நற்றிணை 1/195
195. அருளாதது கொடிதாகும்!
- பாடியவர் : ........
- திணை : நெய்தல்.
- துறை : களவின் கண் நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாயின தோழி வரைவு கடாயது.
[(து–வி.) தலைவன் தலைவியைக் களவாகப் பெற்றுத் துய்ப்பதிலேயே கருத்தினனாயிருக்கின்றான். களவு நீட்டித்தலை அறிந்த தோழிக்குக் கவலை மிகுதியாகின்றது. அவன் உள்ளத்தைத் தலைவியை வரைந்து மணந்து வாழ்தலில் செலுத்துதற்கு நினைப்பாளாக இவ்வாறு கூறுகின்றனள்.]
அருளா யாகலோ கொடிதே!—இருங்கழிக்
குருளை நீர்நாய் கொழுமீன் மாந்தித்
தில்லையம் பொதும்பிற் பள்ளி கொள்ளும்
மெல்லம் புலம்ப! யான்கண் டிசினே
கல்லென் புள்ளின் கானலம் தொண்டி,
5
நெல்லரி தொழுவர் கூர்வாள் உற்றெனப்
பல்லிதழ் தயங்கிய கூம்பா நெய்தல்
நீரலைத் தோற்றம் போல
ஈரிய கலுழும்நீ நயந்தோள் கண்ணே.
கரிய கழியிடத்தே வாழும் நீர்நாயின் இளங் குட்டியானது, அவ்விடத்தேயுள்ள கொழுமையான மீன்களைப் பற்றித் தின்றுவிட்டுக் கழிக்கரையிடத்தேயுள்ள தில்லை மரப் பொந்திலே சென்று படுத்து உறக்கங்கொள்ளுகின்ற, மென்மையான கடற்கரை நாட்டின் தலைவனே! கல்லென ஒலிக்கும் குருகினங்களைக் கொண்ட அழகிய கானற் சோலையினையுடைய தொண்டிப்பட்டினத்தே, நெற்கதிரை அரிகின்ற உழவரின் கூரிய அரிவாளினாலே அறுக்கப்பட்ட பலவிதழ்களோடும் கூடிய குவியாத நெய்தல் மலர்கள் நீரிடத்தே அலைப்புண்டு வருந்தும் தோற்றத்தைப்போல, நீ விரும்பும் தலைவியின் கண்களும் ஈரியவாய்க் கலங்கி அழா நிற்கும். அதனைக் கண்டிருந்தும் அவளுக்கு அருளிச் செய்யாயாக வாளாவிருத்தல் மிகமிகக் கொடிதானதுகாண்!
கருத்து : 'அவளை வரைந்து நின்னுடன் நின்னூர்க்குக் கொண்டு சென்றாலன்றி அவளது மனத்துயரம் தீராது' என்பதாம்.
சொற்பொருள் : குருளை நீர் நாய் – நீர் நாயின் இளங்குட்டி. தில்லை – ஒருவகை மரம்; கழிக்கரை யோரங்களிலே பொந்துகளோடு கூடிய இம் மரங்கள் காணப்படும். பொதும்பு – பொந்து. புள் – கடற்புள். தொண்டி – தொண்டிப் பட்டினம்; இது சேரர்க்கு உரியது. தொழுவர் – பணியாளர். கூம்பா நெய்தல் – குவியாத நெய்தல். நயந்தோள் – விரும்பியோளான தலைவி.
விளக்கம் : நெல் வயல்களிலே கிளைத்துப் படர்ந்திருந்த நெய்தற்கொடிகளிலே பூத்துக்குலுங்கிய மலர்கள், நெல்லரிவார் அக்கொடிகளையும் அரிந்துவிடத், தாம் அக்கழனி நீரிடத்தே அலைப்புண்டு வருந்துமாறு போலத், தலைவியின் கண்கள் தலைவனின் வரவை எதிர்பார்த்துப் பார்த்துக் காணாவாய்ச் சிவப்புற்றுக் கலங்கி அழும் என்பதாம். நெற்பயன் கொள்ளலே உழவரின் செயலாகவும், அதனிடைப்பட்ட நெய்தல் மலர்கள் துன்புற்றனபோலத், தலைவியைக் கூடியின்புறலே தலைவனின் கருத்தாகத் தலைவியின் நிலையும் தன் இல்லத்து நின்றும் அறுப்புண்ட நெய்தலைப்போலாகி, அவள் கண்களும் கலங்கியழுவனவாயின என்று கொள்க.
உள்ளுறை : நீர்நாயின் குருளையானது தன்னலம் ஒன்றே பெரிதாக நினைந்ததாய்க் கழியிடத்துக் கொழுவிய மீன்களைப்பற்றி நிறையத்தின்று தன் பசியாறிய பின்னர்க் கரையருகேயுள்ள தில்லைமரப் பொந்திற்சென்று படுத்து உறக்கங்கொள்ளும் என்றனள். அவ்வாறே தலைவனும் தலைவியைத் துய்த்து இன்புற்றபின்னர், அவளை மறந்தானாய்த் தன்னூரின் கண்ணுள்ள தன் இல்லிடத்துச் சென்று உறங்குவன் என்பது இதுவாகும். ஆயின், தலைவியோ கண்ணுறக்கம் சற்றேனும் இல்லாதாளாய் வருந்தி நலனழிவள் என்பதாம்.
தொண்டிப் பட்டினம் சேரர்க்கு உரியது என்பதனைத் 'திண்தேர்ப் பொறையன் தொண்டி' (குறு. 128: 2) எனப் பரணர் கூறுமாற்றால் அறியலாம். நற்றிணை எட்டாம் செய்யுளும், 'கண்போல் செய்தல் போர்வில் பூக்கும் திண்தேர்ப் பொறையன் தொண்டி' என்று குறிப்பிடும். பதினெட்டாம் செய்யுளுள் 'கானலம் தொண்டிப் பொருநன், வென்வேல் தெறலருந் தானைப் பொறையன்' எனவும் வரும்.