உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/197

விக்கிமூலம் இலிருந்து

197. மழை தவழும்!

பாடியவர் : நக்கீரர்.
திணை : பாலை,
துறை : வரைவு நீள ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது.
[(து–வி.) வரைந்து கொள்ளுதற்குரிய பொருளோடு வேந்துவினை முடித்ததும் வருவதாகக் கூறிச் சென்றவனாகிய தலைவன், வருவதாகக் குறித்தகாலத்தே வாரானாயினான். அதன்பின்னரும் நாட்கள் பல கழிந்தன. அதனால் தலைவியின் பிரிவாற்றாமை மிகுதியாகின்றது. அதனைக் கண்ட தோழி, இவ்வாறு கூறித் தலைவியது பெருகிய துயரை மாற்றுதற்கு முயல்கின்றனள்.]

'தோளே தொடிநெகிழ்ந் தனவே நுதலே
பீரிவர் மலரின் பசப்பூர்ந் தன்றே
கண்ணும் தண்பனி வைகின அன்னோ!
தெளிந்தனம் மன்ற தேயாஎன் உயிர்' என
ஆழல் வாழி தோழி! நீ நின் 5
தாழ்ந்தொலி கதுப்பின் வீழ்ந்த காலொடு
வண்டுபடு புதுமலர் உண்துறைத் தரீஇய
பெருமட மகளிர் முன்கைச் சிறுகோல்
பொலந்தொடி போல மின்னிக் கணங்கொள்
இன்னிசை முரசின் இரங்கி மன்னர் 10
எயிலூர் பல்தோல் போலச்
செல்மழை தவழும் அவர் நன்மலை நாட்டே.

தோழி! "தோள்கள், தம்பாற் செறிக்கப்பட்டிருந்த தோள்வளைகள் நெகிழ்ந்துபோகத் தாம் வளையிழந்து வறியவாயின; நெற்றியோ பீர்க்கிடத்துப் பரந்துள்ள மலர்களின் தன்மையைப் போன்றதாய்ப் பசலைபடர ஒளியிழந்துள்ளது; கண்களும் தண்ணிய துளிகளை நீங்காவாய்ப் பெற்றிருப்பவாயின. ஐயகோ! இவை இங்ஙனமாதலின் எம் உயிரும் இனித் தேய்ந்தொழியும் என்பதனைத் தெளிவாக யாமும் அறிந்துகொண்டோம்" எனக் கூறினையாய் நீயும் அழாதிருப்பாயாக! இத் துயரம் முற்றவும் நீங்கினையாய் நீயும் நெடுங்காலம் வாழ்வாயாக! நினது தாழ்ந்து தழைத்த கூந்தலது மயிர்க்கால்களைப் போன்று காலிறங்கியும், வண்டு பொருந்திய புதுமலர்களை உண்ணுநீர்த் துறையிடத்தே நின்று கொய்தும் கொணர்வாரான பெரிதான மடப்பத்தைக் கொண்ட மகளிரது, முன்னங் கைகளிடத்தே விளங்கும் சிறிதான கோற்றொழிலையுடைய பொன் வளைகளைப்போல மின்னலிட்டும், கூட்டங்கொண்ட இன்னிசை எழுப்பும் முரசங்களின் முழக்கத்தைபோல இடிமுழக்கியும், மன்னர்களது கோட்டை சூழ்ந்த ஊரிடத்துக் கோட்டை மதில்களின் மேலாகக் காவலயரும் வீரர்களது கையிடத்து விளங்கும் பலவாகிய கிடுகுகளைப் போலத் தவழ்ந்தபடியும், அவருடைய நல்ல மலை நாட்டிடத்தே மேகங்கள் வானிடத்தே செல்பவாயின; அதனையும் காண்பாயாக. அவர் இனிக் காலம் தாழ்த்தாராய் விரைய நின்பால் மீள்வர் காண்!

கருத்து : 'காரும் அதோ தொடங்கிற்று; தலைவரும் சொற்பிழையாராய் மீள்வர்; அதுவரை நீயும் ஆற்றியிருப்பாயாக' என்பதாம்.

சொற்பொருள் : தொடி – முன்னது தோள்வளை; பின்னது கைவளை . பனி – நீர்த் துளி. ஒலிதல் – தழைத்தல். கதுப்பு – கூந்தல். கால் – காலிட்ட தோற்றம். உண்டுறை – உண்ணு நீர் எடுக்கும் நீர்த்துறை. கணங்கொள்ளல் – கூட்டங் கொள்ளல். எயில் – கோட்டை. தோல் – கிடுகு; கேடயம். செல் மழை – செல்பவாய மேகங்கள்.

விளக்கம் : தலைவன் படைத்தலைமை பூண்டோன் ஆதலின், எயின்மேற் காவலர் கிடுகுகளுடன் காத்திருக்கும் அசைவினை மேகத்தின் தவழ்தலுக்கு உவமையாகக் கூறினள் என்று கொள்க. ஆகவே, அவன் சென்றவினை முடிவுற்றதென்பதும், பகைவரது கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டனன் என்பதும் விளங்கும். காரின் வரவுக்குத் தலைவியது கூந்தலையும். மின்னலுக்குக் கைவளைகளின் ஒளியையும் கூறியது, அவற்றைக் காணும் அவனது உள்ளத்தே தலைவியின் நினைவு மேலெழுவதாகும்; ஆதலின் அவனும் விரைய மீள்வான் என வற்புறுத்தியதாம். 'எயில் ஊர்' என்பதனை, 'எயிற் பட்டினமாகவும்' கொள்ளலாம்; எயிற்பட்டினம் 'ஆந்தை' என்னும் பாண்டிநாட்டுக் குறுநிலத் தலைவனுக்கு உரியது; இதனைப் புறநானூற்று 71ஆம் செய்யுளுள் வரும் 'மன்னெயில் ஆந்தையும்' என்னும் பூதப்பாண்டியன் வாக்கால் அறியலாம். 'எயிற்கோட்டம்' தொண்டைநாட்டுக் கோட்டங்களுள் ஒன்றாதலும், 'எயில்' என்னும் ஒரூர் தொண்டை மண்டிலத்து இருந்ததையும் நினைக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/197&oldid=1731877" இலிருந்து மீள்விக்கப்பட்டது