நற்றிணை 1/157
157. நினையும் நெஞ்சம்!
- பாடியவர் : இளவேட்டனார்.
- திணை : பாலை.
- துறை : பொருள்வயிற் பிரிந்த தலைவன் பருவம் உணர்ந்த நெஞ்சிற்கு உரைத்தது.
[(து–வி.) செய்வினை முடிதலுக்கு முன்பேயே குறித்த கார்ப்பருவம் தோன்றக் கண்டவனாகிய தலைவன் தன் நெஞ்சுக்கு இவ்வாறு கூறிக் கொள்ளுன்றான். தலைவியின் அவலம் மிகுதியாகும் நிலையை நினைந்து வருந்திக் கூறுவதாகவும் கொள்க.]
இருங்கண் ஞாலத்து ஈண்டுதொழில் உதவிப்
பெரும்பெயல் பொழிந்த வழிநாள் அமையத்துப்
பல்பொறி அரவின் செல்புறம் கடுப்ப
யாற்றறல் நுணங்கிய நாட்பத வேனில்
இணர்துதை மாஅத்த புணர்குயில் விளித்தொறும்
5
நம்வயின் நினையும் நெஞ்சமொடு கைம்மிகக்
கேட்டொறும் கலுமுமால் பெரிதே காட்ட
குறும்பொறை அயல நெடுந்தாள் வேங்கை
அம்பூந் தாது உக்கன்ன
நுண்பகல் தித்தி மாஅ யோளே.
10
இவ்வுலகமோ பெரியதாய் இடமகன்றதாய் இருப்பது. இதனிடத்தே வந்து சேர்கின்ற தொழில்கள் பலவற்றையும் செய்வதற்கு உதவுவது மழையாகும். அதுதான் பெரும் பெயலாகப் பொழிந்து உதவியதன் பிற்றைநாளும் இதுவாகும். இந்நாளின் காலைப்பொழுதிலே, பல புள்ளிகளையுடைய பாம்பொன்று ஊர்ந்து செல்லுங் காலத்தே அதன் மேற்புறமானது தோன்றுமாறுபோல, ஆற்றின் அறல்பட்ட நீரொழுக்கமும் தோன்றுகிறது. இச்செவ்வி அமைந்த இளவேனிற் பருவத்திலே, மாமரங்களும் பூங்கொத்துக்களை நிரம்பப் பெற்றவாய் விளங்குகின்றன. அம் மரங்களிலே தங்கியிருக்கும் குயில்களும் குரலெடுத்துக் கூவுகின்றன. அக் குரலைக் கேட்குந்தோறும் நம்மையே நினைக்கின்ற நெஞ்சத்தினளாவாள் அவள். காமநோயானது எல்லை கடந்து பெருகக் கண்கலங்கியவளாக வருந்துதலையும் செய்வாள். காட்டகத்தேயுள்ள குறிய பொற்றையினது அயலாக, நெடிய அடியைக் கொண்ட வேங்கை மரத்தினது அழகான பூந்துகள்கள் உதிர்ந்து படிந்து கிடந்தாற்போல, அவள் மேனியிடத்தே நுண்ணிய பலவாகிய தேமற் புள்ளிகளும் தோன்றும் மாமை நிறத்தை உடைய அவளும் இப் பருவதைக் கண்டதும் வருத்தம் மிகுந்தவளாவாளே! யாம் என் செய்வேம்?
கருத்து : 'வினையை மிக விரைவாக முடித்துவிட்டு அவளைச் சென்றடைதல் வேண்டும்' என்பதாம்.
சொற்பொருள் : இருங்கண் - பெரிதும் இடமகன்ற. ஈண்டு தொழில் – பொருந்தும் தொழில். பெரும்பெயல் – பெருமழை. வழிநாள் – பிற்றைநாள். அறல் – கருமணல் படியச் செல்லும் நீர். பதம் – செவ்வி. துணங்குதல் – நெருங்குதல், புணர் குயில் – சேர்ந்திருக்கும் குயில். வேனில் – இளவேனில், கலுழும் – கலங்கி அழும். குறும் பொறை – குன்றிய பொற்றை, தித்தி –தேமற் புள்ளிகள்.
விளக்கம் : உலகத்துத் தொழில் முயற்சிகட்கெல்லாம் ஆதரவாக உதவுகின்ற தன்மையுடையது மழையே ஆதலின், அதன் தொழிலை 'ஈண்டு தொழில் உதவி' என்றனர். 'ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் வாரி வளங் குன்றிக்கால்' என்னும் வள்ளுவர் வாக்கும் இதனை வலியுறுத்தும். கருமணற் பாங்கிலே மழைநீர் ஓடிச்செல்வதனைப் 'பல்பொறி அரவின் செல்புறம் போலத் தோற்றும்' என்று உரைப்பது கற்பனை நயமுடையதரம். மாப் பூத்தலும், குயில் கூவுதலும் இளவேனிற் காலத்தாகலின், தலைவன் மீள்வதாகக் குறித்த பருவம் இளவேனிற் பருவம் என்று கொள்ளலாம்.