உள்ளடக்கத்துக்குச் செல்

புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும்/முன்னுரைகள்

விக்கிமூலம் இலிருந்து

பின்னிணைப்புகள்‌

பின்னிணைப்பு 1

புதுமைப்பித்தன்
நூல் முன்னுரைகள்

எச்சரிக்கை!

காஞ்சனை முதலிய பதினான்கு கதைகளுக்குள் துணிந்து பிரவேசிக்க விரும்பும் வாசகர்களுக்கு, தலையெழுத்து அப்படியாகிவிட்ட விமரிசகர்களுக்கு, நம்முடைய கோஷ்டி இது என்று நினைத்துக்கொண்டு கும்மாளி போட்டுவரும் நண்பர்களுக்கு முதல் முதலிலேயே எச்சரிக்கை செய்து விடுகிறேன் .இவை யாவும் கலை உத்தாரணத்திற்கென்று கங்கணம் கட்டிக்கொண்டு செய்த சேவை அல்ல. இவை யாவும் கதைகள். உலகை உய்விக்கும் நோக்கமோ, கலைக்கு எருவிட்டுச் செழிக்கச் செய்யும் நோக்கமோ, எனக்கோ என் கதைகளுக்கோ சற்றும் கிடையாது. நான் கேட்டது, கண்டது, கனவு கண்டது, காண விரும்பியது, காண விரும்பாதது ஆகிய சம்பவக் கோவைகள்தாம் இவை.

இம்மாதிரி நான் முன் எச்சரிக்கை செய்ய வேண்டிய நிலைமையாதோ எனின், இரண்டொரு வருஷங்களுக்கு முன் நான் 'புதுமைப்பித்தன் கதைகள்' என ஒரு கோவையை வெளியிட்டேன். என்மீது அபிமானமுடைய வரும் கலையின் ஜீவன் சேமமாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் அதற்குத் தம் கையாலேயே ஏழடுக்கு மாடம் கட்டி அதைச் சிறை வைக்க விரும்பியவருமான கலாரசிகர் ஒருவர், எனக்கும் அவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் மூலம் நான் எப்பொழுது கதைகள் எழுதுவதை நிறுத்திக்கொள்ளப் போகிறேன் என்று ஆவலோடு கேட்டுவிட்டார். அதற்குப் பதில் சொல்லுவது மாதிரி இப்போது இந்தக் கதைத் தொகுதியை வெளியிட்டிருக்கிறேன். பொதுவாக நான் கதை எழுதுவதன் நோக்கம் கலை வளர்ச்சிக்குத் தொண்டு செய்யும் நினைப்பில் பிறந்ததல்ல. அதனால்தான் என்னுடைய கதைகளில் இந்தக் கலை வியவகாரத்தை எதிர்பார்க்க வேண்டாம் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

இந்தக் கோவையிலே, என் கதைகளிலே மேலோட்டாகப் படிக்கிறவர்கள்கூட இரண்டு ரகமான வார்ப்புத்தன்மை இருப்பதைப் பார்க்கலாம். சில, 1943ஆம் வருஷத்துச் சரக்கு; மீதியுள்ளவை 1936க்கும் அதற்கு முன்பும் பிறந்தவை; 1943ஆம் வருஷத்துச் சரக்குகளை 1943ஆம் வருஷத்துச் ஆசாமிகள் பாராட்டுகின்றனர். அதைப் போலவே, 1936ஆம் வருஷத்துச் சரக்கையும் அந்தக் காலத்து 'இவர்கள்' பாராட்டினார்கள். பார்க்கப் போனால் பிஞ்சிலே பழுத்த மாதிரிதான் எனக்குப் படுகிறது. இந்தத் திரட்டு ஒரு வகையில் நல்லமாதிரி என்பது என் நினைப்பு. என்னைப் பாராட்டுகிறவர்களும் என்னைக் கண்டு மிரண்டு ஓடுகிறவர்களும் மனசு பக்குவப்படும் முறையைக் கண்டுகொள்ள இது சௌகர்யமான சந்தர்ப்பத்தை அளிக்கிறது. அப்படித்தான் நான் இதைப் பாவிக்கிறேன்.

1943ஆம் வருஷத்துச் சரக்குகளைப் பற்றியே சில சர்ச்சைகள், அவை பிறந்த காலத்திலிருந்து இருந்து வருகின்றன. காரணம் பலருக்கு என் போக்கு என்ன என்பது புரியாதிருப்பதுதான்.

என் கதைகள் எதுவானாலும் அதில் அழகு காணுகிற நண்பர் ஒருவர் இந்தக் காஞ்சனைக் கதையைப் படித்துவிட்டு, என்னிடம் வந்து, "உங் களுக்குப் பேய்பிசாசுகளில் நம்பிக்கை உண்டா? ஏன் கதையை அப்படி எழுதினீர்கள்?" என்று கேட்டார். நான், "பேயும் பிசாசும் இல்லை என்று தான் நம்புகிறேன். ஆனால் பயமாக இருக்கிறதே" என்றேன். "நீங்கள் சும்மா விளையாட வேண்டாம். அந்தக் கதைக்கு அர்த்தமென்ன?" என்று கேட்டார். "சத்தியமாக எனக்குத் தெரியாது" என்றேன். அவருக்கு இது திருப்தி இல்லை என்று தெரிந்துகொண்ட பிற்பாடு அவரிடமிருந்து தப்பித்துக்கொண்டு இலக்கியப் பக்குவம் மிகுந்த என் நண்பர் ஒருவரிடம் போனேன். அவர் அட்டகாசமாய் வரவேற்றார். ஜேம்ஸ் ஜாய்ஸ் மாதிரி கதை எழுதியிருப்பதாகவும் 'கயிற்றரவு' என்று சொல்லுவார்களே ஒரு மயக்க நிலை, அதை அழகாக வார்த்திருப்பதாகவும் சொன்னார். இங்கிலீஷ் இலக்கியத்திலே கடைசிக் கொழுந்து என்று கருதப்படுகிறவர் ஜேம்ஸ் ஜாய்ஸ். அப்படிச் சொன்னால் யாருக்குத்தான் தலை சுற்றி ஆடாது? அங்கிருந்து வீட்டுக்கு வந்தேன். வார்த்தைகளை வைத்துக் கொண்டு ஜனங்களைப் பயங்காட்டுவது ரொம்ப லேசு என்பதைக் கண்டுகொண்டேன்.

காஞ்சனைக்குப் பிறகு சாப விமோசனம் இதே மாதிரி அவதிக்கு உள்ளாயிற்று. முக்கால்வாசிப் பேருக்கு அந்தக் கதை பிடிக்கவில்லை. காரணம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி. விமரிசகர் 'சென்று தேய்ந்திறுதல்' என்றார். ஆனால் இன்னும் ஒருவர் வால்மீகி கதையில் அகலிகை கல்லாகவில்லையென்றும் ஜனங்களுக்கு உண்மையைவிட உண்மையின்மீதுள்ள பாசிதான் கண்களுக்குப் பளபளப்பாக இருக்கிறது என்றார். பாசி என்பதுதான் என்ன? மனப்பக்குவத்தின் ஒரு நிலைதானே அதுவும்? அப்படிப் பார்க்கப்போனால் ஜனக ராகங்களிலிருந்து ஜன்ய ராகங்கள் பிறப்பது எல்லாமே பாசிதானே? தொன்னைக்கு நெய்தான் ஆதாரம் என்று கருதுகிறவர்கள்தாம், ஒரு குறிப்பிட்ட கோல வகையில்தான் எதுவும் அமைந்திருக்க முடியும் என்று நினைக்கிறார்கள். வேறு ஒருவிதமான கோலம் போட்டுக் காண்பிக்க முடியாது, கூடாது என்று கருதுகிறவர்கள் - இவர்கள் தத்துவவாதிகள். உலக சிருஷ்டி இவர்களுடைய தத்துவத்துக்குள் மட்டும் ஒடுங்கிவிடவில்லை.

நான் கதை எழுதுகிறவன். கதையிலே கல் உயிர் பெற்று மனிதத் தன்மை அடைந்துவிடும். மூட்டைப் பூச்சிகள் அபிவாதயே சொல்லும். அதற்கு நான் என்ன செய்யட்டும்? கதையுலகத்தின் நியதி அது. நீங்கள் கண்கூடாகக் காணும் உலகத்தில், மனிதன் 'கல்லுப் பிள்ளையார் மாதிரி' உட்கார்ந்திருப்பதைப் பார்க்கவில்லையா? மனிதன் கல் மாதிரி இருக்கும்போது கல்தான் சற்று மனிதன் மாதிரி இருந்து பார்க்கட்டுமே! தவிரவும் பழைய கதைகளை எடுத்துக்கொண்டு அதை இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்றுகொண்டு பார்க்க எங்களுக்கு உரிமையுண்டு.

சாப விமோசனத்தைப் பற்றியவரையில் எனக்கு ஒரே ஒரு குறைதான் உண்டு. அதில் வசிஷ்டனையும் கூனியையும் கூட்டிக்கொண்டு வர மறந்து போனதுதான் அது. மற்றப்படி யார் எப்படிக் கருதினாலும் ராமாயணக் கதையின் அமைதி முற்றும் பொருந்தித்தான் இருக்கிறது.

கட்டிலை விட்டிறங்காக் கதையில் நடை பலருக்கு ஆயாசமாகப்பட்டது. அதற்கு நான் என்ன செய்யட்டும்? அந்தக் காலத்தில் நடை அப்படித்தான் இருந்தது.

கடைசிக் கதை, கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும். திருப்பணியில் ஈடுபாடுடைய பக்தர்கள் பலருக்கு அவர்கள் ஆர்வத்துடன் செதுக்கி அடுக்கும் கல்லுக் குவியலுக்கு இடையில் அகப்பட்டு நசுங்கிப் போகாமல் அவர்களுடைய இஷ்ட தெய்வத்தை நான் மெதுவாகப் பட்டணத்திற்குக் கூட்டிக்கொண்டு விட்டதில் பரம கோபம். நான் அகப்பட்டால் கழுவேற்றிப் புண்ணியம் சம்பாதித்துக்கொள்ள விரும்புவார்கள். என்னுடைய கந்த சாமிப் பிள்ளையுடன் ஊர் சுற்றுவதற்குத்தான் கடவுள் சம்மதிக்கிறார். இதற்கு நானா பழி?

பொதுவாக என்னுடைய கதைகள் உலகத்துக்கு உபதேசம் பண்ணி உய்விக்க ஏற்பாடு செய்யும் ஸ்தாபனம் அல்ல. பிற்கால நல்வாழ்வுக்குச் சௌகரியம் பண்ணிவைக்கும் இன்ஷ்யூரன்ஸ் ஏற்பாடும் அல்ல. எனக்குப் பிடிக்கிறவர்களையும் பிடிக்காதவர்களையும் கிண்டல் செய்து கொண்டிருக்கிறேன். சிலர் என்னோடு சேர்ந்துகொண்டு சிரிக்கிறார்கள்; இன்னும் சிலர் கோபிக்கிறார்கள். இவர்கள் கோபிக்கக் கோபிக்கத்தான் அவர்களை இன்னும் கோபிக்கவைத்து முகம் சிவப்பதைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஆனால் இப்படிக் கோபிப்பவர்கள் கூட்டம் குறையக் குறையத்தான் எனக்குக் கவலை அதிகமாகி வருகிறது.

இவர் இன்ன மாதிரிதான் எழுதுவது வழக்கம், அதைப் பாராட்டுவது குறிப்பிட்ட மனப்பக்குவம் தமக்கு இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் கௌரவம் என்றாகி, என்னைச் சட்டம் போட்டுச் சுவரில் மாட்டிப் பூப்போட்டு மூடிவிடுவதுதான் என் காலை இடறி விடுவதற்குச் சிறந்த வழி. அந்த விளையாட்டெல்லாம் என்னிடம் பலிக்காது. மனப் போக்கிலும் பக்குவத்திலும் வெவ்வேறு உலகில் சஞ்சரிப்பதாக நினைத்துக்கொண்டு நான் வெகு காலம் ஒதுங்க முயன்ற கலைமகள் பத்திரிகை என் போக்குக்கெல்லாம் இடம் போட்டுக் கொடுத்து வந்ததுதான் நான் பரம திருப்தியுடன் உங்களுக்குப் பரிசயம் செய்துவைக்கும் காஞ்சனை. நீங்கள் இவைகளைக் கொள்ளாவிட்டாலும் நான் கவலைப்படவில்லை. வாழையடி வாழையாகப் பிறக்கும் வாசகர்களில் எவனோ ஒருவனுக்கு நான் எழுதிக்கொண்டிருப்பதாகவே மதிக்கிறேன்.

விமரிசகர்களுக்கு ஒரு வார்த்தை. வேதாந்திகள் கைக்குள் சிக்காத கடவுள் மாதிரிதான் நான் பிறப்பித்து விட்டவைகளும். அவை உங்கள் அளவுகோல்களுக்குள் அடைபடாதிருந்தால் நானும் பொறுப்பாளியல்ல; நான் பிறப்பித்து விளையாட விட்டுள்ள ஜீவராசிகளும் பொறுப்பாளிகளல்ல; உங்கள் அளவுகோல்களைத்தான் என் கதைகளின் அருகில் வைத்து அளந்து பார்த்துக்கொள்ளுகிறீர்கள் என்று உங்களுக்குச் சொல்லிவிட விரும்புகிறேன்.

23.12.43

புதுமைப்பித்தன்

('காஞ்சனை' முன்னுரை)


ஒரு சமயம், பெர்னார்டு ஷாவிடம் நீங்கள் எழுதிய 'அந்த' ஏன் 'அப்படி' இருக்கிறது என்று கேட்டதற்கு, அவர் பின்வருமாறு பதில் சொன்னாராம்: பத்து வருஷத்துக்குள் ஒரு மனிதனுடைய உடம்பில் உள்ள ஜீவ அணுக்கள் யாவும் அடியோடு மறைந்து புதியவை அந்த ஸ்தானத்தை வகிப்பதால், பத்து வருஷங்களுக்கு முன் இருந்த அதே மனிதன் இப்பொழுது இருப்பதாகக் கொள்ள முடியாது. அந்தப் புஸ்தகம் எழுதிய பெர்னார்டு ஷா பத்து வருஷங்களுக்கு முன்பே மறைந்துவிட்டான். இப்பொழுது உங்கள் முன்பாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கும் ஆசான் வேறு. இவன் 'அவன்' எழுதியதற்கு ஜவாப்தாரி அல்ல - என்று தமது கருத்து வளர்ச்சியை (மாறுதலை), குறிப்பிட்டுக் கேட்பவர் வாயை அடைத்தாராம். அதே மாதிரி ஷாவின் சமத்காரத்தைப் பின்பற்றி இந்தக் கதைகளுக்கு வக்காலத்து வாங்கிச் சமாதானம் சொல்லும் நோக்கம் எனக்குக் கிடையாது. தவளைக் குஞ்சு ஆரம்பத்தில் மீனைப்போல் இருந்தாலும் தவளையின் தன்மையை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது. அதே மாதிரி இக்கதைகளும், 'இத்தவளையின்' தன்மைகளை மறைமுகமாகக் கொண்டிருப்பதனால், இவற்றைப் பிரசுரத்திற்கு லாயக்கானவை என்று கருதி வெளியிட்டிருக்கிறேன். இக்கதைகள் யாவும் நான் எழுத ஆரம்பித்துச் சுமார் ஆறு மாதங்களுக்குள் அமைந்த மனநிலையைக் காட்டுவனவாகும். இவற்றில் பெரும்பான்மையாக எனது மனநிலையே சித்திரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் வரும் கதாபாத்திரங்கள் போல நான் எனது கருத்துகளுக்குப் பொருந்தியவையாக பிடித்துவைத்த களிமண் பொம்மைகள். அவற்றிற்கு இருக்கும் உயிரும் வேகமும் என் ஆத்திரத்தின் அறிகுறி. அவை மனித ரூபம் பெற்றவையே ஒழிய, மனிதப் பண்பும் இயல்பும் உடைய சிருஷ்டிகள் அல்ல. பேரளவு துன்பத்தின் சாயை படியாது வெறும் உயிர்ப் பிண்டமாக வாழ்ந்த ஒரு வாலிபன், திடீர் என்று உலகத்தில் இயல்பாக இருந்துவரும் கொடுமைகளையும் அநீதிகளையும், சமூகத்தின் வக்கர விசித்திரங்களையும் கண்டு, ஆவேசமாக, கண்டதைத் தனது மன இருட்டில் தோய்த்துச் சொல்லிய பேய்க் கனவுகளாகும். எனது கதைகளின், அதாவது. பூர்வ கதைகளின் கரு அதுதான். அவற்றில், கதைக்கு உரிய கதைப் பின்னல் கிடையா. அவற்றிற்கு ஆரம்பம் முடிவு என்ற நிலைகளும் பெரும்பான்மையாகக் கிடையா. மன அவசத்தின் உருவகம் கதைகள் என்பதை ஒப்புக்கொள்ளுவதானால் அவை கதைகள் ஆகும். இம்மாதிரியான முறையை அனுஷ்டித்து மேல்நாட்டில் கதைகள் பிரசுரமாவது சகஜம். அந்த முறையை முதல் முதலாகத் தமிழில் இறக்குமதி செய்த பொறுப்பு அல்லது பொறுப்பின்மை என்னுடையதாகும்.

மணிக்கொடிப் பத்திரிகையானது வெளிவரும் முன்பு எத்தனையோ இலக்கியப் பத்திரிகைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால், புதிய பரிசீலனைகளுக்கு இடங்கொடுக்கும், உத்சாகமூட்டும், வரவேற்கும் பத்திரிகைகள் அதற்கு முன்போ பின்போ கிடையாது. அந்தப் பத்திரிகையை ஆரம்பித்த லக்ஷியவாதியான கே. ஸ்ரீனிவாசன் அவருடைய அந்தக் 'குற்றத்திற்காக' (?) பாஷைப் பிரஷ்டம் செய்யப்பட்டவர் போல, வேற்று மாகாணத்திலே வேற்று பாஷையிலே பத்திரிகைத் தொழில் நடத்தும் பாக்கியம் கிடைக்கப்பெற்று வாழ்ந்து வருகிறார். காலத்துக்கேற்றபடி உடுக்கடிக்கும் கோட்டான்களும், ஆவேசத்தோடு சீறுவது போல 'பம்மாத்து' செய்துகொண்டு இருக்கும் கிழட்டுப் புலிகளும், பாஷையையும் பாஷையின் வளர்ச்சியையும் பாழ்படுத்திக்கொண்டு இருக்கும்படி அனுமதித்து வரும் தமிழரின் பாஷா அபிமானத்தைக் கோவில் கட்டித்தான் கும்பிட் வேண்டும். அன்று மறுமலர்ச்சி என்ற ஒரு வார்த்தை புதிய வேகமும் பொருளும் கொண்டது. அதைச் சிலர் வரவேற்றார்கள்; பலர் கேலி செய்தார்கள்; பெரும்பான்மையோர் அதைப் பற்றி அறியாதிருந்தார்கள். மணிக்கொடி பொருளாதார நிர்ப்பந்தம் என்ற நபரால் சிசுஹத்தி செய்யப்பட்டு அசிரத்தை என்ற முனிசிப்பல் குப்பைத் தொட்டியில் ஏறியப்பட்டது. மூச்சுப் பேச்சற்றுக்கிடந்த அந்தக் குழந்தையை எடுத்துவந்து ஆசை என்ற ஒரே அமுதூட்டி வளர்ப்பதற்காக நானும் பி. எஸ். ராமையா என்ற நண்பரும், எங்களைப் போலவே உத்சாகத்தை மட்டும் மூலதனமாகக் கொண்ட இன்னும் சில சகா எழுத்தாளர்களும் சேர்ந்து நடத்தி வந்தோம்."அது இரண்டு முன்று வருஷங்களில் கன்னிப்பருவம் எய்திக் கண்ணை மயக்கும் லாவண்யத்தைப் பெறும் சமயத்தில் அதைக் கைப்பிடித்து இழுத்துக்கொண்டு ஓடும் நண்பரைப் பெற்றோம்." அவர் அவளை ஒருவருக்கு விற்றார். விற்ற உடனே அவளுக்கு ஜீவன்முக்தி இந்தக் கலிகாலத்தில் கிடைத்தது. இதுதான் மணிக்கொடியின் கதை. இதுதான் தமிழிலே புதிய பரிசீலனைகள் செய்ய வேண்டும் என்று கோட்டை கட்டியவர்களின் ஆசையின் கதை. இந்தக் கதையின் ஒரு அம்சம் எனது கதைகள்.

மணிக்கொடி பத்திரிகையில் எழுதியவர்களில் பெரும் கேலிக்கும், நூதனம் என்பதனால் ஏற்படும் திக்பிரமைக்கும் ஆளான ஒரே கதாசிரியன் நான். சரஸ்வதி பத்திரிகை ஆசிரியர் என்ற தலைப்பில் நையாண்டி செய்யப்பட்ட கௌரவம் எனக்கு ஒருவனுக்குத்தான் கிடைத்தது. கருத்தின் வேகத்தையே பிரதானமாகக் கொண்டு வார்த்தைகளை வெறும் தொடர்பு சாதனமாக மட்டும் கொண்டு தாவித் தாவிச் செல்லும் நடை ஒன்றை நான் அமைத்தேன். அது நானாக எனக்கு வகுத்துக்கொண்ட ஒரு பாதை. அது தமிழ்ப் பண்புக்கு முற்றிலும் புதிது. அதைக் கையாண்ட நானும் கல்வி கற்றதின் விளைவாக பாஷைக்குப் புதிது. இதனால், பலர் நான் என்ன எழுதுகிறேன் என்பது பற்றிக் குழம்பினார்கள். சிலர் நீங்கள் எழுதுவது பொது ஜனங்களுக்குப் 'புரியாது' என்று சொல்லி அனுதாபப்பட்டார்கள். அந்த முறை நல்லதா, கருத்து ஓட்டத்திற்கு வசதி செய்வதா என்பதை அதே முறையில் பலர் எழுதிய பின்புதான் முடிவுகட்ட முடியும். அந்த முறையை நானும் சிறிது காலத்திற்குப் பிறகு கைவிட்டு விட்டேன். காரணம் அது சௌகரியக் குறைவுள்ள சாதனம் என்பதற்காக அல்ல. எனக்குப் பல முறைகளில் கதைகளைப் பின்னிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையினால் அதைக் கைவிட்டு வேறு வழிகளைப் பின்பற்றினேன். இன்று திரும்பிப் பார்க்கும்போது அவை உலக வளர்ச்சியில் பரிணாம வாதத்தினர் சொல்வது போல இலக்கிய வளர்ச்சியின் தெருவடச்சான் சந்துகளாக அங்கேயே வளர்ச்சித் தன்மை மாறி நின்றுவிட்டன. இன்று அவற்றை ஆற அமரப் படித்துப் பார்த்துத்தான் முடிவுகட்ட வேண்டும். எனது முயற்சி பலிக்காமல் போயிருக்கலாம். அதனால் முறை தப்பானது என்று முடிவுகட்டிவிடக் கூடாது. நான் அறியாமல் வகுத்துக்கொண்ட எனது பாதையைப் பற்றி இன்னும் ஒரு வார்த்தை. நான் எந்தச் சமயத்தில் இந்தத் தவளைப் பாய்ச்சல் நடையைப் பின்பற்றினேனோ அதே சமயத்தில் மேலை நாடுகளில் அதுவே சிறந்த சிகரமாகக் கருதப்பட்டது என்பதைச் சமீபத்தில் நான் ஒரு இலக்கிய நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது கேட்டு அறிந்தேன். இலக்கிய சிங்காசனத்தில் ஏறி அமர்ந்துகொள்ள எனக்குத்தான் உரிமை என்று கட்சி பேச நான் இந்தக் கருத்தை சொல்ல வரவில்லை. கருத்துக்கள் நமது தேசத்து மன உளைச்சல்களின் உருவகமாக இருந்தாலும் என் போக்கு உலக இலக்கியத்தின் பொதுப் போக்கோடு சேர்ந்து இருந்தது என்பதை எடுத்துக் காட்டவே இதைக் குறிப்பிட்டேன். இனிமேல் படித்துப் பாருங்கள்.

29.8.47

புதுமைப்பித்தன்


('ஆண்மை' முன்னுரை)




ரா. ஸ்ரீ. தேசிகன் முன்னுரை

லக்கியம் ஓர் அகண்ட நந்தவனம். அதில் ஒவ்வொரு சமயத்தில் ஒரு ஜாதி மலர் விசேஷமாய்க் காணப்படுகிறது. இடையிடையே பெரிய காவியங்கள் மலர்கின்றன, நாடகங்கள் பூத்துச் சொரிகின்றன, உள்ளக் கிளர்ச்சிகளை உணர்த்தும் அகத்துறைப் பாக்கள் பூக்கின்றன, நாவல்கள் காட்டுப் பூக்கள் போலக் கொள்ளை கொள்ளையாக விரிகின்றன.

இவைகளெல்லாம் ஏக காலத்திலும் பூக்கலாம். இவைகளில் நாவல் வனத்திலே திரிய அவகாசமில்லாதபொழுது சிறுகதை மலர்களின் மணத்தை நுகர்ந்து உலகக் கவலையை மறந்து ஜனங்கள் இன்புறுகிறார்கள்.

ஜனங்கள் சிறுகதை மலர்களின் மணத்தை அதிகமாய் விரும்பவே, இலக்கிய நந்தவனத்தில் அந்தப் பூச்செடிகள் அதிகமாய்ப் பயிரிடப்பட்டன. அவைகளைப் பயிரிட்டுப் பாதுகாப்பது மிகவும் சிரமம். எனினும் நம் தேசத்திலும், முக்கியமாகத் தமிழ் நாட்டிலும் ஏராளமான கதைகள் மலர்ந்து பரிமளிக்கின்றன. கம்பனுக்குப் பின் ஒரு மகாகவியைக் காணோம். "தாயுமானவர் இல்லையா? இராமலிங்க சுவாமிகள் இல்லையா? பாரதியார் இல்லையா?" என்று சிலர் வினவலாம். கம்பனின் காம்பீரியக் கவிப் பிரவாகத்தைப் பார்த்த கண்களுக்கு இவர்களெல்லாம் அழகாய்ச் சலசலவென ஓடுகிற சிற்றோடைகள்தான். பெரிய காவியங்கள் தோன்றாதது போலவே சிறந்த நாடகங்களும் தோன்றவில்லை. உயர்ந்த நாவல்களும் இல்லை. ஆயினும் நம் நாட்டு மறுமலர்ச்சியில் சிறுகதை மணம் கமழ்கிறது. இது ஓர் அதிசயம்.

கதை மலர்களில் நம் நாட்டு வித்துக்களிலிருந்து வெடித்து வெளிக் கிளம்பினவைகள் எத்தனை? வெளிநாட்டு வித்துக்கள் நம் நாட்டு உரம் பெற்று வளர்ந்தனவா? அல்லது அந்நிய நாட்டு மலர்கள்தான் நம் நாட்டு மலர்கள் போலப் போலிச் சோபையைக் காட்டுகின்றனவா? உற்று நோக்கினால் கதை மலர்களில் இந்த மூன்று ரகங்களும் விரவிக் கிடப்பதைக் காணலாம்.

அழகான கதைகள் மலர்வதென்றால் அதற்கு வளம் மிகுந்த ஒரு வளர்ப்புப் பண்ணை வேண்டும். அப்பண்ணையில் உருவிலா, மணமிலாப் பூக்கள் பல பூத்து, வாடி, மண்ணோடு மண்ணாக மக்கி எருவாகியிருக்கவேண்டும். இதில் ஆச்சரியமில்லை. முன் பூத்து வாடிய மலர்களே இப்பொழுதுள்ள கதைகளுக்கு உரமாகியிருக்கின்றன. நம்முடைய சாரமற்ற கதைகளே இனிப் பூக்கும் வாடாத மலர்களுக்கு எருவாகி விடுகின்றன.

தமிழ் இலக்கியத்தில் சமீப காலத்தில் அலர்ந்துள்ள கதை மலர்கள் பல. அவற்றில் பெரும்பாலானவை இன்னும் புஸ்தக ரூபத்தில் வரவில்லை. என் கைக்குக் கிடைத்த கதைகளில் அதிக அழகாய் அமைந்த சிலவற்றைக் கீழே குறிப்பிடுகிறேன்:

கொட்டுகிற மழையிலே, இருளை வெட்டுகிற மின்னலிலே, காற்று விம்மி விம்மி அடிக்க, முடிவில் உயிரை மாய்த்துக்கொண்ட ருக்மணியின் சோகத்தைத் தன் ஆயிர இலை வாய்களினால் ஓலமிட்ட 'குளத்தங்கரை அரசமரம்' மனத்தை விட்டு அகலுமோ? கடை, ரயில்வே ஸ்டேஷன், சினிமா முதலிய இடங்களில் சிந்தை தேக்கிய முகத்துடன் ராமநாதய்யர் தேடியும் காணாத 'தேவானை'யின் கஷ்டத்தைப் பற்றி வாசித்த எவர் உள்ளந்தான் உருகாது? "அருள் சுரந்தது; ஆனால் மார்பில் பால் சுரந் ததோ!" என்று பூர்த்தியாகிற ஒரு தாயின் கதை நம் உள்ளத்தைக் கவராமல் போகாது. முருகனும் கிருஷ்ணனும் இறுதியில் ஒருவருக் கொருவர் பார்த்துக் கண்ணீர்விட்ட காட்சியைத் தருகிற கலைஞன் தியாகம் நம் அகக் கண்முன் ஓடிவரும். "நீ வச்சுக்கக் கூடாதா அத்தெ?" என்று குழந்தை கேட்க, ஒரு விதவையின் மனத்தில் துயின்றுகொண்டிருந்த ஆயிரம் உணர்ச்சிகள் குமுறி வருகிறதைச் சித்திரிக்கும் 'பூச்சூட்டல்', தொலையாத இருட்டில் புழுங்கிக் கலங்கும் குஞ்சம்மாவின் உள்ள உணர்ச்சிகளை நயம்படக் காட்டும் 'விடியுமா?', ராதாவின் மாமா சந்திரன் நினைவு அலைகளையெழுப்பும் 'ஞாபகம்', சுழித்தோடுகிற துங்கபத்திரா நதிக்கரையில் சின்னாபின்னமாய்க் கிடக்கும் சிற்பங்களை ராமராயனின் சிதைந்த காதல் மாளிகையெனக் கூறும் 'ராமராயன் கோயில்', கணவனுக்கு அனைத்தையும் அர்ப்பணம் செய்யும் காமாட்சி அம்மாளின் தியாகத்தைக் காட்டும் 'பொன் வளையல்', ஜானகிராமய்யர் அம்புஜவல்லி இவர்கள் அகத்தில் அருவிபோல் ஓடுகிற அன்பைக் காட்டும் 'பெற்றோர்கள்', தனக்குத் தகுந்த கணவன் வராது ஏங்கி வாடும் பார்வதியின் வேதனையைக் காண்பிக்கும் 'என்று வருவானோ?'—இக் கதைகள் என் அறிவு வட்டத்திற்குள் மிதந்து வருகின்றன. இவை தவிர வேறு பல அழகிய தமிழ்க் கதைகளும் இருக்கலாம். பல இளம் எழுத்தாளர்களின் கதைகள் அவ்வப்பொழுது பத்திரிகைகளில் வெளிவருகின்றன. இவையெல்லாம் தொகுக்கப் பெற்றுப் புத்தகங்களாக வெளிவந்தால் தான் எல்லோரும் இவற்றை நன்கு அநுபவிக்கவும், இவற்றின் வளத்தைப் பற்றி நிர்ணயிக்கவும் சந்தர்ப்பம் வாய்க்கும். எந்த இடத்தில் அழகும் உண்மையும் தாண்டவமாடுகின்றனவோ அவ்விடத்தைக் கைகூப்பித் தொழ வேண்டும்; அதுதான் கோயில்.

நம் தமிழிலே நல்ல கதைகள் வருவதற்கு மூல காரணம் மேனாட்டாரின் அருமையான கதைகளை வாசித்ததுதான் என்று இலக்கிய உலகில் திரியும்போதெல்லாம் நாம் உணர்கிறோம்.

சிறுகதைக்கு உருக் கொடுத்தது, இலக்கணம் வகுத்தது முதலியன மேனாட்டார் செய்த வேலைகள். அவர்கள் வகுத்த இலக்கணத்திற்கிணங்க நம் நாட்டில் கதைகள் இல்லாமற் போகவில்லை. கலித்தொகை, புறநானூறு முதலிய சில நூல்களில் அநேக சந்தர்ப்பங்கள், நிகழ்ச்சிகள் சிறுகதைச் சுருதியில் செல்லுகின்றன. ஏசுநாதர் உபதேசக் கதைகள் போலவே உபநிஷத்துக்களில் காணப்படும் கதைகளை வாசிக்குந்தோறும் எத்தனை மொழிகடந்த பாவ கர்ப்பங்களாக அவைகள் இருக்கின்றன என்று நாம் ஆச்சரியத்தை அடைகின்றோம்.

ஆனால், பெரும்பாலும் கதைகள் பஞ்சதந்திரக் கதைகள் போலவே நீதிகளைக் கற்பிக்கக் கூடியவைகளாக இருக்கின்றன. கதைகளில் நீதிகள் வரக்கூடாது என்பதில்லை; ஆனால், வெறும் நீதிகளுக்காகவோ, வேறு குறிப்பிட்ட நோக்கங்களுக்காகவோ கதைகள் கட்டப்பட்டால் அவை இலக்கியக் கலையின் உயர்ந்த பீடத்திலிருந்து இறங்கிவிடுகின்றன. இக்கதைகளில் கலை வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதாகவே கொள்ளப்படும். ஒரு சங்கீதம் போல, ஒரு நாட்டியம் போல, ஓர் ஓவியம் போலக் கதைகளையும் அநுபவிக்க வேண்டும் என்று மேனாட்டார் காண்பித்தனர். கதையின் மர்மங்களும், இலக்கணங்களும், இரகசியங்களும் தெரிந்தால்தான் அந்தத் துறையில் நாம் பயமின்றி இறங்கலாகும்.

சிறுகதையின் இலக்கணங்களை முற்றிலும் சொல்லப் புகுந்தால் அதுவே ஒரு பெரும் புஸ்தகமாக விரியும். இங்கு கதையின் ஜீவநாடியை மட்டும் தொட்டுக் காட்டி மேலே செல்வேன்.

சிறு கதை ஒரு குறுகிய நாவலில்லை. அநேக பாத்திரங்களையும் அநேக சம்பவங்களையும் சித்திரிக்க வேண்டியிருப்பதால் ஒரு நாவலுக்கு அகன்ற சித்திரக்கிழி வேண்டும். ஒரு நிகழ்ச்சிதான் சிறு கதைக்குள்ள வட்டம். அவ்வட்டத்திற்குள் எவ்வளவு அலங்காரம் செய்யலாமோ அவ்வளவு அலங்காரந்தான் செய்யலாம். ஒரு நாவலில் கூட்டலாம். கழிக்கலாம்; ஆனால் கதா பாவம் கெட்டுப் போகிறதில்லை. ஒரு சிறு கதையில் ஒரு பதத்தை எடுத்தாலும் கதை பழுதுபட்டுப் போய்விடும்.

நாடகத்தைப் போலவே சிறு கதையிலும் ஒவ்வொரு பதத்திற்கும் ஒரு பிரயோஜனம் இருக்க வேண்டும். வார்த்தைகளில் சிக்கனம் வேண்டும். வர்ணனைக்காகவே வர்ணனையும், ஹாஸ்யத்திற்காகவே ஹாஸ்யமும் சிறு கதையில் இடம்பெற முடியாது. ஹாஸ்யமான விஷயம் கதைப் போக்கின் ரஸத்தை அதிகப்படுத்துகிறதா என்று பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் அதை அடியோடு தள்ளிவிட வேண்டும். விகடத்திலேயே பயிற்சி செய்கிற உள்ளத்தை உடையவருக்கு அசந்தர்ப்பமான இடங்களில் ஹாஸ்யம் வெடித்துவிடும். வீணை போல் ரஸமாய் ஒலித்துக்கொண்டிருக்கிற கதைப் போக்கின் நடுவில் ஹாஸ்யப் பேச்சு வந்தால், தீஞ்சுவை அமிர்த தாரையைப் பருகி வெறிகொள்ளும் ரஸிகர் செவியில் கோரமான கொம்பு ஊதி முழக்குவது போல ஆகும்.

நம்முடைய நேர்க்கமென்ன, நாம் எந்தச் சுருதியிலே கதையின் மூர்ச்சனையைக் கூட்டியிருக்கிறோம் என்ற விஷயத்தைத் தீர்மானம் செய்துகொண்டு அதற்கு அனுகுணமான ஸ்வரங்களைத் தயாரிக்க வேண்டும். ஒரு ஸ்வரம் அதிகமாய்ப் போனால் வேறு ராகத்தின் இயல்பு வந்துவிடும். ஆரபி தேவகாந்தாரத்தில் கரைந்துவிடுகிறது. மத்யமாவதி சுத்த சாவேரியாக மாறிவிடுகிறது. ராகத்தைப் போலவே சிறுகதை விஷயத்திலும் சர்வ ஜாக்கிரதையாகப் பழக வேண்டும். சிறு கதையில் ஒரு ரஸந்தான் நரம்பு போல ஊடுருவி ஓடவேண்டும். கதையைப் படித்து முடித்துவிட்டால் ஒரு பாவந்தான் மனத்தில் நிற்கவேண்டும். கதை ஓர் ஒருமை எண்ணத்திலோ, நிகழ்ச்சியிலோ, நோக்கத்திலோ அல்லது சூழ்நிலையிலோ[1] இருக்கவேண்டும். அநேக வருஷங்களை உள்ளடக்கி வைத்துக்கொள்ளலாம் ஒரு கதை. ஆனால் அநேக வருஷ சம்பவங்கள் ஒரு ரஸத்தையே தொட்டுக்கொண்டு போகவேண்டும். உதாரணமாக, மாபஸான் எழுதிய 'லா பரூரே' (Maupassant's 'La Parure') என்ற கதையை எடுத்துக்கொள்வோம். அது வெகுநாள் நீண்ட சோக நாடகத்தைச் சித்திரிக்கிற ஒரு கதை. ஆனால் அதனுடைய ஒருமை அணுவளவும் மாறவில்லை.

கதை முடிவில் எழும் நாதத்திற்குக் கதை முழுவதுமே எதிரொலி கொடுக்கவேண்டும். "எனக்கு விடுமுறை நாட்கள் வந்துவிட்டன" என்று டாக்டர் தாகூர் எழுதிய முடிவும், "எனக்கு வாய்விட்டு அழுவதற்குக் கூடவா இப்பரந்த உலகில் இடமில்லை?" என்று காதரின் மான்ஸ்பீல்டு கொடுத்த முடிவும் என் மனத்தில் மின்னிக்கொண்டேயிருக்கின்றன.

சிறு கதைக்கு விஷயங்கள் எவை? உலக நாடக மேடையில் நடக்கிற சம்பவங்கள் முழுவதுந்தான். ஒரு கை ஜாடை, ஒரு கண் சிமிட்டல், ஒரு நடை வீச்சு, தியாகம், வீரம், காதல் — எல்லா அநுபவங்களும், எல்லா ரஸங்களுமே கதையின் எல்லைக்கு உட்பட்ட விஷயங்களாகும். சுருங்கச் சொல்லுமிடத்து அனந்தமான தந்திகள் அடங்கிய வாழ்க்கை வீணையில் ஒரு தந்தியைப் பேசவைப்பதுதான் சிறு கதை. என்ன, கதைக்கு லட்சணம் கூறப் புகுந்து கவிதையின் லட்சணமல்லவா கூறப்படுகிறது என்று சிலர் கருதலாம்.

ஆம், கதைக்கும் கவிதைக்கும் அதிக வித்தியாசமில்லை. சிறு கதைச் சைத்திரிகளைக் கொஞ்சம் ஊடுருவிப் பார்த்தால் அவன் ஒரு கவி என்பது புலனாகும். கவியுள்ளம் படைத்தவன்தான் சரியான கதை எழுத முடியும். அகத்துறைக்கான[2] ஒரு நிலையை (lyric) அடைந்துவிடுகிறது உண்மையான சிறு கதை. அகத்துறைப் பாவைப் போலவே சிறு கதையிலும், தெளிவாக, உணர்ச்சி பொங்க வருணிக்கப்படும் ஓர் அநுபவத்தை மாற்றக்கூடிய அல்லது குழப்பக்கூடிய வேறு எந்த அம்சமும் இருக்க இடமில்லை.

புகழ்பெற்ற பிரெஞ்சுக் கதாசிரியரான மாபஸானின் கதைகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் ஒரு விஷயம் இங்கு கவனிக்கத்தக்கது: அகத் துறைக்கான வடிவை அடையவேண்டுமென்று மாபஸான் கதைகளை எழுதவில்லை. கதைகளுக்கு வேண்டிய பாகங்களை வைத்துக்கொண்டு மற்றப் பாகங்களை நிர்த்தாட்சண்யமாக அவர் கழித்துவிட்டபடியால் அவர் கதைகள் அந்நிலையை அடைந்துவிட்டன. இவ்வாறு அடையாவிட்டால் உயர்ந்த லட்சியத்திலிருந்து கதைகள் இறங்கிவிட்டன என்றே சொல்லிவிடலாம்.

காதலும், கடிதமும், கண்ணீரும் சிதறிக் கிடக்கிற எத்தனையோ கதைகளை வாசித்துச் சலித்துப் போயிற்று என் உள்ளம். காதல் மனித வாழ்க்கையில் ஒரு மூலை, ஒரு கோணம். மூலை முழு வீடாகுமா? மேலும், தீண்டாமை, கதர், கோயில் திறப்பு, சமுதாய அக்கிரமங்கள், ஜாதிக் கட்டுப்பாடுகள், விதவையின் துயரம் இவைகளுக்குத்தான் கதைகள் எழுந்தனவா?—அல்லது கதைகளுக்காகத்தான் இவைகள் உண்டாயினவா?

சமூகக் கதைகளில் உருக்கமில்லாமல் போகவில்லை. நம் நாட்டு நிலைக்கு அவைகளும் வேண்டியவைதான். ஆனால் சமுதாயம் முன்னேற்றமடைந்துவிட்டால், பிறகு அவைகள் ரஸமற்றுச் சப்பென்று போய் விடும். நிரந்தரமாக எக்காலத்திலும் நம் உள்ளத்தை அவைகள் தொட்டுக் கொண்டிருக்க முடியாது.

காதற் கதைகள், சீர்திருத்தக் கதைகள் இவற்றுக்கெல்லாமிடையே வேறொரு குரல் கேட்கிறது. அது என்ன என்று திரும்பிப் பார்த்தால் மேஜைமீது 'புதுமைப்பித்தன்' சிறுகதைப் புத்தகம் விரிந்து கிடக்கிறது. சிறு கதை மர்மங்களை நன்கறிந்துள்ள 'புதுமைப்பித்த'னின் கதைகளுக்கிடையே திரியும்பொழுது ஒரு கலியுலகில திரிகிற உணர்ச்சி எனக்கு வருகிறது. இவருடைய கதை ஒவ்வொன்றும் ஒரு தனி அநுபவ முத்திரை பெற்றிருக்கிறது. ஒவ்வொன்றிலும் உண்மையின் நாதம் தொனிக்கிறது. இவருடைய சில கதைகளை ரஸம் ததும்புகிற பாடல்கள் என்றே சொல்லிவிடலாம்.

ஜேம்ஸ் ஸ்டீபன்ஸ் (James Stephens) என்பவர் பாடியுள்ள ஒரு பாட்டை எடுத்துக்கொள்வோம். அதன் கருத்து வருமாறு:

குளிர்காலம்; வெட்டுகிற வாடை; இருள் சூழ்ந்த உலகம். ஒரு தனியிடத்தில் ஓர் ஏழைப் பெண். உடையோ அள்ளு கந்தல். குழந்தையை அன்புடன் அணைத்து முத்தமிட்டுப் பால் தருகிறாள். பனி, வாடை, இருள் என்ற சூழ்நிலையின் மத்தியில் அக்காட்சியைக் கண்ட கவியின் மனத்திலே பாய்கின்றது ஓர் உணர்ச்சி. உலக இருளையும் குளிரையும் நீக்கும் அன்பொளியல்லவோ அவளிடத்தில் இருக்கிறது என்று தன் உள்ளத்தைக் கொட்டிவிடுகிறான் கவி.

இந்த அளவுகூடப் போதும் ஒரு சிறு கதைக்கு. இப்பாட்டையே சிறு கதையாக அமைத்துவிடலாம்.

'புதுமைப்பித்தன்' வேறொரு சுருதியில் ஒரு கதையைப் பாடுகிறார். வேகம் ஒன்றுதான்; ஆனால் உணர்ச்சி வேறு ஒரு தெரு விளக்கு. அதன் ஒரு பக்கத்துக் கண்ணாடி உடைந்துவிடுகிறது. விளக்கை எடுத்துவிடுகிறார்கள் அதிகாரிகள். பிச்சையெடுக்கப் போயிருந்த ஒரு கிழவன் அங்கு வருகிறான். விளக்குக்குக் கிழவன், கிழவனுக்கு விளக்கு என்று முன்னிருந்த நிலை போய்விடுகிறது. கிழவனுடைய உள்ளம் அஸ்தமனத்தை அடைந்துவிடுகிறது. மறுநாட் காலையில் ஒரு கிழவனின் சவம் அங்கு கிடக்கிறது. இந்தக் கதையில் நான் கிழவனுடைய மரணத்தைப் பார்க்கவில்லை: ஆதாரமற்று இருளில் திரிந்து மடியும் அநாதைகளின் சோக நாடகத்தைத்தான் பார்க்கிறேன்.

பற்றுக்கோலை யாரோ தட்டிப் பிடுங்கிக்கொண்ட குருடனின் நிலை.

"அன்று அவனுக்கு உலகம் துனியமாய், பாழ்வெளியாய், அர்த்தமற்றதாய் இருந்தது."

மனிதன் நவீன நாகரிகத்தில் யந்திரமாகிவிடுகிறான் என்பதை விஷயமாக்கி,இரண்டு கதைகளை ஆசிரியர் தந்திருக்கிறார்:

ஒருவர் ஹோட்டலுக்குள் போகிறார். அங்கே ஒருவன் பம்பரம் போல ஆடுகிறதைக் காண்கிறார். ஜனங்கள் அலைகள் போல வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். அவ்வளவு ஜன அலைகளுக்கும் அவன் ஈடு கொடுக்கிறான். நவநாகரிகம் அவனை ஒரு யந்திரமாக்கி வைத்திருக்கிறது. ஆனால் அவனுடைய மனித உணர்ச்சி முற்றிலும் போய்விடவில்லை என்பதற்கு ஓர் அறிகுறி தெரிகிறது. நாற்காலியிலிருந்து எழுந்திருந்தவரின் கைக்குட்டை கீழே விழுந்துவிட்டது.

"ஸார், உங்கள் கைக்குட்டை கீழே விழுந்துவிட்டது!"

இவ்வாறு கூறி அவன் குனிந்து கைக்குட்டையை எடுத்துக் கொடுக்கிறான். அமைதியான நீர்நிலையில் தொப்பென்று ஒரு கல் விழுந்து தரங்கங்களை எழுப்புவதுபோல அவன் மனத்தில் கைக்குட்டை தொனி அலைகளைக் கிளப்புகிறது. இச்சித்திரம் வளமுள்ள கற்பனையின் தொழிலைத் தவிர வேறு எதாயிருக்க முடியும்?

நல்லதாயிருந்தாலும் சரி, கெட்டதாயிருந்தாலும் சரி, பழக்கம் ஒரு விலங்குதான். மலைக் காற்றைப் போலத் திரிய வேண்டுமென்கிற இச்சையை அது தடை செய்துவிடுகிறது. நெடுநாளாகக் கேடு செய்வதே தொழிலாகவுடைய ஒருவன் மனம் திருந்தி மேலேறவேண்டுமென்று கருதினாலும், நெடுங்காலமாக நல்ல வழியிலேயே சென்றுகொண்டிருக்கும் வேறொருவன் இழிதொழிலில் இறங்கவேண்டுமென்று கருதினாலும், இருவருக்கும் முடியாமல் போகிறது. இருவரும் இரு பழக்கத் தளைகளைத் தாண்ட முடியாமல் நின்றவிடத்திலேயே நிற்கிறார்கள். இவ்விரு தளைகளில் ஒன்று இரும்புத் தளை, மற்றது பொன் தளை. ஆயினும் இரண்டும் தளைகள் என்பதில் சந்தேகமில்லை. உலகத்தில் ஒரு பாகம் மேலே மிகப் பகட்டாய் டால் வீசுகிறது. அடியிலே இருள் சூழ்ந்த பயங்கரமான பாதாளம். இந்தக் கருத்துக்களை வைத்து 'மனித யந்திரம்' என்று ஒரு கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கதையில் விளங்கும் மீனாட்சிசுந்தரம் பிள்ளை மறக்க முடியாத பாத்திரமாகக் காட்சியளிக்கிறார்.

ஆபீஸ் கிளார்க் ஒருவன் சோர்ந்து வீடு திரும்புகிறான். ஓர் இருண்ட சந்து வழியாக அவன் போக நேர்கிறது. அங்கே "அலங்கோலமான ஸ்திதியில் ஒரு பெண். பதினாறு பதினேழு வயதிருக்கும். காலணா அகலம் குங்குமப்பொட்டு, மல்லிகைப்பூ, இன்னும் விளம்பரத்திற்குரிய சரக்குகள்.

" 'என்னப்பா சும்மா போரே? வாரியா'?"

வாலிபன் திடுக்கிட்டு மடியிலிருந்த சில்லறைகளையெல்லாம் இறைத்துவிட்டு ஓடுகிறான். இது வெறும் புனை கதையா? நமது நகரங்களில் போகக்கூடாத சந்துகளில் தட்டுத் தடுமாறிப் போய்விட்டால் இதே கோரமான காட்சிதான். நல்லோர் நெஞ்சு படபடக்கும்படியான சம்பவங்கள். இத்தகைய பரிதாபகரமான காட்சிகளை நினைக்கும்போதெல்லாம் சமூகத்தின் நெஞ்சு துடிக்க வேண்டும். நம் படபடப்பு கதையில் காணும் வாலிபனுடைய படபடப்போடு ஒன்றாய்க் கலக்கும். உலகத்தின் வறுமையையும் கசப்பையும் காட்ட இந்த ஒரு காட்சி போதும். உலகத்தை வாட்டுகிற வறுமைத் தீ ஆத்ம குணங்களையெல்லாம் எரித்து மனிதன் உள்ளத்தைச் சுடுகாடாக்கிவிடுகிறது. பொன்னகரத்திலும் இதே செய்தி. வறுமையிலே தன்னுடைய கற்பை விற்றுப் புருஷனுக்குக் கஞ்சி வார்க்கிறாள் ஓர் ஏழை ஸ்திரீ. கதையின் முடிவு இதுதான்:

இருவரும் இருளில் மறைகிறார்கள். அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்துவிட்டாள். ஆம், புருஷனுக்குப் பால் கஞ்சி வார்க்கத்தான். என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே, இதுதானய்யா பொன்னகரம்!

இந்தக் கதையில் வருகிற அம்மாளுவை நினைக்கிறபொழுது விக்டர் ஹியுகோ (Victor Hugo) சிருஷ்டித்த பாண்டைன் (Fantine) என்ற பெண்ணின் ஞாபகம் வருகிறது.

'காலனும் கிழவியும்' என்ற கதை பயங்கரமான ஒரு ஹாஸ்ய ரஸம் தோய்ந்தது. கிழவிக்குத்தான் வெற்றி. அவள் வெற்றிச் சிரிப்பு நம் செவியில்கூட விழுகிறது. யமனிடம் கிழவி கர்ச்சிக்கிறாள்:

உன்னாலே என் உசிரெத்தானே எடுத்துக்கிட்டுப் போக முடியும்? இந்த உடலைக்கூடத் தூக்கிட்டுப் போவ உனக்குத் தெறமையிருக்கா? யோசிச்சுப் பாரு. ஒண்ணெ வேறெயா மாத்த முடியும். உன்னாலே அழிக்க முடியுமா?

'ஞானக் குகை' என்ற கதையில் ஓர் ஊமைக்கு ஞானம் வந்த வரலாறு கூறப்படுகிறது. திடீரென ஆயிரம் தீ நாக்குகளாக எழுந்த அகண்ட ஞானத் தீச்சுடரைப் பையன் தேகம் தாங்கவில்லை. கருகிச் சாம்பலாகிவிடுகிறான் என்று நாம் ஊகிக்கிறோம். ஆனால் அப்பையனுடைய ஊரார்களுக்கு இச்செய்தி ஓர் ஆச்சரியம், ஒரு புதிர். ஞானம் உதயமாகும் ஸ்தலம் ஒரு மலையென்று சிருஷ்டித்தது மிகவும் பொருத்தமே. எங்கே அமைதியும் அன்பும் கொஞ்சுகின்றனவோ அங்கே தான் ஞானமுண்டாகிறது மனிதனுக்கு.

'சிற்பியின் நரக'த்தில் கலையின் தத்துவம் விளங்குகிறது. இலக்கியமும் சிற்பமும் இரு வேறு கலைகளாயினும் இலக்கிய ஆசிரியரும் சிற்பியும் ஒன்றுபோலவே விளங்குகிறார்கள். இருவரும் தத்தம் அநுபவத்தை வெளியிடுகிறார்கள். இலக்கிய ஆசிரியர் கவிதை, கதை முதலியவற்றின் மூலமாயும், சிற்பி சித்திரம் அல்லது சிலை மூலமாயும் தாம் பெற்ற அநுபவத்தை உலகிற்கு வழங்குகிறார்கள். ஆசிரியர் பாஷையைக் கருவியாகவும், சிற்பி துணி, கல் அல்லது உலோகத்தைக் கருவியாகவும் உபயோகப்படுத்தினாலும் அவர்களுக்குள் ஒருமைப்பாடு இருக்கிறது. இக்காரணத்தாலேயே கவிதை 'பேகஞ் சிலை' என்றும், சிலை 'மோனக் கவிதை' என்றும் சொல்லப்படுகின்றன. ஆசிரியர், சிற்பி இருவருடைய படைப்புக்களும் அவர்கள் பெற்ற அநுபலங்களை நமக்கு அப்படியே கொடுக்கின்றன. நாமும் அதே அனுபவங்களை அவர்களுடைய உணர்ச்சியிலேயே தோய்ந்து அநுபவிக்க வேண்டும் என்பதுதானே அந்தச் சிருஷ்டியின் ரகசியம். இதைவிட்டு, ஓர் உயிர்ச் சித்திரக் கதையையோ அல்லது அற்புதச் சிற்பத்தையோ சைத்திரிகனின் மனத்திற்கு வேறுபட ஜனங்கள் பிரயோகித்தால் அதைவிட அவனுக்கு வேறு நரகம் வேண்டாம். கலையைப் படைத்தவனின் நோக்கத்திலிருந்து மாறுபட்டு அதை இழிவான நிலையில் உபயோகித்தாலும், மேல் நிலையில் உபயோகித்தாலும் அவனுக்கு ஒன்றுதான். கலையின் லட்சியம் மோட்சங்கூட இல்லை.

சிற்பியின் கனவில் தோன்றும் சாயைகள் இங்கு நோக்கத்தக்கன:

அந்தகார வாசலில் சாயைகள்போல் உருவங்கள் குனிந்தபடி வருகின்றன; குனிந்தபடி வணங்குகின்றன. 'எனக்கு மோட்சம்!' 'எனக்கு மோட்சம்!' என்ற எதிரொலிப்பு. அந்தக் கோடிக்கணக்கான சாயைகளின் கூட்டத்தில் ஒருவராது சிலையை ஏறிட்டுப் பார்க்கவில்லை.

இப்படியே தினமும்....

இந்தக் கதையில் காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்துச் சூழ்நிலையை நாம் நன்குணர்கிறோம். துறைமுகத்தில் கடலொலியைப் பரிகசிக்கிற பல தேசத்து வியாபாரிகளின் ஆரவாரம் இன்னும் நம் செவியில் ஒலிக்கிறது.

சூழ்நிலையைச் சரிவரக் கதைகளில் கொண்டுவருகிற ஆற்றல் ஆசிரியருக்கு இருக்கிறது. பல இடங்களில் திருநெல்வேலி வேளாளர் வாழ்க்கைச் சித்திரம் அவர்களுடைய நடையுடை பாவனைகளோடு அப்படியே பிரத்தி யட்சமாகிறது. சிறுகதை உலகத்தில் இவர் தகுதியான ஓர் இடம் பெறுவதற்கு 'நினைவுப் பாதை' ஒன்று போதும். வைரவன் பிள்ளை மனைவி வள்ளியம்மை ஆச்சி இறந்துவிடுகிறாள். இரண்டாம் நாள் கிரியை. இன்னும் விடியவில்லை. காலப் பனிமூட்டத்தைத் தாண்டி வைரவன் பிள்ளை மனம் ஒரு கனவு உலகத்தில் திரிகிறது. மணக்கோல் வள்ளியம்மை அவர்முன் நிற்கிறாள். கிரியைச் சங்கு ஊதப்படுகிறது. கனவு கலைகிறது. முன்போலப் பாழ் உலகந்தான்... கதையில் சங்கைக் கொண்டுவருவது ஆசிரியருடைய சாமர்த்தியத்தைக் காட்டுகிறது. வெறும் சங்கின் முழக்கமென்று நீங்கள் இதைக் கருத வேண்டாம். இன்பக் கனவு உலகத்தில் திரியும் மாந்தர்களைப் பயங்கரமான பிரத்தியட்சத்திற்குத் திருப்புகிற உலகத்தின் இரக்கமற்ற ஒலிதான் அது.

'துன்பக் கேணி' ஒரு குறுநாவல் திட்டத்திற்கு வளர்ந்துபோனாலும் அதில் ஒருமை நிற்கிறது. எல்லா நிகழ்ச்சிகளும் சோகப் பூச்சைப் பூசிக் கொண்டு தோன்றுகின்றன.

இக்கதையைப் படிக்கும்பொழுது லவலின் போவிஸ் (Llewelyn Powys) எழுதிய 'கருங்காலியும் தந்த'மும் (Ebony and Ivory) என்ற புத்தகத்திலுள்ள ஒரு நிகழ்ச்சி என் ஞாபகத்திற்கு வருகிறது. கறுப்புக்கு வெள்ளை தந்தது பரங்கிப் புண்தான். அவன் தந்தான் அவன் வாங்கிக்கொண்டான் என்று போவிஸ் கதையை முடிக்கிறார். இந்த முறையில்தான் 'துன்பக் கேணியும் செல்லுகிறது.

மனக்குகை ஓவியங்க'ளில் காணப்படுகிற சித்திரங்கள் ஆசிரியரின் மனக்குகைச் சுவர்களில் வரையப்பட்ட சித்திரங்களென்றே நான் சொல்லுவேன். மனத் தடுமாற்றம், சர்ச்சைகள், பாரமார்த்திக விஷயத்தில் சூனியம், வாழ்வில் நம்பிக்கை-வரட்சி இவைகளைத்தான், சித்திரங்கள் காண்பிக்கின்றன.

சிற்றம்பலமான அவனது உள்ளத்திலே தேவரீர் கழலொலி என்ன நாதத்தை எழுப்புகிறது தெரியுமா?....துன்பம், நம்பிக்கை - வரட்சி, முடிவற்ற சோகம்...

'புதுமைப்பித்தன்' நடையிலே ஆங்கில இலக்கியத்தில் காணப்படும் சொல்லடுக்குகள், உருவகங்கள், வாக்கிய ரசனை தென்பட்டாலும் அந்த இழைகள் இவர் காவியப் பட்டிலே நன்றாய் அழகுபெற நெய்யப்பட்டிருக்கின்றன.

'புதுமைப்பித்தன்' முகம் எனக்குத் தெரியாது. ஆனால் அவர் அகத்தை நான் அறிகிறேன். அவருடைய கதைகள் அவர் உள்ளத்து ரகசியங்களை எனக்குப் பறையடிக்கின்றன.

ஒரு கவியுள்ளம் - சோகத்தினால் சாம்பிய கவியுள்ளம் - வாழ்க்கை முட்களில் விழுந்து இரத்தம் கக்குகிற உள்ளம் - கதைகள் மூலம் பேசுகிறது. இதுதான் நான் கண்டது இந்தக் கதைக் கொத்திலே.

திருவல்லிக்கேணி

ரா. ஸ்ரீ. தேசிகன், எம்.ஏ.

2.2.1940

('புதுமைப்பித்தன் கதைகள்' முன்னுரை)

பதிப்புரை

'புதுமைப்பித்தன்' அவர்களை, தமிழ்நாடு நன்கறியும். அவருடைய எழுத்துக்களைப் பற்றிக் கருத்து வேற்றுமைகள் பல இருக்கலாம். ஆனால், அவைகளை அலட்சியப்படுத்தித் தள்ளிவிடவோ, பொழுதுபோக்கு என்று படித்துவிட்டுத் தூரப்போட்டுவிடவோ முடியாது. அவருடைய கதை எழுதும் பாணியே அலாதி. வட இந்தியாவின் பிரபல நாவலாசிரியர் பிரேம்சந்தைப் போலவே, சமூகத்தின் குறைகளைக் குத்திக் காட்டுவதில் புதுமைப்பித்தனின் எழுத்துக்கள் சக்தியும் கூர்மையும் பெற்று விளங்குகின்றன. இதில் அடங்கியுள்ள எட்டுக் கதைகளும் சமுதாயத்தின் பல பகுதிகளையும் பார்ப்பதற்கு நமக்குத் துணை செய்கின்றன. இதைப் புத்தக உருவில் வெளியிட அனுமதியளித்த ஆசிரியருக்கு எங்கள் நன்றி.

தமிழ்ப் புத்தகாலயம்

('ஆண்மை' பதிப்புரை : 1947)


  1. சூழ்நிலை: சுற்றுச்சார்பு ; Atmosphere
  2. அகத்துறையென்பது காதலை மட்டும் குறிப்பதாக இங்கு கொள்ளப்பட வில்லை. உள்ளத்தின் உணர்ச்சிகள் அனைத்தையும் அது தழுவும்.