உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/765

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"நீங்கள் அப்படியல்ல; உங்கள் பட்லர் எங்கள் ஊர் பள்ளன்; அதனாலே..." என்று விளக்கினான் சுப்பிரமணியம்.

சிரித்துக்கொண்டு இளநீர் கொண்டு வரும்படி உத்தரவிட்டார்.

சுப்பிரமணியம் தாராளமாக ஒரு தம்ளர் இளநீரை விட்டு நிறைத்துக் கொண்டான். "என் தகப்பனாருக்கு இளநீர்கூட பிடிக்காது" என்று சொல்லிக்கொண்டே அடுத்த டம்ளரையும் எடுத்தான்.

"நீ ரொம்ப கெட்டிக்காரன்" என்று சிரித்தார் கலெக்டர்.

கலெக்டரிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு, இரண்டு பேரும் திரும்பி வந்து சேர்மாதேவிக்கு ரயில் ஏறுவதற்குள் பரம சங்கடமாகப் போய் விட்டது. சாயங்காலம் புறப்படும் 6-25 ரயில் புறப்பட்டுவிட்டது. இனிமேல் இராத்திரி பத்து மணிக்குத்தான் கடைசி வண்டி.

"நீ ஓட்டலில் போய் ஏதாவது சாப்பிடேன்" என்றார் பெருமாள் பிள்ளை.

"வீட்டுக்குப்போய் பிறகு பார்த்துக் கொள்ளுகிறது. அம்மைக்கு ஒரு மருந்து வாங்க வேண்டும்; கடைக்குப் போய்விட்டு வந்து விடுகிறேன்; நீங்கள் வெயிட்டிங் ரூமில் இருங்கள்" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் சுப்பிரமணியம்.

2

எமனை எதிர்பார்த்து

தாசில் பிள்ளை வீடு கிராமத்தில் அதிகாரமிடுக்கு உள்ளது என்றால் அசைந்தாடும் பெருமாள் பிள்ளையின் வீடு வினோதமானது. விதிக்கும் பிரமனுக்கும் சிரிக்க வேண்டும் எனத் தோன்றின பொழுது எல்லாம் இந்த மாதிரி ஒரு ஜீவனைப் பிறப்பித்து விட்டு விடுவார்கள்போலும். அசைந்தாடும் பெருமாள் பிள்ளை பூர்வீகத்தில் மருதூர் வாசி வாலிபத்தில் ஜீவனோபாய நிமித்தமாக தாமிரவருணிக் கரையை விட்டு சென்னை வரை வந்து நானாவித உத்யோகங்கள் பார்த்தவர். ஒரு தடவை சம்பிரதிப் பிள்ளையாக வேலை பார்த்தார். சத்திரத்துக் கணக்கப் பிள்ளையாக இருந்தார். மடத்துத் தவசிப் பிள்ளையாக இருந்ததாகவும் அவரைப் பிடிக்காதவர்கள் சொல்லிக் கொள்ளுவார்கள். மனிதர்களுக்கு இயல்பான குரோத புத்திதான் இதற்குக் காரணமே தவிர உண்மை அப்படியல்ல; முன்பு ஏதோ ஒரு காலத்தில் குடும்பத்தின்மீது வெறுப்பு ஏற்பட்டு சன்னியாசம் வாங்கிக் கொள்ளுவது என்ற வைராக்கியத்துடன், சிதம்பரச் சாமி என்பவருடன் சிறிதுகாலம் சுற்றித் திரிந்தபோது, சாமி சமையலுக்கு உட்காரும்போது அவர் காய்கறி நறுக்கிக் கொடுத்ததுண்டு; உலைப் பானையில் சோறு பதம் பார்த்ததுண்டு; குழம்புக்கு புளி கரைத்துக் கொடுத்ததுண்டு; ஆனால் தவசிப் பிள்ளையென சமையலுக்கு நின்றதில்லை. கூடமாட உதவியதை வைத்துக்கொண்டு ஊர்ச்சனங்கள் ஆயிரம் சொல்லுவதைக் காதில் போட்டுக் கொள்ளலாமா. சிதம்பரச் சாமி-

764

அன்னை இட்ட தீ