உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருப்திகரமாக நோக்கிக் கொண்டிருந்தான் அம்பி. பக்கத்துப் 'பெரியதனக்காரர்' வீடுகளில் எல்லாம் அம்பி 'பொல்லாத' பயல் என்று பெயர் வாங்கிவிட்டான். இதனால் பெரிய வீட்டுக் குழந்தைகளுக்கு எல்லாம் 'பூசனிக்காய்' அம்பி என்றால் அபாரப் பிரேமை. குழந்தை விரல்கள் பலகாரத்தைப் பகிர்ந்து தின்ன அவனை அழைக்கும். 'அப்பா', 'அம்மா' என்ற தொந்தரவுகள் எல்லாம் இல்லாத பெரிய மனிதன் என்பது குழந்தை உலகத்துப் பேச்சு.

ஒருநாள் மாவடியா பிள்ளை வளைவில் பெருத்த கூச்சல். நான் எட்டிப் பார்த்தபொழுது, 'பூசனிக்காய்' அம்பி வளைவின் கூரையொன்றின் மேல் இருந்துகொண்டு பக்கத்துப் பெரிய வீட்டுக்காரர் குழந்தையொன்றைக் கயிற்றின் உதவியால் உயர இழுத்துக் கொண்டிருந்தான். கீழே கூடியிருந்த கூட்டம் பையனை இறக்கிவிடும்படிக் கெஞ்சின. ஆனால் 'பூசனிக்காய்' அவசர அவசரமாகக் குழந்தையைக் கூரைக்கே கொண்டு போய்விட்டான். குழந்தைப் பயல் உயரச் சென்ற பின் தான் அவனும் 'பூசனிக்காயின்' சதியாலோசனையில் சேர்ந்திருந்தான் என்று தெரியவந்தது. பயலும் தாயாரைப் பார்த்து அழகுக்காட்டிச் சிரித்தானாம். அவன் உதவிக்கு ஏணி வந்து சேர்வதற்குள் அம்பியின் பலத்த நண்பனாகி, அவனுடைய தூண்டுதலில் பெற்றோரையே கேலி செய்ய ஆரம்பித்து விட்டான். ஏணி வந்து குழந்தையைப் பிடிக்குமுன் 'பூசனிக்காய்' கம்பி நீட்டி விட்டான். அதில் இருந்து, இருவருடைய நட்பும், 'ஏ! பூசனிக்காய்', 'ஹி! பட்டு' என்ற சம்பாஷணையுடன் நின்றது.

இச்சந்தர்ப்பத்தில் நான் அம்பியிடம் அதிகமாகப் பழக நேர்ந்தது. அக்காலத்தில், தமிழ்நாட்டில் இலக்கியத்தின் காலியான பாகங்களை நிரப்புவதற்காக உழைத்துக்கொண்டிருந்தேன். இலக்கியத்தில் இருக்கும் காலி கொஞ்சம் பெரியது என்றும், தமிழ்நாடு அதனால் கண்ணுறங்காமல் வாடிக்கொண்டிருக்கிறது என்றும் கேள்விப்பட்ட நான், ஒரு நாளில் இரண்டு மணி நேரத்தில் இந்தக் காலியை நிரப்பும் வேலைக்குத் தத்தம் செய்திருந்தேன். வேலை பெரிய வேலையல்லவா? ரஷ்யர்கள் போடுகிற ஐந்து வருஷ திட்டங்களைப் பற்றி எல்லாம் படித்த நானும் ஒரு திட்டம் போடாமலா இருப்பேன். அந்தத் திட்டத்தின்படி ஆபீஸிலிருந்து நான் வந்தபிறகு, உலகத்தை வெறுத்து, சன்யாசி மாதிரி எனது அறைக்குள் சென்று பூட்டிக்கொள்ளுவேன். முந்திய நாள் என்ன எழுதினேன் என்பதை வாசிப்பேன். இதில் சிறு மாறுதல்கள் செய்யவேண்டும் என்று எனக்குத் தோன்றும். உடனே அதைத் திரும்ப எழுத ஆரம்பிப்பேன். அப்பொழுது மேற்கோளுக்காக தமிழ்நாட்டில் மேற்கோள் இல்லாத ஆராய்ச்சிப் புஸ்தகமும் பருப்பில்லாத கலியாணமும் உண்டா? ! என்று புஸ்தகத்தை எடுப்பேன். எப்பொழுதும் அம்மாதிரிப் புஸ்தகங்கள் எழுதுவதைவிட மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அது வேறொரு நல்ல வழியில் இக்காலியை நிரப்புவதற்கு வழி கூறும். இந்தப் புதிய திட்டத்தைப் பற்றி ஆலோசிக்க

262

'பூசனிக்காய்' அம்பி