புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும்/அன்னை இட்ட தீ
அன்னை இட்ட தீ
முற்றுப்பெறாத நாவல்
புராண இதிகாச காலங்களிலெல்லாம் பல விவகாரங்கள் ரொம்பவும் சுளுவு. எந்தச் சமயத்தில் யார் கட்சியில் சேர்ந்தால் நமக்கு கவலை இல்லை என்னும் யோசனை செய்யவேண்டிய கவலையே கிடையாது. சண்டையோ, போராட்டமோ அல்லது இவ்விரண்டையும்விட சூட்சுமமான மனோசாகர கொந்தளிப்புகளோ - எவையானாலும் அதில் ஒரு கட்சிக்கு தீமை என்று பெயர். அது தோற்கடிக்கப்படும். தர்மம் ஸ்தாபிதமாகும். அந்தக் காலத்தில் வாழ்ந்திருந்தால் லௌகீக, ஆத்மார்த்த தொந்திரவுகள் சற்றுமே கிடையாது. தர்மோத்தாரணத்துக்காக எவனோ ஒருவன் பிறப்பிக்கப்படுவான். நிச்சயமாக அவன் முதுகில் அந்தச் சுமை ஏற்றப்படும். மேலும் அவனை அடையாளம் கண்டுகொள்ளுவதும் லேசு. சகலசம்பன்னனாக, முப்பத்திரெண்டு சாமுத்திரிகா லக்ஷணங்களும் பொருந்தி, வலிமையின் ஹிமாசலமாகவும், சிந்தனைச் சூரியனாகவும் இருப்பான். சந்திர குலத்தில் உதிப்பான் அல்லது சாட்சாத் பிரம தேவனது நெற்றியிலிருந்து பிறப்பான்.
இவனையும் இவனைப் போன்றவர்களுடனுமே கிரந்தவுலகில் பழகிப் பழகி, மண்ணின் நெடியும் வாழ்வின் முடை நாற்றமும் படாதவர்களுக்கும், பிறருடைய பூஜர் வைராக்கியத்தாலோ, க்ஷண சபலத்தாலோ இவ்வுலகில் உந்தித் தள்ளப்பட்டு, பொறுப்பை முதுகில் ஏற்றி, தான் மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ள விரும்பாத நியதிகளுக்கு உடம்பட்டு, வாழ்வு எனவும் விதி எனவும் சமாதானப் பட்டு இற்றுப் போனவர்களுக்கும் இந்த நன்மை - தீமை துவந்த யுத்தத்தின் நெளிவு சுளுவு லேசாகப் பிடிபடுவதில்லை. சத்த சாக்ரத்தையும் உழக்கு வைத்து அளக்கப் புறப்பட்ட கதையாக, புவன ரகசியங்களை நேரடி அனுபவத்தாலேயே ஒப்புக்கொள்ள விரும்புகிறவர்கள் வாழ்வு என்பது பெருக்கல் வாய்ப்பாடின் நியதியைத்தான் கடைப்பிடிக்கிறது என்ற ஆதாரத்தில் சோதனைத் தேட்டத்தில் முற்பட்டு, அப்படியல்ல என்பதை கண்டுபிடிக்க ஆயுள் முழுவதையும் செலவிட்டு உடைபடுகிறார்கள். தவிரவும் க்ஷணப்பித்தமான ஆவேச அனுபூதிக்குள் ஆட்பட்டு, அதையே தன்னுயிராகப் பாவித்து, அந்த உயிர் வளரவே அந்தப் பசியை ஆற்றி வந்தவர்கள், அவர்களது மனோ மண்டலத்துக்கு புறம்பாக, வேறுபாடான அல்லது அதை ஒத்த நிலைகள் உண்டென்பதை ஒப்புக்கொள்ள விரும்பாதிருந்து, முடிவில் உடம்படுகிறவர்கள் இற்று அழிகிறார்கள். அவர்களுக்கு அவர்களே பிரபஞ்சம்; அவர்களது நோக்கே பிரபஞ்ச நியதி.
சங்கரன் முதல் மாட்டு வண்டி ஓட்டும் சங்கையாப் பிள்ளை வரை வேட்கைத் தேட்டத்தாலேயே உயிர் வாழ்கிறார்கள், உயிர் விடுகிறார்கள். புத்தன் முதல் கடைக் கணக்கு குமாஸ்தா பூலையா பிள்ளை வரை, பிறப்பித்து அலைந்து திரியவிட்டு, சோர்ந்து விழுந்தவுடன், தானாக்கி, அவர்களுடன் இரண்டறக் கலந்துவிடும் மண்ணும், யுகம் யுகமாக எழும் மானுட சிற்றலைகள், பேரலைகளின் ஓய்வு அடங்கா விளையாட்டை இரண்டுபட்ட பார்வையில்லாமல் பார்த்து வருகிறது; இனியும் பார்த்து வரும்.
இவர்கள் எல்லாரும் வருகிறார்கள், போகிறார்கள்; பாப புண்ணிய மூட்டைகள் என்ற கற்பித சுமைகளை முதுகு நெளிய சுமக்கிறார்கள். கண்ட பலன் என்ன? அவர்களுக்காயினும் சாவு என்ற விடுதலை ஒன்றிருக்கிறது. ஆனால் அவர்களது சிந்தனைகள், கருத்துக்கள். விகர்ப்பங்கள் எல்லாம் செத்து மடியாமல் அந்தரத்தில் நின்று, பைசாசங்கள் போல அலைந்து திரிந்து வருகின்றன. பிறப்பித்தவன் பொறுப்பை மறந்து சாக, வருகிறவனைப் பிடித்து ஆட்டி, பிரபஞ்சத்தின் நியதிகளுக்கு குறுக்கே வந்து விழுந்து நிலை புரட்டி வேடிக்கை பார்க்கின்றன. மனிதனுடைய சம்பத்து வெறும் சரீர தேவை திருப்திக்காக, சேர்த்து வைத்துவிட்டுப்போன விவகாரம் மட்டுமல்ல. மன வேட்கையின் சாந்திக்காக, குறிப்பிட்ட நிலையில் குறிப்பிட்ட பக்குவத்தில், வாழ்வின் நியதியுடன் ஒன்றி இருப்பதுபோல் தோன்றிய கருத்துக்களுக்கு சாகாவரம் கொடுத்து அவற்றை அலகைகளாக்கி மனித வர்க்கத்தை வேட்டையாடவிட்டுப் போகும் காரியங்களும் சொத்துத்தான். ஓநாய்கள் உடலைத்தான் கிழித்துத் தின்னும். ஆனால் இந்த அலகைகளோ உயிரை உண்ட பினபும் பசியாறாது. பொறுப் பற்ற விதத்தில் குழந்தைகளைப் பெறுவதைவிட பன்மடங்கு அயோக்கியத்தனமானது கருத்துக்களை சிருஷ்டிப்பது.
இந்த அயோக்கியத்தனமான காரியங்களில் இறங்காதுபோனால் மனுஷ சமுதாயத்துக்கு கதி மோட்சம் கிடையாது மனுஷனைக் கொன்றுவிட முடியும்; ஆனால் கருத்துக்களைக் கொல்ல முடியாது. அவசியம் கழிந்தும் அழியாமல் நடமாடும் அந்த அலகைகளின் வலுவை வாங்க வேறு கருத்துக்களை உண்டாக்கிவிட வேண்டும். அவை ஒன்றையொன்று மோதி, பரஸ்பரம் வகித்த தெம்பை நைய வைத்துக்கொண்டு பிறகு இவ்விரண்டும் சேர்ந்து மனித வர்க்கத்தின் மீது பாய, பின்பொரு சாகுபடியும் மோதலும் இப்படியாக வாழ்வை, அனுபவபூர்வமான வாழ்வை, கடலின் ஏற்றவற்றம்போல கொந்தளித்து இடைவிடாமல் குமையச் செய்துகொண்டே இருக்கும். இந்தக் குமைச்சலிலேதான் வாழ்வுக்கு உயிர்நாடி இருக்கிறது; வாழ்வுக்கு பொருள் இருக்கிறது. ஸ்தூலமான, ஆனால் இடைவிடாது மாறிவரும் வாழ்வை, சூட்சுமமான அலகைக் கருத்துகள்தான், ஒரே தரிசன ரீதியில் செல்லுவதாக நம் மனசுக்கு ஒரு நிம்மதியை, தெம்பை, ஒரு சாந்தியைத் தருகிறது. அதனால்தான் கரிகால சோழன் முதல் கருப்பையா வாண்டையார் வரை வந்த ஜன வெள்ளம், ஒருமைத் தன்மை தனக்குள் இருப்பதாக பாவித்துக்கொள்ள ஒரு யோக்கியதை பெறுகிறது. ஆகையால்தான் ஸ்தூலமான வாழ்வை, சூட்சுமமான, கற்பித, சங்கேத் நியதிகளுக்காக திரஸ்காரம் செய்ய மனித வெள்ளம் சம்மதிக்கிறது. இந்த வெள்ளத்தின் உற்பத்தி ஸ்தானம் எது? எங்கே போய் சங்கமுகமாகிறது ? ஜட சாஸ்திரம் என்னதான் நுணுக்கமாக வாதித்தாலும், இது பிரபஞ்ச ரகசியங்களுள் ஒன்று. இது பரம ரகசியமாக இருப்பதினாலேயே வாழ்வில் ஒரு பிடிப்பு இருக்கிறது.
இந்த பரம ரகசியத்தை தெரிந்துகொள்ளுவதற்காக மலைக்கு ஓடுவதிலும் அல்லது வேதி நூல் சோதனைக் கூடத்தை நாடுவதிலும் பிரமாத வித்தியாசம் கிடையாது. 'ஏன்?' 'அப்புறம்?' என்ற இரண்டு கேள்விகளுக்கும் இரண்டிலும் பதில் கிடைக்காது. அதாவது பதில் என ஒப்புக் கொள்ளக் கூடியது கிடைக்காது. ஆனால் அவனவன் மனப்பக்குவப்படி கட்டிவைக்கும் மனக்கோட்டைகளான பதில்களை மனுஷ வெள்ளம் பிரவகித்துச் சென்ற மார்க்கத்தில் இரண்டு பக்கத்திலும் ஒதுங்கிக் கிடப்பதைப் பார்க்கலாம். அவற்றால் மனுஷ பிரவாகத்துக்கு பயன் உண்டா என்பதற்கு நிலையான திருப்தி தரக்கூடிய பதிலைச் சொல்லுவதற்கே முடியாது. ஆகையால் பதில்களில் பொருள் இல்லை. எழுப்பப்படும் கேள்விகள்தான் பிரபஞ்ச ரகசியத்தின் உண்மையான பதில்கள். மனித வரம்பை, நிலையற்ற சாகையில் காணும் நிலையாழத்தை காட்டுவன அவைதான். அவற்றை நாட சிற்றூர் சிற்றூராக அலைய வேண்டாம். மறுகால் மங்கலத்தில் பிடிபடாத பிரபஞ்ச ரகசியம் பிரபஞ்சத்தின் எந்த மூலைக்கு ஓடினாலும் கிடைக்காது. மறுகால்மங்கலம் என்ற மறுகால் நல்லூர் சிற்றூர்தான். வைராக்கிய சிகாமணியின் ஏகாக்கிர சிந்தை போல, தனது சிரத்தை யெல்லாவற்றையும் கவிய வைப்பதற்கு ஒற்றைத் தெருவே போதும் என திருப்தியனடந்தவூர். மனுஷ வெள்ளம் கரை உடைக்காமல் மறுகால் திறந்ததுபோல வாழ்வின் சோபைகளை அப்படியே வடிய விட்டுக் கொண்டு வந்தது போலும். ஜனசங்கி கணக்குப்படி அதை ஊர் என்று சொல்லுவதே உயர்வு நவிர்ச்சி. சேர்மாதேவி திருநெல்வேலி ரஸ்தாவில் மூன்றாவது மைல் கல்லுக்கு வந்து நின்றால், மறுகால்புரத்துக்கு போய்விட முடியும் என்ற நம்பிக்கை நிச்சயமாக ஏற்படும். ரஸ்தாவிலிருந்து கூப்பிடு தூரத்தில் கன்னடியன் கால்வாய் ஓடுகிறது. அதிலிருந்து பிரியும் கிளையின் கரைமேல் நடந்துகொண்டே போனால், நான்கு பக்கத்திலும் பச்சைப்பசேலென்ற வயலுக்கு மத்தியிலே காரைக் கட்டிடமும் ஓலைக் கூரையும் நிறைந்த திரடு தென்படும். அதுதான் மருகால்புரம். அந்தவூரிலிருந்து பார்த்தாலே மேலக்கல்லூரில் ரயில் புறப்பட்டு, புகை கக்கிக்கொண்டு, சேர்மாதேவி நோக்கிப் போவதைப் பார்க்கலாம். தூரத்துப் புகை, வான வளையத்துடன், இரும்பு நாகரிகமும் மறுகால் புரத்துக்கு மதில் அமைப்பது தெரியும். காற்று ஊர்த்திசை அடித்தால் ரயில் ஊதுகுழல் சத்தம் அந்தவூர்க் கெடிகாரம். ஊர் கிராம முனிசிபு பிள்ளை தம் வீட்டு பெட்டகசாலையில் உள்ள பெரிய கடிகாரத்தை திருப்பி வைத்து, மணியடித்து அறிவிக்கும்போது சுமாராகவாவது எண்ணிக்கை வித்தியாசம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுவார். ஜமாபந்திக்கு வந்திருந்த தாசில் ஐயர் ஒருவர், உதய காலத்தில் இவர் வீட்டு கெடிகாரம் பனிரெண்டு அடிப்பதைக் கேட்டுவிட்டு, நடுச் சாமம் என்று நினைத்து படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டு தூங்கிவிட்டு ரயிலைத் தப்பவிட்டதாக சொல்லிக் கொள்ளுவார்கள்.
கிராம முனிஸீப் வேலாயுதம் பிள்ளை கிராமத்துக்கு யோக்கியர்; முடிசூடா மன்னன். அந்த குறுகலான திரடில் 1935 வருஷத்து இந்திய சர்க்கார் சட்டத்தின் தூண். கிழக்கு இந்திய கம்பெனி முதல் சர்வே செய்த காலம் துவங்கி நாளது தேதிவரை அவரது குடும்பமே கிராமத்து முனிசீபு உத்யோகத்தைத் தாங்கிவருகிறது. கணக்க பரம்பரையை அப்படிச் சொல்ல முடியாது. விக்கிரமசிங்கபுரத்து பாப்பு பிள்ளை முதல், வீரவநல்லூர் கணக்க முதலியார் குடும்பமும், இடையிடையே உசேனி ராவுத்தர் வாரீசுகளும் நிர்வகித்து வந்தன. இப்பொழுது இருந்து வருபவர் முதலியார். அவரது ஓநாய்ப் பசியே கிராமத்துக்குள் அற்பத்துக்கு அற்பமான காரியாதிகளில் அவரை அழைத்துச் சென்றது. "அந்த விடியாமூஞ்சியை விரட்டிவிட்டு, உசேனிவாப்பா பேரனைக் கொண்டு வந்து வைத்தாலாவது ஊரு யோக்கியமாக இருக்கும்" என்பது வேலாயுதம் பிள்ளை ஒளிக்காமல் விளம்பும் வார்த்தை.
தலையாரித் தேவன் குடும்பமும் கிராம முனிசீபுடையது போல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஜண்டா அந்தத் திரடில் பறக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே அந்த அலுவலை மேற்கொண்டு வருகிறது. சட்டப்படி அவனுடைய குடும்பம் ஊரின் எல்கைக்கு அப்பால் வேற்றூர்ச் சரகத்தில் இருந்தாலும், நெடுங்காலத்து வளமுறையால் அவன் பேருக்கு இருக்கும் காலிக் குடிசை அவன் வழக்கமாக குடியிருக்கும் இடமாக, வெளியூர்களிலிருந்து வரும் உத்யோகஸ்தர்களுக்கும், சர்க்கார் சட்டத்துக்கும், அவன் பந்தகப்பட்டிருப்பதுபோல காட்டியது. புலிக்குட்டி வேலையா என்றால் மூன்று தலைமுறைகளுக்கு முந்தி, அதாவது முதல் சர்வே நடக்கிற காலத்தில், தர்மத்துக்கும் சொல்லுக்கும் கட்டுப்பட்டு கொள்ளைத் தொழிலை ஜீவனோபாயமாக நடத்தி வந்த சிங்கம். அவனிடம் எதை வேண்டுமானாலும் தைரியமாக ஒப்படைத்து பார்த்துக் கொள்ளும்படி சொல்லலாம். ஈ, காக்கா நாடாமல் காப்பான். மனசில் கொஞ்சம் கடுப்பு ஏறிவிட்டாலோ, அவ்வளவுதான். சுட்டு சுடுகாடாக்கி எருக்கு விதைத்து விடுவான். கட்டபொம்மு சண்டையில், வெள்ளைக்காரர் மேலிருந்த குரோதத்தால் அவன் படையில் சேர்ந்து பிறகு, அந்த ஆசை சிதறியதும் மறுகால்நல்லூர் கிராமத்து தலையாரி ஆனானாம். அவனைப் பற்றி கதை கதையாகச் சொல்லுவார்கள். அத்தனையும் வேதம்போல அந்த பிராந்தியத்து மறக்குலத்துக்கு எழுதாக் கிளவி. அவன் கிளை வீரன்முடிதாங்கி, தன் வம்சத்தில், அந்தச் சிங்கம் உதிக்க வேண்டும் என்று கொண்டையன்கோட்டையானான தன் மகனுக்கு வீரம்முடிதாங்கிப் பெண்ணைப் பார்த்து கலியாணம் செய்துவைத்தானாம். கடைசிக் காலத்தில் அவன் சாவும் ரண களத்தில்தான். முதல் சர்வே அல்லவா. வரி வசூல் தகராறு ஏற்பட்டு, களத்து மேட்டில் கொடுக்கரிவாளுக்கு இரையானான். பெயரனைப் பார்த்து தன் ரத்தத்தை சிசுவின் நெற்றில் பொட்டிடும்வரை எமனை எட்ட நில் என்று சொன்னவன் புலிக்குட்டி வேலையா. ரத்தப் பொட்டு இட்டுக் கொண்ட சிசுதான் இப்போது தலையாரி உத்யோகம் பார்க்கும் சின்னக்குட்டி வேலையா. இவனும் ரணக் காட்டேரிதான். கிரிமினல் புரொஸிஜர் கோடும், குற்ற பரம்பரை சட்டமும், கிராம முனிஸீப் வேலாயுதம் பிள்ளையின் சகவாசமும் அவனை வேறு மனிதனாக்கியது. கோபத்தில் சற்று புருவம் நெறிந்தாலே எதிரே நிற்பவர்கள் சுருண்டு விழுந்து விடுவார்கள். ஆனால் பரம சாது. செவிட்டில் அடித்துவிட்டாலும், 'சவம் புத்தியில்லாக் களுதை' என்று உதறித் தள்ளி பொருட்படுத்த மாட்டான். தன் பலத்தில் அவ்வளவு நம்பிக்கை. எதுவும் பிரமாதமாகத் தெரியாது. ஆனால் தர்மப்பிசகு, அனியாயம் என்று அவனுக்கு ஏதாவது தென்பட்டால் யாரிடமும் அதைச் சொல்லத் தயங்க மாட்டான். "யாரானால் என்ன, இந்த உடம்பு மனுசனுக்கு கட்டுப்படாது, தருமத்துக்குத்தான் கட்டுப்படும்" என்று அடிக்கடி சொல்லுவான். ஆனால் அவன் தருமம் என்று கருதியுள்ள விஷயங்களின் பட்டியல் ரொமபவும் சுருக்கம். அந்த சுருக்கமான தர்ம பீடகம் அவனை அறுபத்தியைந்து வயசுவரை கவுரவத்துடன் ஆயுசைக் கழித்துவிட உபகாரமாக இருந்தது. அவனுக்கு ஒரு மகன் உண்டு. அவன் பெயர் கருப்பையா. வயசு பதினெட்டுதான்; என்றாலும் பதினெட்டும் படித்துத் தேறி விட்டான். நிலையற்ற தேட்டம். கண் நிறைந்த அழகு, 'கருப்பையாத் தேவர்' என்றே எல்லாரும் தன்னைக் கூப்பிடவேண்டும் எனற மிடுக்கு, நெஞ்சிலே எங்கோ பதுங்கிக் கிடக்கும் நல்ல குணம் - இதுதான் கருப்பையா. "கருப்பையா இல்லாத சண்டை ஒரு சண்டையா" என்பார்கள் அவனது கூட்டாளிகள். சின்னக்குட்டி வேலையாவுக்கு மட்டும், அவனை எப்போதும், "ஏ கருப்பையா, ஐயா, கரியையா, இங்கே வாலே மூதி" என்று அழைப்பதில் ஒரு ஆத்ம நிறைவு. "வெள்ளாளன்கூட நடந்தா, வெள்ளாட்டுப் புத்திதான் வரும்; எங்கப்பென் சாதி மறவனா காங்கலெ" என்று குறைபட்டுக் கொள்ளுவான் கருப்பையா அதாவது தகப்பனார் இல்லாத நேரம் பார்த்து.
இத்தனை பேரும் மறுகால்நல்லூர் கிராமத்து அட்டதிக்குக் காவலர்கள், நன்மையோ, தீமையோ முதலில் அவர்களை நாடாமல் அவ்வூருக்குள் புகாது. இவர்களைத் தவிர அவ்வூரில் வேறு பலரும் உண்டு. அவ்வளவும் சைவ வேளாள குல திலகங்கள். ஊரில் இருபது வீடுதான் என்றாலும் இருபத்தியெட்டுவிதமான கட்சிப் பிணக்குகள் உண்டு. அத்தனை சண்டையும் ஊரில் பிணம் விழுந்த அன்று மயானக் கரையில் கொடிக்கட்டி, குருக்ஷேத்திர யுத்தமாக நடக்கும். பிறகு மறுநாள், அவ்வளவு சிறல்களும் எங்குதான் போய் பதுங்குமோ. அவ்வூர் இருபது குடும்பங்களையும் இருபது எரிமலைகளுக்கு ஒப்பிடலாம். நிரந்தரமாக புகைந்துகொண்டு, பிணம் விழுந்த அன்று நெருப்பைக் கக்கும் எரிமலைகள் ஏதோ அஸ்தினாபுரம் பறிபோய் விடுகிறதே என்ற 'ஆங்காரத்தில்' பிறந்த சண்டை அல்ல; அடுத்த வீட்டு குத்துவிளக்குத் திரி சற்று நின்று எரிகிறதே என்ற ஆத்திரந்தான். மேல வீட்டு பலவேசம் பிள்ளை புஞ்சைக் காட்டில் எள்ளோ மிளகு செடியோ பயிரிட்டுவிட்டால், எதிர் சரகத்து சுடலையா பிள்ளைக்கு உடம்பெல்லாம் மிளகாயை அறைத்து வாரி அப்பினதுபோல இருக்கும். அதே சுடலையா பிள்ளை, குடிமகன் பெட்டியை சற்று சடுதியில் அடுத்து அடுத்து வைத்துக்கொண்டு விட்டால், "ஏதேது பிள்ளைவாளுக்கு எளவட்டம் திரும்புதாப்பிலே இருக்கு; அதான் வாரம் தவறாம சந்தைக்கு போரேன்ணு டவுணுக்கு பொழுதுசாயப் போயி, விடியு முன்னே வர்றாஹ" என்ற பேச்சு, மாலை நேர அனுட்டானாதிகளுடன் உபாசனை செய்யப்படும். வளைய வளைய வந்தாலும் மறுகால்மங்கலத்து எல்லையைத் தாண்டாத மனசு பிறகு எப்படி இருக்கும். சட்டம், நியாயம், நீதி, பொய் என்பன போன்ற வார்த்தைகளுக்கு பொருளே இல்லாத பிராந்தியங்கள், சட்டம் ஒழுங்கு என்ற அஸ்திவாரத்தின்மீது சூரியன் அஸ்தமனமாகாத சாம்ராஜ்யத்தில் கிராமங்கள்தான். பட்டணங்களில் தெரிந்து பொய் சொல்லுவார்கள்; வஞ்சனை செய்வார்கள்; கோவில் கர்ப்பக்கிரகத்து தத்துவ ரூபத்தையே அடைமானம் செய்து வைப்பார்கள்; அவை எல்லாம் தெரிந்து செய்யும் நாகரிக சின்னங்கள். கிராமங்களிலே தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் ஏலாத்தன்மையினாலே அதே காரியங்களை செய்வதால் அது நாகரிக சின்னமாக அமையாது. அதனால்தான் நாட்டுப்புறத்தான் என்றால் ஒரு உதாசீனம்.
மறுகால்புரமங்கலத்து திசைக் காவலர்கள் போக, சாலாச்சி என்ற விசையாநல்லூர் ஆச்சி என்ற விதவை, கொளும்பு ராமசுப்பிரமணிய பிள்ளை என்ற தாரமிழந்த தனிக்கோட்டை ராஜா, பலசரக்குக்கடை தேரூர் உமைதாணு பிள்ளை என்ற நாஞ்சில் நாட்டு வேளாளர், பண்டாரம் பிள்ளை என்ற பேராச்சி சன்னிதியின் ஆஸ்தான பூசாரி, சிவக்கொழுந்து தேசிகர் என்ற சித்தாந்த கோளரி ஆகியோர் தம்மை அவ்வூர் பூர்வ குடிகள் என்று பாவித்து, நிலம் வாங்கியதாலோ அல்லது கொள்ளி முடிந்த சொத்து கிட்டியதாலோ அல்லது மனைவி வழி சொத்துத் தொந்தத்தினாலோ அந்தவூருக்கு வந்து குடியிருப்பவர்களை சற்று ஒரு குன்றிமணி எடை அந்தஸ்து குறைந்தவர்களாக மதிப்பார்கள். ஆனால், புதுக்குடிகளோ இவர்களை சற்றும் வகைவைப்பதில்லை. உழைக்கவோ பிழைக்கவோ தெரியாத ஊமைச் சனங்கள் என்று பரிதாபப்படுவார்கள்.
அந்தவூருக்கு புதுக்குடிகள் இப்போது இரண்டு பேர்தான். இரண்டு பேரும் இரண்டு விதமானவர்கள். ஒன்று நொடிந்து சிதறிய குடும்பத்தின் சிறு சிதல். மற்றது, வாழ்வில் இருபத்தியைந்து வருஷங்கள் யூனியன் ஜாக் நிழலிலே சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வந்த ஒரு அன்னிய ஸ்தாபனத்தின் வரி வசூல் இலாகா உத்யோகஸ்தராக, உத்தரவு, மேலுத்தரவு, இடமாற்றம், ஜமாபந்தி என்ற எல்லைக்குள்ளாக மனிதர் வேறு உத்யோகஸ்தர்கள் வேறு என நினைத்து வாழ்ந்து விட்டு, அந்தப் பழக்க வாசனையை மறக்க முடியாமல் தனக்கு சற்றும் பொருளற்றுத் தெரியும் உலகத்துடன் அளவளாவ மறுத்து ரெவின்யூ ஷரத்துகளுக்குப் பதிலாக, அதே அந்தஸ்தில் தேவாரப் பதிகங்களை வைத்து அதைக் கொண்டு உத்யோகம் நடத்தி வரும் ஆலம் உகந்த பெருமாள் பிள்ளை என்ற ஏ. யு. பெருமாள் பிள்ளை பென்ஷன் தாசில்தார்.
அவருக்கு நோய்வாய்ப்பட்ட மனைவி; சென்னை சர்வகலாசாலையிடம் பி. ஏ. பட்டம் பெற்ற பிறகும், கற்ற படிப்பின்மீது வாஸ்தவமான ரசனைப் பேறு கிட்டிய மகன். தாசில் பிள்ளையுடன் இருபத்தியைந்து வருஷங்கள் தென்னார்க்காடு ஜில்லாவை வளைய வளைய வந்ததினால் குடல் சம்பந்தமான, வைத்தியர்களுக்கே பிடிபடாத ஒரு நோய் அந்த அம்மாளை சென்ற பத்து வருஷங்களாக வாட்டி வருகிறது. டாக்டர்கள் எத்தனையோ பேர், எத்தனையோ விதமான சிகிச்சை எல்லாம் செய்து பார்த்தும் புலப்படாத நோய் அது. "உன் உடம்புக்கு என்ன?" எனறால் "எல்லாம் மனக்கவலைதான்; நோயும் நொடியும் மனுசரைப் படுக்க வைத்துவிடுமா" என்று சொல்லி விடுவாள். "உனக்கென்னமா கவலை" என்றால் அவளுடைய உதட்டிலே ஒரு பரிதாபகரமான புன்சிரிப்பு நெளிந்து மறையும். உலகத்தின் துயரங்கள் எல்லாம் அந்தச் சிரிப்பில் நெளிந்து மறைவது போல இருக்கும் அப்போது அவளைப் பார்ப்பவர்களுக்கு.
திடீரென்று ஆரோக்கியமாக இருந்தவனுக்கு நோய் வந்தால்தான் குடும்பத்தின் நிதானத்தன்மை கலைந்து, மனது, படுத்துக் கிடப்பவரை வளைய வந்து வட்டமிடும். நிரந்தர நோயாளியாக பாயும் படுக்கையுமாகிவிட்டால் தினம் பார்வையில் எதிர்ப்படும் தட்டுமுட்டு சாமானுக்கும் நோயாளிக்கும் பரம வித்தியாசம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இருக்காது. படுத்திருப்பவர் பற்றி கவலை இருக்காது என்பதில்லை. படுத்திருப்பவர் பற்றி சதா நேரமும் சிந்தனை இருக்காது.
தாசில்தாரிணி மயிலம்மையின் நிலைமையும் அப்படித்தான். வாரத்துக்கு இரண்டு தடவை சேர்மாதேவி டாக்டர் வீரபத்திர பிள்ளை வந்துவிட்டுப் போவார். பிள்ளையவர்களுக்கு ஹிந்து பத்திரிகை வருவது போல இருபத்திநான்கு மணி நேரத்துக்கு ஒரு தடவை, "மூன்று வேளைக்கு; சாப்பிடும்போது குலுக்கிச் சாப்பிடவும்" என்ற உபரி யோசனைகளுடன் மருந்துப் பாட்டில் வரும். ஹிந்துப் பத்திரிகை கவர் திறக்கப்படாமல் கிடப்பதுபோல மருந்துப் பாட்டிலும் கார்க் திறக்கப்படாமல் இருந்து மறுநாள் மருந்துக்கு ஆள் போகும்போது பாட்டில் சுத்தமாக கழுவி அனுப்பப்படும். மருந்து வரும், பத்திரிகை வரும், வசந்தம் வரும், வேனில் வரும், மாரி, வாடை எல்லாம் மாறி மாறி மாறி வந்துகொண்டிருக்கும்; டாக்டர் வீரபத்திர பிள்ளை மருந்து வந்துகொண்டிருக்கும். மயிலம்மை நோய் மட்டும் இருந்துவரும்.
ஆலமுகந்தவரின் ஏக புத்திரன் சுப்பிரமணியம் பி. ஏ., தேறும்வரை கஷ்டம் என்பது என்னவென்று தெரியாத வாழ்வு. பாட புஸ்தகங்கள், காலேஜ் வாசகசாலை புஸ்தகங்கள், நல்ல உடை, நேரத்துக்கு சாப்பாடு, இலலையே என்று ஏங்க வேண்டாத நிலையில் பணம் எல்லாம் அவனுடைய மனப்பக்குவத்துக்கு உற்ற துணையாக இருந்தது. இல்லை என்ற வார்த்தை அவன் வாயில் வராது. காலேஜில் அவன் படித்து வரும்போது அவனுடைய நிழலில் ஒதுங்கி, வறுமையின் நெடி வாட்டாமல் தப்ப முயன்ற சகபாடிகள் பலர் உண்டு. யாரிடமும் லேசில் பழக மாட்டான்; பழக்கம் ஏற்பட்டால் லேசில் ஒடிபடுவதற்கு அவன் இடம் கொடுக்கவும மாட்டான். தாயார் என்றால் அபார வாஞ்சை. தங்கை கிடையாது; ஆகையால பெண்கள் மனசை லகுவில் புரிந்து கொள்ளும் முதிர்ச்சி அவனிடம் இல்லை. நாட்டு மண்ணில் பிறக்காத ஜூலியட்டுகளும், ரோஸலின்டுகளும் யுவதி என்ற வார்த்தைக்கு அவன் மனசில் பொருள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். துன்பமே அவன்மீது படியாததினால், எதிராளி சொல்லும் வார்த்தைக்கு மாற்று உரைத்துப் பார்க்கும் குணம் அல்லது (கல்மிஷம்) அவனிடம் கிடையாது.
பூர்ண பொறுப்பையும் உணராது தேச சேவை, தேசபக்தி என்ற அக்னி லக்ஷியங்களை கனவுக் கண் கொண்டு பார்த்து, அவற்றை சந்திரகாந்தக் கல் மண்டபங்களாக நினைத்தான். வெள்ளைக்கார பர்க்குகளும், பெயன்களும், கிபன்களும், மில்களும் சமுத்திர கோஷம் போன்ற சொல்லடுக்குகளால் தன் மனசைக் கவர்ந்து அதுவே தர்மம் என்று இவனைக் கருதும்படி செய்திருந் தாலும், அவர்களது உபதேசங்களைப் பொறுத்தவரை, இவன், ஏகலைவன், படித்ததற்காக கட்டை விரலை தானம் கொடுக்க வேண்டியவன்தான் என்பதை அறியமாட்டான். அகில இந்திய காங்கிரஸ் வருஷா வருஷம் கூடுவதும், லக்ஷிய புருஷர்கள், லக்ஷிய புருஷத்தனத்துடன் பேசுவதும், லக்ஷிய பௌருஷத்துடன் செயலில் இறங்குவதும், சிறைப்படுவதும் அவனது மனசில் பெருங்கோயிலைக் கட்டியிருந்தது. அவன் பட்டணத்தில் படித்திருந்தானாகில், இந்தக் கனவு எல்லாம் முளையிலேயே தீய்ந்து வடுத்தெரியாமல் மாற்றி விடுவதற்கு அரிய சாதனங்கள் பலவுண்டு. அழகான உடைகள் அணிந்து அலங்காரமாக பேசும் நாரீமணிகளை கல்வித் தோழர்களாகப் பெற்றால் அதற்கேற்ற அந்தஸ்துடன் இருக்க ஆசைப்பட்டிருப்பான்; அல்லது சென்னை சர்வகலாசாலை வாசக சாலையில் வெள்ளைக்காரரின் மேல்நாட்டு கலாச்சார பிரகாசத்தின் மகத்துவம் வெளிப்பட்டிருக்கும். "அப்பா உனக்கு சுதந்திரத்தின் மகிமைகளைப் பற்றிப் போதிப்போம்; ஆனால் அவற்றை உனக்கு என்று எண்ணி மதி மயங்கிவிடாதே" என்று அங்கு ஒரு கற்சிலை நந்திகேசுவரர்போல, புஸ்தக அலமாரிகளை நாடுமுன் நம்மை வழிமறிக்கிறது. அதையாவது பார்த்து தெரிந்துகொண்டிருப்பான். இவ்விரண்டு செல்வங்களும் வாய்க்கப் பெறாததினால், அவன் தேசபக்தியில் ஏதோ உண்டு என்று கோழிக் கனவு கண்டுகொண்டிருந்தான். நாம் கத்திரித் தோட்டம் போட்டால், கத்திரிச் செடிகளுக்கு சுய நிர்ணய உரிமை நாம் கொடுப்போமா. கொடுத்தால் நம் வீட்டு சாம்பாரில் கத்திரிக்காய் மணக்குமா? இந்த மாதிரி இந்தியாவும் வெள்ளைக்காரனுடைய கத்திரித் தோட்டமாக இருக்கிறது. அதற்காக வெள்ளைக்காரனை அரக்கன், பேய், பிசாசு, பாபத்தின் அவதாரம் என்று சொல்லுவது அபச்சாரம் என்பது தெரிந்திருக்கும். சுப்பிரமணியம் மனோவுலகத்தில் இரண்டுவிதமான வெள்ளைக்காரர்கள் குடியிருந்தார்கள்; தொடர்பற்று தனித்து அக்ரஹாரமும் சேரியும் போல தனித்தனியாகப் பிரிந்து வாழ்ந்தார்கள். இவர்களிடை இருந்த ஏகத்தன்மையைப் புரிந்துகொள்ள சுப்பிரமணியனுக்கு அனுபவமும் இல்லை வழி காட்டுவோரும் கிடையாது.
சிறுவயசில் டவாலிச் சேவகன், ஆபிஸ் பெட்டி, ஜரிகைத் தலைப்பாகை முதலியவற்றையெல்லாம் வைத்து தகப்பனார்மீது இருந்து வந்த மதிப்பு பெருமையெல்லாம், எப்போதோ கண்ட சொப்பனமாக அடிபட்டு போய்விட்டது. காலேஜ் படிப்பு ஏற ஏற அவர்மீது சாதாரணமாக இருக்கவேண்டிய வாஞ்சையும், கொடுக்கவேண்டிய கவுரவமுமே படிப்படியாக அஸ்தமித்து, அவரைப் பற்றி நினைக்கும் போதும் பேசும்போதும் அவமானமே மிஞ்சி நின்றது. மாதம் ஒரு தரம் பென்ஷன் வாங்குவதற்கு, தமது பழைய உருமால்களையும் ஜரிகைத் தலைப் பாகைகளையும் உதறிக் கட்டிக்கொண்டு மாட்டு வண்டியில் ஆரோகணித்துச் சென்று, பதினோரு மைல் தொலைவுள்ள திருநெல்வேலி ஜங்ஷனுக்கு இரண்டாவது வகுப்பு ரயில் வண்டியில் ஏறி உட்கார்ந்து படாடோபம் பாக்கியில்லாமல் காட்டிக் கொண்டு கொக்கிரகுளம் கலெக்டர் ஆபீசில் சென்று நான் இன்னும் உயிரோடிருக்கிறேன், எனக்கு உபகாரச் சம்பளம் கொடு என்று அழகும், எடுப்பும் குடியோடிப் போய் மாமாங்கம் பல கழிந்தும் ஜீவனாம்சம் கேட்டுத் தேடிவரும் வைப்பாட்டி போல, கொடுக்கும் சம்பாவணையை வாங்கிக்கொண்டு திரும்புவதும், பிறகு அந்த ஒரு நாள் போக மற்றும் மாதப் பொழுதை ஞானசம்பந்தரின் தேவாரப் படிப்பிலும், அது ஒழிந்த வேளைகளில் தன்னை சம அந்தஸ்தில் சந்திக்க வருவோரிடமும் கச்சேரி நடத்தியும் வாழ்வே தெரியாத இளங்கன்றுக்கு மனசில் அரோசிகத்தை எழுப்புவது அதிசயமில்லை. அவர் பென்ஷனாகியும் கச்சேரி பண்ணும் விந்தைகளுக்கு உடம்பட்டு வரும் கிராமத்து ஊமைச் சனங்களைக் காணும்போது தான் ஆத்திரம் அகாதமாக வரும்.முன்போ படிக்கப் போகிறேன் என்று வருஷத்தில் குறைந்த பட்ச நாட்களில் மட்டும் அவருடன் ஒரே வீட்டில் இருந்து தப்பித்துக் கொள்ள முடிந்தது. படிப்போ முடிந்துவிட்டது. அம்மாதிரி இனிமேல் வீட்டைவிட்டு தப்பி ஓடுவதற்கு தகுந்த வியாஜமே கிடையாது.
மனக்குமுறல்களையும் பொறுமல்களையும் உன்னிப்பாய் தெரிந்து கொண்டு, தலை சுற்றி ஆடி, காற்றோடு பொறுமும் பனை விடலிகளே சரணாகதி. காற்றும் ஓசையும் நினைப்பை தடை செய்தாலும் நிம்மதியைத் தந்தது.
ஆலம் உகந்த பெருமாள் பிள்ளைக்கு இவனைப் பற்றித் தெரியாது. தான் கண்மூடுமுன்பே இவன் பி. ஏ. பாஸ் செய்துவிட்டான்; மேலும் செர்விஸ் கமிஷன் பரிட்சை என்ற திட்டம் அமுலுக்கு வருவதற்கு ஒரு வருஷத்துக்கு முன்பே இவன் பாஸ் செய்துவிட்டான். தம்மை உத்யோக காலத்தில் ஆதரித்த டிவிஷனல் ஆபிஸர்கள் இப்பொழுது ஜில்லாக் கலெக்டர்களாக இருக்கிறார்கள். இவனைக் கொண்டுபோய் ரெவின்யு இலாகாவில் தள்ளிவிட்டால், மறுபடியும் இருபத்தியைந்து வருஷங்கள் வரை தம் குடும்பத்தின் ஜீவனோபாய பிரசினை தீர்ந்து போகும் என்று நினைத்துக் கொண்டிருந்தார். சுப்பிரமணி யனை அவர் ஒரு குட்டி தாசில்தாராக அந்த உத்தியோகத்துக்கு தனது பட்டத்து இளவரசனாக நினைத்தார். அவன் அப்படி நினைக்க வில்லை.
❍❍
"சுப்பையா?" என்றார் ஆலம் உகந்த பெருமாள் பிள்ளை.
"என்னப்பா?" என்றுகொண்டே கையிலிருந்த புஸ்தகத்தை விரலுக்கு இடையில் மடக்கிக்கொண்டு தான் உட்கார்ந்திருந்த அறையிலிருந்து வெளியே வந்தான் சுப்பிரமணியம்.
"அந்த கொடியிலிருக்கும் துண்டை எடு; நாளைக்கு நான் திருநெல்வேலிக்கு போறப்ப கூட வா; இப்போது புதுசா வந்திருக்கிற கலெக்டர் யார் தெரியுமா; மொதல் மொதல், ஐ. ஸி. எஸ். பாஸ் பண்ணிவிட்டு, டிவிஷனலாபீஸராக வந்தப்போ, எங்கிட்டத்தான் வேலை படிச்சான்; ரொம்பக் கெட்டிக்காரன்; நான் சொன்னால் கேட்பான்" என்றார் ஆலமுகந்த பெருமாள் பிள்ளை.
"எனக்கு உத்யோகம் சம்பாதிச்சுக் கொடுக்க, என்னைக் கூட்டிக் கொண்டு போவதாக உத்தேசமோ" என்று கொஞ்சம் மிடுக்காகக் கேட்டான் சுப்பிரமணியம்.
துண்டைக் கொண்டு முகத்தையும் கைகளையும் துடைத்துக் கொண்டே, "பின்ன என்ன மறுகால்மங்கலத்தில் மாடு மேய்க்கிற உத்தேசமோ" என்று கூறி உமிழ்ந்துவிட்டு மூக்காலும் வாயாலும் கேட்டார்.
"அவசியப்பட்டால் அதில் என்ன கேவலம்" என்றான் சுப்பையா."இதைப் பத்து வருஷத்துக்கு முந்தியே சொல்லியிருக்கக்கூடாதா. உன் பேருக்கு பாங்கியிலே ஒரு ஐயாயிரமாவது மிஞ்சியிருக்கும்; அதைக் கொண்டு எத்தனை ஜோடி மாடு வாங்கலாம்."
"நீ கேட்டிருந்தால் சொல்லியிருப்பேன்."
"இப்போதான் என்ன குடி முழுகிப் போச்சு; ஐயாவுக்கு நீங்கள் கொடுத்த ரெண்டாயிரத்தை செல் எழுதின மாதிரி எழுதிவிட்டால் போகிறது" என்று சொல்லிக்கொண்டே தன் அறைக்குள் நுழைந்து விட்டான் சுப்பையா.
பெருமாள் பிள்ளை அவன் போன திசையையே கொஞ்சம் நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். நிதானமாகத் திரும்பி வெளி வாசலுக்கு வந்து தெருவைப் பார்த்துக்கொண்டு சற்று நேரம் நின்றார். எதிர் வீட்டுப் பாட்டி தூத்தூ என்று துப்பி உடம்பை வில்லாக வளைத்துக் கொண்டு தலையை வேறு திசை திருப்ப முயற்சித்துக் கொண்டிருந்த குழந்தைக்கு வாயில் பலவந்தமாக சோற்றையூட்டிக் கொண்டிருந்தாள். அவள் நின்ற குறட்டருகில் இரண்டு சொறி நாய்களும் ஒரு பசுவும் காலி எச்சில் இலைக்காக வாதம் நடத்திக்கொண்டிருந்தன. மோட்டுக் காக்காய், திடீரென்று பாய்ந்து கிண்ணத்து நெய்ச் சோற்றில் ஒரு கவளம் அடித்துக்கொண்டு உயரப் பறந்தது. "ஏ! நீ கட்டை மண்ணாப் போக" என்றுகொண்டே கிண்ணத்துச் சோற்றை வரட்டு நாய்களுக்கு வீசிவிட்டு உள்ளே நுழைந்தாள் ஆச்சி. பெருமாள் பிள்ளை, வராண்டாவில் உள்ள மாடிப்படி வழியாக மத்தியானத் தூக்கத்துக்கு கட்டிலை நாடினார்.
"ஏலே ராசையா" என்று தீனக்குரல் பெட்டகசாலையிலிருந்து கேட்டது.
"என்னம்மா" என்றுகொண்டு உள்ளே ஓடினான் சுப்பையா.
'அவுகளுக்கு என்ன வேணுமாம்" என்றாள் தாயார்.
"நானும் அவுங்களைப் போல தாசில் உத்தியோகம் பாக்கணுமாம். அந்தப் பவுசைப் பாக்காமே அவுகளுக்கு கண்ணொரக்கம் வருதில்லை" என்றான் சுப்பையா.
"இங்க கெடக்கதைக் கட்டி ஆண்டாப் போதாதா. இன்னம் எதுக்கு கைகட்டிச் சேவுகம். அதிருக்கட்டும் ஒம் பிரியம் எப்படி" என்றாள் தாயார்.
"எம் பிரியத்தை கேக்க இங்க யாருக்கு காதிருக்கு" என்றான் சுப்பையா.
இருவரும் சற்று மவுனமாக இருந்தார்கள்.
"கருப்பையா இண்ணக்கி இங்கெ வந்தானா" என்றாள் தாயார்.
"அவனை விடியன்னை முதக்கொண்டு இந்தத் தெசையிலெயே காங்கலியே' என்றான் சுப்பையா.
"உங்கப்பா சாயந்திரமா சவுக்கைக்கு போன பொறவு அவனைப் பாத்து கூட்டிக்கிட்டு வா" என்றாள் மயிலம்மை, இவ்வளவு பேசுவதற்கு முன்பே அவளுக்கு க்ஷீணம் கண்டது. 'அம்மாடி' என்று சோர்ந்து மறுபுறம் திரும்பிப் படுத்தாள்.
"தலைமாட்டிலெ எறும்பு ஆயிது; பனங்கற்கண்டை எடுத்து தள்ளி வச்சுபுட்டு நீ ஓன்சோலியப் பாரு" என்று சிரமத்துடன் சொன்னாள் மயிலம்மை.
"தண்ணி தரட்டுமா?" என்றான் சுப்பையா. இல்லை என்பதற்கு கைக்குறிதான் காட்ட முடிந்தது.
சற்று நேரம் அவள் பக்கத்திலேயே நின்றான். இமை மூடியபடி படுத்திருந்தாள்; சுவாசம் நிதானமாக ஓடியது.
காலடிச்சத்தம் நிம்மதியாக இருக்க முயலுபவளுக்கு தொந்திரவு கொடுக்காமல் இருக்க, பூனை போல நடந்து தன் அறைக்குள் சென்றான். சிறிது நேரத்துக்கு முன் சுவாரசியமாகப் படித்துக் கொண்டிருந்த வயிற்று வலிக்கார கார்லைலின் ஆவேச சித்தாந்த குமுறல்களை மனசு இப்போது நாட மறுத்தது. மனசிலே ஒரு வெறுமை ; குறிக்கோள் எதுவும் அற்ற வேட்கை. சாய்வு நாற்காலியில் படுத்து அயர்ந்தான். 'பச்சை நிறப் பேய்' ரொபஸ்பியர், தாந்தான், மாரா இன்னும் எத்தனை பேர். அவர்கள் எல்லாரும் ராஜ வம்ச ரத்தப் பிரவாகத்தில் முழுகி, மறயாகம் செய்து, ஆபிஸ் குமஸ்தாக்களுடைய மடிக்குள் அதிகார தேவதையை ஆவாகனம் பண்ணினார்கள். ஆனால், தம் மடிக்குள் முடிந்திருந்த அதிகார தேவதை பிரெஞ்சு எல்லை தாண்டி வேறு யாருடைய மடிக்கும் போகக்கூடாது என்று நினைத்தார்கள் அந்த ஆபிஸ் குமாஸ்தாக்கள். சுதந்திரத்தையும் சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் திரிமுகமாகக் கொண்டு அதிகார சன்னிதானம் புதுச்சேரிக்கும் காரைக்காலுக்கும் வரவில்லை. ஏதோ ஒரு சாயம் போன, அசுரமுக ஆலியை தூக்கி தலையில் சுமந்து கொண்டு புதுச்சேரித் துறைமுகத்தில் இறங்கியது. நெப்போலிய அதிகார தோரணையை அவன் முன்வாசல் ஆபிஸ் குமாஸ்தா வர்க்கம் நடத்துவதுபோலத்தான் இந்தப் புதுச்சேரி விவகாரம். இந்த உலகம் பூராவுமே இந்த மாதிரி புதுச்சேரி விவகாரந்தான்.
தர்மோபதேசம் எல்லாம் தன் சவுகரியத்துக்குத்தான். இல்லாவிட்டால் பிறரால் ஆளப்படுவதற்காகவே நாம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறோம் என்ற மனப்பான்மை எப்படி இயல்புக்கு மாறாக பிறக்கும். மனிதன் தலையால்தான் நடக்கவேண்டும். அந்த மாதிரி நடப்பதே மானுட லட்சணம் என்று யாரும் சொன்னால் சிரிப்பார்கள். ஆனால் அப்படிச் சிரிப்பவர்களில் எத்தனை பேர் சிரசால் நடக்காமலிருக்கிறார்கள். மனிதனுக்கு லக்ஷியம் பிரதானமா; உயிர் வாழ்தல் பிரதானமா? இருபத்தி ஐந்து வருஷ இடைவிடா உழைப்பு, அதன் பிறகு கசாப்பிற்கு அனுப்பாமல் கொட்டகையில் கட்டிப்போட்டு வைக்கோல் போடுவது போல உபகாரச் சம்பளம். இதில் எத்தனையோ சவுகரியங்கள் உண்டு. உலகத்துடன் ஒட்டி வாழவேண்டிய அவசியமில்லை. ஆபிஸராக வாழ்ந்து, மாஜி ஆபிஸராக காலந்தள்ளி மாஜி ஆபிசர் பிரேதமாக சுடுகாட்டுக்கு போவதில் சவுகரியம் உண்டு. உயிருடனிருக்கும்போது, 'எசமான்', செத்த பிறகு 'எசமானையா சவம்' 'தாசில்பிள்ளை வீடு' அசேதனவஸ்துகூட இடுபெயர் பெறுகிறதே என்றிந்த மாதிரியான கவுரவ விலாசம் யாருக்குக் கிடைக்கும். யோக்கியமாக நடந்துகொள்ள வசதி உண்டு; அயோக்கியமாக நடந்து கொண்டால் ஊராரைப் பற்றி சட்டை பண்ண வேண்டியதில்லை. நீ உன் மனசில் பரம சித்தாந்தியாக இருக்கலாம், பரம பொதுவுடைமைவாதியாக இருக்கலாம்; யூனியன் ஜாக்குக்கு கும்பிடு போட்டு முறைப்படி காரியங்களாலும் வருஷங்களாலும் ஆயுள் என்ற தோணியிலே மிதந்து சென்றால், எந்த சீரங்கப்பட்டணமும் கொள்ளை போய்விடாது. அதிருக்கட்டும், அம்மைக்கு ஏன் பிடிக்கவில்லை. எங்க லீட்டு மாப்பிள்ளைக்கும் அரமனைலெ சேவுகம்' என்ற நினைப்பு நம்முடைய பெண்களுடன் பிறந்த இயல்பான வியாதியல்லவா. அவளுக்கு ஏன் பிடிக்கவில்லை. அவள் வியாதியஸ்தி. அதனால்தான் வேற்றாளுக்கும் வியாதிப் பாக்கியம் கிடைப்பது பிடிக்கவில்லை. அதுதான். நான் ஒருவன் உத்யோகத்துக்கு போகாவிட்டால் யூனியன் ஜாக்கொடி இறங்கிவிடப் போகிறதா அல்லது நான் போய்ச் சேர்ந்து விடுவதால் கொடிக் கயிறுக்கு முறுக்கு பலமாகிவிடப் போகிறதா. நம் மனவேதனை எல்லாருக்கும் இருக்கிறதா; அல்லது மனவேதனை இருப்பதாக பாவிக்கிறவர்கள் அதனை வேதனையாகத் தான் பாவிக்கிறார்களா? அவர்களுக்கு இல்லாமல் போனால், எனக்கு இருக்கும் வேதனைகூட, பொருள் அற்ற வேதனை ஆகிவிடுமா. வேதனை, வேதனை, வேதனை...
"சுப்பிரமணியம், என்ன வண்டி வந்து வாசல்லெ காத்திருக்கு, நீ இன்னும் புறப்படலெ" என்று குரல் கொடுத்தார் தாசில் பிள்ளை.
பட்டமளிப்புக்கு பட்டணம் போக தைத்த ட்வீட் ஸுட் அணிந்து அப்பழுக்கு அற்ற ஆபிஸர் மகன் போல, பளபளக்கும் கருப்பு காப் லெதர் ஷுஸ் டக்டக் போட, நெடுநாளைய ஸுட்தாரி மாதிரி வெளியே வந்தான் சுப்பிரமணியம். கைவிரல்கள் தன்னையறியாமலே கழுத்துப்பட்டி சுறுக்கு ஒழுங்காக விழுந்திருக்கிறதா என்று பட்டும் படாமலும் தடவின. இடது கையை கால்சராய் பையில் நுழைத்தபடி வாசல்படி விட்டிறங்கி, இரட்டைக் காளை தாசில் வண்டியருகில் வந்து நின்றான்.
"சுப்பிரமணியம் நீ உள்ளை ஏறி உக்காராதே; கால்ச்சட்டை மடிப்பு கொலஞ்சி போகும்; டே! கருப்பையா திண்டெ இழுத்து உள்ளைப் போடு, நான் ஏறிக்கிறேன்" என்று அவசரமாக அகலப் படியில் காலை வைத்துககொண்டு, மயிலைகள் கழுத்திறுகும்படி சற்று நுகத்தடி உயர ஏற, உள்ளே ஏறி உட்கார்ந்தார்.
"கருவாலி வலம்பாயுது; நல்ல சகுனம், சின்ன எசமானெ ஏறச் சொல்லுங்க" என்றுகொண்டே, ஒரே குறியில் கோசுப்பெட்டியில் உட்கார்ந்தான் கருப்பையா. ஜல்ஜல் என்ற சப்தத்துடன் வண்டி பைதாக்கள் உருள, சின்ன எசமான் நாஸுக்காக சாயாமல், 'புதுப் பொண்' போல அமர்ந்து, கழுத்துப்பட்டியை விரல்வைத்து நெருடிக் கொண்டான்.
தாசில் வண்டி மோக்ளாவாக ஓடியது. "அரைமணி நேரத்துக்குள்ளே டேசனுக்கு போகணும்டா" என்றார் தாசில் பிள்ளை.
"சதி, இன்னா நிமிஷத்திலே" என்றுகொண்டு வலவனை இழுத்து இடமனை முதுகில் முழங்கை வைத்து ஒரு குத்து குத்தினான். மாடுகள் பறந்தன.
"ஏலே, அடியாம ஓட்டு, அடியாம ஓட்டு" என்றார் சின்ன எசமான்.
வண்டி கரை வழியாக ஓடி கன்னடியன்கால் வயற்கரைமீது ஏறியது. பச்சேரித் தொப்புளான் காய்ந்த பனை மடல்களை சுமந்து கொண்டு வந்தான். மாடுகள் சற்று கலைந்தன.
"என்ன மூதி எருவுதெ" என்று கால் விரல்கள் கொண்டு குத்தி னான் கருப்பையா.
கிழட்டு வெள்ளையன் தள்ளாடி கரைச் சரிவில் நிற்க வேண்டிய தாயிற்று.
'நம்ம சவுக்கையிலெ யாரும் நிண்ணா, சத்தங்குடு" என்றார் தாசில் பிள்ளை.
வண்டியும் கன்னடியன் காலைத் தாண்டி ஜில்லா போர்ட் ரஸ்தாவை நோக்கி திரும்பியது. வயற்கரைப் பாதைக்கும் ரஸ்தாவுக்கு மிடையில், பனை விடலியும் உடையும் திக்காலுக்கு ஒன்றாக முளைத்த கட்டாந்தரை. சரசரவென்ற சத்தத்துடன் வண்டிச்சக்கரம் புதைந்து அமுங்கி புழுதியில் கோடிட்டது.
"எசமான்,சவுக்கேலெ எங்க மாமன் குத்த வச்சிருக்காப்பிலே தெரியிது". "ஒ.. மாமனோய் என்று குரல் கொடுத்தான்.
பல்லிடுக்கில் அருகம்புல்லை அரும்பியபடி தேவர் ஆடி அசைந்து எழுந்தார். வண்டிக்குள் தாசில் பிள்ளை இருந்தது தென்பட்டதும் சுறுசுறுப்பை வருவித்துக்கொண்டு ஓடிவந்து, "எசமான்" என்றார்.
"நான் கொக்கரகொளத்துக்கு போயிட்டு வாரேன்; நீ வீட்டை விட்டு அசையக்கூடாது; சின்னத்தம்பி சாயங்காலம் வருவான், நாளைக்கு ஓலை வெட்டணும்னு சொல்லியனுப்பு” என்று உள்ளிருந்தபடியே உத்தரவு கொடுத்தார் தாசில்தார்.
மாடுகள் கழுத்தைக் குனிந்து முக்கி முனகிக்கொண்டு, ஸ்தல ஸ்தாபன நிர்வாக சுவதந்திர வியவகாரத்தால் சமிக்கைபூர்வமாக சரலிட்ட ஜில்லா போர்ட் ரஸ்தாவில் ஏறியது. வண்டியின் பட்டம் உராய்ந்து உராய்ந்து ரஸ்தாவில் ரெட்டை வாய்க்கால் வெட்டி விட்டது போன்ற பள்ளத்துக்குள் லொடக்கென்று விழுந்து உள்ளிருந்தவர்களுக்கு க்ஷண அதிரச்சிக் கொடுத்து, ஆபத்தில்லா ரெட்டை வாய்க்காலில் உருண்டுருண்டு சென்றது.
"கருப்பையா மாட்டைக் கொஞ்சம் முடுக்கு" என்றார் தாசில்தார்.மாடுகளை விரட்டியடித்துக் கொண்டு செல்லுவதில் பரமமோகம் கொண்ட கருப்பையா இனிமேல் விட்டா வைப்பான். ஏக இரைச்சலுடன் புழுதியைக் கிளப்பிக்கொண்டு வண்டி சிட்டாகப் பறந்தது. எதிரே சரமாரியாக பார வண்டிகள்; சிந்தனைத் திறனை இழந்து கால வெள்ளத்தில் இழுபட்டுச் செல்லும் சநாதன தர்மம் மாதிரி பத்து முப்பது பார வண்டிகள் வேகத்துக்கு ஊறாக வழியை மறித்தன.
"வண்டியெ ஒதுக்கி அடியும்" என்ற கூப்பாடு போட்டுக்கொண்டு, வண்டியை வலது ஓரமாக, பாதி ரோட்டிலும், பாதி சரிவிலுமாக அடித்துக்கொண்டு முடுக்கினான் கருப்பையா.
எதிர்பாராத இயக்கம், பாரம்பரிய நியதியின் ஒழுக்கை குலைத்து சுழிப்புகளை உண்டுபண்ணுவதுபோல சாரையாகச் செல்லும் வண்டிகள் திக்காலுக்கு ஒருபுறமாக திரும்பித் தத்தளித்தன. கருப்பையா, சக்கரம் உராயாமல் லாவகமாக பாரவண்டிகளில் பாதியைக் கடந்து விட்டான்.
பின்புறம் எங்கோ மோட்டார் ஹார்ண் சப்தம் இடைவிடாமல் அலறியது. இன்னும் பன்மடங்கு குழப்பம் பார வண்டிச் சாரையில் ஏற்பட்டது. 'வண்டி'. 'பைதா', 'மாடு', 'சரட்டை இழு', 'வலமனை தளர்த்தாதே' என்ற பல குரல்கள்.
கருப்பையாவுக்கு முன்னிருந்த காளைகள் திடீரென்று மிரண்டன. வலது பக்கத்து கருப்பு வழியை மறித்துக்கொண்டு குறுக்கே நின்றது.
"அட அருதப்பயபிள்ளை' என்று ஏசிக்கொண்டே காளைகளின் சரட்டை இறுக்கிப் பிடித்தான் கருப்பையா. வண்டி திக்கென்று நின்றது. எங்கோ கேட்ட மோட்டார் சத்தம் திடுக்கிடும்படியாக பின்னால் கேட்டது. வேகமாக வந்த மோட்டார் நின்றது. பெட்ரோல் வண்டியிலிருந்து குதித்து ஓடிவந்த வெள்ளைக்காரச் சீமான், கையிலிருந்த கருங்காலித் தடியைக்கொண்டு மாடுகளை மாறி மாறி குறுக்கில் 'கூலிக் களுதே, கூலிக் களுதே' என்ற மந்திரத்தைச் சபித்துக்கொண்டு சாத்தினார்.
பின்புறம் உட்கார்ந்திருந்த சுப்பிரமணியத்துக்கு பழியான கோபம் வந்துவிட்டது. 'யாரடா மாட்டையடிக்கிறது' என்று இங்கிலீஷில் கேட்டுக்கொண்டு வண்டியை விட்டுக் குதித்து முன்பக்கமாக ஓடினான்.
துரைமகன் இந்த எதிர்ப்பை எதிர்பார்க்கவில்லை. செக்கச் சிவந்த முகம் துடிதுடிக்க, 'கூலிக் களுதெ' என்று மறுபடியும் கத்தினான்.
"யாரடா கூலி; குடியோ ஆள் தெரியவில்லை போலிருக்கு; என்னடே கருப்பையா, இவன் அலகிலெ ரெண்டு குடு" என்றான் சுப்பிரமணியம்.
லடாய் எங்கு துப்பாக்கி விவகாரத்தில் வந்து முடிந்துவிடுமோ என்று பயந்த ஆலமுகந்த பெருமாள் பிள்ளை, 'ஷெப்பர்ட் இடிய மாடிக் கிராமர்' இம்மியளவு வழுவாமல், 'நாட் ஒன்லி, பட ஆல்ஸோ' என்றெல்லாம் போட்டு, சக்கரவட்டமாக வெள்ளைக் காரனைத் தாஜாப் பண்ண முயன்றார்.
அவரை ஏறிட்டு ஒரு பார்வை பார்த்துவிட்டு, காறித் துப்பியபடி, மறுபடியும், 'கூலிக் களுதே' என்று சொல்லிவிட்டு, தன்னுடைய ஓட்டை போர்டில் ஏறிக்கொண்டு, எதிரில் நிற்கும் ஆள் பிரக்ஞையில்லாமல் மறுபடியும் புழுதியைக் கிளப்பிக்கொண்டு அந்தர்த்தானமானான்.
தலைப்பாகையை சற்று நிமிர்த்தி வைத்துக்கொண்டு, ஸ்ரீ. எ. யு. பெருமாள் பிள்ளை, "வெள்ளைக்காரர்களுடன் பழகுவது சிங்கத்தோடு பழகுவதுமாதிரி, இரைபோட்டு விட்டால் வாலையும் கடித்து முறுக்கலாம்; இல்லாவிட்டால் நீயே இரையாகிவிடுவாய்; தப்பிதமில்லாமல், இரண்டு இங்கிலீஷ் வார்த்தை பேசினால், தம்பி பெட்டிப் பாம்பாக மடங்கிவிடுகிறான்" என்றார்.
'கூலிக் களுதை' என்ற வார்த்தைதான் அவன் வாயிலிருந்து வந்தது.
"அவன் சொல்லிப்பிட்டா கூலிக் கழுதே ஆயிடுவாளாக்கும்; நான் ரிட்டயர்ட் தாசில்தார்; நீ ரிட்டயர்ட் தாசில்தார் மகன்; நேரமாகுது ஏறுடா வண்டியிலே" என்று அதட்டினார்.
"நீ சாதி மறவனாடா; வெள்ளைத் தோலைக் கண்டா ஏண்டா இப்படி நடுங்குதே; ஒன் பாவட்டா எல்லாம் பச்சேரிலெதான் போ" என்று சொல்லிவிட்டு வண்டியில் ஏறி உட்கார்ந்தான் சுப்பிரமணியம்.
கருப்பையா பதில் பேசவில்லை. வண்டி சேர்மாதேவி ஸ்டேஷன் வரும் வரை சிட்டாகப் பறந்தது.
"நேரா மாட்டை கொண்டு போய், குளிப்பாட்டி பருத்தி விதை வையி; போரப்ப வெரட்டிக்கிட்டு போகாதே" என்று கடைசி தாக்கீது கொடுத்துவிட்டு, இரண்டாவது வகுப்பு வண்டியில் ஏறி உட்கார்ந்தார் ஏ. யு. பெருமாள் பிள்ளை.
ரயில் ஊதியது; நகர்ந்தது: சுப்பிரமணியம் படியில் லாவகமாக தாவி ஏறி, வாலிபத் திமிர் குலுக்குடன் உள்ளே போய் உட்கார்ந்தான்.
சேர்மாதேவி - திருநெல்வேலி யாத்திரை குறுக்கு ஓடிய இருந்த இருப்பிலேயே தவம் கிடக்கும் காசி யாத்திரை அல்ல. சுமார் பத்துப் பதினொறு மைல் விவகாரம். ஆனால் அதுகூட சுப்பிரமணியத்துக்கு தாங்க முடியாத சுமையாகத் தெரிந்தது. ரயில் வண்டி கூட அவனை 'கூலிக் களுதே' என்று கூப்பிட்டு பறைசாற்றி அவமானப்படுத்துவதாகவே அவனுக்குப் பட்டது. ஓடும் மரங்கள், ஓடும் தரைகள், ஓடும் சக்கரங்கள், ஒரு குரல் அவனை 'கூலிக் களுதே' என்று அழைத்து விட்டு அப்புறமே ஓடின. கூலிக் களுதே.. கூலிக் களுதே...
❍❍
மாலை சுமார் நான்கு அல்லது ஐந்து மணி இருக்கும். சுலோசன முதலியார் பாலத்துக்கு வலது பாரிசத்தில் விஸ்தாரமான சோலைக்கு மத்தியில் மறைந்து கிடக்கும் கலெக்டர் பங்களா. கிழக்கிந்தியக் கம்பெனி காலத்து மதில் கோட்டைகளை விட்டு வெளியேறி பிரிட்டிஷ் ஆட்சி அந்தப் பிராந்தியத்துக்கு ஆதிக்கம் வகிக்க முற்பட்ட காலத்தில் அதற்கு உற்ற துணையாக நின்ற எட்டயபுர ஜமீன் கட்டிடமும் நிலமும் அது. ஆலை முதலாளி ஆலைக் கூலியிடம் ஐந்து ரூபா கடன் வாங்கும் பான்மையிலே, அந்தக் கட்டிடம் ஜமீனுடைய இஷ்டத்தின் பேரில் பிரிட்டிஷ் அதிகாரப் பிரதிநிதி தங்கும் இடமாக வாடகைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் கும்பேனி வியவகாரம் வெறும் வியாபாரமாக இருந்த காலத்தில் கட்டிடம் குறுக்கே கிடக்கும் ஆற்றைத் தாண்டி அமர்ந்துள்ள பட்டணத்துத் துபாஷ் முதலியார்களுடைய சாணக்கிய நிலைக்களத்துக்கு ஈடு கொடுத்து எதிராக நின்றிருந்தது. துபாஷ் தயவுகளை உதறித் தள்ளி கும்பேனி தன்னாதிக்கம் பெற்றுத் தட்டிப் பறித்த அதிகாரத்தை சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேணுமென்று கனவு கண்ட பிரிட்டிஷ் காமன்ஸ் சபையிடம் ஒப்படைத்து விலகிய பிற்பாடு, எட்டயபுரமும் சகா என்ற அந்தஸ்தைத் தானறியாமலே இழந்து, பிரிட்டிஷ் ஆளுகைக்குட்பட்ட ஜமீனாக மாறியது. இந்த ஞானம் அதன் பிரக்ஞையில் பதிவதற்கு வெகு நாட்களாயினும் ஜில்லாக் கலெக்டர்களுக்கு அதன் அந்தஸ்து பற்றி சந்தேகம் எழுந்ததே கிடையாது. அறுபது தடவை ஓடி ஓடி பிறகுவந்த பிரிட்டிஷ் அதிகாரத்தை பொதியைப் பாசான மண்ணில் ஆணியடித்த ரம்போல்ட் லூஷிங்டன் முதல் அவருக்கப்புறம் வாழையடி வாழையாக வந்த பிரிட்டிஷ் கலெக்டர்களுக்கு நிழல் கொடுத்து வருவது அந்த எட்டயபுர கட்டிடம்தான். முன்பு தானாபதிக்கு தங்குமிடமாக இருந்த புழுதி படிந்த ரோட்டடிக் கட்டிடம் ஜமீன் தலைவருக்கு லபித்ததிலிருந்து, தமது திடீர் திருவிளையாடல்களுக்கும், ஜமீன் பாரம்பரிய வளமுறைகளான வாரீசு வியாச்சியங்களுக்கும் ஜில்லாத் தலைநகரை நாடும் போதும் உபயோகமாகி வந்து, இப்போது அவரது அடியார்க்கு மடியார்க்கு மடியார்களின் திருட்டு விளையாடல்களுக்கு ஒத்தாசை செய்து வருகிறது.
சுலோசன முதலியார் பாலம், பிறகு அவரது ஞாபக ஸ்தூபி, முன்பு எந்தக் காரியத்துக்குக் கட்டப்பட்டது என்ற நினைவற்றுப் போன ஒற்றையறைக் காரைக் கட்டிடம் - இவற்றுக்கு எதிரே பாதாள லோகப் பாதை மாதிரி ரஸ்தாவிலிருந்து ஒரு கிளைப்பாதை திடுதிப் பென்று இறங்கும். எதிரேயுள்ள காரைச் சுற்றுச் சுவருக்கு ஊடே இருள் மண்டிக் கவியும் ஆலமரத்துக்கு மறைவில் தென்படும் வாசல் வழியாக, சர்க்கார் ரஸ்தாவைவிட அடிக்கடி பழுது பார்க்கப்பட்டு ரொம்பவும் ரம்மியமாகவும் சுத்தமாகவும் உள்ள பாதை வளைந்து வளைந்து செல்லுகிறது. இரண்டு பக்கமும் கொடுக்காப்புளிக் கன்றுகள் அடர்த்தியாக வளர்ந்து ஒரு ஆள் உயரத்துக்கு மட்டமாகக் கத்தரித்து விடப்பட்டிருக்கும். இந்தப் பாதையின் போக்குப்படி வளைந்து வளைந்து சென்றால், 'என்னடா, எல்லையில்லாத் தூரம். எல்லையில்லாக் கோணல்' என்று மனச் சோர்வு தட்டும் கட்டத்தில் திடீரென்று வளையும் திருப்பம் விஸ்தாரமான புல்வெளியும், சூரிய காந்தியும், சிவப்புக் கல்வாழையும் நிறையப் பூத்துச் சொரியும் பிரம்மாண்டமான ஒரு கட்டிடத்தை நமது கட்புலனுக்குக் கொண்டுவரும். அதுதான் திருநெல்வேலி ஜில்லா கலெக்டர் பங்களா. முன் வெராண்டாவில் நாற்காலிகள் உண்டு. அது காலியாக இருக்கும். அதற்கு அருகில் டவாலி போட்ட சேவகன் உட்கார்ந்து, சுவரோட்டை வழியாக வரும் பங்காக் கயிற்றைப் பிடித்து அசைத்துக்கொண்டிருப்பான். வாசல் அருகே வேறு இரண்டு டலாயத்துக்கள் வெள்ளித் தடி பிடித்து, பெரிய தலைப்பாகை கட்டி நிற்பார்கள். இவர்களது வேலையெல்லாம் யாரானாலும் உள்ளே புகவிடாமல் தடை செய்வதுதான். கறுப்பர்களானால் இவர்கள் நிச்சயம் உள்ளே விட மாட்டார்கள். வெள்ளைக்காரர்கள் வந்தால், 'துரைக்கு'ப் பிரியமில்லாதவரானால் உள்ளே விட்டுவிட்டு, திட்டோ உதையோ வாங்கிக்கொள்ளுவதை பொருட்படுத்த மாட்டார்கள். இவர்கள் பல கலெக்டர்களைக் கண்டவர்கள். வருவோர் போவோர் கலெக்டர்கள்தான்; இவர்கள் நித்ய வஸ்துகள்; சாட்சாத் கடவுளர்கள்!
கலெக்டராக வந்தவர் புதியவராக இருந்தால், அவரது போக்கு இன்ன மாதிரிதான் என 'அத்துபடி'யாகும்வரை, தலை போகும் காரியமாயினும் யாரையும் உள்ளே விடமாட்டார்கள். உள்ளே விட்ட பிறகு, உதை கிடைத்தால் வாங்குவது யார்; வந்தவர்களுக் கென்ன; சமயம் சரியில்லை என்று வசவை வாரிக் கட்டிக்கொண்டு, மீண்டும் - பிறகு - முற்றுகையிட வாபஸாகி விடுவார்கள்.
புதுக் கலெக்டரான ஜான் ஸாமுவேல் எவரட் பர்டர்ட் போக்கே இவர்களுக்கு பிடிபடவில்லை. இவருக்கு வந்த நாலைந்து தினங்களுக்குள்ளாகவே கடுவா பர்டாட் துரை என்று நாமகரணமாயிற்று. கலெக்டராபீஸிலும், மேலரத வீதி கிட்டங்கி முதலாளிகளிடையிலும் கடுவா பாடாட் என்ற பாஷைப் பிரயோகம் சர்க்கார் நோட்டு மாதிரி செலாவணியாகி வருகிறதென்றாலும் அந்த புதுப்பெயர் வைத்த பண்டிதர்கள் வாசல் காக்கும் சப்ராசிகள்தான் என்பது யாருக்கும் தெரியாது.
ஜான் எவரட் பர்டர்ட், வறட்டு வெள்ளைக்காரர் அல்ல. காமன்ஸ் சபையில், கபடு சூது அற்றிருந்ததற்காக ஷெல்டன் ஆன் ட்வீட் தொகுதி வாக்காளர்கள் மறுபடியும் தெரிந்தெடுத்து வந்த ஸாமுவேல் எவரட் பர்டர்டின் கடைசி மகன். லிபரல் கட்சிக்கு இவர் வெற்றி பெறுவார் என்பதில் நம்பிக்கை உண்டு. இவருக்கு லிபரல் கொள்கையில் நம்பிக்கை உண்டு. இப்படியாக, ஒரு உபகேள்விகூட கேட்காமலும், வலுக்கட்டாயமாக குடத்து விளக்குப்போலும் இருந்து வந்த ஸாமுவேல் எவரட் பாடாட் வாலிப தசையில் மான்செஸ்டர் துணி முதலாளி ஒருவரின் மகளைக் கலியாணம் செய்துகொண்டு அரசியலில் இறங்கினார். மாமனார் முதலில் அவரை கன்ஸர்வேட்டிவ் கட்சி மூலம் காமன்ஸ் சபைக்குள் சேர்ப்பித்தார். வாலிப ஸாமுவேலுக்கு ஜோஸப் சேம்பர்லேனுடைய லிபரல் கொள்கையும் தொடர்பும் பிடித்துப் போனது மாமனாருடைய கோபத்துக்கு அவரை ஆளாக்கியது. ஷெல்டன் ஆன் ட்வீட் என்ற ஊரில் லிபரல் கட்சி அபேட்சகராக நின்றார். வெற்றி பெற்றார். பிறகு ஊரில் குடிபுகுந்தார். ஊர்க்காரர்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாகும்படி நடந்து கொண்டார். காமன்ஸ் சபை ஸ்தானம் உறுதியாயிற்று. தேர்தல்கள் என்பதெல்லாம் எப்போதோ ஒரு தடவை எழுந்திருந்து சற்று நாற்காலியைத் துடைத்துக்கொண்டு உட்காரும் வியவகாரமாயிற்று. தொகுதிக்கே வ்வாட் பர்டர்ட் தொகுதி என்ற பெயர் வந்தது. ஷெல்டன் ஆன் ட்வீட் தொகுதி என்ற ஒன்று இருக்கிறது என்ற விஷயம் காமன்ஸ் சபை தொகுதிவாரி ஜாப்தாவில்தான் உண்டு. மற்றப்படி எவரட் பர்டர்ட் தொகுதிதான். காமன்ஸ் சபையின் சாசுவத மெம்பராக இருந்துவந்த எவரட் பர்டர்ட்டின் கட்சி பக்தி அவருக்கு ஒரு ஸர் பட்டத்தை வாங்கிக் கொடுத்ததுதான் மிச்சம். கடைசி மகன் ஜான் எவரட் பர்டர்ட் வெள்ளைக்காரர்களின் புத்திரர்கள் நாலெட்டுத் திக்கிலும் சென்று வெள்ளைக்காரர்களுக்கு மட்டும் என கருதவேண்டிய நாகரிக வசதிகள் எல்லாம் பெறுவதற்கு முற்படும்போது ஆப்பிரிக்காவில் போயர் யுத்தம் முடிவடைந்த சமயம். ஐ.ஸி.எஸ். பரீட்சை பாஸ் பண்ணிவிட்டு சென்னை மாகாணத்தில் பிரிட்டிஷ் ஆட்சியைக் காத்து நிற்க உத்தரவு வாங்கி வரும்போது ஹோம் ரூல் இயக்கம் பிரமாதப்பட்டது. ஹோம் ரூல் என்ற வார்த்தை சொல்லுகிறவர்களும், வந்தே மாதரம் என்ற வார்த்தையை உச்சரிக்கிறவர்களும் ஜெயிலுக்கு போக வேண்டும். அன்னி பெஸண்டின் பிரசங்கத்தை பத்தி பத்தியாய் இங்கிலீஷில் படித்தார்கள்; சந்தர்ப்பம் கிடைத்தால் போய்க் கேட்டார்கள். அவளுடைய இங்கிலீஷ் நடையைப் பற்றி மெச்சினார்கள். சனாதன பக்தியைப் புகழ்ந்தார்கள். கிடைத்த உத்யோகத்தை விட்டு, மேலுத்யோகத்துக்கு போகவும், புது உத்யோகம் தேடவும் காக்காய் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்தக் காலத்தில்தான் ஸ்ரீ ஏ. யு. பெருமாள் பிள்ளை தம் தாலுகா எல்வைக்குள் நிர்த்தாட்சண்யமாக யூனியன் ஜாக் கொடியைப் பறக்க விட்டுக் கொண்டிருந்தார். முதல் முதலாக சப் கலெக்டராக நியமிக்கப்பட்ட ஜான் எவரட் பர்டாட்டுக்கு ஸ்தல நிர்வாக நெளிவு சுளுவுகளும், வா, போ என்ற பதப் பிரயோகமும் கற்றுக்கொடுத்தது டன் கணக்கனும் மணியமும் சேர்ந்துகொண்டு சர்க்காரை எப்படி ஏமாற்றக் கூடும் என்பதைச் சொல்லிக் கொடுத்ததுடன் கணக்கனும் மணியமும் ஒன்று சேர்வது என்பது சூரிய சந்திராள் சேர்ந்து உதயமாவதற்கு சமம் என்றும் சொல்லிக் கொடுத்துவிட்டார். பிறகு எவரட் பாடாட் அதிகாரம் பண்ணுவதற்குக் கேட்பானேன். முதலில் தீட்டின மரத்திலேயே கூர் பார்ப்பது போல பெருமாள் பிள்ளையையே 'எக்ஸ்பிளனேஷன்' கேட்டான். விவகாரத்தை சீக்கிரம் கற்றுக்கொள்ளும் சக்தி எவரட் பர்டாட்டுக்கு உண்டு என்பதைத்தான் இந்த 'எக்ஸ்பிளனேஷன்' தடபுடல் காட்டியது. பெருமாள் பிள்ளை, பெரிய பெருச்சாளி; அவ்வளவு லேசில் பொறிக்குள் மாட்டிக் கொள்ளுவாரா. சுற்றி வளைத்து வேறுயேதோ பதில் சொல்லி விஷயத்தைக் குழப்பி, தகராறு என்ன என்பதே தெரியாதபடி அடித்து விட்டார். இவ்வளவு மோதிக்கொண்டாலும் இரண்டு பேருக்கும் பரஸ்பரம் ஒருவர் மேலொருவர் மதிப்பு வைத்திருந்தனர். இல்லாவிட்டால் பெருமாள் பிள்ளை மகனையும் கூட்டிக்கொண்டுவந்து பங்களா வாசலில் காத்துக் கிடப்பாரா?
சட்டை செய்யாத சப்ராசிகளைக் காண சுப்பிரமணியத்துக்கு கோபம் கோபமாக வந்தது. மாஜி சர்க்கார் உத்தியோகஸ்தரிடம் இவ்வளவு அசிரத்தையா என்று அவனுக்குக் கோபம். கலெக்டர்கள் சப்ராசிகளிடம் எப்படியெல்லாம் நடந்துகொள்ளுவார்கள் என்பது அவனுக்குத் தெரியாது. விஸிட்டிங் கார்டைக் கொண்டுபோய் கொடுத்தால் மூஞ்சியில் காறித்துப்பி கையில் கிடைத்ததை விட்டெறியும் கலெக்டர்களும் உண்டு. இப்படிப்பட்ட ரகம் குடிகார ஜாதி என்பது அவசியமில்லை. சப்ராசி என்ன இவ்வளவு அயோக்கியத்தனம் பண்ணுகிறானே என்று நினைப்பது எவ்வளவு தப்போ, அவ்வளவு தப்பு கலெக்டர் குடிகாரன் என்று நினைப்பதும். அதிகாரம் என தப்பிதமாக எதையோ கற்பனை செய்துகொண்டு விகாரமான முறையில் நடந்துகொள்ளுகிறார்களே தவிர, அவர்களில் நூற்றுக்குப் பத்து முரடர்களோ, அயோக்கியர்களோ அல்ல. பெண்டாட்டியை அதாவது துரைஸானியை கண்டால் பெட்டிப் பாம்பாக நடுங்குவார்கள். அடைமழையில் உதகைக்கோ ஹோமுக்கோ (தாய் நாடான பிரிட்டிஷ் தீவுகளுக்கு வெள்ளைக்காரன் இடுகுறிப் பெயர்) புறப்பட வேண்டும் என்று கொடி கட்டினால், உத்தரவுக்கு அப்பீல் கிடையாது.
ஜான் எவரட் பர்டர்ட்டுக்கு துரைஸானி தொல்லை கிடையாது. வாலிப மிடுக்கில் இருந்த படபடப்பு இப்பொழுது உறுதியாக மாறிவிட்டது. கோபப்படுவதற்கு என்று குரலை மாற்றிக்கொள்ளும் அவசியம் அவனுக்கு கிடையாது. அவன் சாதாரணமாகப் பேசுவதைக் கண்டாலே சப்ராசிகள் நடுநடுங்குவார்கள்.
பெருமாள் பிள்ளையின் விஸிட்டிங் கார்ட் கலெக்டர் அறைக்குள் எட்டாமல் தயங்கியதற்குக் காரணம் வேறு எதுவும் அல்ல.
ஸ்தல பிளாண்ட்டர்கள் (தோட்ட முதலாளிகள்) சங்கக் காரியதரிசியான ஒரு வெள்ளைக்காரன் திடுதிடுவென்று 'ஜானி, ஜானி' என்று கூப்பிட்டபடி குடிவெறியில் பாட்டுப் பாடிக்கொண்டு புகும்படி சப்ராசிகள் விட்டு விட்டதற்காக அவர்கள் பட்ட அவஸ்தை தான் காரணம். 'யாரானால் உனக்கென்ன? என்பதுதான் பல்லவி. ஒரு மணி நேரம் உட்கார்ந்துகொண்டு சப்ராசிகளைத் தன் சொந்த முறைகளைப் பிரயோகித்துக் கண்டித்தான். அடியும் உதையும் ஏச்சும் இரைச்சலும் இல்லாமல் ஆட்களை நடுநடுங்க வைப்பதற்கு அவனுக்குத் தெரியும். அதை சப்ராசிகள் அன்று கண்டுகொண்டார்கள்.
சாயங்காலம் தேயிலை அருந்திவிட்டு, கையில் ஒரு நாவலுடன் வெளியே பங்களா மைதானத்தில் உலாவ வந்த ஜான் எவரட் பாடாட் கண்களில், வசனமிருப்பதுபோல் உட்கார்ந்திருக்கும் பெருமாள் குடும்பம் கண்ணில்பட்டது.
"முருகேன்!" என்று அதட்டிக் கூப்பிட்டார் கலெக்டர்
"ஸார்!" என்று பதறிக்கொண்டு ஓடிவந்தான் முருகன்.
"இவர்கள் வந்து எத்தனை நேரமாச்சு?" என்று அதட்டினார்.
"எனக்கு ட்யூட்டி நாலு மணியிலிருந்துதான். வந்தபோதே இவர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்" என்றான் முருகன்
"இப்பொழுது மணி என்ன?"
"ஐந்தே முக்கால்.'
"நான் யாரையாவது அவ்வளவு நேரம் காத்திருக்க வைப்பதுண்டா?"
முருகன் மவுனமாக நின்றான்.
"என்னா மேன் பேசாமெ இருக்கிறே; நீ அவுங்ககிட்டே கேட்டியா, அல்லது என்கிட்டே சொன்னியா?" என்றார்.
"சுப்பையா சொல்லி ..." என்று ஏதோ முணமுணத்தான் முருகன்.
"சுப்பையா!" என்று அழுத்தி ஒரு தடவை சொல்லிவிட்டு, "நீ உன் டயரியிலெ பத்து ரூபா அபராதம் என்று எழுதிக்கொள்" என்று சொல்லிவிட்டு திடுக்கிட்டு நின்றவனைக் கவனியாமலே "ஹல்லோ மிஸ்டர் பெருமாள் எனக்கு ரொம்ப சங்கடமாப் போச்சு, நீங்க உள்ளே வாருங்க" என்று உள்ளே அழைத்துச் சென்றார்.
இவர்களுடன் பேசும்போது அந்தச் சீற்றத்தின் சுவடுகூடத் தென்படவில்லை. அவ்வளவு மரியாதை.
சுப்பிரமணியனுக்கு தங்கள் சார்பாக நடந்த இந்த அபராத நாடகம் ஏதோ ஒரு மாதிரியாக இருந்தது. எதற்கெடுத்தாலும் அதிகாரம், மிடுக்கு. இத்தனையும் யாருக்காக - எதற்காக?...
"இப்பொழுது சவுக்கியம் எப்படி? இது உன் மகனா?" என்று கேட்டார் கலெக்டர்.
உள்ளே வந்து உட்கார்ந்ததும் சுத்தமான தமிழ் பேசுவதைக் கண்டதும் ஆச்சரியப்பட்டான் சுப்பிரமணியம்.
"நான் தமிழ் பேசுவது உனக்கு அதிசயமாக இருக்கிறதா; நான் குறள்கூட பாராமல் சொல்லுவேன்" என்று சிரித்தார் கலெக்டர்
"ஹி இஸ் என் எக்ஸ்பர்ட் [1]லிங்க்விஸ்ட்' என்று இங்கிலீஷில் தமது கலெக்டருடைய பாஷா விலாசத்தை வியாக்கியானம் செய்தார் பெருமாள் பிள்ளை.
'அவரை எனக்குப் பரிச்சயம் செய்து வைக்கவில்லையே" என்றார் கலெக்டர்."என் மகன் சுப்பிரமணியம்; என் சீப் (தலைவர்) ஜான் எவரட் பாடர்ட்" என்றார் பெருமாள் பிள்ளை.
"நீங்கள் அவசரப்படாமல் இருந்திருந்தால் இதற்குள் செக்கட்டே ரியட்டுக்கு வந்திருக்கலாம்" என்று பழைய நினைப்புக்களைக் குத்திக் கிளறினார் கலெக்டர்.
"என் உடம்பு தளர்ந்து போச்சு; மேலும் நான் ஒரு புஸ்தகம் எழுத ஆசைப்பட்டேன்" என்றார் பெருமாள் பிள்ளை.
"புஸ்தகமா? என்ன புஸ்தகம்?" என்றார் கலெக்டர்.
"உலக சித்தாந்த சாஸ்திரங்களின் சரித்திரம்" என்றார் பிள்ளை.
"சித்தாந்தமா" என்று வாய்விட்டு விழுந்துவிழுந்து சிரித்தார் கலெக்டர்.
தகப்பனார் புஸ்தகம் எழுத ஆசைப்படுகிறார் என்பது முதல் அதிசயம், அதில் சிரிப்பதற்கு என்னவிருக்கிறது என்பது என்ற இரண்டாவது அதிசயம், சுப்பிரமணியத்துக்குத் தலையைக் கிறங்க வைத்தது.
"ஊரையே சுட்டுப் பொசுக்கு என்று ஆர்ப்பாட்டம் பண்ணின பெருமாள் பிள்ளையா சித்தாந்தம் எழுதப் போகிறார்" என்று சொல்லிவிட்டு மறுபடியும் சிரித்தார் கலெக்டர்.
"அது வாலிபத்தில், சர்க்காருக்காக, நான் என்ன நியாயத்தப்பாக நடந்துகொண்டேன். மார்க்கஸ் அரிலஸ் எழுதினபோது நான் எழுதக்கூடாதா?" என்றார் பெருமாள் பிள்ளை.
"புஸ்தகம் எவ்வளவு தூரம் எழுதி முடிந்திருக்கிறது?" என்று கேட்டார் கலெக்டர்.
"இன்னும் ஆரம்பிக்கவில்லை. படித்து குறிப்பு எடுத்து வருகிறேன். அது முடியவே இன்னும் ஐந்து வருஷங்கள் ஆகும். அதன் பிறகு எழுத உக்கார வேண்டும்" என்றார் பெருமாள் பிள்ளை.
தகப்பனாரின் ஹிமாசலத் திட்டம் சுப்பிரமணியத்துக்கு தூக்கிவாரிப் போட்டது. எவ்வளவு சாவதானம். வாழ்வின் அஸ்தமன காலத்திலிருந்து கொண்டு ஐந்து வருஷங்கள் குறிப்பெடுக்கவும் அப்புறம் அகஸ்தியன் சப்த சமுத்திரத்தையும் குடித்ததைப் போல புஸ்தகம் எழுதுவதும் என்ன நம்பிக்கை. தகப்பனார் பிரமாதமான மனிதர் என்பது அவனுக்கு இன்றுதான் தெரிந்தது. தப்போ சரியோ எவ்வளவு தெம்பு. எவ்வளவு நம்பிக்கை.
"உங்கள் மகனும் பிலாஸபிதான் (தத்துவம்) பி. ஏ.க்கு படித்தாரா?" என்று கேட்டார் கலெக்டர்
"இல்லை இல்லை. சரித்திரமும் ராஜீய சாஸ்திரமும்" என்றான் சுப்பிரமணியம்.
"நான் உன்னைக் கேட்கவில்லையே. உனக்கு ரொம்ப பாலிடிக்ஸ் தெரியுமாக்கும்!" என்றார் கலெக்டர்"அவன் பி.ஏ.லெ முதல் வகுப்பில் பாஸ் செய்திருக்கிறான்" என்றார் பெருமாள் பிள்ளை.
"அப்போது சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியுமா?" என்றார் கலெக்டர்.
"எதிர்பார்க்கப்படாத இடத்தில் பேசாமல் இருப்பது" என்றான் சுப்பிரமணியம்.
சிறுவனுக்கு தனது முந்திய வார்த்தைகள் ரொம்பவும் துன்பப் படுத்திவிட்டன என்பதைக் கண்டுகொண்ட கலெக்டர், எழுந்து வந்து அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு "நிஜமாக நான் வருத்தப் படுகிறேன்" என்று வருத்தப்பட்டுக்கொண்டார்.
"சிறுவன்தானே, அதொன்றும் பிரமாதமில்லை. அவனுக்காக நீங்கள் வருத்தப்படுவதாவது; நல்ல வேடிக்கை" என்றார் பெருமாள் பிள்ளை.
"ஏன் இவரை ஐ. ஸி. எஸுக்கு அனுப்பக் கூடாது? ரொம்பக் கெட்டிக்காரராகத் தோணுகிறதே; ரொம்ப கூச்சம் போலத் தெரிகிறது. அதிகாரத்தைக் கையில் கொடுத்தால் எல்லாம் சரியாகப் போய்விடும்" என்றார் கலெக்டர்
"ஐ.ஸி.எஸுக்கு என்றால் என் குடும்ப நிலைக்கு ஒத்துவராது. இவனுடைய தாயார் ஒரு வியாதியஸ்தி. இவன் எப்பொழுதும் அருகிலேயே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவள்; இவன் வேலையே பார்க்காமல் வீட்டோடு இருந்தாலும் அவளுக்கு திருபதி. ஆனால் எனக்கு என் குடும்பத்திலிருந்து யாராவது ஒருத்தர் செர்வீஸிலிருக்க வேண்டும் என்பது என் ஆசை. இந்தியர்கள் வேறு எந்த மாதிரி விசுவாசத்தைக் காட்ட முடியும் இந்தக் காலத்திலே.." என்று முடுக்கி விட்ட அலாரம் டைம்பீஸ் மாதிரி பேச ஆரம்பித்தார் பெருமாள் பிள்ளை.
கலெக்டர் அதற்கு விட்டுக்கொடுக்காமல், "உனக்கு இந்த நாட்டில் தோன்றி இருக்கிறதே சுதந்திர இயக்கம். அதைப் பற்றி என்ன நினைக்கிறாய்" என்று கேட்டார் கலெக்டர்.
"நான் அவ்வளவாக ஈடுபட்டதில்லை; படிப்பைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது என்றிருந்தேன். சுதந்திரம் எல்லாருக்கும் இயற்கைதானே" என்றான் சுப்பிரமணியம்.
"சுதந்திரம் இயற்கை அல்ல; மனிதனுக்கு இரண்டுவித குணங்கள் தானுண்டு. ஒன்று அதிகாரத் திமிர்; இரண்டாவது கட்டின சங்கிலிக்குப் பூமாலை போட்டு பூசை பண்ணுவது. அடிமைத்தனத்திலே, அதிகாரத்தை வைத்திருப்பவன் சாதாரண க்ஷேமத்தை காப்பாற்றித் தருகிறான். சாதாரண மனிதருக்கு சாதாரண க்ஷேமம் தானே மோட்சம். அதனால்தான் ஆளமுடிகிறது ..."
"நிஜமான க்ஷேமத்துக்காக சாதாரண மக்கள்கூட சாதாரண க்ஷேமத்தை விட்டுக் கொடுப்பார்களே ..." என்று கலெக்டர் தர்க்கத்தைப் பின்பற்ற முயன்றான் சுப்பிரமணியம்."எதிர்வாதம் பண்ணாதே; கலெக்டர்வாள் சொல்லுகிறதுதான் சரி" என்று ஒரு போடு போட்டார் பெருமாள் பிள்ளை.
தகப்பனார் ஏன் இப்படி வியவகார நியாயத்தையும் உதறித் தள்ளி விட்டு கலெக்டர் கட்சியைத் தாங்கிப் பிடிக்க வேண்டும். இப்படி உத்தியோகம் பார்க்காவிட்டால் என்ன. இவர் இந்த அழகில், உலக சித்தாந்தங்களின் சரித்திரத்தை எப்படி நடுநிலைமையோடு நின்று அடித்துப் பேசப் போகிறார் என்று எண்ணினான் சுப்பிரமணியம்.
"சுப்பிரமணியத்தை முதலில் என் பெர்ஸனல் (சொந்த) குமாஸ்தாவாக நியமிக்கலாம் என்று நினைக்கிறேன். வந்திருந்துகொண்டு டெஸ்ட் எதுவும் பாஸ் செய்தால் போகிறது" என்றார் கலெக்டர்.
"ரொம்ப தாங்ஸ்" என்றார் பெருமாள் பிள்ளை.
"என்ன சுப்பிரமணியம்; திருப்திதானே."
"என்ன! எனக்கா? அதை யோசித்து சொல்ல வேண்டும்" என்றான் சுப்பிரமணியம்.
"முட்டாள்" என்றார் கலெக்டர்.
"நாளை முதற்கொண்டு வேண்டுமானாலும் அவனை அனுப்பி வைக்கிறேன்" என்றார் பெருமாள் பிள்ளை.
"நான் எழுதுகிறேன். நாளைக்கு முதல் ஜில்லா முழுவதும் முகாம் போகப் போகிறேன். அவசரம் ஒன்றுமில்லை. மிஸ்டர் பெருமாள். உங்கள் புஸ்தகத்தைப் படிக்க ரொம்ப ஆசை. அச்சடித்ததும் முதல் காப்பி எனக்கு அனுப்புங்கள்" என்றார் கலெக்டர்
பெருமாள் பிள்ளைக்கு உச்சி குளிர்ந்துவிட்டது. கலெக்டராகப் பார்த்து தம் புஸ்தகத்தை, அதிலும் எழுதாத புஸ்தகத்தைப் பற்றி ஆசைப்படுவதைக் கண்டு ஒரே பரவசம்.
சுப்பிரமணியனுக்கு கலெக்டர் ஏளனம் பண்ணுகிற மாதிரி பட்டது. இந்தியாவில் ஏதாவது ஒரு மூலையில் இருபது வருஷம் ஜபர்தஸ்து பண்ணிவிட்டு சீமைக்குப் போனதும் கன்னாபின்னா வென்று எழுதுவதற்கு வெள்ளைகாரருக்கு மட்டும்தான் தனிப்பட்ட உரிமையோ என்று மனசு கேள்வி கேட்டது. தகப்பனாருடைய புஸ்தகத்தை பழிக்கு பழி என்று மட்டும் ஒப்புக்கொள்ள அவனுக்கு மனம் வரவில்லை என்றாலும், பழிக்குப் பழியாகவே ஏன் இருக்கக் கூடாது என்று அவனுடைய மனசு பிடிவாதம் பண்ணியது.
கலெக்டர் மேஜையிலிருந்த மணியை அடித்தார். முருகன் வந்து நின்றான்.
"டீ கொண்டு வரச் சொல்லட்டுமா?" என்றார் கலெக்டர்.
"நான் இப்போது வைதீகமாகிவிட்டேன்; ஓரிடத்திலும் சாப்பிடுவ தில்லை; மன்னிக்க வேண்டும்" என்றார் பெருமாள் பிள்ளை.
"அப்பொழுது நான் இப்போது உங்களுக்கு தீண்டாதவனாக ஆகி விட்டேனா?" என்றார் கலெக்டர்."நீங்கள் அப்படியல்ல; உங்கள் பட்லர் எங்கள் ஊர் பள்ளன்; அதனாலே..." என்று விளக்கினான் சுப்பிரமணியம்.
சிரித்துக்கொண்டு இளநீர் கொண்டு வரும்படி உத்தரவிட்டார்.
சுப்பிரமணியம் தாராளமாக ஒரு தம்ளர் இளநீரை விட்டு நிறைத்துக் கொண்டான். "என் தகப்பனாருக்கு இளநீர்கூட பிடிக்காது" என்று சொல்லிக்கொண்டே அடுத்த டம்ளரையும் எடுத்தான்.
"நீ ரொம்ப கெட்டிக்காரன்" என்று சிரித்தார் கலெக்டர்.
கலெக்டரிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு, இரண்டு பேரும் திரும்பி வந்து சேர்மாதேவிக்கு ரயில் ஏறுவதற்குள் பரம சங்கடமாகப் போய் விட்டது. சாயங்காலம் புறப்படும் 6-25 ரயில் புறப்பட்டுவிட்டது. இனிமேல் இராத்திரி பத்து மணிக்குத்தான் கடைசி வண்டி.
"நீ ஓட்டலில் போய் ஏதாவது சாப்பிடேன்" என்றார் பெருமாள் பிள்ளை.
"வீட்டுக்குப்போய் பிறகு பார்த்துக் கொள்ளுகிறது. அம்மைக்கு ஒரு மருந்து வாங்க வேண்டும்; கடைக்குப் போய்விட்டு வந்து விடுகிறேன்; நீங்கள் வெயிட்டிங் ரூமில் இருங்கள்" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் சுப்பிரமணியம்.
2
எமனை எதிர்பார்த்து
தாசில் பிள்ளை வீடு கிராமத்தில் அதிகாரமிடுக்கு உள்ளது என்றால் அசைந்தாடும் பெருமாள் பிள்ளையின் வீடு வினோதமானது. விதிக்கும் பிரமனுக்கும் சிரிக்க வேண்டும் எனத் தோன்றின பொழுது எல்லாம் இந்த மாதிரி ஒரு ஜீவனைப் பிறப்பித்து விட்டு விடுவார்கள்போலும். அசைந்தாடும் பெருமாள் பிள்ளை பூர்வீகத்தில் மருதூர் வாசி வாலிபத்தில் ஜீவனோபாய நிமித்தமாக தாமிரவருணிக் கரையை விட்டு சென்னை வரை வந்து நானாவித உத்யோகங்கள் பார்த்தவர். ஒரு தடவை சம்பிரதிப் பிள்ளையாக வேலை பார்த்தார். சத்திரத்துக் கணக்கப் பிள்ளையாக இருந்தார். மடத்துத் தவசிப் பிள்ளையாக இருந்ததாகவும் அவரைப் பிடிக்காதவர்கள் சொல்லிக் கொள்ளுவார்கள். மனிதர்களுக்கு இயல்பான குரோத புத்திதான் இதற்குக் காரணமே தவிர உண்மை அப்படியல்ல; முன்பு ஏதோ ஒரு காலத்தில் குடும்பத்தின்மீது வெறுப்பு ஏற்பட்டு சன்னியாசம் வாங்கிக் கொள்ளுவது என்ற வைராக்கியத்துடன், சிதம்பரச் சாமி என்பவருடன் சிறிதுகாலம் சுற்றித் திரிந்தபோது, சாமி சமையலுக்கு உட்காரும்போது அவர் காய்கறி நறுக்கிக் கொடுத்ததுண்டு; உலைப் பானையில் சோறு பதம் பார்த்ததுண்டு; குழம்புக்கு புளி கரைத்துக் கொடுத்ததுண்டு; ஆனால் தவசிப் பிள்ளையென சமையலுக்கு நின்றதில்லை. கூடமாட உதவியதை வைத்துக்கொண்டு ஊர்ச்சனங்கள் ஆயிரம் சொல்லுவதைக் காதில் போட்டுக் கொள்ளலாமா. சிதம்பரச் சாமியிடம் அவர் கற்றது சைவ சித்தாந்தம் அல்ல; நாவுக்கு ருசியாக வெந்தயக் குழம்பும் காணத் துவையலும் எப்படிச் செய்துகொள்வது என்பதுதான். இவ்விருவரும் ஒருமுறை திருநெல்வேலி ஆனித் திருநாளுக்கு வந்திருந்தபோது, ரத வீதியில் தற்செயலாக திருவிழாப் பார்க்க வந்திருந்த இவரது குடும்பம் இவரை அடையாளங் கண்டு கொண்டு விட்டது. நடுத்தெருவில் ஆண்டியை வழிமறித்து வீட்டுக்கு இழுத்துப் போவது என்பது எந்தப் பத்தினிக்கும் ஏலாத காரியம் என தீர்மானித்து ஸ்ரீமதி அசைந்தாடும் பெருமாள், தன்னுடன் வந்த மூன்று பெண் குழந்தைகளுடன், உலகைத் துறந்து ஊரூராகச் சுற்றித் திரியும் இருவரையும் தொடர்ந்தாள். சிதம்பரச் சாமியும் அசைந்தாடும் பெருமாள் பிள்ளையும் அங்கிங்கெனாதபடி நேராக குறுக்குத் துறைக்குச் செல்ல, பத்தினியின் விருப்பமும் எளிதில் நிறைவேறியது. மண்டபத்திலமர்ந்த அசைந்தாடும் பெருமாள் பிள்ளையிடம் அப்பா எனக் கண்ணைக் கசக்கிக்கொண்டு நிற்க தாயார் ஏற்பாடு செய்தாள். பிரிந்தவர் கூடிய பின் நடப்பது எது என்பது பற்றி பேசவும் வேண்டுமா. யாவரும் எதிர்பார்த்தது போல சிதம்பரச் சாமிக்கும் காவித்துணிக்கும் ஒரு முழுக்குப் போட்டுவிட்டு, நெடுங்காலமாக தான் விட்டுப் பிரிந்த சித்திரையம்மாள் என்ற தமது பத்தினியைத் தொடர்ந்து இல்லறம் புகுந்தார். தான் வீட்டை விட்டு ஓடிப்போய் விட்டதினால் கூரையிற்று விழவில்லை; போகும்போது கொடியில் தாம் விட்டுப்போன கோவணம் போட்ட இடத்திலேயே கிடக்கிறது என்பதாதிய நுண் விஷயங்களைக் கண்டு மனைவியின் செட்டுக்கும் குடித்தனத்துக்கும் மானஸீகமாக வாழ்த்தினார்.
பிரிந்தவர் கூடி இல்லறம் நடத்தும் போதுதான், வாழ்வில் பெரும் பகுதி வியர்த்தமாகக் கழிந்து விட்டதினால் இனிமேலாவது செல்வத்தை சீக்கிரம் திரட்டிக் குவிக்க வேண்டும் என்று நினைத்து அதற்கான முயற்சிகளை அவருடைய இயல்புக்கு பொருந்திய வகையில் செய்துவந்தார்.
இந்தச் சமயம் பார்த்துத்தான், பணம் திரட்டுவதற்கு குறுக்கு வழி தெரிந்த உப்புக் குறவன் வந்தான். ஒருநாள் சாயங்காலம், ரேகை மறையும் நேரம், அசைந்தாடும் பெருமாள் பிள்ளை அனுட்டானாதிகளை முடித்துக்கொண்டு வருவதற்காக நயினார்குளம் நோக்கிக் கொண்டிருந்தார்.
வந்து நின்றவன், வெகுநாள் பழகியவன் போல, "சாமீ" என்றழைத்தான்.
தம்மை, முந்திய ஆசிரமத்தில் சந்தித்தவனோ என்று நினைத்துக் கொண்டு, 'யாரடா' என்று கூர்ந்து கவனித்தார். கிருதாவும் மீசையும் முண்டாசும் பாசிமணியும் திகழ்ந்த உருவத்தில் தமக்குப் பரிச்சயமான விசேஷ அடையாளம் எதுவும் தெரியவில்லை.
என்னமோ ஏதோ என யோசிக்கும் சமயத்தில், "சாமீ ஒரு ரகசியம்" என்றான்.
"என்னடா ரகசியம்." என்றார் பிள்ளை."நடுத்தெருவில் நின்று எப்படிச் சொல்லுவது தாருசாவுக்கு வாருங்க" என்றான்.
இதென்ன ரகசியமோ என மனம் துழாவி ஊசலாட அவனை அழைத்துக்கொண்டு முடுக்கு வழியாக, வளைவுக்குள் சென்று, நடையில் நின்றபடி, "ஏளா, பட்டாலை விளக்கைத் தூண்டு" என்று உத்தரவிட்டார்.
"இங்களை யாருமில்லையெ. நீ சொல்லுவதைச் சொல்லேன்" என்று குறவனிடம் கேட்டார்.
குறவன் மடியிலிருந்து இரண்டு உலோகக் கட்டிகளை எடுத்துக் கொடுத்து, "இதைக் குத்துவிளக்கருகில் கொண்டு வைத்துப் பார்த்து விட்டு வாருங்கள்" என்று சொன்னான்.
பிள்ளையவர்கள் அவை இரண்டையும் கொண்டு விளக்கருகில் பார்த்தார். துல்லிய மஞ்சள் வர்ணத்துடன் பளபளவென்று மின்னியது. தங்கம்! தங்கம் என்ற நினைப்பு தட்டியதுமே அவருக்குக் கை வெடவெடவென்று நடுங்க ஆரம்பித்தது.
திரும்பி நடைவாசலுக்கு ஓடோடியும் வந்து, "தங்கமில்லா" என்று அடித் தொண்டையில் கேட்டார்.
"ஆமாம் ஐயா! தங்கந்தான். நல்ல சொக்கத் தங்கம். எனக்கு ரசவாதம் கொஞ்சம் பொளக்கமுண்டும்; செம்பை, ஒரு மூலிகையை வச்சு பொடம் போட்டா தங்கமாயிரும்; நீங்க கேள்விப்பட்ட தில்லியோ?" என்றான்.
பிள்ளையவர்கள் தலையசைக்க, தான் வந்த காரியம் அவருக்கு தங்கம் செய்து கொடுப்பதற்காகவே எனவும், நல்ல பெரிய செப்புப் பாத்திரமும் ரூபா நூறும் கொடுத்தால் நாளைக்கு இதே நேரத்தில் பாத்திரத்தை உருக்கி எடைக்கு எடை தங்கமாகத் திருப்பித் தருவதாகச் சொன்னான்.
பணம் சம்பாதிக்க சுருக்கமான வழி கிடைத்தால் யார்தான் அதன் மோகவலையில் விழாமலிருப்பார்கள். பிள்ளையவர்கள் உள்ளே சென்று தங்கப் பாளங்களைக் காட்டி குசுகுசுவென்று ஓதினார். அம்மையாருக்கு உடல் பூரித்து போய்விட்டது. கையில் ரொக்க மில்லாததினால் கட்டைக் காப்பைக் கழற்றிக் கொடுத்து, குறவனை எப்படியும் சம்மதிக்கச் செய்ய வேண்டும்'என சொல்லி, குடிதண்ணீர் ஊற்றி வைத்திருந்த தாமிரவருணித் தண்ணீரை சாக்கடையில் கொட்டிவிட்டு பாத்திரத்தைக் கொடுத்துவிட்டாள்.
குறவன், பாத்திரத்தின் எடைக்கு, கையில் கொடுத்த தங்கம் போதாது; செலவு ஜாஸ்தி என்று பிகுப் பண்ணினான். எப்படியாவது செய்துகொண்டு வந்து விடு, பிறகு சன்மானம் செய்கிறேன் என்றார் பிள்ளை.
குறவனிடம், அவன் கொடுத்த தங்கப் பாளத்தையும் நீட்டினார் பிள்ளை. "என்னை நீங்கள் எப்படி நம்புவது; அது இருக்கட்டும்; நாளைக்கு இந்த நேரத்துக்கு இங்கே வரும்போது வாங்கிக் கொள்ளுகிறேன். நான் குறுக்குத்துறை மண்டபத்துக்கு பக்கத்தில்தான் தற்சமயத்துக்கு குடிசை போட்டிருக்கிறேன்" என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.
அன்றிரவு அசைந்தாடும் பெருமாள் பிள்ளைக்கும் ஆச்சிக்கும் தூக்கம் வரவில்லை. திடீரென்று கூரையைப் பொத்துக்கொண்டு தெய்வம் வந்து கொடுக்கத்தான் செய்வேன் என்று மல்லுக் கட்டினால் யாருக்குத்தான் தூக்கம் வரும். அம்மையாருக்கு காது நகை தோளில் இடிபடுவது போல பாவனை; பிள்ளைக்கு வயல்வரபபைப் பார்த்துவர யாரை நியமிக்கலாம் என்று நினைப்பு.
"நீங்க விடியன்னையே போயி குப்பு ஆசாரிகிட்ட இந்தத் தங்கத்தைக் குடுத்து ரெண்டு காப்பு பண்ணிப்புடச் சொல்லுங்க. கட்டெக் காப்பெக் காங்கலேண்ணா குளத்திலே நாலு பேரு நாலு சொல்லுவா; நமக்குத்தானே கேவலம்" என்றாள் அம்மையார்.
"அதுக்கென்ன பெரமாதம்; விடியன்னப் பார்த்துச் சொன்னாப் போகுது" என பெருமிதமாக பேசிய பிள்ளையின் மனசில் வறண்டு மாண்டுபோன காமம் தழைத்தது.
"என்ன ஒங்களுக்குத்தான்" என பிணங்கிக்கொண்டே இணங்கினாள் நாற்பது வயதை எட்டும் சகதர்மிணி.
பலபல என்று விடிந்து வரும் பொழுது குப்பு ஆசாரி, பணம் சம்பாதிக்க பிள்ளையவர்கள் நாடிய சுருக்கு வழி, அவரது கழுத்தில் சுருக்கு போட்டுவிட்ட வழி என்பதை சற்று நாசூக்கற்ற முறையிலேயே கடுமையாகச் சொல்லித் தெரிவித்தார். ஆசாரி வாசலுக்கு மிடுக்கு நடைபோட்டு வந்த அசைந்தாடும் பெருமாள் பிள்ளை அசந்து போனார். ஆனால் மெட்டு விட்டுக் கொடுக்காமல் பேசுவதாக நினைத்துக்கொண்டு ஏதோ குப்பு ஆசாரியிடம் பிதற்றிவிட்டு, தங்கப் பாளங்கள் என மதித்த பித்தளைக் கட்டியுடன் நேராக குறுக்குத்துறைக்குச் சென்றார். ஓடுகிற திருடனுக்கு ஒன்பதாமிடத்தில் ராஜா என்பார்கள். பிள்ளையவர்கள் வரப் போகிறார்கள். அவர்கள் கையில் அவசியம் அகப்பட்டுக்கொண்டு தான் பண்ணின பாவத்துக்கு பிராயச்சித்தம் செய்துகொள்ள வேண்டும் என்றா நினைக்கப்போகிறான் குறவன். குறுக்குத்துறை முழுவதிலும் மண்டபம், மரத்தடி ஒன்று விடாமல் தேடிவிட்டு, சுப்பிரமணிய சுவாமியின் அருள் கடாட்சம் பெற்றவராய் பகல் சுமார் இரண்டு மணிப் போதுக்கு வீட்டுக்கு அசைந்தாடி வந்து சேர்ந்தார்.
"இதுவும் ஒரு சோதனை, திருச்சிற்றம்பலம்" என்ற பீடிகையுடன் தமது சகதர்மிணியின் ஆவேசத்தைத் தேக்க முயன்றவராக, கொடியில் கிடந்த மாற்று வேட்டியை எடுத்து உடுத்திக்கொண்டு நனைத்துத் துவைத்துக் கொணர்ந்ததை, பிரமாத ஜாக்கிரதையுடன் கரைக்குக் கரை சமன் பார்த்து மடித்து கொடியில் போட்டார்.
என்ன, என்னவென்று ஒற்றைக்காலில் நின்று கேள்விச்சரம் தொடுத்த மனைவிக்கு, *நீ எலையைப் போடு, பொறவு சொல்லுதேன்" என்றார்.அப்பொழுதே அம்மையாருக்குப் பகீர் என்றது. கையில் உறை மருந்து போல இருந்த சொற்ப ஆதாயமும், பலமுமாக நின்ற நகை போனதில் அந்த அம்மையார் பட்ட அவஸ்தை சொல்லமுடியாது.
"இப்படியும் ஏமாறுவாகளா ஒரு ஆம்பளை" என்பதுதான் அவளது புலப்பம்.
இம்மாதிரியான விபரீத நிலையில் தான் கர்ப்பிணியானது அந்த அம்மாளுக்கு மகா மானக்கேடாக இருந்தது.
வருஷங்கள் பல கடந்து நிகழ்ந்த கர்ப்பமாகையால், தான் மாண்டு போவது நிச்சயம் எனவும் நினைக்க ஆரம்பித்தாள். "இந்தக் கூத்தை நினைக்கும்போது நாக்கைப் பிடுங்கிக்கொண்டு செத்துப் போகலாமா என்றிருக்கிறது; கட்டாயம், சாகாமல் போனால் தற்கொலையாவது செய்து கொள்ளுவேன்; அதற்குமுன் என்னுடைய பெண்களுக்கு கலியாணம் செய்து வைத்துப் பார்த்துவிட்டு சாக வேண்டும்" என்று அசைந்தாடும் பெருமாள் பிள்ளையை இடைவிடாமல் நச்சரித்தாள். நச்சுப் பொறுக்க முடியாமலும், கலியாணம் செய்து வைப்பது தம் கடமை என்று தமக்கு உள்ளூர ஏற்பட்ட பொறுப்பு உணர்ச்சியினாலும் வரன் தேடி அலைந்தார்.
இந்த விஷயத்தில் பிள்ளையவர்களுக்கு தெய்வ சகாயம் இருந்தது என்று சொல்ல வேண்டும். மூன்று பெண்களுக்கும் வெகு சீக்கிரத்தில் திருமணம் நடைபெற்றது. முதல் பெண்ணான பார்வதியை வட ஆற்காடு ஜில்லாவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உத்யோகம் பார்க்கும் வேலாயுதம் பிள்ளைக்கும், இரண்டாவது பெண் விசாலாட்சியை வேலாயுதம் பிள்ளையின் சகோதரரான சிதம்பரம் பிள்ளைக்கும் கலியாணம் செய்து வைத்தார். சிதம்பரம் பிள்ளை திருநெல்வேலி டவுணில், கீழப்புதுத்தெருவில் உள்ள தம் சொந்த வீட்டின் வாசலில் போர்டு தொங்கப் போட்டிருக்கும் பி.ஏ., பி.எல். இந்த வீடு தவிர, நயினார்குளத்துப் பற்றில் இரண்டு கோட்டை விதைப்பாடு உண்டு. வேலாயுதம் பிள்ளையின் பங்குக்குள்ள வீட்டை வாடகைக்கு விட்டு, வாடகையை வசூல் செய்வது, அவரது பாகத்துக்குரிய வயல் விவகாரங்களைக் கவனிப்பது ஆகிய காரியங்களைச் செய்து வருவதுடன் கோர்ட்டுக்கும் இடையிடையே சென்று வந்தார்.
மூன்றாவது பெண்ணின் பெயர் சித்திரை. அவளுக்குத்தான் படித்த நகரவாசியான மாப்பிள்ளை கிடைக்கவில்லை. மறுகால்மங்கலத்தில் அவளுக்கு முடிச்சுப் போட்டிருந்தது. வயிரவன் பிள்ளை குமாரன் பால்வண்ணம் பிள்ளை என்ற பிள்ளையாண்டான் அவளுக்குக் கணவனாக வாய்த்தான். இந்தத் திருமணத்துக்கு வெகு காலத்துக்கு முன்பே [வயிரவன் பிள்ளை] காலமாகி விட்டதினால், பால் வண்ணம் விதவை வளர்த்த பிள்ளையாக சர்வாதிகாரிகளின் சகல குணங்களையும் பெற்று, நாலாவது வகுப்பு வரை இங்கிலீஷ் படிப்பும் பெற்று, தாயார்மீது தனியரசு செலுத்தினான். இவர்களது வளைவு விசையாநல்லூர் ஆச்சியின் வீட்டுக்குப் பக்கத்தில் ஊரின் கீழ்க்கோடியில் உள்ளது. இவனது தாயாரான மீனாட்சி ஆச்சிக்கு விசையா நல்லூர் முதுகுன்றுதான் மந்திரியும் பொக்கிஷமும் ஆகும்.
திருமணம் முடிந்த மூன்றாவது மாதத்தில், அசைந்தாடும் பெருமாள் பிள்ளையின் மனைவி, சொல்லி வைத்தது போல, பிறவாத குழந்தை பெருநெறி காட்ட அதைத் தொடர்ந்தாள். பிள்ளையவர்களின் வாழ்வில் இதுவே முக்கியமான கட்டம் என்று சொல்ல வேண்டும். வாழ்வில் தன்னை நம்பி சடலத்தைத் தாங்கி சொல்ல முடியாத தொல்லைகளையும் அவமானங்களையும் சகித்துக் கொண்டு தம்முடைய முட்டாள்தனமான முயற்சிகளில் எல்லாம் அசையாத நம்பிக்கை கொண்டு, தம்முடைய கருத்துகளுக்கே பின்பலமாக நின்று வந்தவள் அவள்தான் என்பதை உணர்ந்தார். உயிர் அகன்று வெற்று உடலமான பிறகு உணர்ந்து என்ன பயன்! அவளுக்கு கருமம் செய்வதற்கு ஒரு புத்திரனைக்கூடக் கொடுக்க முடியாது வாழ்வு வீணாகக் கழிந்துவிட்டதே என்று மனம் நொந்தார். பெண்கள் மூவரும் வந்தார்கள், மண்டையை மோதிமோதி அழுதார்கள்; பிறகு கணவன்மாருடன் திரும்பி விட்டனர்.
வெறிச்சோடிக் கிடந்த வீட்டில் அசைந்தாடும் பெருமாள் பிள்ளை வாஸ்தவமான துறவறம் பூண்டார் என்று சொல்ல வேண்டும். பதினாறு நாட்கள் கழிந்த பிற்பாடு பெருங்கல் விழுந்ததினால் கொந்தளித்துக் குமைந்த நீர்நிலை மறுபடியும் அமைதி கொள்வது போல சத்தம் அடங்கியது. ஆனால் பிள்ளையவர்களின் மனப் புகைச்சல் ஓயவில்லை. அடிக்கடி அவர் தமது மனைவியின் வாழ்வு முழுவதையும், அதில் தம் நினைவில் பதிந்த கட்டங்கள் முழுவதையும் திரும்பத் திரும்ப யோசிப்பார்.
இனி என்ன செய்வது. திருவாவடுதுறைக்குப் போய் விடலாமா என்று நினைத்தார். திருநெல்வேலியில் இருந்த வீடு வாடகை வீடு; பெண்களையோ கரையேற்றி விட்டாகி விட்டது. இனி எங்கிருந்தால் என்ன என்ற ஒரு நிசாரம்.
பதினாறு கழிந்து மறுகால்மங்கலத்துக்கு திரும்பிச் செல்லும்போது தனது தகப்பனாரையும் உடன் அழைத்துக்கொண்டு சென்றுவிட வேண்டும் என்றுதான் [சித்திரையின்] ஆசை. ஆனால் புருஷன் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமலிருக்கும்போது எப்படி சுயமாகக் கூப்பிடுவது. மனவேதனையுடன் திரும்பிச் சென்றாள். திருநெல்வேலியிலிருந்து எட்டு மைலையும் மாட்டு வண்டியில் எட்டு அக்னிக் குண்டங்களாகத்தான் அவள் பாவித்தாள். வீட்டு வாசலில் வண்டி நின்றதும் பால்வண்ணம் இறங்கினான். பிறகு அவள் இறங்கினாள்.
வாசலில் நின்றிருந்த மாமியார், "ஏ, [சித்திரை], உங்கப்பாவை ஏன் கூட்டிக்கொண்டு வரவில்லை? அங்கெ தன்னந்தனியா விட்டுப் போட்டு வந்திட்டியே" என்றாள்.
சித்திரை தன் புருஷனைப் பார்த்தாள்; புருஷன் ஆகாசத்தைப் பார்த்தான்."ஏ,ஐயா, நீயுமா பேசாம வந்திட்டே" என்றாள் தாயார்.
"போரப்ப நீ சொல்லி விட்டியா?" என்று அதிகாரம் பண்ணினான் பால்வண்ணன்.
"அதுவும் சரிதான்; என்ன மேயப்போற மாட்டுக்கு கொம்பிலியா புல்லெக் கட்டி அனுப்புவாக, வண்டியை அவுக்காம திருப்பியடிச்சிக்கிட்டுப் போயி, அவுகளை அளச்சிக்கிட்டுவா, நல்லாத்தான் காரியமா இருக்கு" என்றாள் தாயார்.
"நான் காப்பி சாப்பிட்டுப் போட்டுத்தான் போவேன்" என்றான் பால்வண்ணன்.
"போன எடத்திலே புத்தியா காரியம் நடத்தத் தெரியாமெ தடி மாதிரி வந்திருக்கே, ஒனக்கு வாரியக் கொண்டைக்கு காப்பி வேற கேடா; வண்டியே அப்படியே திருப்பி அடிச்சிக்கிட்டுப் போயி அவுகளைக் கூட்டிக்கிட்டு வா" என்று சொல்லிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள்.
"அத்தே, அத்தே வந்த காலோடே அவுகளைக் கோவியாதிய; ஒரு நொடியிலே காப்பியைப் போட்டுக் குடுத்துப்புடறேன்" என்று சொல்லிக்கொண்டு தொடர்ந்தாள் சித்திரை.
"நீயுமாச்சு, உன் புருசனுமாச்சு! எப்பிடித்தான் குடும்பத்தை கட்டிக் கொண்டாரப் போறியளோ; அவன்தான் வாயிலெ மண்ணெ வச்சிக கிட்டிருந்தான் என்றால் உனக்கெங்கே மதி போச்சு?" என்றாள் மாமியார்.
மதில் எட்டி நின்ற சாலாச்சி ஆச்சி, "ஒன் மகன் கெட்டிக்காரத்தனத்துக்கு, அவளையேன் பேசுதே; அவ எப்பிடிக் கூப்பிடுவா?" என்றாள்.
இப்படியாக விவகாரம் ஓய்ந்தது. அன்று மாலை பொழுது சாய்ந்து சுமார் ஒன்றரை நாழிகை கழித்து, அசைந்தாடும் பெருமாள் பிள்ளை தம்முடைய மருமகனுடன் மறுகால்மங்கலத்தில் வந்து குடியேறினார். அவருடன் வந்த சாமான்கள் வெகு சொற்பம். மாற்று வேட்டிகள் ஒரு ஜோடி; திருவாசகம் ஒரு பிரதி; ஒரு சம்புடம் திருச்செந்தூர் இலை விபூதி; நிலைகெட்டுக் குழம்பும் மனம்.
சித்திரை வளைவில் உள்ள ஒரு வீட்டைப் பெருக்கி மெழுகி, அங்கு ஒரு குத்துவிளக்கும் ஏற்றிவைத்து தகப்பனாருக்கு இடவசதி செய்து வைத்திருந்தாள். வந்தவர்களுக்கு வென்னீர் கொடுத்து, கால் முகம் சுத்தி செய்துகொள்ளச் சொன்னாள்.
தகப்பனாரை பார்த்ததும் தாயாரின் ஞாபகம் வர கண் கலங்கியது சித்திரைக்கு அசைந்தாடும் பெருமாள் பிள்ளைக்கு தமது மனைவியின் இருபத்தியைந்து வருஷ பணிவிடை நினைவில் நின்றது. கண் கலங்கவில்லை. நெஞ்சில் சிவபுராணம் குடிபுகுந்து விட்டதினால் கவலை விட்டொழிக்க மனம் பிரயத்தனப்பட்டது.
அன்று அந்த வளைவில் இருவர் உறங்கவில்லை. ஒன்று சித்திரை; மற்றது அசைந்தாடும் பெருமாள் பிள்ளை.
அவர் ஊருக்கு வந்தது ஊராருக்குத் தெரியாது. ஊரார் பொருட்படுத்தவில்லை. ஆனால் மறுகால் மங்கலத்தின் முடிசூடா மன்னரானார் அசைந்தாடும் பெருமாள் பிள்ளை. முதலில் தம்முடைய மருமகனுடைய நிலபுலன்களை கவனித்து வருமானம் சிதறாமல் பாதுகாத்தார். அய்யா என்று கை நீட்டி வந்தவனுக்கு இயன்றவரை உதவினார். அதனால் ஊர் ஏழை மக்களின் இதயத்தில் குடிபுகுந்தார். பெரிய நாயன் என்றால் ஊர்ப் பள்ளரின் தெய்வம் என்ற பொருள் ஏற்பட்டது. இந்த நிலையில் சப் இன்ஸ்பெக்டர் மாப்பிள்ளை சர்க்கிள் இன்ஸ்பெக்டராகி, மனைவியின் ஆலோசனைப் பிரகாரம் அங்கு மாமனார் பெயரில் நிலம் வாங்கினார்.
❍❍
அசைந்தாடும் பெருமாள் பிள்ளை இப்படியாக மறுகால் மங்கலத்தில் வந்து குடியேறி இருபது வருஷங்கள் கழிந்துவிட்டன. கீழ வீட்டுப் பாட்டையா எனவும் பெரிய பிள்ளை எனவும் குறிப்பிட்டால் இப்பொழுது அசைந்தாடும் பெருமாள் பிள்ளை என்பது பொருள். அவருடைய மகளுக்கும் தலையில் நரை ஓட ஆரம்பித்து விட்டது. மருமகப் பிள்ளை பால்வண்ணம் பிள்ளைக்கும் ஐந்தாறு வருஷங்களுக்கு முன் சற்றுத் தளதளப்பான சரீரமும் தொப்பையும் இருந்தன என்பதற்கு உடம்பில் அத்தாட்சி உண்டு. அவருடைய குடுமியும் அந்தக் காலத்து விஸ்தீர்ணங்கள் சுருங்கி மாட்டுக் குளம்பு ரீதியில் ஆசாரமாக சைவக் குடுமியாகி விட்டது. பிள்ளையவர்களின் நடை நொடியும் போக்கும் வாழ்வு தேய்பிறையாகச் சென்று வருகிறது என்பதையே காட்டியது. அவருக்கும் மூன்று குழந்தைகள் பிறந்துவிட்டன. மூத்த பையன் நாராயணன் தனது தந்தை வழிப் பாட்டனின் பெயர் தாங்கி, பத்தமடைப் பள்ளிக்கூடத்தில் இங்கிலீஷ் படிப்பு படித்து வருகிறான். இரண்டாவது மகள் மீனாட்சி; சமையும் பருவம். படிப்பு வாசனை என்பது சற்றுமில்லாமல், நாட்டுப்புறத்துப் பெண்ணாக கண் கவரும் ஆரோக்கியத்துடன் வளர்ந்து வருகிறாள். காதிலே சிகப்புக் கல் கம்மல், கையிலே கட்டைக் காப்பு, காலில் தேய்ந்து மாய்ந்துபோன வெள்ளிக் காப்பு. யாரிடத்திலும் துடிப்பாகத் தான் பேசுவாள். அவளது கன்னக் குழிகளில் எப்பொழுதும் சிரிப்பு ஒளிந்து விளையாடும். அள்ளிச் சொருகிய கூந்தலும், பின் கொசுவம் வைத்துக் கட்டிய சிகப்புப் புடவையும் அவளைத் திரும்பி நின்று ஒரு தடவை பார்க்கும்படித் தூண்டும். பெரிய பித்தளைக் குடத்தை அலாக்காகத் தூக்கி ஒரு சுழற்று சுழற்றி அந்த விசையில் தக் என்று இடுப்பில் வைத்துக்கொண்டு ஒற்றைக் கை வீச்சுடன் அவள் வாய்க்காலிலிருந்து வருகிறதை பசி தாகம் இல்லாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அவளுக்கு வீட்டிலே யாரிடத்திலும் பயம் என்பது கிடையாது; அதாவது பாட்டையாவைத் தவிர. "ஏ! வாயாடி, அங்கெ என்ன சத்தம்; ஒன்னைப் புடிச்சு அம்மன் கோவில் பூசாரிக்கு கட்டிப் போடுவேன்" என்று அதட்டுவார் அசைந்தாடும் பெருமாள் பிள்ளை. உடனே சத்தம் ஓய்ந்துவிடும்.
இப்பொழுதெல்லாம் பால்வண்ணம் பிள்ளை மாஜி சர்வாதிகாரி மாதிரி பெட்டிப் பாம்பாகக் காலம் தள்ளி வருகிறார். வாலிப மூர்த்தன்யத்தினால் மாமனார் சொல்லையும் தட்டிவிட்டு, நாலைந்து கூட்டாளிகளுடன் சேர்ந்து, டவுணில் பலசரக்குக் கடை வைத்து நொடித்ததின் பலன் இந்தச் சாதுத் தன்மை. இந்த விவகாரத்திலே இன்னும் ஒரு ஏமாளிப்பட்டமும் கிடைத்தது. கடை பிள்ளையவர்களின் விலாசத்தில் இருந்ததினால் கடைக்கு எதிர்சரகத்திலிருந்த போத்தி ஓட்டலில் பிள்ளையவர்களின் பெயரில் பற்றுக் கணக்கு ஏற்பாடாயிற்று. கடை நொடியும்பொழுது ஐயனுக்கு ஐநூற்றிச் சில்வானம் பற்று. அதற்கு ஈடாக கன்னடியன்கால் பாசானத்தில் கால் கோட்டை நிலம் எழுதிக் கொடுத்த கவுரவம் ஜில்லாவிலேயே பால்வண்ணம் பிள்ளையைத்தான் சார்ந்தது. ஐயர் இன்னும், "பாவன்னாவைப் போல் உண்டா; மகா நாணயஸ்தனல்லவா; அவர்கூடச் சேர்ந்த கயவாளிப் பயல்கள் கரியாக்கிப் போட்டான்" என்று சொல்லியபடி இன்றும் நிலத்தை, புத்திர களத்திர பாத்தியதையாக என்று எழுதிக்கொடுத்த பத்திரத்தின் படி ஆண்டனுபவித்து வருகிறார். பெரிய பிள்ளையவர்களோ, சந்தர்ப்பம் வாய்க்கும் போதும், சந்தர்ப்பத்தை உண்டு பண்ணிக் கொண்டும், "அல்லாவுக்கு ஆசைப்பட்டுப் போய் அரைக்கோட்டை நிலத்தை எழுதிக்கொடுத்த தானாதிப் பிரபு - அப்படியும் ஒரு நாக்கு துடிக்குமோ, அந்த நாக்கை அறுத்து நாய்க்குப் போடணும்" என கர்ஜித்துக் கொண்டிருப்பார். இவர் வசமாக இவ்விதம் ஒரு பாசுபதாஸ்திரம் கிடைத்துக் கொண்டதினாலும், கடை நொடிப்பிலிருந்தே தம் செயலில் நம்பிக்கை இழந்து போனதனாலும், இயல்பாக வயது பெருகி வருமானம் பெருகாத விபரீதத்தாலும் பால்வண்ணம் பிள்ளை பெட்டிப் பாம்பாக ஒடுங்கி, யார் கூப்பிட்ட சத்தத்துக்கும் ஏன் என்று கேட்பதும், மறுநிமிஷம் குட்டு வெளிப்பட்டு விடுமென்றிருந்தாலும், நெஞ்சுரமின்மையால், அந்த நிமிஷத்தை சமாளிப்பதற்காகப் பொய் சொல்லுவதுமாக, மறுகால்மங்கலத்தில் அல்வாப் பிள்ளை என்ற பட்டத்துடன் நடமாடி வருகிறார்.
பெரிய பிள்ளையின் பெரிய மரப்பிள்ளை இப்பொழுது ராவ் சாஹேப் பட்டம் பெற்ற உதவி போலீஸ் ஜில்லா சூப்பிரண்டு. இரண்டு தடவை நிகழ்ந்த சத்தியாக்கிரக போராட்டங்கள் இவருக்கு தமது ராஜ விசுவாசத்தைக் காண்பித்து ராவ் பகதூர் பட்டம் பெற சவுகரியம் செய்து வைத்தது. முன்பின் யோசியாமலும் சட்டத்தை உதாசீனம் செய்தும் தீவட்டிக் கொள்ளையும் கொலையும் நடத்திய இரண்டொரு பெரும்புள்ளித் திருடர்கள் இவருடைய திறமைக்கு வசதி செய்வித்து வேலையை உயர்த்திக் கொடுத்தார்கள். அவர் வெகுகாலமாக போலீஸ் சர்க்கிள் உத்தியோகத்திலிருந்ததினாலோ என்னவோ, சர்க்கிள் பிள்ளை என்ற பெயர் அவருக்கு ஒட்டிக் கொண்டது. உத்யோகத்தில் இருப்பவர்கள் நிலபுலன் வாங்குவதென்றால் சர்க்காருக்கு எழுதி அனுமதி பெற்றுக்கொள்ள இடமிருந்தாலும், சர்க்கார் உத்யோகஸ்தர்களின் எழுதாக் கிளவியின் படி அவர் தமது மாமனார் பெயரில் மறுகால்மங்கலத்தில் நில புலன்கள் வாங்கி வந்தார்.
- ↑ அவர் பாஷைப் பாண்டித்தியம் நிறைந்த நிபுணர்.