

பெருமை கொண்ட நெஞ்சமே! கடனீரை முகந்துகொண்டு எழுந்து வருகின்ற கார்மேகமானது, மேற்கு மலையிடத்தே கவிந்து மழையினைப் பொழியும். சிறுசிறு கிளைகளிலே பூங்கொத்துக்களைக் கொண்டு விளங்கும் பெருந் தண்மையினைக் கொண்ட சந்தனமரங்கள், அதனால் தழை மிகுந்தவாயிருக்கும். அந்தச் சந்தனத் தேய்வுடன் பற்பல நறுமணப் பொருட்களையும் வகைபடச் சேர்த்து ஊட்டிய கூந்தலைத் தகைமைபெற வாரிக் கொள்பவர் பெண்கள். அந்தச் சாந்தமானது காய்ந்தவிடத்து உதிர்க்கப்பட்ட துகள்படிந்த கூந்தலையும் பெரிதான கண்களையும் உடையவர் தலைவியின் தோழிப்பெண்டிர்கள். அவர்கள் உவப்படையுமாறு தன் தந்தையது நெடிய தேரானது செல்லுகின்ற சிறப்பையுடைய நிலவுபோன்ற வெண்மணல் விரித்துக்கிடக்கும் முற்றத்திடத்தே, பந்தோடும் விளையாடுதற்குச் செல்லுகின்ற தலைவி, நம்மேல் அன்பற்றவளாயினாள். அவள் நமக்கு அருளிச் செய்பவளானாலும், அருளாதாள் ஆயினும், பெரிதும் மனச்செருக்கு அழிந்தனையாய் இரந்து வழிபட்டு நிற்றலை மட்டும் வெறுக்காதே கொள். யானடைந்த இந்தக் காமநோயாகிய போக்கற்கரிய துயரத்திற்கு அதனைப் போக்கும் மருந்தாக அமையக் கூடியவள் அவளேயன்றிப் பிறிது யாரும் இல்லை. ஆதலின், நீதான் தளர்தல் கூடாது காண்!

கருத்து : 'இனியும் வேண்டுதலைத் தொடர்வாயாக' என்பதாம்.

சொற்பொருள் : கொண்டல் – கடனீரை முகத்து எழுவதாகிய மேகம்; கீழ்க்காற்றுமாம். குடகு – மேற்கு. குழைத்து – தழைத்த. இணர – பூங்கொத்துக்களையுடைய. துகள் – பொடி. கூழை – கூந்தல், பரிவு – அன்பு. பின்னிலை - இரந்து பின்னிற்றலை.

விளக்கம் : 'தன் நோய்க்குத் தானே மருந்தாவாள்: ஆதலின், தோழியின் மறுப்பிற்குத் தளர்ந்து திரும்பாது இனியும் இனியும் முயன்று நோய்க்குரிய மருந்தினை அடைதற்கு முயலுக' என்கின்றான். நிலவு மணல் முற்றம் –நிலவனைய மணல் பரப்பித் கிடக்கும் முற்றம்; நிலவொளி பரக்கும் முற்றமும் ஆம். 'பெருங்கண் ஆயம்' என்றது, அவளையே நோக்கியபடி கண்ணாற் காத்திருக்கும் ஆயம் என்பதாம்.

மேற்கோள் : 'பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுப்பினும்' என்றபடி தலைவி கூற்று நிகழுவதற்கு இச்செய்யுளை இளம்பூரண அடிகள் உதாரணமாகக் காட்டுவர் (தொல். களவு. சூ. 99 உரை). 'அருளினும் அருளாளாயினும்' என்றமையால் கூட்டம் இன்மையும், 'பின்னிலை முனியல்' என்றமையால் இரந்து பின்னிற்பானாகத் துணிந்தமையும் தோழியிற் கூட்டத்து இயற்கைப் புணர்ச்சிக்கு ஒருப்பட்டமையும் உணர்க" எனவும் உரைப்பர்.

ஆசிரியர் நச்சினார்க்கினியர் 'தண்டாது இரப்பினும்' என்னும் துறைக்கு மேற்கோள் காட்டியுள்ளனர் (தொல். களவு 11 உரை).

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/140&oldid=1731731" இலிருந்து மீள்விக்கப்பட்டது