அண்ணாவின் நாடகங்கள்/புதிய மடாதிபதி
புதிய மடாதிபதி
இடம் பெறுவோர்: மடாதிபதி அருளாளர், முருகதாசர், கந்தபூபதி, மாசிலாமணி, சித்ரா, பக்தர், பணியாட்கள், போலி மடாதிபதி.
நிகழ்ச்சி இடம்: மடாலயமும், அதைச் சுற்றி உள்ள இடமும்.
பாழடைந்த சாவடி
ஒருவன்: திட்டம் நன்றாகத்தான் இருக்கு...வெற்றி கிட்டினால் தானே......
மற்றொருவன்: வேலை செய்தால்தானே வெற்றி கிடைக்கும்...
ஒரு: வேலையும் சீக்கிரம் நடந்தாகவேண்டும்......
மற்: கண்மூடி மக்கள்—கொட்டித் தருகிறார்களே, கேட்கும் போதெல்லாம்......
ஒரு: நாம்தான் மிரட்டுகிறோமே......நரகம் என்று......
மற்: எல்லோரும் அல்ல....தொகை குறைந்துகொண்டே வருகிறது......
ஒரு: பக்தர்கள் தொகை குறைந்துவிட்டால் பிறகு அது நமக்குத்தானே நஷ்டம்.....
மற்: (ஆயாசத்துடன்) நமச்சிவாயம்....நமச்சிவாயம்!....மடமும் இருக்கவேண்டும்.....அவனும் தொலைய வேண்டும்....அதற்கு உன் திட்டம்தான் சிலாக்யமானது......(சுற்று முற்றும் பார்க்க, படுத்துப் புரண்டபடி இருப்பவன் தெரிகிறான் உற்றுப் பார்க்கிறான்—மீண்டும் மீண்டும் பார்க்கிறான்—கூட இருப்பவனை அழைத்துக் காட்டுகிறான்—இருவரும் படுத்திருப்பவன் அருகே சென்று உற்றுப் பார்க்கிறார்கள்...ஆச்சரியத்துடன்.)
ஒரு: சரியான பாத்திரம்......!
மற்: (படுத்திருப்பவனைப் பார்த்தபடி) திட்டம் பலித்தது....வெற்றி.....நிச்சயம்.படுத்: காவி உடை கண்டதும் கன்னத்தில் அடித்துக் கொள்ளும் கபோதி நானல்ல....போங்கள்.....போங்கள்.....
ஒரு: (மற்றவனைப் பார்த்து) இவனே சரியான ஆயுதம் மடத்தானை ஒழிக்க.....
படுத்: என்ன உளறல் இது......ஆயுதமாம் ஒழிப்பதாம்......
மற்: அப்பா......அச்சம் வேண்டாம்.........அரனடியார்கள் நாங்கள் அருளாளர் சீடர்கள்!
படுத்: ஓஹோ! ஜடாமுடிதாரியின் சீடர்களா! வாட்ட வருத்தமின்றி வாழ்வதால் ஓங்கி வளர்ந்திருக்கிறார்கள்.....ஊரார் உழைப்பை உறுஞ்சும் உலுத்தர்களே! நான் ஓர் பாட்டாளி.....ஆனால் ஏமாளியல்ல! உழைப்பாளி.....ஊர் சொத்தைத் தின்று விட்டு ஓம் நமச்சிவாயா என்று கூவிக் கிடப்பவனல்ல; என் முன் என்ன வேலை? வேறு இடம் பாருங்கள்.....
ஒரு: கந்தபூபதி! காரியம் பலித்தேவிட்டது. நம்மவர்களிடம் இவ்வளவு துவேஷம் கொண்டுள்ள இவனே சரியான ஆயுதம்........
கந்தபூபதி: முருகதாசரே! முடித்துவிடலாம்.
படு: யாரய்யா நீங்கள்.....சாவடியிலே உறங்குபவனைத் தொல்லை தருகிறீர்கள்.
கந்: கோபியாதே அப்பா? நாங்கள் பண்டாரங்கள்.....ஆண்டிகளிடமா ஆத்திரம் காட்டுவது......
படு: ஆண்டிகளாம், ஆண்டிகள்! மோசாண்டிகளே! ஊரிலே எவ்வளவோ மக்கள் உழைத்து அலுத்துக் கிடக்க, உண்டு கொழுத்து ஊன் சுமந்து திரிகிறீர்களே, உங்களுக்கு வெட்கம், மானம் இல்லை!
படு: (கேலியாக) ஒரு இலட்சமா! ஓட்டாண்டியாகிய எனக்கா? என்னய்யா கேலியா செய்கிறீர்கள்......பதிகம்பாடி ஓட்டாஞ்சல்லிகளைத் தங்கமாக்கப் போகிறீர்களா......!
முரு: (சிறிது சலிப்புடன்) மாயமும் அல்ல, மந்திரமும் அல்ல.....உண்மையாகவே பணம் அப்பா.....பணம்.
கந்: இதோ பாரப்பா! பண்டாரக் கூட்டம் என்றாலே உனக்குப் பிடிக்கவில்லையல்லவா?
படு: பண்டாரக் கூட்டத்திடமா பகை! இல்லை! எவனொருவன் ஊராரை ஏய்க்க மதவேடம் புனைந்து திரிந்து மதோன்மத்தனாக வாழ்கிறானோ அவனை நான் மனிதனென்றுகூட மதிப்பதில்லை.....ஏனெனில்......
கந்: விளக்கம் வேண்டாம். உன் அபிப்பிராயத்தை மறுக்கவில்லை.....சரி, அப்படிப்பட்ட மதோன்மத்தர்களின் மன்னனை வீழ்த்த உனக்கு ஓர் சந்தர்ப்பம் கிடைத்தால்......(குறும்பாகப் பார்க்கிறான்)
படு: (ஆர்வத்துடன்) மகிழ்ச்சியுடன் வரவேற்பேன்!
கந்: மெத்தச் சந்தோஷம்.....இனி கேள் சேதியை......
முரு: கந்த பூபதி! தனி இடம் சென்று பேசுவது.....
படு: சரி, கிளம்புங்கள்.....
மடாலயம்
அருளாளர்: (கெம்பீரமும் உருக்கமும் கலந்தக் குரலில்) ஆகவே, எவெனொருவன் இந்திரியங்கள் எனும் துஷ்டக் குதிரைகளுக்கு அறிவெனும் கடிவாளமிட்டு அடக்கி, நன்னெறி எனும் பாதையிலே செலுத்துகிறானோ, அவனே அரனடி என்னும் திருத்தலத்தை அடைவான்.
இடையே இச்சை எனும் நச்சுக் கொடி கிடக்கும்.
பச்சென்றிருக்கிறதே என்று எண்ணிச்சிக்கினால் சீரழிவர். அதனைக் கடக்கவேண்டும். அதற்கு நிராசை எனும் சாட்டை கொண்டு குதிரையைத் தட்டவேண்டும். மெய்யன்பனே! பரமனருள் பெற்றவர்கள் எல்லோரும் இங்கனம் செய்தே முக்தி பெற்றனர்.
சீமா: (கண்களை மூடியபடி) ஆஹா! தன்யனானேன், குருநாதா! உணர்ந்தேன்.....
படு: புரிகிறதய்யா, புரிகிறது......பன்னிப் பன்னிப் பேசிப் பாதிப் பிராணனை வாங்கிவிட வேண்டாம்.
முரு: நண்பா! சாமான்யமான காரியமல்லவே.
படு: சரி, சரி...மதயானையின் மண்டையைப் பிளக்க வேண்டும்.
கந்: அதற்கு ஏற்ற ஆண் சிங்கம், நீ......
படு: இரத்தம் குடிக்கும் நரிகள்—?
படு: (அசட்டுச் சிரிப்புடன்) நாங்கள் என்றுதான் வைத்துக் கொள்ளுமய்யா... ...
படு : (உறுதியாக) இதோ பாரய்யா, பண்டாரம்! நான் இந்தச் சதிக்குச் சம்மதிப்பது என் சொந்த இலாபத்துக்கல்ல.....அவன் போனால் நீயோ.....நீயோ.....பட்டம் பெறுவது நிச்சயம்.....எனக்கு இலாபம் இல்லை.கந்: கேள், கொடுக்கப்படும்.....
படு: கேட்கத்தானே போகிறேன்.....மடத்தை உங்கள் கையிலே ஒப்படைக்கிறேன்.....ஆனால், அங்கு விழா அன்று கிடைக்கும் பணம் அவ்வளவும் எனக்கு......என் விருப்பப்படி நடப்பேன்—குறுக்கிட்டால் தொலைத்து விடுவேன்.
கந்: ஒரு நாள் உன் இராஜ்யம்! அவ்வளவுதானே......
படு: அவ்வளவேதான்......என் திட்டப்படி நடந்தால் வெற்றி—தெரிகிறதா.....
முரு: சந்தேகமே வேண்டாம்.....சர்வேஸ்வரன் மீது ஆணை......
படு: (வெறுப்புடன்) சர்வேஸ்வரனை ஏனய்யா அழைக்கிறீர்கள். சண்டாளத் திட்டம் போட்டுவிட்டு.....
கந்த: பழக்கத்திலே வந்துவிட்டது, சம்போ, சர்வேஸ்வரா, என்று சொல்லிச் சொல்லி......
பக்: சம்போ! சர்வேஸ்வரா! குருநாதா!.....
மடா: மெய்யன்பனே! பொன்னார் மேனியனைப் போற்று! போக போகாதிகளில் இலயிக்கும் சுபாவத்தை மாற்று. பார், பிறகு—பாரிலே இன்பம், பரமபதத்திலே எல்லையில்லா ஆனந்தம் தோன்றும்.
கை: மடாலயத்திடம்...விசேஷமான அக்கரை.....ஏதேதோ செய்யவேண்டும் என்று அவருக்கு நெடுநாட்களாக அவா.....
மடா: அம்பலவாணா! அவனருள் பெற்றவர்க்கே அவ்வெண்ணம் உதயமாகும். மலட்டு மாடு, மதுரமான பால் தருமா?
கை: ஸ்வாமி நிஷ்டையில் இறங்கி விட்டது.....வாரும், போவோம்.....
மடா: (அவர்கள் சென்ற பிறகு, கண்களைத் திறந்து) காயா—பழமா?
கந்த: காயும் கனியுமே இந்தக் கந்தன் கைபட்டால்.
மடா: (மலர்ந்து) பழம் எவ்விடத்தது?
கந்த: தோட்டம் அருகாமையில்தான்......ஆனால் வேலியும் காவலும் உண்டு.......
மடா: (கோபப்பார்வையுடன்) வேலியும் காவலும்! எவருக்குமா......
கந்த: (புன்னகையுடன்) அதிபருக்குக் கிடையாது.....கனி கிடைக்க ஏற்பாடு செய்துவிட்டேன்—கட்டளையைத்தான் எதிர்பார்த்து நிற்கிறேன்.....கனி, தங்க நிறம்!
மடா: (பூரித்து) அம்மையப்பன் அருள் கலந்ததோ......?
கந்த: மருள் கிளம்பிற்று......முதலில்—கனி, வைணவம்......
மடர்: திருப்பாவை திருவெம்பாவை மாநாடு நடத்துவோம்!
கந்த: லாவண்யவதி.
மடா: உனக்கா தெரியாது......
கந்த: வஞ்சிக்கொடி!
மடா: நஞ்சிராதே......
கந்த: பஞ்சவூர் அல்ல.....பக்குவமாகப் பயிரான பாரிஜாதம்,
மட: பெயர்......
கந்த: சித்ரா......
மடா: என்ன அருமையான நாமதேயம்.....என்னதான் அலங்காரம் செய்துகொண்ட போதிலும், இந்தச் சடையும் முடியும் சனியனாகவன்றோ இருக்கும், கன்னியின்` கண்ணும் கருத்தும் கலங்குமோ! கச்சி ஏகம்பா!மடாலயத்தை அடுத்த ஒரு விடுதி
கந்த: சொக்கிவிடுவான், சித்ரா!...சொர்ணாபிஷேகம் உனக்கு.......
சி: சகிக்காது அவன் நடை உடை பாவனை......
கந்த: சித்ரா! உன் சாமர்த்யத்தைத்தான் நாங்கள் சகலரும் நம்பிக் கொண்டிருக்கிறோம்.
சி: எனக்கு அதிகம் சொல்ல வேண்டுமா....
சி: எப்படி......!
கந்த: (பரவசமாகி ) சித்ரா......
சி: குருநாதருக்குத் துரோகம் எண்ணலாமா....(குறும்பாக)
கந்த: (தாவிச் சென்று சித்ராவின் கரத்தைப் பிடித்திழுத்து அருகே நெருங்கியபடி) சித்ரா......!
சி: (அவன் முதுகைத் தட்டி) பைத்யமே! சித்ரா சித்ரா என்று ஜெபம் செய்து கொண்டிருந்தால் போதுமா....நேரமாகிறதே.....!
வசந்த மண்டபம்
மடா: சித்ரா...
கந்த: (மெல்லிய குரலில்) சித்ரா....இரண்டு பகல் இரண்டு இரவு...ஆசாமி, தேனில் வீழ்ந்த ஈயாக வேண்டும்...
கந்த: மடம் மகோற்சவம் என்று ஏதேனும் பேசினால்...
சி: முத்தமிட்டு வாயை மூடிவிட வேண்டும்—பாடம், கவனமிருக்கிறது...
மடா:வர்ணனையைவிட வஸ்து விசேஷமாகத்தான் இருக்கிறது—சொர்ணபிம்பமே! உட்கார் இப்படி. நெடு நேரம் நின்றால் உன் மலரடி கசங்கிவிடும்.
சி: (பாசமாக பார்த்து) இந்தக் கண்களை விடவா?
மடா: கண்களுக்கென்ன........
சி: தங்கள் தரிசனத்துக்காகக் காத்துக் காத்துக் கிடந்து கண்கள் பூத்துப்போய் விட்டன்.
மடா: பார்த்தபின்......என் வேடம்......?
சி: சிவலோகநாதனைக் காண்பது போலிருக்கிறது
மடா: (அவள் கரத்தைப் பற்றியபடி) சிங்காரி! உன்னைக் கான நான் காலை முதல் தவம் கிடந்தேன். மடத்திலேயோ மன்னார்சாமிகள் வருவதும் போவதும் ஓயவில்லை. என்மனமோ அங்கில்லை மோகனாங்கி!
சி: சுந்தரரூபா!
மடா: ஆஹா ஹா.....(அணைத்தபடி) என் கண்ணே....கனியே....
சி: இதோ தங்கக் கோப்பையிலே கனிரசம்—தங்களுக்கென்று.
மடா: உன் பவளவாயைவிடவா அந்தக் கோப்பை வசீகரமானது.....உன் பாகுமொழி போதுமே—
சித்ரா: பழரசம் வேறு வேண்டுமா......[அவளை அணைத்துக்கொள்ள ஆவலாகச் செல்கிறார். அவள் இலாவகமாக அவரை விட்டு விலகியபடி, கோப்பையைத் தருகிறாள். பழரசத்தைப் பருகுகிறார், சித்ராவைப் பார்த்தவண்ணம்
சைவ வேடச் சின்னங்களான உருத்திராட்சமாலை முதலியனவற்றை மடாதிபதி கழற்றி ஒரு புறத்தில் தட்டிலே வைக்கிறார்]மடாலய உள் கூடம்
[மடாலயத்தின் வேறோர் பக்கம், பல தட்டுகளிலே பழவகைகளைப் பணியாட்கள் ஒழுங்காக அடுக்கி வைக்கிறார்கள். பெரிய மாலைகள்—உதிரிமலர்கள் கூடைகளிலே வைக்கப்படுகின்றன. விபூதி மடலில் விபூதியைக் கொட்டி அதிலே பன்னீர் தெளிக்கிறார்கள். மணிகளைத் துடைத்து வைக்கிறார்கள். மயில் விசிறிகளை எடுத்து வைக்கிறார்கள்.
பணியாட்கள் வேலை செய்து கொண்டே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.]ஒரு. பணியாள்: பாழாப்போன பவனி உற்சவம் நம்ம உயிரிலே பாதியைப் போக்கி விடும்—எவ்வளவு வேலை, எவ்வளவு வேலை.....
மற். பணி: நரம்பு முறிய நாம்ப பாடுபட்டானதும் மாப்பிள்ளை மாதிரியா அவர் பல்லக்கிலே ஏறிகிட்டு பவனி வருவாரு......
ஒரு பணி: விவரம் தெரியாத கும்பல், அவர் நேரே கைலாயத்திலிருந்து வந்தார்னு பேசிகிட்டுக் கீழே விழுந்து விழுந்து கும்பிட்டுவிட்டுக் கூத்தாடப் போவுதுங்க......
தெரியுமா—பக்தனுங்க....
ஒரு பணி: இங்கே நீ கூட்டிக் குவிக்கிறே...ஆமாம், குருநாதர் அறைப்பக்கம் ஒரே இருள் மயமாக இருக்கே, என்ன விஷயம்......
மற்.பணி: எனக்கும் சந்தேகந்தான்—பவனி உற்சவத்துக்காக பத்து புது பதிகமாவது தயாரிப்பாரு...
மடாலயக் கொலு மண்டபம்
மடாதிபதி: மெய்யன்பர்களே! இந்த வருஷம் பவனியை நிறுத்திவிட்டோம்.......
நமச்சிவாயத்தின் கட்டளை வேறு விதமாகி விட்டது.
கை: மூன்று இலட்சத்து முப்பதாயிரம்—பழைய இருப்புடன் சேர்த்து இருபத்தெட்டு இலட்சத்து அறுபதாயிரம்......
மடா: அதிலே ஒரு இலட்சம், வேலையற்றோர் உதவிக்காக ஊர்ப்பெரியவர் மன்றத்துக்குக் கொடுக்கிறோம்!
[ஊர்ப் பெரியவர் மன்றத் தலைவர் மகிழ்ச்சி மேலிட்டு அருளாளர் வாழ்க! அறம் வாழ்க! அருளாளர் வாழ்க! என்று முன் எழுச்சியுடன் கூறி, மடாதிபர் அருகே சென்று வணங்கி, பண முடிப்பு பெறுகிறார்]
[பலரும் ஆச்சரியப்படுகிறார்கள். கந்தபூபதியைக் கையாள் முறைத்துப் பார்க்கிறான்.]மடா: கந்தபூபதி! இரண்டு லட்சம் ரூபாயை நமது ஊர் நாட்டாண்மைக்காரரிடம் கொடுத்து ஏரி, குளம், குட்டைகளைச் சீர் செய்து பாதைகளைச் செப்பனிடச் சொல்லு. (கணக்கெழுதுவோனைப் பார்த்தபடி) அப்பனே! ஏட்டிலே குறித்துக் கொள்.
அனாதை விடுதிக்கு அறுபதாயிரம், முதியோர் பள்ளிக்கு நாற்பதாயிரம், தமிழ் ஆராய்ச்சிக்கு ஒரு இலட்சம், இசைமன்றத்துக்கு ஐம்பதாயிரம் ஏழைகளின் இலவசப் படிப்புக்கு இரண்டு லட்சம்.
மடா: (குறும்பாக) ஆயாசப்படாதே அப்பனே! நமச்சிவாயத்தின் திரு உள்ளப்படி நாம் நடக்கிறோம்.
மெய்யன்பர்களே! இன்று நாம் நடந்து கொள்ளும் முறை உமக்கு வியப்பாக இருக்கும் - கந்தபூபதிக்கு கசப்பு—முருகதாசருக்கு கோபம்—நாம் இன்று மாயாபந்தம் விடுபட்டோம்—மறு பிறவி கொண்டோம் மகேஸ்வரன் அருளால், என் அப்பன், இமயம் வாழும் சொக்கன் நேற்றிரவு என் முன் தோன்றி எனக்குப் புதிய கட்டளைகள் பிறப்பித்தார்.
பெரி: பூலோக கைலாயமன்றோ இது. இங்கு அரன் வருவது முறைதானே—அரனைக் கண்ட அண்ணலே! வாழ்க! சிவனுடன் பேசிய செம்மலே வாழ்க!
மடா: அன்பர்களே! (சிவனார் பேசுவது போன்ற குரலில்) வெண்பட்டு உடுத்துகிறாயே நீ—நீ காணும் மக்கள் கந்தல் ஆடையுமின்றி உள்ளனரே, காண்கிலையோ (சொந்தக் குரலில்) என்று என்னை என்னப்பன் கேட்டார். உனக்கு மேனியிலே சந்தன மணம்—மக்களின் உடலிலே உழைப்பால் உண்டாகும் வியர்வையின் நாற்றம்! உன் நாசிக்கு எட்டவில்லையா என்று கேட்டார்.
மடா: (சிவனார் பேசும் பாவனையிலேயே) உனக்கு அறுசுவை உண்டி—உழைப்பாளிக்கு அரைவயிற்றுக் கஞ்சி. உனக்குப் பாலும் பழமும் பட்சணமும்! அவர்களுக்குப் பழம் சோறும் பருக்கையும் கம்பங்கூழும். உனக்கு பஞ்சணை! அவர்களுக்குக் கட்டாந்தரை! உனக்கு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம்! அவர்களுக்குக் குன்மம், காசம், கொடுநோய். உனக்குக் கோட்டைபோலக் கோயில், கொலு மண்டபம் ! அவர்களுக்கு நண்டுவளைபோல் வீடு. ஏ! மட அதிபனே! இதைக் கண்டாயே, உன் கண்களிலே நீர் சுரக்கவில்லையா? இதயம் துடிக்கவில்லையா—இரத்தம் கொதிக்கவில்லையா? (சொந்தக் குரலில்) என்று கேட்டு கடுங்கோபத்துடன் என் எதிரே நின்றார்.
பெரி: (மனம் உருகிய நிலையில்) என்ன அற்புதம்! இறைவனின் திருவிளையாடலை என்னென்பது!
மடா: நான் மௌனமாக இருந்தது கண்டு இமயவன் என்னை ஏறிட்டுப் பார்த்துக் கூறினார்......(சிவனார் பேசும் பாவனையில்) உன்னிடம் பக்தகோடிகள் காணிக்கை தருவதும் வேலிகள் விடுவதும் எதற்கும்! உன் சுகபோகத்துக்கா? நீ, ஏழைகளுக்கு இதம் செய்யவேண்டும் என்பதற்காக அல்லவா! (சொந்தக் குரலில்) என்று சிவனார் சீற்றத்துடன் கேட்டார். நான் அஞ்சவில்லை.
மடா: காரணம் என்ன? என் மனதிலே இருந்துவந்த கறை—அஞ்ஞானம், என்னைவிட்டு அகலவில்லை. பந்தம், பாசம், பற்று, சுயநலம் இவை என் மனதிலே இருந்துகொண்டு, அஞ்சாதே! அரன் மிரட்டினால் என்ன! உன் உரிமையை இழக்காதே—என்று கூறி என்னை உசுப்பின!
பெரி: சிவனாரிடம் சண்டையா ! சிவ சிவா!
மடா: நான், கர்ம பலன்படி காரியம் நடக்கிறது, கடம்பா, கச்சியேகம்பா, காமாட்சி மணாளா, காலனைக் கொன்றவா!—என்று துதித்தேன். சிவனார், (சிவன் பேசும் பாவனையில்) ஏ! அஞ்ஞான சொரூபமே! என் அடியவனை விட்டு வெளியே, வா!—(சொந்தக் குரலில்) என்று முழக்கமிட்டார்—முக்கண்ணுடையார்.
பக்தர்கள்: ஆஹா.....பிறகு....
மடா: என் தலை சுழன்றது!
பக்: ஐயோ.....பிறகு.....
மடா: மார்பு வெடித்துவிடும் போலாகிவிட்டது!
பக்: அடடா!....பிறகு....
மடா: என்னென்பேன் இறைவனின் திருக்கூத்தை! என் எதிரில் நான் நின்றேன்.
மடா: என்னைப் போன்றே ஓர் உருவம் என் எதிரே நின்றது. பெரிய சுமையைக் கீழே இறக்கிவிட்டவனுக்கு உண்டாகும் ஆனந்தம், எனக்கு! என் எதிரே இருந்த உருவம் உறுமிற்று......நான், பிரபோ! இதென்ன என்று கேட்டேன்.
பக்: சிவனார் என்ன சொன்னார்.........
மடா: (சிவனார் பேசும் பாவனையில்) பாலகா! ஒவ்வொருவர் உள்ளத்திலும் பற்றும், பாசமும், தன்னலமும் உண்டல்லவா? மனிதனின் மனதிலே அஞ்ஞானமும் உண்டு மெய்ஞ்ஞானமும் உண்டு. இரு சக்திகளுக்கும் கடும்போர்—மனம் எனும் களத்திலே! எவனொருவன் அஞ்ஞானத்தை விரட்டி அடிக்கிறானோ அவனே அரனடியான்—இதோ உன்னைப் போன்றே காணப்படும் உருவம், உன் எதிரே நிற்கும் உருவம், உன் உள்ளத்திலே இருந்துவந்த அஞ்ஞானம்! அந்த அஞ்ஞான சொரூபத்தை நான் வெளியேற்றிவிட்டேன். ஆனால், நான் மறைந்ததும், அஞ்ஞான சொரூபம் மிரட்டும்—அஞ்ஞாதே! தங்க இடம் கேட்கும்—இசையாதே! விரட்டு—விரட்டு—உன் அடியார்களிடம் கூறிடு—அழித்துவிடு. அஞ்ஞான சொரூபத்தை மீண்டும் உன் உள்ளத்திலே குடிபுகவிட்டால்! பிறகு நான் வாரேன் உன்னைக் காப்பாற்ற (சொந்தக் குரலில்) என்று கூறிவிட்டு, அஞ்ஞானத்தை விரட்டினார்— அது அகோரக் கூச்சலிட்டுவிட்டு ஓடிவிட்டது—நான் தான் தன்யனானேன்! தயாபரனின் தொண்டனானேன்! மக்களின் தோழனானேன்! உண்மைக்கு ஊழியனானேன்! ஊராருக்கு உழைப்பாளியானேன்!.....ஆனால் மெய்யன்பர்களே! மீண்டும் அந்த அஞ்ஞான சொரூபம் வருமோ—வந்தால் என்ன செய்வது என்று அச்சம் எனக்கு. அரன் விட்ட வழிப்படி நடக்கட்டும்.
[கூட்டத்திலே பரபரப்பு—அமளி. உண்மை மடாதிபதி ஓடிவருகிறார்—அலங்கோலமாக, ஒரு பணியாளுடன்—கூவியபடி]
[உண்மை மடாதிபதியைத் தொலைவிலே கண்டதும், போலி மடாதிபதி]போ. மடா: மெய்யன்பர்களே!.....அதோ.....அதோ.....
உ. மடா: (ஆத்திரமாகி) யார்டா அவன்—அயோக்கியா! அக்ரமக்காரா! வேஷக்காரா! நான் வசந்தமண்டபத்திலே இருந்த சமயம் இங்கே புகுந்து என் பீடத்தில் அமர்ந்துகொண்டு பிதற்றுகிறாய்......பேயர்களே! எப்படி இதை அனுமதித்தீர்கள்! பித்தர்களே! இதென்ன பாதகம்!
மக்: இங்கேயும் மடாதிபதி—அங்கேயும் மடாதிபதி—என்ன அதிசயம்....
போ. மடா: மெய்யன்பர்களே! வந்துவிட்டது அஞ்ஞான சொருபம்.....
உ. மடா: யாரடா அஞ்ஞான சொரூபம் அக்ரமக்காரா!
போ. மடா: அரன் ஆணை! என்னை அணுகாதே.
உ. மடா: அரனும் கரனும்! என்னடா உளறல் இது...
போ. மடா: அபசார நிந்தைப்பட்டுழலாதே—
உ. மடா: (கதறும் நிலையில்) ஐயோ! கந்தா—முருகா—உங்களுக்குக் கண்ணில்லையா......நான் சித்ரபூஜையில் இருந்த சமயம் விபரீதம் வந்துவிட்டதே....
போ. மடா: பக்தகோடிகளே ! விஷயம் விளங்கிவிட்டதா? விண்ணவன் கூறியபடி என்னை விடாமல் பிடித்தாட்ட அஞ்ஞான சொரூபம் வந்துவிட்டது.....
[பலரும் அஞ்ஞான சொரூபம்! அஞ்ஞான சொரூபம்! என்று கூவுகிறார்கள்.]
[உண்மை மடாதிபதி பிடித்திருப்போரைத் தாக்கித் தள்ளிக்கொண்டு முன்னால் செல்ல முயற்சிக்கிறான். விபூதி மடலில் இருந்து விபூதியைப் பிடி பிடியாக எடுத்து போலி மடாதிபதி, உண்மை மடாதிபதியின் கண்ணில் விழும்படி தூவிக்கொண்டிருக்கிறான்.]போ. மடா: ஐயோ! அஞ்ஞான சொரூபம்—அடித்து விரட்டுங்கள்.....
உ. மடா: (அழுகுரலில்) அடித்து விரட்டுவதா! என்னையா...
மூவரும்: அடித்து விரட்டுங்கள்—அடித்து விரட்டுங்கள்...
உ.மடா: பாவிகளே!....என்னையா.....
போ. மடா: பக்தர்களே! அஞ்ஞான சொரூபத்தை.....
போ. மடா: நமச்சிவாயத்தின் மீது ஆணை! அஞ்ஞான சொரூபத்தை அடித்து விரட்டுங்கள்.
பெரி: ஒழிந்தது அஞ்ஞான சொரூபம்! மெய்ஞ்ஞானம் எங்கே!—(என்று ஆர்வத்துடன் கேட்க).
கந்த: (உருக்கமாக) அப்பனே! ஒப்பிலாமணியே! உன் திருவிளையாடலை என்னென்பேன்! மெய்யன்பர்களே! நீறு பூசுங்கள்! நாதன் நாமத்தைப் பஜியுங்கள், அருளாளரின் மெய்ஞ்ஞான உருவம் அரனடி சேர்ந்துவிட்டது—அஞ்ஞானத்தை அடித்து வீழ்த்தியதும், இங்கோர் ஜோதி தோன்றிற்று—மெய்ஞ்ஞானி அதிலே கலந்துவிட்டார்—பொன்னார் மேனியனைப் போற்றுங்கள்......அருளாளரின் சடலத்தை அடக்கம் செய்வோம் வாரீர்.....
பெரி: பட்டம் யாருக்கு.....?
கந்த: வாழ்த்துங்கள்! பக்தர்களே! மாசிலாமணியார்......
[மக்கள், வாழ்க! வாழ்க! என்று கூவுகிறார்கள்]
[அதேபோது காட்டுப் பாதையிலே போலி மடாதிபதி தன், வேடத்தைக் கலைத்தபடி]போ. மடா: ஒழிந்தான் உலுத்தன்-யார் அவன் அடி பணிந்து கிடந்தனரோ அவர்களே அடித்துக் கொன்றனர்.......அக்ரமக்காரன்—சரியான தண்டனை.