உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/746

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உண்டு. அவ்வளவும் சைவ வேளாள குல திலகங்கள். ஊரில் இருபது வீடுதான் என்றாலும் இருபத்தியெட்டுவிதமான கட்சிப் பிணக்குகள் உண்டு. அத்தனை சண்டையும் ஊரில் பிணம் விழுந்த அன்று மயானக் கரையில் கொடிக்கட்டி, குருக்ஷேத்திர யுத்தமாக நடக்கும். பிறகு மறுநாள், அவ்வளவு சிறல்களும் எங்குதான் போய் பதுங்குமோ. அவ்வூர் இருபது குடும்பங்களையும் இருபது எரிமலைகளுக்கு ஒப்பிடலாம். நிரந்தரமாக புகைந்துகொண்டு, பிணம் விழுந்த அன்று நெருப்பைக் கக்கும் எரிமலைகள் ஏதோ அஸ்தினாபுரம் பறிபோய் விடுகிறதே என்ற 'ஆங்காரத்தில்' பிறந்த சண்டை அல்ல; அடுத்த வீட்டு குத்துவிளக்குத் திரி சற்று நின்று எரிகிறதே என்ற ஆத்திரந்தான். மேல வீட்டு பலவேசம் பிள்ளை புஞ்சைக் காட்டில் எள்ளோ மிளகு செடியோ பயிரிட்டுவிட்டால், எதிர் சரகத்து சுடலையா பிள்ளைக்கு உடம்பெல்லாம் மிளகாயை அறைத்து வாரி அப்பினதுபோல இருக்கும். அதே சுடலையா பிள்ளை, குடிமகன் பெட்டியை சற்று சடுதியில் அடுத்து அடுத்து வைத்துக்கொண்டு விட்டால், "ஏதேது பிள்ளைவாளுக்கு எளவட்டம் திரும்புதாப்பிலே இருக்கு; அதான் வாரம் தவறாம சந்தைக்கு போரேன்ணு டவுணுக்கு பொழுதுசாயப் போயி, விடியு முன்னே வர்றாஹ" என்ற பேச்சு, மாலை நேர அனுட்டானாதிகளுடன் உபாசனை செய்யப்படும். வளைய வளைய வந்தாலும் மறுகால்மங்கலத்து எல்லையைத் தாண்டாத மனசு பிறகு எப்படி இருக்கும். சட்டம், நியாயம், நீதி, பொய் என்பன போன்ற வார்த்தைகளுக்கு பொருளே இல்லாத பிராந்தியங்கள், சட்டம் ஒழுங்கு என்ற அஸ்திவாரத்தின்மீது சூரியன் அஸ்தமனமாகாத சாம்ராஜ்யத்தில் கிராமங்கள்தான். பட்டணங்களில் தெரிந்து பொய் சொல்லுவார்கள்; வஞ்சனை செய்வார்கள்; கோவில் கர்ப்பக்கிரகத்து தத்துவ ரூபத்தையே அடைமானம் செய்து வைப்பார்கள்; அவை எல்லாம் தெரிந்து செய்யும் நாகரிக சின்னங்கள். கிராமங்களிலே தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் ஏலாத்தன்மையினாலே அதே காரியங்களை செய்வதால் அது நாகரிக சின்னமாக அமையாது. அதனால்தான் நாட்டுப்புறத்தான் என்றால் ஒரு உதாசீனம்.

மறுகால்புரமங்கலத்து திசைக் காவலர்கள் போக, சாலாச்சி என்ற விசையாநல்லூர் ஆச்சி என்ற விதவை, கொளும்பு ராமசுப்பிரமணிய பிள்ளை என்ற தாரமிழந்த தனிக்கோட்டை ராஜா, பலசரக்குக்கடை தேரூர் உமைதாணு பிள்ளை என்ற நாஞ்சில் நாட்டு வேளாளர், பண்டாரம் பிள்ளை என்ற பேராச்சி சன்னிதியின் ஆஸ்தான பூசாரி, சிவக்கொழுந்து தேசிகர் என்ற சித்தாந்த கோளரி ஆகியோர் தம்மை அவ்வூர் பூர்வ குடிகள் என்று பாவித்து, நிலம் வாங்கியதாலோ அல்லது கொள்ளி முடிந்த சொத்து கிட்டியதாலோ அல்லது மனைவி வழி சொத்துத் தொந்தத்தினாலோ அந்தவூருக்கு வந்து குடியிருப்பவர்களை சற்று ஒரு குன்றிமணி எடை அந்தஸ்து குறைந்தவர்களாக மதிப்பார்கள். ஆனால், புதுக்குடிகளோ இவர்களை

புதுமைப்பித்தன் கதைகள்

745