நற்றிணை 1/187
187. ஊரொடு பொழில்!
- பாடியவர் : ஔவையார்.
- திணை : நெய்தல்.
- துறை : தலைமகன் பகற்குறி வந்து மீள்வானது செலவு நோக்கித் தலைமகள் தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது.
[(து–வி.) தலைமகளைப் பகற்குறி வந்து கூடிய தலைமகன் தன்னூர்க்கு மீண்டுபோக, அப்பிரிவினாலே தலைவியின் மனத்துயரம் பெரிதாகின்றது. அவள் நெஞ்சழிந்தவளாகத் தனக்குள் இவ்வாறு கூறிப் புலம்புகின்றாள்.]
நெய்தல் கூம்ப நிழல்குணக்கு ஒழுகக்
கல்சேர் மண்டிலம் சிவந்துநிலம் தணியப்
பல்பூங் கானலும் அல்கின் றன்றே
இனமணி ஒலிப்பப் பொழுதுபடப் பூட்டி
மெய்ம்மலி காமத்து யாம்தொழுது ஒழியத்
5
தேரும் செல்புறம் மறையும் ஊரொடு
யாங்கா குவதுகொல் தானே தேம்பட
ஊதுவண்டு இமிரும் கோதை மார்பின்
மின்னிவர் கொடும்பூண் கொண்கனொடு
இன்னகை மேவிநாம் ஆடிய பொழிலே?
10
நெஞ்சமே! நெய்தலின் மலர்களும் குவியத் தொடங்கின; மரத்து நிழல்களும் கீழ்த்திசைக் கண்ணே விழுவனவாயின; மேற்குமலையைச் சார்கின்ற கதிர்மண்டிலமும் சிவப்புற்றதாய் நிலத்தின் வெப்பமும் தணியத் தொடங்கிற்று; பலவாய பூக்களையுடைய கானற்சோலையும் இருள்படர்கின்ற தன்மையதாய்த் தன் பொலிவு குன்றியுள்ளது; மெய்யிடத்தே மிகுதிப்பட்ட காமத்தையுடைய யாமும் இவ்விடத்தேயே தொழுதேமாய்க் கழிகின்றனம்; பொழுதுபடலும், மணயினம் ஒலிசெய்யக் குதிரைகள் பூட்டப்பெற்ற அவரது தேரும் தான் செல்லலுறும் பக்கத்தானும் நம்முடைய பார்வைக்கு, மறைவதாகின்றது. ஆதலால், இவ்வூருடனே, தேனைப் பொருந்த ஊதுகின்ற வண்டுகள் ஆரவாரித்தபடியிருக்கும் மாலையணிந்த மார்பினையுடையவனும், ஒளிசெய்யும் வளைந்த கலன்களை யுடையவனுமான தலைவனோடு இனிதாக நகைபொருந்த நாம் விளையாடியிருந்த பொழிலானதும் இனி நமக்கு எவ்வண்ணமாய துயரத்தைத் தருவதாகுமோ?
கருத்து : 'மாலைக்காலம் வந்துற்றதானால் எவ்வாறு துயரம் மிகுமோ?' என்பதாம்.சொற்பொருள் : 'கல்' என்றது. மேற்றிசைக் குன்றத்தை. மண்டிலம் – ஆதித்த மண்டிலம், நிலம் தணிய – நிலத்தது வெப்பம் தணிய. இமிர்தல் –ஆரவாரித்தல், மின் – ஒளி, கொடும்பூண் – வளைந்த பூண்கள் . நகைமேவ – நகை பொருந்த; நகை – உவகை.
விளக்கம் : காதலன் வருகின்ற ஞான்று அவனை எதிர்தொழுது வரவேற்றலும், மீள்கின்றபொழுது புறந்தொழுது போற்றலும் தலைவியரின் இயல்பாகும். 'மெய்ம்மலி காமம்' என்றது, அவனைப் பிரிதலுற்ற அஞ்ஞான்றே பற்றிப் படர்ந்த பசலை மிகுதியை நோக்கி உரைத்ததாம். 'பல்பூங்கானல் அல்கின்று' என்றது, அவ்வாறே தன் எழிலும் அல்கிய தன்மையைச் சுட்டிக் கூறியதாம். இனி, 'ஊரும் பொழிலும் இன்னாதாகும்' என்பாள், 'ஊரொடு பொழிலே யாங்காவதுகொல்?' என்கின்றனள். 'மார்பின் மின்னிவர் கொடும்பூண்' எனலும் ஆம். 'மார்பிடத்தே மின்னொளி பரப்பும் வளைவான பூண்கள்' அவை என்க. தலைவனோடு உறவு கொள்ளுதற்கு முற்பட இனியதாயிருந்த ஊரும் பொழிலும் அவ்வுறவுக்குப் பின்னர் அவனைச் சிறுபொழுது பிரியலுறும் பொழுதிலே பெருந்துன்பத்தை தருபவாகின்றன. இதனால், அவனைப் பிரியாதே எப்போதும் கூடியிருக்கும் மணந்துகூடி வாழும் இல்லற வாழ்விலே தலைவியின் உள்ளம் முற்றவும் செல்லுகின்றதாதலும் நன்கு அறியப்படும். இதனை உணர்வானாகிய தலைவன், தன் முயற்சிகளை அவளை மணந்துகோடலை நோக்கிச் செலுத்தத் தொடங்குவான் என்பதாம்.
மேற்கோள் : 'பகற்குறிக்கண்... தலைவன் நீங்கியவழிக் கூறியது' என, இச் செய்யுளை 'நன்னயம் பெற்றுழி நயம்புரி இடத்தினும் தலைவிக்குக் கூற்று நிகழுதற்கு' இளம்பூரணர் எடுத்துக் காட்டுவர்.
பாடபேதங்கள் : மண்டிலம் சிவந்து சினந்தணிய; மின்னிவர் பெரும்பூண்.