"சம்போ மஹாதேவா! இதுவும் ஒரு திருவிளையாட்டா!" என்று சொல்லுகிறான்.
"விளையாடலே பாலு சாப்பிடறேன்; புட்டிலே பாலு இருக்கு பாரு" என வாயிலிருந்து எடுத்துவிட்டுக் காண்பிக்கிறது.
நாடோடி சிரித்துக்கொண்டே "உன் பேரு என்னம்மா?" என்கிறான்.
"குஞ்சு... மீனாச்சின்னும் அப்பா சொல்லுவாங்க" என்கிறது.
குழந்தைக்குப் பைக்குள் இருக்கும் பிஸ்கட் ஞாபகம் வந்துவிடுகிறது. பாட்டிலைக் கீழே வைத்துவிட்டுச் சட்டைப் பைக்குள் கையை விட்டு இரண்டு ஜம் பிஸ்கட்டை எடுத்துக் காண்பித்துவிட்டு, "நீ சாப்பிடு, சாப்டப் பிறவு தாறேன்" எனப் பையில் வைத்துக்கொள்ளுகிறது.
மறுபடியும் பாட்டிலை எடுத்து வாயில் வைத்துக் குடிக்கிறது.
இடையில் நிறுத்திக்கொண்டு, ஒரு கண்ணைச் சிறிது மூடிய வாக்கில் "இனூச்சுக் கெடக்கும்?"
பிஸ்கட்டின் உயர்வை ரசித்துப் சிபாரிசு செய்கிறது.
இருவரும் சாப்பிட்டு முடிக்கிறார்கள்.
நாடோடி, திருவோட்டைக் கழுவ எதிரே ரஸ்தாவுக்கு மறுபுறத்தில் இருக்கும் குழாயடிக்குப் போகிறான். குழந்தை பாட்டிலை எடுத்துக் கொண்டு தொடருகிறது.
"இதையும் கழுவிக் குடு" என்கிறது.
குழந்தையின் பாட்டிலைப் பத்திரமாக வாங்கிக் கழுவிக் கொடுத்துவிட்டு அதற்கும் முகம், கைகால்களைக் கழுவிவிடுகிறான். இருவரும் திரும்புகிறார்கள்.
அவனது ஒரு எட்டுக்கு மூன்று எட்டாக, குழந்தை ஓடி நடந்து வருகிறது.
"அப்பா சாப்பிட்டாச்சு" என்று பெரிய மனுஷி மாதிரி சொல்லிக் கொண்டு, "வெளையாடலாம் வாரியா" என்று ரொம்பச் சரசமாக நாடோடியிடம் கேட்கிறது.
நாடோடியின் கண்கள் ஜொலிக்கின்றன. குழந்தையின் குதூகலத்தைப் பெற்றுவிடுகிறான். "என்ன வெளையாட்டு வெளையாடுவோம்?" என்று கேட்கிறான்.
"ரயில் வெளையாட்டு ஆடுவமா? நாந்தான் ரயிலாம். நீ டேசன், கைகாட்டி" என்கிறது குழந்தை.
குழந்தை அவனை ஒற்றைக் கையை ஸிக்னல் போஸ்ட் மாதிரி நிற்கச் சொல்லிவிட்டு, தூரத்தில் ஓடிப்போய் அங்கிருந்து 'குச் குச் ' என்று சப்தமிட்டுக்கொண்டு கைகளைப் பிஸ்டனாக அசைத்தபடி நாடோடியை நோக்கி வேகமாக வருகிறது. அது போடுகிற 'குச்- குச்'சும்
கை சுழற்றலும் வண்டி மெயில் மாதிரி வருவதாகப் பாவனை. குழந்தையின் முகம், மனசு விளையாட்டில் ரசித்திருப்பதைப் படமெடுத்துக் காட்டுகிறது.
புதுமைப்பித்தன் கதைகள்
709