கலங்கவில்லை. நெஞ்சில் சிவபுராணம் குடிபுகுந்து விட்டதினால் கவலை விட்டொழிக்க மனம் பிரயத்தனப்பட்டது.
அன்று அந்த வளைவில் இருவர் உறங்கவில்லை. ஒன்று சித்திரை; மற்றது அசைந்தாடும் பெருமாள் பிள்ளை.
அவர் ஊருக்கு வந்தது ஊராருக்குத் தெரியாது. ஊரார் பொருட்படுத்தவில்லை. ஆனால் மறுகால் மங்கலத்தின் முடிசூடா மன்னரானார் அசைந்தாடும் பெருமாள் பிள்ளை. முதலில் தம்முடைய மருமகனுடைய நிலபுலன்களை கவனித்து வருமானம் சிதறாமல் பாதுகாத்தார். அய்யா என்று கை நீட்டி வந்தவனுக்கு இயன்றவரை உதவினார். அதனால் ஊர் ஏழை மக்களின் இதயத்தில் குடிபுகுந்தார். பெரிய நாயன் என்றால் ஊர்ப் பள்ளரின் தெய்வம் என்ற பொருள் ஏற்பட்டது. இந்த நிலையில் சப் இன்ஸ்பெக்டர் மாப்பிள்ளை சர்க்கிள் இன்ஸ்பெக்டராகி, மனைவியின் ஆலோசனைப் பிரகாரம் அங்கு மாமனார் பெயரில் நிலம் வாங்கினார்.
❍❍
அசைந்தாடும் பெருமாள் பிள்ளை இப்படியாக மறுகால் மங்கலத்தில் வந்து குடியேறி இருபது வருஷங்கள் கழிந்துவிட்டன. கீழ வீட்டுப் பாட்டையா எனவும் பெரிய பிள்ளை எனவும் குறிப்பிட்டால் இப்பொழுது அசைந்தாடும் பெருமாள் பிள்ளை என்பது பொருள். அவருடைய மகளுக்கும் தலையில் நரை ஓட ஆரம்பித்து விட்டது. மருமகப் பிள்ளை பால்வண்ணம் பிள்ளைக்கும் ஐந்தாறு வருஷங்களுக்கு முன் சற்றுத் தளதளப்பான சரீரமும் தொப்பையும் இருந்தன என்பதற்கு உடம்பில் அத்தாட்சி உண்டு. அவருடைய குடுமியும் அந்தக் காலத்து விஸ்தீர்ணங்கள் சுருங்கி மாட்டுக் குளம்பு ரீதியில் ஆசாரமாக சைவக் குடுமியாகி விட்டது. பிள்ளையவர்களின் நடை நொடியும் போக்கும் வாழ்வு தேய்பிறையாகச் சென்று வருகிறது என்பதையே காட்டியது. அவருக்கும் மூன்று குழந்தைகள் பிறந்துவிட்டன. மூத்த பையன் நாராயணன் தனது தந்தை வழிப் பாட்டனின் பெயர் தாங்கி, பத்தமடைப் பள்ளிக்கூடத்தில் இங்கிலீஷ் படிப்பு படித்து வருகிறான். இரண்டாவது மகள் மீனாட்சி; சமையும் பருவம். படிப்பு வாசனை என்பது சற்றுமில்லாமல், நாட்டுப்புறத்துப் பெண்ணாக கண் கவரும் ஆரோக்கியத்துடன் வளர்ந்து வருகிறாள். காதிலே சிகப்புக் கல் கம்மல், கையிலே கட்டைக் காப்பு, காலில் தேய்ந்து மாய்ந்துபோன வெள்ளிக் காப்பு. யாரிடத்திலும் துடிப்பாகத் தான் பேசுவாள். அவளது கன்னக் குழிகளில் எப்பொழுதும் சிரிப்பு ஒளிந்து விளையாடும். அள்ளிச் சொருகிய கூந்தலும், பின் கொசுவம் வைத்துக் கட்டிய சிகப்புப் புடவையும் அவளைத் திரும்பி நின்று ஒரு தடவை பார்க்கும்படித் தூண்டும். பெரிய பித்தளைக் குடத்தை அலாக்காகத் தூக்கி ஒரு சுழற்று சுழற்றி அந்த விசையில் தக் என்று இடுப்பில் வைத்துக்கொண்டு ஒற்றைக் கை வீச்சுடன் அவள்
புதுமைப்பித்தன் கதைகள்
771