உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/768

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிறேன். நான் குறுக்குத்துறை மண்டபத்துக்கு பக்கத்தில்தான் தற்சமயத்துக்கு குடிசை போட்டிருக்கிறேன்" என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.

அன்றிரவு அசைந்தாடும் பெருமாள் பிள்ளைக்கும் ஆச்சிக்கும் தூக்கம் வரவில்லை. திடீரென்று கூரையைப் பொத்துக்கொண்டு தெய்வம் வந்து கொடுக்கத்தான் செய்வேன் என்று மல்லுக் கட்டினால் யாருக்குத்தான் தூக்கம் வரும். அம்மையாருக்கு காது நகை தோளில் இடிபடுவது போல பாவனை; பிள்ளைக்கு வயல்வரபபைப் பார்த்துவர யாரை நியமிக்கலாம் என்று நினைப்பு.

"நீங்க விடியன்னையே போயி குப்பு ஆசாரிகிட்ட இந்தத் தங்கத்தைக் குடுத்து ரெண்டு காப்பு பண்ணிப்புடச் சொல்லுங்க. கட்டெக் காப்பெக் காங்கலேண்ணா குளத்திலே நாலு பேரு நாலு சொல்லுவா; நமக்குத்தானே கேவலம்" என்றாள் அம்மையார்.

"அதுக்கென்ன பெரமாதம்; விடியன்னப் பார்த்துச் சொன்னாப் போகுது" என பெருமிதமாக பேசிய பிள்ளையின் மனசில் வறண்டு மாண்டுபோன காமம் தழைத்தது.

"என்ன ஒங்களுக்குத்தான்" என பிணங்கிக்கொண்டே இணங்கினாள் நாற்பது வயதை எட்டும் சகதர்மிணி.

பலபல என்று விடிந்து வரும் பொழுது குப்பு ஆசாரி, பணம் சம்பாதிக்க பிள்ளையவர்கள் நாடிய சுருக்கு வழி, அவரது கழுத்தில் சுருக்கு போட்டுவிட்ட வழி என்பதை சற்று நாசூக்கற்ற முறையிலேயே கடுமையாகச் சொல்லித் தெரிவித்தார். ஆசாரி வாசலுக்கு மிடுக்கு நடைபோட்டு வந்த அசைந்தாடும் பெருமாள் பிள்ளை அசந்து போனார். ஆனால் மெட்டு விட்டுக் கொடுக்காமல் பேசுவதாக நினைத்துக்கொண்டு ஏதோ குப்பு ஆசாரியிடம் பிதற்றிவிட்டு, தங்கப் பாளங்கள் என மதித்த பித்தளைக் கட்டியுடன் நேராக குறுக்குத்துறைக்குச் சென்றார். ஓடுகிற திருடனுக்கு ஒன்பதாமிடத்தில் ராஜா என்பார்கள். பிள்ளையவர்கள் வரப் போகிறார்கள். அவர்கள் கையில் அவசியம் அகப்பட்டுக்கொண்டு தான் பண்ணின பாவத்துக்கு பிராயச்சித்தம் செய்துகொள்ள வேண்டும் என்றா நினைக்கப்போகிறான் குறவன். குறுக்குத்துறை முழுவதிலும் மண்டபம், மரத்தடி ஒன்று விடாமல் தேடிவிட்டு, சுப்பிரமணிய சுவாமியின் அருள் கடாட்சம் பெற்றவராய் பகல் சுமார் இரண்டு மணிப் போதுக்கு வீட்டுக்கு அசைந்தாடி வந்து சேர்ந்தார்.

"இதுவும் ஒரு சோதனை, திருச்சிற்றம்பலம்" என்ற பீடிகையுடன் தமது சகதர்மிணியின் ஆவேசத்தைத் தேக்க முயன்றவராக, கொடியில் கிடந்த மாற்று வேட்டியை எடுத்து உடுத்திக்கொண்டு நனைத்துத் துவைத்துக் கொணர்ந்ததை, பிரமாத ஜாக்கிரதையுடன் கரைக்குக் கரை சமன் பார்த்து மடித்து கொடியில் போட்டார்.

என்ன, என்னவென்று ஒற்றைக்காலில் நின்று கேள்விச்சரம் தொடுத்த மனைவிக்கு, *நீ எலையைப் போடு, பொறவு சொல்லுதேன்" என்றார்.

புதுமைப்பித்தன் கதைகள்

767