புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும்/சிற்றன்னை
சிற்றன்னை
'மார்க்' பார்க்க வந்த மன்மதன்!
சுந்தரவடிவேலு சர்வகலாசாலை பி. ஏ. பரீட்சையில் இங்கிலீஷ் இலக்கியத்தில் பிரதம பரீட்சகர். அவருக்குக் கீழ் பல உதவிப் பரிசோதகர்கள் உண்டு. மாணவர்கள் எழுதிய பதில்களைத் திருத்தி மார்க்கிட்டுப் பட்டியல் அனுப்புவதை எல்லாம் சரிபார்த்து பரீட்சை போர்டுக்குச் சமர்ப்பிக்கும் பொறுப்புடன், சில பதில்களைத் தாமே திருத்தி நிர்ணயிக்கும் பொறுப்பையும் இழுத்துப் போட்டுக்கொண்டிருக்கிறார்.
தன் மகன் ராஜாவைப் பறிகொடுத்து உன்மத்தனாகி மனம் ஸ்தம்பித்துப் போய், சொல்ல முடியாத மன உளைச்சல் என்ற சிலுவையை ஏற்ற பிறகு இந்த வருமானமுள்ள வேலை வேப்பங் காயாகவே இருந்தது; என்றாலும் பொறுபபை ஏற்றுக்கொண்டு கடைசி நேரத்தில் உதறித் தள்ளுவதற்கு சர்வகலாசாலையில் மாற்றுக் கைகள் தயாராக வைத்துக்கொண்டிருக்கிறார்களா?
அதனால் அசுரகதியில் வேலையில் ஈடுபடுகிறார். இந்த வேலை அவருடைய மன வேதனைக்கு 'ஒத்தடம்' கொடுத்தது.
சுந்தரவடிவேலு குஞ்சுவையும் மறந்தார் என்று சொல்லும்படி தம்முடைய வாசிக்கும் அறையிலேயே அடைந்துகிடந்து வேலை பார்க்கிறார். என்ஜினுக்குத் தண்ணீர் ஊற்றுவதுபோல் குஞ்சுவோ மரகதமோ காப்பி கொண்டு போவார்கள்.
"அப்பா காப்பி" என்ற குழந்தையின் மழலை மந்திரம் அவருடைய கைகளை நீட்டச் செய்யும். சமயா சமயங்களில் அவளை இழுத்து முத்தமிடச் சொல்லும்.
மரகதம் அவருடைய வேலைக்குக் குந்தகம் வராமலும், வேலையால் அவரது உடல் க்ஷீணிக்காமலும் அவர் அறியாமலே அவரைப் போஷித்துப் பணிவிடை செய்தாள். பணிவிடையில் மனம் சிறிது ஆறுதல் கொண்டது. பணிவிடையில் குஞ்சுவும் மரகதமும் ஒன்றினர். மாணவர், உலகத்தில் சர்வ விவேக அளவுகோல். கடவுள் தமக்கு அந்தத் தன்மையைப் பெறுவதற்கு எத்தனை மார்க் வாங்கினார் என்றுகூடக் கேட்கும் சர்வ சூன்ய மனத்தெம்பு படைத்தவர்கள், மாணவர்களும் அவர்கள் புத்தியை 'பாலிஷ்' செய்து தயாரிக்கும் அவர்களுடைய ஆசிரியர்களும். சர்வகலாசாலைகள் வித்வத்தின் விசேஷத்தன்மை பூண்டு, தன் திறமையால் பூத்து மலராமல், சப் மாஜிஸ்திரேட் கோர்ட்டின் எட்டாங்கிளைத் தாயாதியாக சிவப்பு நாடா வித்தையைச் செய்து வருவதால், மார்க்கை நம்பாத ஆசிரியர், பூசை செய்யும் விக்கிரகத்தின் தெய்வீகச் சக்தியை நம்பாத பூசாரி மாதிரி ஆகிவிடுகிறார்.
அப்படிப்பட்ட பூசாரி சுந்தரவடிவேலு. இந்த சர்வகலாசாலைக்கு அவா தகுதியற்றவர். நிர்வாண லோக உபமானம் மாதிரி. இருந்தாலும் செய்கிறதைச் சரியாகச் செய்ய வேண்டும் என்பதில் அபார 'உரித்து' உள்ளவர்.
சுந்தரவடிவேலு தம் வீட்டுக்குள் அடைபட்டுப், பையன்கள் "அதற்கென்ன சந்தேகம்" என்று அழைப்பதையெல்லாம் சகித்து, அவர்கள் விதியை நிர்ணயிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கையில், தெருவில், அவர் வசம் தன் விதியைச் சிக்கவைத்துத் தவிக்கும் ஒரு மாணவன் நடைபோடுகிறான். மார்க்கை அறிந்து கொள்ளுவதிலும் சாத்தியமானால் அதைத் திருத்துவதிலும் மாணவர் காட்டும் பிரயாசை மஹிராவணன் உயிரைத் தேடிப்போன அநுமாருக்குக்கூட இருக்காது. பணத்தெம்பு சிறிது இருந்துவிட்டாலோ கேட்கவே வேண்டியதில்லை. குறிப்பிட்ட ஆசிரியர் இந்த விபசாரித்தனத்தில் ஈடுபடுகிறவராக இல்லாவிட்டால், அவா வீட்டு வேலைக்காரனின் யோக்கியதாம்சம் அவர்கள் கவனத்திற்கு வரும்.
அப்படி வந்தவன் சுந்தரவடிவேலுடைய வேலைக்காரன். எஜமான் வெளியே போயிருக்கும் சமயத்தில் பையனை அனுமதிப்பதாக வாக்களித்துவிட்டான். ஆனால் சுந்தரவடிவேலு வீட்டைவிட்டு வெளியேறுகிறவராகத் தென்படவில்லை.
இந்தப் பையன் தெருவில் நடைபோட்டுக்கொண்டு மார்க்கின் மேல் ஏகாக்கிர சிந்தனையுடன் யோகம் செய்ய முடியும். கண்களை நாலா திசையிலும் திருப்பிலிட்டான்.
சுந்தரவடிவேலு வீட்டின் படுக்கையறை மாடியில் இருந்தது. அதில்தான் மரகதம் தன் உடைகளை வைத்துக்கொண்டிருப்பது. அவள் உடை மாற்றுவது என்றாலும் தலை கோதிச் சீவிக்கொள்ளுவது என்றாலும் அங்கேதான்.
மாணவன், பலமுறை பரீட்சை மண்டபத்தில், புத்திசாலித்தனத்தை சூது விளையாடிப் பார்த்தும் சலியாத தனியாண்மை தறுகண் வீரன். Mofussil Graduate மோஸ்தர். ஆயிரக்கால் மண்டபம் அமைக்க ஆரம்பித்து இரண்டு தூண்களை நிறுத்தியபின் காரியத்தையே மறந்து போனதுபோல கன்னத்திற்கு ஒரு தூண் கட்டிய கேரா. தண்ணீர் விட்டுத் தளதளப்பாக வளர்க்காதது போன்ற கனத்த மயிரை அரும்பு மீசையாக்கும் முயற்சி. வர்ணம் பூசிய வெள்ளைக்காரச்சி உதடுபோல் சிவப்பேறிய உதடு. நீளக் கிராப்பு - சீவாமல் பேணாமல் இருந்தால் அகில இந்திய பேன் காங்கிரஸ் கூடுவதற்கேற்ற இடவசதி. கழுத்திலே மனதின் 'பெட்டைத்தனத்தை'க் காட்டும் மெல்லிய தங்கச் சங்கிலி. இங்கிலீஷ் ட்வில் ஷர்ட்; கழுதை பொதி சுமந்த மாதிரி பாத் டவல் அலங்காரம். இடையில் நிர்வாணமில்லை என்பதை உய்விக்க வேஷ்டி. காலில் பெட்டைமாறி சிலிப்பர். Second rate cinema actor cum saloon - barber appearance.
இப்படியாக அலங்காராதிகளுடன் 'ரோந்து' வந்துகொண்டிருக்கும் வாலிபன் கண்கள், சட்டக்காரச்சியைக் கண்டால் பயத்தில் கண்களைத் திருப்பிக்கொள்ளுவதும், தமிழச்சியைக் கண்டால் field glass lens மாதிரி கண்களைத் திறப்பதுமாகக் காலங்கழிக்கிறான். கிராமப் புறத்து பயம். இவன் கண்களுக்கு மரகதம் தென்பட்டாள்.
வகிடு எடுக்க ஜன்னல் பக்கம் வெளிச்சத்திற்காக நின்றால், தன் பிரத்தியேகக் கண்களுக்கு என்று நினைத்துவிட்டான் இந்த மன்மதன். நிர்ப்பயமாக மச்சில் உடை மாற்றிக்கொள்ளுபவளுக்கு கீழே ஒரு ஜோடிக் கண்கள் தெறிகெட்டு வெறித்துக்கொண்டு ஏறச் சொருகுகின்றன என்பது தெரியாது. இவன் தனக்காகவே இந்தப் பிரத்தியேகக் காட்சிகள் என்று முடிவு கட்டி 'சந்தர்ப்பத்திற்காக'க் காத்திருக்கிறான்.
சந்தர்ப்பம் வந்து சேருகிறது.
சுந்தரவடிவேலு வேலை முடிந்துவிட்டதால் பட்டியல்களுடன் பரீட்சை போர்டுக்குப் புறப்படுகிறார்.
வேலைக்காரனுக்குத் தெரியுமா மார்க் பட்டியல் போய்விட்டது என்று? எஜமானியம்மாள் வீட்டுக்குள் இருக்கும் சமயம் பார்த்து முன் வாசல் கதவைத் திறந்து வைத்து விடுவதாகவும் ஓசைப்படாமல் போய் 'மார்க்' பார்த்துக்கொண்டு திரும்பிவிட வேண்டும் என்றும் ஏற்பாடு செய்கிறான்.
வேலைக்காரன் மெதுவாகக் கதவைத் திறந்துவைத்துவிட்டுப் போய் தெருக்கோடியில் நிற்கும் பையனிடம் சொல்லிவிட்டுப் போய் விடுகிறான். 'சந்தர்ப்பம்' வந்துவிட்டது. எப்படி உபயோகப்படுத்திக் கொள்ளுவது என்ற பிரச்னையாகிவிட்டது. எப்படி இருந்தாலும் மோட்டாரும் கீட்டாரும் வைத்த புரொபஸர் அல்லவா?
குஞ்சு தனியாகத் தனக்குத் தானே விளையாட்டுக் காட்டிக் கொண்டு பொழுதைப் போக்கிக்கொண்டிருக்கிறது. சிறிது தூரத்தில் ஒரு பீடிங் பாட்டில் பால்; அந்தக் கயிறு கட்டிய ரயில் என்ஜின் கேட் குத்துக்கல் போல் இருக்கிறது.
குழந்தை, வட்டு விளையாடுகிறது. "நீதான் தோத்தே!" என்று யாரையோ சொல்லிக்கொண்டு மறுபடியும் தன் ஆட்டத்தை ஆடுகிறது.
குழந்தைக்கு நொண்டியடிக்க வரவில்லை. நொண்டியடிப்பது போல காலை உயர்த்திவிட்டு கடகடவென்று ஓடி நின்று காலைத் தூக்கிக்கொள்கிறது.இப்படியாகக் கிட்டு... சரசரவென்று வெளிக்கேட்டைத் தாண்டிக் கொண்டு உள்ளே பிரவேசிக்கிறான்.
மரகதமும் வியவகார அறிவு ஜாஸ்தியாக இருந்தாலும் குழந்தைதான். படம் பார்ப்பதில் ரொம்ப பிரியம்.
குஞ்சுவுக்கென்று சுந்தரவடிவேலு வாங்கிக் குவித்த படப் புஸ்தகங்களை எல்லாம் யாரும் இல்லாத சமயத்தில் தனியாக இருந்துகொண்டு ரசிப்பாள்.
குழந்தை வெளியே விளையாடிக்கொண்டிருக்கிறது. அவர்களோ வெளியே போயிருக்கிறார்கள் என்று நடு ஹாலில் நாற்காலியில்கூட உட்காராமல் தரையில் குப்புறப் படுத்தவண்ணம் மிருகங்கள், பட்சி ஜாதிகள் முதலியவை உள்ள படப் புஸ்தகம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். உடை குலைந்து முன்தானை சற்று விலகிக் கிடக்கிறது.
வேலைக்காரன் வந்து சொல்லிவிட்டுப் போகுமுன் வழியில் வந்து படுத்துக் கிடந்தால் நிச்சயம் 'காதல்'தான் என்று காகதாளிக நியாயமாக நிச்சயப்படுத்திக்கொள்கிறார் ஸ்ரீமான் மாணவர்! சிறிது நேரம் ஜன்னல் அருகிலேயே நின்றுகொண்டிருக்கிறான் மாணவன், அழைப்பு வரும் என்று. பாவம் அப்படி ஒன்றும் வரவில்லை.
மரகதத்தைக் கவர்ச்சித்த படம் பஞ்சவர்ணக்கிளி. முட்டையுடன் கூடிய கூண்டு. பட்சி பறந்துவந்து கூண்டருகில் உட்காரும் பாவனையில் இருக்கிறது. தாய் வீட்டில் இருக்கும்பொழுதே அவளுக்கு கிளி வளர்க்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் பிறந்த வீட்டில் அதற்கு இருந்த நிரந்தரத் தடை புருஷனிடமும் அதைச் சொல்ல மனத் தெம்பு கொடுக்கவில்லை.
அதற்கு அப்புறம் அடுத்த படத்தைத் திருப்புகிறாள்.
பையன் கதவைத் திறக்கிறான்.
அடுத்த படம் குரங்குப் படம். ஊராங் - ஊடாங் ஜாதி. பெரிசும் சிறிசுமாகக் கிளையில் உட்கார்ந்திருக்கின்றன. அதன் கிழடு தட்டிய முகத்தைக் கண்டால் அவளுக்கு எப்பொழுதும் சிரிப்பு வரும். ஆகையினால் 'களுக்' என்ற சிரிப்பு அத்துடன் நின்றது ......
பையனுக்கு 'லவ்வே' அன்று ஊர்ஜிதமாகிவிட்டது.
அவள் நிறுத்திய காரணம் சோக அலைகளே.
ராஜா இருக்கும்போது, ராஜாவும் குஞ்சுவும் அதைப் பார்த்து ரசிப்பதும் சிரிப்பதும், "உன்னைப்போல் இருக்குடா?” என்று குஞ்சு சொல்வதும், அவன் அதற்கப்புறம் அவளைப் போலத்தான் இருக்கு என அழுத்திக் கத்துவதும், அப்பாவின் தீர்ப்புக்குப் போவதும், அப்பா இரண்டு பேரையும் நையாண்டி செய்வதும் எல்லாம் நினைக்கிறாள்.
கண்களிலிருந்து நீர் சொட்டுகிறது. குரங்குப் படத்தை நனைக்கிறது.
தவிக்கும் யுவதிகளை எல்லாம் ஆற்ற வேண்டும் என்று காதல் துறைகள் பறைசாற்றுகின்றனவே.பயல் 'சுரணாவுகிற' தொழிலில் ஆரம்பிக்கிறான். கண்கள் ஏற ஏறச் சொருகுகிறது. பல் தன்னையறியாமல் இளிக்கிறது. இந்த அலங்கோலக் காட்சியில், மனிதனுடைய அசம்பாவிதமான அசட்டுத்தன அலங்கோலத்தை பரிபூரணமாகத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்த அவளுடைய தேங்கிய துக்கம், வந்த சிரிப்பையும் அடக்கிக் கோபாவேசமாக மாறுகிறது. தன் வீட்டுக்குள் தன் கௌரவத்தைக் கெடுக்க யாருக்குத் தைரியம் என்ற சீற்றம்.
"யாருடா நீ களவாணிப் பயலே? எங்கே வந்தே? யாரைக் கேட்டுக்கிட்டு உள்ளே நொளஞ்சே? எடு செருப்பை!" என்று புஸ்தகத்தால் மண்டையில் போடுகிறாள்.
அவன் பேந்தப் பேந்த விழித்துக்கொண்டு "மார்க்குப் பார்க்க வந்தேன்" என ஊளையிடுகிறான். எதிர்ப்பை எதிர்பாராததால் அவ்வளவு பீதி.
"உன்னை லவ் பண்ணினேன்; தூரத்திலிருந்தே லவ் பண்ணினேன்" எனப் பேத்துகிறான்.
"போடா வெளியே! மொதல்லெ வெளியே போ?" என்று அதட்டிக் கைகளை ஓங்குகிறாள்.
அவன் அவசர அவசரமாக ஓடுகிறான். சுற்றுமுற்றும் பார்க்கிறாள். கைக்கு வசமாக ஒன்றும் அகப்படவில்லை. ஒரு ஜதை செருப்புத் தென்படுகிறது. இரண்டையும் விரல்களில் இறுக்கிக்கொண்டு, வராந்தாவிலிருந்து இறங்குகிறவன்மீது விட்டெறிந்து, "போடா கரப்பான் பூச்சி!" என்று கதவைப் படால் என்று சாத்தித் தாழிட்டு விடுகிறாள். அதற்குள் வசை மொழி அவ்வளவும் அவளுக்குக் காலியாகிவிட்டது.
ஆவேசம் ஒடுங்க, பயம் தலைவிரித்தாடுகிறது. தான் தப்பித்த ஆபத்தின் பூரணத் தன்மையைப் புரிந்துகொள்ள அவகாசம் ஏற்படுகிறது.
நாற்காலியில் உட்காருகிறாள். மேல் மூச்சு வாங்க, உடல் நடுங்க, வியர்வை முகத்தில் அரும்புகிறது. அவன் போய்விட்டானா என்று பார்க்கவும் பயம். கூச்சலிடவும் வாய் எழவில்லை.
சிறிது நேரத்தில் மனம் கொஞ்சம் நிலைகொள்ளுகிறது.
வெளியில் போய் பூட்ஸை எடுக்கக்கூடப் பயம்.
ஜன்னல் பக்கத்தில் நின்றுகொண்டு, வெளியே விளையாடும் குழந்தையை, "குஞ்சம்மா! குஞ்சம்மா!" என்று கூப்பிடுகிறாள்.
குழந்தை தன் பொக்கிஷங்களை வாரிச் சுருட்டிக்கொண்டு, பயிற்சியற்ற குழந்தை ஓட்டத்துடன் "என்னச் சித்தீ" என்றுகொண்டு ஓடிவருகிறது.
"அந்த பூடுசெ எடுத்துகிட்டு உள்ளே வாடி" என்று கதவைத் திறந்து குழந்தை உள்ளே வந்ததும் கதவைச் சாத்தித் தாழிட்டுக் கொள்ளுகிறாள்.குழந்தையை அருகில் அணைத்து இறுகப் பிடித்துக்கொண்டு நாற்காலியில் உட்காருகிறாள்.
அவள் உடல் நடுங்குகிறது.
"ஏஞ்சித்தி ஆடுறே!" என்று அவள் முகத்தை ஏறிட்டுப் பார்க்கிறது குழந்தை.
"இப்ப கள்ளன் வந்தானே நீ பாக்கலியா?"
"கள்ளன்னா?"
"திருடன்!"
"அப்பிடின்னா?"
"இப்ப சட்டையுங்கிட்டையும் போட்டுக்கிட்டு ஒருத்தன் வரலே?..."
"ஆமாம். இப்பிடி இப்பிடி நடந்து வந்தானே" என பையனுடைய அந்தஸ்து நடையைக் காப்பி அடித்துக் காண்பிக்கிறது.
குழந்தையின் நடையைக் கண்டு சிரித்துக்கொண்டு, "ஆமாண்டி கண்ணு" என முத்தமிடுகிறாள்.
"படம் பார்க்கலாம் வாரியா?" என்கிறாள் மரகதம்.
"ஆகட்டும்." என்கிறது குழந்தை.
குரங்குப் படத்தைக் காட்டிக்கொண்டு "இது யாரு மாதிரி இருக்கு?" என்கிறாள்.
"ஒம்மாதிரித்தான் இருக்குது சித்தி..." எனத் தீர்ப்புக் கூறுவது போல் முகத்தை வைத்துக்கொண்டு சிரிக்கிறது குழந்தை.
"உன்னைப் போலத்தான்" என்று முகத்தில் செல்லமாக இடிக்கிறாள் மரகதம்.
குழந்தை 'வவ்வவ்' என வலித்துக் காட்டுகிறது.
'வவ் - வவ்!' என பதிலுக்கு வலித்துக் காட்டுகிறாள் மரகதம்.
'வவ் - வ்வ்' என்கிறது மற்றொரு குரல். இருவரும் திரும்பிப் பார்க்கிறார்கள்.
ஜன்னலருகில் சுந்தரவடிவேலு.
கதவைத் திறந்தார். "ரிப்பேராப் போச்சு!" என்றபடி உள்ளே நுழைந்து, "ஏதேது, அம்மையும் மகளும் ரொம்ப குழையிற்களே" எனக் குழந்தையைத் தோளில் நிறுத்தி மரகதத்தையும் இழுத்துக்கொண்டு தான் வாசிக்கும் அறைக்குப் போகிறார்.
பூனை வாண்டாம், அப்பா!
பூனை வாண்டாம்!
இப்படியாக ரஜாக் காலமும் ஏறக்குறைய முடிந்துவிட்டது.
அறுவடையாகிவிட்டதால் மறு சாகுபடிக்கு ஏற்பாடுகள் எல்லாம் செய்துவிட்டு இன்னும் ஒரு வாரத்தில், 'குழந்தைகளை' என ஆரம்பித்து அடித்து, 'குழந்தையை' எனத் திருத்தி பார்த்துவிட்டுப் போக வருவதாக தாத்தாவிடமிருந்து கடிதம் வந்தது.
"குஞ்சு, ஒன்னைப் பாக்க தாத்தா வரப்போறாங்க" - குழந்தையின் குதூகலத்தில் பங்குபோட்டுக் கொள்ளுகிறவர் போலக் கூறுகிறார். சாப்பிட்டுவிட்டுப் புறப்படும்போது, "சாயங்காலம் காப்பிக்குத்தான் வருவேன்" என அறிவித்த சுந்தரவடிவேலு காரில் ஏறிக்கொண்டு நண்பர் ஒருவரைப் பார்ப்பதற்காகச் சென்றுவிடுகிறார்.
மரகதமும் குஞ்சும் கதவைத் தாழிட்டுக்கொண்டு உள்ளே வருகிறார்கள்.
"ஏட்டி வெய்யிலா இருக்கு, இப்படி எங்கூட படுத்துத் தூங்கிறியா?" என்கிறாள் மரகதம்.
"ஆகட்டும் அம்மா!" என்று மச்சிலுக்கு ஏறுகிறது.
"அங்கே வாண்டாம். இந்த நடேலெ தலையெச் சாய்ப்போம்" என்று வெற்றிலைச் செல்லத்தைத் தலைக்கு வைத்துக்கொண்டு முந்தானையை விரித்துப் படுக்கிறாள் மரகதம். குழந்தையும் முந்தானை விளிம்பில் மல்லாக்காகப் படுத்துக்கொண்டு கண்ணை ஒரு கையால் மூடிக்கொள்ளுகிறது.
வேலைக்காரர்களை அடுக்களையில் ஏற்றும் சாதிகெட்ட வழக்கத்திற்கு இணங்காமல் உழைத்ததின் பயனோ என்னவோ அயர்ந்து விடுகிறாள்.
குழந்தைக்குத் தூக்கம் வரவில்லை.
எழுந்து உட்காருகிறது.
'தாத்தா வருவார்களே' எனத் தனக்குத்தானே அறிவித்துக் கொள்ளுகிறது.
தூரத்தில் கிடந்த என்ஜின் புஸ்தகத்தை எடுத்துக்கொண்டு வந்து புரட்டுகிறது. என்ஜின்களின் ஓட்டம்கூட ரசிக்கவில்லை. இப்படியும் அப்படியுமாக விருவிரு என்று புரட்டிவிட்டு, 'டபார்' என்ற சத்தத்துடன் மூடுகிறது.
மரகதம் சிறிது விழிக்கிறாள்.
"என்ன தூங்கு" என இழுத்துப் படுக்கவைத்துக்கொண்டு தட்டிக் கொடுத்தவண்ணம் தூங்கிப் போகிறாள்.
குழந்தை மறுபடியும் எழுந்து உட்கார்ந்துகொள்ளுகிறது.
ஹாலில் உள்ள பெரிய கடிகாரம் அரைமணியைக் குறிக்க டணார் என்று ஒரு அடி அடிக்கிறது.
குழந்தை ஓடிப்போய் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு வந்து நேரம் தெரிந்தது போல "மணியடிச்சாச்சு அம்மா?" என எழுப்புகிறது.
"நீ தூங்குடி. நேரமாகலெ?" என்று மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொள்ளுகிறாள் மரகதம்.
குழந்தை ஓசைப்படாமல் புழக்கடைப் பக்கம் போகிறது.
ஒரு டம்ளரை எடுத்து அண்டாவில் இருக்கும் தண்ணீரை மொண்டுவந்து புழக்கடை வெராண்டா ஓரத்தில் நின்றுகொண்டு ஊற்றி, தாரையாகத் தரையில் சுர் என்ற சப்தத்துடன் விழுவதை ரசித்துக்கொண்டிருக்கிறது.
ஒரு டம்ளர் ஆனதும் மறு டம்ளர், மறு டம்ளர், மறு டம்ளர்...
இந்த விவகாரத்தில் குழந்தையின் உடம்பும் பாவாடையும் நனைந்துவிடுகிறது.
பால்காரன் அந்தச் சமயம் பார்த்து புழக்கடை வெராண்டாவில் 'அம்மா' என்று பால் கொண்டுவந்து நிற்கிறான்.
'அம்மா தூங்கறாங்க" என்று தண்ணீர் விடுவதை ரசித்துக் கொண்டே பதிலளிக்கிறது குழந்தை.
"ஏம்மா இப்படி தண்ணியை கொட்றெ?" என்கிறான் பால்காரன்.
"இங்கே வந்து பாரு, சுர்ர் என்னுக்கிட்டு விழுது" என்று அவனையும் ரசிக்கும்படி அழைக்கிறது குழந்தை.
"ஊத்தாதெ அம்மா, ராஜால்லெ" என்கிறான் பால்காரன்.
"அப்படித்தான் ஊத்துவேன்" என்று மறுபடியும் டம்ளரை அண்டாவில் முக்குகிறது.
"நான் பால் குடுக்கணமே, முருவன் எங்கெம்மா?" என்கிறான் பால்காரன்
குழந்தை டம்ளரைக் கீழே வைத்துவிட்டு, இரண்டு கைகளையும் நீட்டி விரித்துக்கொண்டு "அவன் போக்களிஞ்சே போனானே!" என மரகதத்தைக் காப்பியடித்துக் காண்பிக்கிறது.
இந்த நடிப்பைக் கண்டு ரசித்து ஒரு 'பாட்டம்' சிரித்து ஓய்ந்த பால்காரன், "நீ அந்தச் சொம்பை எடுத்தாம்மா, நான் பாலை ஊத்தித் தாரேன், ஊட்லெ கொண்டு வச்சி, அந்த ஜோடுதாலையைப் போட்டு மூடிப்போடு" என்கிறான்.
குழந்தை பாலை வாங்கிக்கொண்டு உள்ளே வைத்து மூடிவிட்டுத் தாயாரை எழுப்ப ஓடுகிறது.
அது தாயாரை அணுகும் சமயம், ஹால் கடிகாரம் மணி மூன்று அடிக்கிறது.
"அம்மா அம்மா" என்று தோளைப் பிடித்து உலுப்புகிறது.
"இன்னும் என்னடி?" என்கிறாள் மரகதம்.
"அம்புட்டு மணியும் அடிச்சாச்சு" என்கிறது.
"போடி போ" என்கிறாள் மரகதம்.
"இல்லெம்மா நெசமா அம்புட்டு மணியும் இப்பத்தாம்மா அடிச்சுது; நான் கேட்டேனே" என்று துடிக்கிறது குழந்தை.
"அப்பா வாரத்துக்கு. நேரமாகும், நீ போ" என்று விட்டு மறுபுறம் புரண்டுகொள்ளுகிறாள்."நேரமாகும்" என வாயைக் குவிய வைத்துக்கொண்டு வலிப்புக் காட்டிவிட்டு, கடிகாரத்தைப் போய் பார்க்கிறது.
மெதுவாக அடுக்களைக்குப் போகிறது.
பாலை எடுத்துக்கொண்டுவந்து அடுப்பு முன் வைக்கிறது. அலமாரி எட்டவில்லை. ஒரு முக்காலியை எடுத்துப்போட்டு அதன் மேல் ஏறி நின்றுகொண்டு, காப்பிப் பொடி டப்பியை எடுக்கிறது. கஷ்டப்பட்டுத் திறந்து காப்பிப் பொடி உடம்பில் சிதறியதைக்கூட சட்டை பண்ணாமல் கைகொண்ட மட்டும் குத்துக் குத்தாக மூன்று பிடி அள்ளி பாலுக்குள் போட்டு கையை விட்டுக் கலக்குகிறது. பிறகு ருசி பார்க்கிறது. கசப்பு வாயைப் பிடுங்க, 'தூ தூ' எனத் துப்பிவிட்டு, சர்க்கரை டின்னை எடுக்க ஏறுகிறது. நல்ல காலமாக அது திறக்க அவ்வளவு கஷ்டமில்லை. ஏனென்றால் அது முன்பே யாரோ திறந்துவைத்து மூட மறந்துவிட்டிருந்தார்கள். முக்காலியில் நின்றபடியே ஒரு குத்து சர்க்கரையை எடுத்துக்கொண்டு ஒரு கையில் டின்னும் மறுகையில் சர்க்கரையும் வைத்துக்கொண்டு இறங்கியதின் விளைவாக, அலமாரி கீழ்த்தட்டில் உள்ள டின்கள் கடபடா சத்தத்துடன் கீழே சரிந்து சிதறுகின்றன. ஆனால் குழந்தை சர்க்கரையை அள்ளி அள்ளிப் போட்டுக் கலக்கி ருசி பார்த்துக் கொண்டிருக்கிறது. கசப்பைப் போக்குவதற்காக மனம்கொண்ட மட்டும் சர்க்கரையை அள்ளி அள்ளிப் போடுகிறது.
இந்த டின்கள் விழுந்த சப்தத்தைக் கேட்டு என்னவோ ஏதோ என்று எழுந்து ஓடிவந்த மரகதம். இவள் வேலையைப் பார்த்து பிரமித்து வாசற்படியில் நிற்கிறாள்.
அதே சமயத்தில் புழக்கடை வாசற்படியாக ஒரு கறுப்புப் பூனை 'மியாவ்' என்ற சப்தத்துடன் வாலைத் தூக்கிக்கொண்டு உள்ளே நுழைகிறது.
குழந்தை அவள் வந்ததைக் கண்டுகொண்டு, "அம்மா காப்பி போட்டாச்சு, வென்னி இல்லே, பாலுலியே காப்பிப் பொடியை போட்டு காப்பி போட்டாச்சு" என்று தன் வேலையை விவரிக்கிறது.
"தேடீ தேடீ பாத்தேம்மா, வென்னியே இல்லியே" என மீண்டும் விவரிக்கிறது.
'பாலெத் தொலச்சு குட்டிச் சொவராக்கி யாச்சில்லே, ஏண்டி இண்ணைக்கிப் பூரா இப்பிடி படுத்திக்கிட்டிருக்கே. பொண்ணாப் பொறந்தவளுக்கு இது ஆகாது! பாரு ஒன்னெ ஒன்னெ என்ன செய்யுறேன்னு பாரு, பாரு அப்பா வரட்டும்!" எனக் கடுகடுக்கிறாள் மரகதம்.
குழந்தை சீற்றத்தை எதிர்பார்க்கவில்லை. முகம் 'புஸ்' என்று மாறுகிறது.
"அக்கா!" என்று ஒரு வார்த்தை மட்டும் சொல்லுகிறது.
"நீதான் அக்கா! யாரெப் பாத்து அக்காங்றே!"
"அக்கா!" என்கிறது மறுபடியும்."சொல்லாதே! சொல்ல மாட்டேன்னு! இல்லாட்டா அந்தப் பூனையைப் புடிச்சு மேலே போடுவேன்."
பூனை என்றதும் வெருகி விடுகிறது குழந்தை. கண்கள் பயத்தைக் கக்க, "எங்கம்மாகிட்ட சொல்றென் பாரு" என அவள் காலுக்கிடை வழியாக மச்சு நோக்கி ஓடுகிறது.
"என்ன அடம்!" என கோபாவேசம் கொண்டவளாகப் பூனையை மறித்துப் பிடிக்கிறாள் குழந்தைக்குப் புத்தி கற்பிக்க.
அவள் அதை மறித்துப்பிடித்துத் தொடர்வதற்குள் குழந்தை பறந்து பறந்து மச்சுக்கு ஓடுகிறது.
தன் ரூமுக்குள் நுழைகிறது. தாயின் படத்தைப் பார்த்து புகார் செய்ய ஆரம்பித்துவிடுகிறது.
"அம்மா அம்மா! இந்த அக்காவெப் பாரு, பூனெயெ மேலே போட வர்றா அம்மா! என்றுகொண்டிருக்கையில் மரகதமும் கறுப்புப் பூனை சகிதம் உள்ளே நுழைந்துவிடுகிறாள்.
குழந்தை பயந்துபோய் சுற்றுமுற்றும் ஓடி, பிறகு படத்தின் அடியில் வந்து நின்றுகொள்கிறது.
"சொல்ல மாட்டேன்னு சொல்லு" என பூனையை நீட்டுகிறாள் மரகதம்.
"அக்கா" என்கிறது குழந்தை.
பூனையை வீசப்போவதுபோல் பாவனை செய்கிறாள் மரகதம்.
"அம்மா! பாரேம்மா! பூனையைப் போடறாளே - ஐயோடி பூனெயெ போடறாளே!" எனக் கத்திக் கீச்சிடுகிறது குழந்தை.
மரகதம் பூனையைக் குழந்தையின் முகத்தினிடம் கொண்டு வருகிறாள்.
குழந்தை சுவருடன் அமுங்க முயற்சிப்பதுபோல் தன்னைப் பதிய வைத்துக்கொண்டு, "ஐயோ, பூனே! பூனை வருதே! பூனை வேண்டாம்மா! அம்மா பூனை வேண்டாம்" எனக் கிரீச்சிடுகிறது.
மாடிப் படியில் தடதடவென்று ஏறிவரும் சப்தம்.
மரகதம் மறுபடியும் முகத்தருகில் கொண்டுபோகிறாள்.
"பூனை வேண்டாம்மா!..." என பயத்தில் கிரீச்சிடுகிறது, குழந்தை.
சுந்தரவடிவேலு பரக்கப் பரக்க உள்ளே நுழைந்து மரகதத்தைத் தள்ளிவிட்டுக் குழந்தையை எடுத்து அணைத்துக்கொள்ளுகிறார்.
குழந்தை ஒரே கத்தாகக் கத்துகிறது; அழ முடியாமல் விக்குகிறது; அப்பாவைக் கட்டிப்பிடித்துக் கொள்ளுகிறது...
ஜன்னி கண்ட மாதிரி கிரீச்சிடுகிறது.நெஞ்சைத் தடவுகிறார். என்னென்னமோ... செய்கிறார் சிறிது மயங்குகிறது.
படுக்கவைத்து நெற்றியில் கைக்குட்டையை எடுத்துப் போடுகிறார். விக்கிக்கொண்டே கிடந்த குழந்தை, "பூனை வேண்டாம்மா!" எனக் கத்துகிறது.
"குஞ்சம்மா பூனெ ஓடியே போச்சே, அதெ அடி அடின்னு அடிச்சுப் போட்டேன். வரவே வராது" என்கிறார்.
குழந்தை மனதில் அவர் வார்த்தை பதியவில்லை.
படுக்க வைத்துக்கொண்டு நெற்றியில் ஜலத்தை நனைத்துப் போடுகிறார்; நெஞ்சைத் தடவுகிறார் - பயம் ஓயவில்லை.
"பூனெ வேண்டாம்மா!" என்ற ஒரே வார்த்தையைக் கத்துகிறது.
மரகதம் கையைப் பிசைந்துகொண்டு கண் கலங்க வாசலடியில் நிற்கிறாள். அவளை அவர் ஏறிட்டுக்கூடப் பார்க்கவில்லை.
குழந்தையைக் கொஞ்சம் அமரவைத்துவிட்டு டெலிபோனுக்குச் செல்லுகிறார்.
எண்களைத் திருப்புகிறார். "ஹல்லோ... கிருஷ்ணசாமிதானே பேசறது? நான்தான் சுந்தரம் ... குஞ்சத்துக்கு ஹிஸ்டீரியா மாதிரி கத்துறா; பயந்திருக்கா; intense terror.. ஏதும் sleeping dose கொண்டாந்தாத் தேவலே இப்பொவே வா - சில்றனெப் பார்த்துக் கொள்ள ஆள் வேணும்னு கலியாணம் பண்ணிக்கப்போய் மூணு கொழந்தைகளாச்சு, அப்றம் ரெண்டாச்சு..." என்று கூறிவிட்டு டெலிபோனைக் கீழே வைக்கிறார்.
இப்படியாகக் குழந்தை குஞ்சுவுக்கு அதிர்ச்சியால் ஏற்பட்ட ஜூரம் தெளிய மூன்று நாட்களாகின்றன.
மூன்று நாட்களும் குழந்தையின் பணிவிடையிலேயே செலவிடுகிறார் சுந்தரவடிவேலு.
மூன்று நாட்களும் மரகதத்துடன் சிரித்துப் பேசுவது, ஏன் சாதாரணமாகப் பேசுவதே நின்றுவிட்டது. அவள் இல்லாதது போலவே நடக்க ஆரம்பித்துவிட்டார்.
கண்ணீருடன் கைகளைப் பிசைந்துகொண்டு தலைவிரி கோலமாய் நின்றதுதான் மரகதத்திற்கு மிச்சம். காப்பி கொண்டுவந்தால் வாங்குவார்; சாப்பிடுவார். உணவு கொண்டுவந்தால் உண்பார். 'போதும்'. 'வேண்டாம்' என்பதுடன் அச்சமயங்களில் பேச்சு நின்றுவிடும். அவரது இந்த நிலையையும் உறுதியையும் கண்டு பயந்துவிட்டாள் மரகதம். மன்னிப்புக் கேட்டுக் காலில் விழுவதற்குக்கூட அஞ்சினாள்.
அச்சம் சீற்றமாக மாறியது. சமரச முயற்சி நின்றது. வருவதும் பணிவிடை செய்வதும் நின்றது.
வீட்டில் மறுபடியும் சமையல்காரன் சமையல் செய்யத் தொடங்கினான். அவன் காப்பி கொண்டு வருவான், குழந்தைக்குப் பால் கொண்டு வருவான். வேலைக்காரனும் இருந்தான். மரகதம் தனக்கு மட்டும் தன் கையால் சமைப்பது, சாப்பிடுவது, உக்கிராணப் பிறையில் தலைவிரி கோலமாக மனநிம்மதி இல்லாமல் படுத்துக் கிடப்பது... மனத்துடன் போராடுவது.
'யார் குற்றம்? குழந்தையின் பிடிவாதத்தைத் தீர்க்க வேண்டாமா, நான் என்ன அடித்தேனா, வைதேனா?... லேசாய் பயங்காட்டினால் என்ன பிரமாதம்!...
இவ்வாறாக மனம் சித்தாந்தம் செய்ய ஆரம்பித்துவிட்டது.
இருவரும் பேசவில்லை.
இந்தப் புதிருக்கு இரு 'குழந்தைகளை'யும் இவ்வாறு பிரிந்து விலகும்படி செய்யாதிருக்க என்ன வழி என்பது அவருக்குப் புரிய வில்லை.
குழந்தைக்கு 'நர்ஸ்' அமர்த்திவிடுவோமா... அல்லது orphanageஇல் சேர்த்துவிடுவோமா என்றெல்லாம் மனம் ஓடியது. புதிருக்கு விடையில்லை.
குழந்தை எழுந்து நடமாட ஆரம்பித்துவிட்டது. முன்போல ஓடி ஆட ஆரம்பித்துவிட்டது ஆனால் 'மியாவ்' என்ற சப்தம் கேட்டால் உடல் நடுங்க ஆரம்பித்துவிடும். குழந்தை உறுதிகொண்ட குழந்தை. பயத்தை வெளிக்குக் காட்டுவதில்லை.
இப்பொழுது முன்போல, 'அம்மாகிட்ட சொல்லுவேன்' என்ற வார்த்தை அதன் வாயிலிருந்து வருவதில்லை.
சுந்தரவடிவேலுக்குக் கலாசாலையும் திறந்துவிட்டது.
அன்று விடியற்காலம் குழந்தை தன் சின்னக் கட்டிலில் இருந்து எழுந்திருக்கிறது. குலைந்து கிடந்த சிறு பாவாடையை நன்றாகக் கட்டிக்கொள்ளுகிறது.
ஜன்னல் விளிமபில் உள்ள கடுதாசிப் பொட்டலத்திலிருந்து இரண்டு திராட்சைப் பழங்களை எடுத்துக்கொண்டு வருகிறது.
தாயார் படத்தின்முன் நின்று சிறிது நேரம் அதையே கவனிக்கிறது.
அப்புறம் இரண்டு பழங்களையும் படத்திற்கு நேராகத் தரையில் வைக்கிறது. தன் சித்தி குத்துவிளக்கின் முன்பு மண்டியிட்டு, தலை தரையில் படும்படி கும்பிடுவது போலப் படுத்து வணங்குகிறது. யாரையும் காப்பாற்றும்படி கேட்டுக்கொள்ளவில்லை.
பிறகு திராட்சைப் பழங்கள் ரண்டையும் எடுத்து வாயில் போட்டுத் தின்றுகொண்டு, தன்னுடைய ஓட்டை எஞ்சின் சகிதம் புழக்கடைப் பக்கம் சென்று பல் விளக்குகிறது. நேராகத் திரும்பிவந்து தெருவாசல் படியில் உடகார்ந்து குனிந்துகொண்டு எஞ்சினைக் கைகளால் உருட்டி உருட்டி விளையாடுகிறது.
சில சமயம் 'குச்குச்' என்ற சப்தம் அதன் வாயிலிருந்து வரும்.
இந்த நிலையில், "குஞ்சு! குஞ்சு! குஞ்சம்மா!" என்ற தகப்பனாரின்
குரல்."என்னாப்பா!" என்று நிமிராமலே சத்தம் கொடுக்கிறது குழந்தை.
"உன்னை எங்கெல்லாமடி தேட, என் கண்ணு ! என்ன செய்யறே" என்று கூறிக்கொண்டு வெளியில் வந்து குழந்தையை வாரி அணைத்துக்கொள்ளுகிறார்.
"காப்பி சாப்பிட வேண்டாமா?"
"ஊம்" என நீட்டுகிறது குழந்தை.
மணி பத்து.
கார் வாசலில் நிற்கிறது....
குழந்தை சட்டை போட்டுக்கொண்டு கையில் ரயில் படப் புஸ்தகமும் எஞ்சினுமாக வாசல் படியில் வந்து நிற்கிறது.
தகப்பனார் வெள்ளைக்கார மோஸ்தரில் உடையணிந்துகொண்டு, கையில் ஐந்தாறு கனமான புஸ்தகங்களுடன் வெளியே வருகிறார்.
அப்பாவைக் கண்டதும் குழந்தை தன் கையில் உள்ள ரயில் படப் புஸ்தகத்தையும் எஞ்சினையும் காருக்குள் வைக்க முயல்கிறது.
"எங்கடியம்மா குஞ்சு இந்த அவசரம்?" என்கிறார் சுந்தரவடிவேலு.
"அப்பா! அப்பா,நானும் ஒங்கூட வாறேன் அப்பா" எனக் கெஞ்சுகிறது குழந்தை.
இதுவரை குழந்தையிடம் இந்தக் கெஞ்சல் வியாபாரமே கிடையாது; எல்லாம அதிகாரமயம்தான். அதிசயித்துச் சிரித்துக்கொண்டு, "நான் இண்ணக்கி பள்ளிக்கூடமில்லா போகிறேன். நீ வரலாமா, போய் விளையாடிக்கொண்டிரு, சாயங்காலம் வந்து ஒன்னைப் பீச்சுக்குக் கூட்டிக்கிட்டுப் போறேன்" என்கிறார்.
"பீச்சுக்கில்லே அப்பா, நான் ஒண்ணுமே செய்யமாட்டேன்; கார்லியே உட்கார்ந்திருப்பேன். ஒண்ணுமே செய்யமாட்டேன்... நானும் வரேன் அப்பா" என்று மறுபடியும் கெஞ்சுகிறது.
குழந்தையின் பிடிவாதத்தையும் கெஞ்சலையும் கண்டு ஏதோ காரணம் இருக்க வேண்டும் என ஊகித்து, அவளை வாரி எடுத்து முகத்தைத் தடவிக்கொடுத்து "ஏண்டியம்மா நீ கெட்டிக்காரியில்லியா..." என ஆரம்பிக்கிறார்.
குழந்தை ரகசியமாக காதோடு காதாக, "சித்தி - பூனெ" என்று சொல்லுகிறது.
பிள்ளையின் முகம் மாறுகிறது. சொல்ல முடியாத மனவேதனை. புத்தியில்லாமல் குழந்தையை எப்படிப் பயமூட்டிவிட்டாள்.... பயம் எப்படி வேரூன்றிவிட்டது இதை எப்படி போக்குவது என மனசு நிலைகொள்ளாது தத்தளித்தது.
என்ன செய்யலாம்? குழந்தையை எப்படிப் பள்ளிக்கூடத்திற்கு எடுத்துக்கொண்டு போவது? வேலைக்காரர்களிடம் நிற்காதே! தானே ஓடியாடித் திரிகிற குழந்தைக்கு பயம் பிறந்துவிட்டதே என நினைக்கிறார்."கண்ணு நி சும்மா வெளையாடிக்கிட்டிரு. சித்தி ஒண்ணுமே செய்யமாட்டா... பூனெ வரவே வராது.. அண்ணெக்கே அடிச்சு வெரட்டியாச்சே... நான் சீக்கிரமா வந்திடறேன்... அப்பரம் நாம் ரெண்டு பேருமா வெளையாடுவோமாம்... பிஸ்கோத்து தரட்டா?.."
"தா..." என சோர்ந்தாற்போல் நீட்டுகிறது குழந்தை.
"அப்பொ..." என மறுபடியும் ஆரம்பிக்கிறது...
"அப்பொ... என்ன?" என்கிறார் சுந்தரவடிவேலு.
"பாலும் எடுத்து தந்திரேன்..." என்கிறது குழந்தை.
"ஏம்மா..சித்தி தருவாளே..."
"மாட்டேன், நீதான்..." என்கிறது மறுபடியும்.
குழந்தையைத் தூக்கிக்கொண்டு உள்ளே சென்று ரண்டு பை நிறையவும் பிஸ்கோத்து போட்டுத் தருகிறார். அடுக்களைக்கு அழைத்துக்கொண்டுபோய், பாட்டிலில் பாலை ஊற்றி ரப்பரைப் போட்டு அதன் கையில் கொடுக்கிறார். இருவரும் வெளியே வருகின்றனர்.
"சரிதானா?" என்று சொல்லிக் கீழே இறக்கிவிடுகிறார்.
"சரிதான்..." என நீட்டுகிறது குழந்தை.
ஸ்ரீமான் சுந்தரவடிவேலு காரில் உட்கார்ந்துகொண்டு வண்டியை ஓட்ட ஆரம்பிக்கிறார்.
"அப்பா அப்பா!" என்கிறது குழந்தை.
"இப்பொ என்ன?" என்கிறார்.
"எம் பொஸ்தகத்தையும் எஞ்சீனையும் குடு" என்கிறது குழந்தை.
"ஓஹோ!" என்றுகொண்டு எடுத்துக்கொடுக்கிறார்.
"நான் புறப்படட்டா?" என்றுகொண்டு வண்டியை ஓட்டுகிறார்.
"உம்" என்றுகொண்டு நீட்டுகிறது.
வண்டி புறப்பட்டுப் போகிறது. அது வெளிகேட் வரை சென்று திரும்பும்வரை அதையே பார்த்துக்கொண்டிருக்கிறது குழந்தை.
பிறகு மெதுவாக அக்குளில் புஸ்தகத்தை இடுக்கிக்கொள்ளுகிறது. ஒரு கையில் என்ஜின் கயிற்றைப் பிடித்துக்கொண்டு இழுக்கிறது. மற்றொரு கையில் பாட்டில் இந்த சன்னத்தங்களுடன் குழந்தை வெளியே புறப்படுகிறது... மெதுவாக நடந்துசெல்லுகிறது.... இவ்வளவு கூத்தையும் மரகதம் ஒரு ஜன்னலில் நின்று பார்த்துக் கொண்டு நிற்கிறாள். கண் கலங்குகிறது. வாயில் சிரிப்பு வருகிறது... குழந்தையையே பார்த்துக்கொண்டிருக்கிறாள்...
குழந்தை வெளிகேட்டு அருகில் நிற்கும் வாதமுடக்கி மர நிழலுக்குப் போகிறது. பாட்டிலை வாசல்கேட் காறைக்கு அருகில் உள்ள குத்துக்கல்மீது வைக்கிறது. நிழலில் வந்து உட்கார்ந்து கொஞ்ச நேரம் பொம்மை பார்க்கிறது ... அது அவ்வளவாக ரசிக்கவில்லை.வட்டு விளையாட முயலுகிறது. அதற்கு கட்டம் போடத் தெரியவில்லை. இஷ்டம்போல் கோணல்மாணலாக இரண்டு மூன்று கோடுகள் கீச்சிவிட்டு தூரத்தில் வந்து நின்றுகொள்ளுகிறது.
கையிலிருக்கும் ஒட்டாஞ்சில்லியைக் கோட்டுக்குள் வீசுகிறது.
நொண்டியடிப்பதுபோல ஒற்றைக் காலைத் தூக்கிக்கொள்ளுகிறது. வராததனால் படபடவென்று இரண்டு காலையும் வைத்து ஓடி விழுந்து கிடந்த சல்லியின்மேல் 'பட்' என்று காலை வைத்துக் கொண்டு, நொண்டியடித்து வந்ததுபோல ஒற்றைக் காலைத் தூக்கிக் கொண்டு சிறிது நிற்கிறது. அதற்கு இந்த 'சில்லாட்டம்' தெரியாது. எப்பவோ ஒரு தடவை ராஜாவுடன் விளையாடியிருக்கிறது.
இப்படி நின்றுவிட்டால் ஒரு ஆட்டம் ஜயித்தாச்சு என்பது அதன் சித்தாந்தம். சில சமயம் வேறு யாரையோ ஆடச் சொல்லுவது போல் பாவனை செய்து அந்தக் கற்பனை நபராகத் தன்னை ஆக்கிக்கொண்டு விளையாடும்.
இப்படி இது விளையாடிக்கொண்டிருக்கையிலே, கருத்த தாடியும் மீசையும், கையிலே திருவோடுமாக ஒரு ஆண்டி அந்தப் பக்கமாக வருகிறான். அவன் கட்டியிருக்கும் உடை தூய வெள்ளையாக இருக்கிறது. பரதேசிக் கோலத்தில் காணப்பட்டாலும் பிச்சைக்காரன் அல்ல என்று தெரிகிறது. நல்லவன் என்று சொல்லும்படியாக கண்ணிலே ஒரு குளுமை தேங்கி நிறகிறது. சிறிது எடுத்த மூக்கு, எடுத்த நெற்றி, சிறிது தடித்த உதடு, மீசைக்குப்பின், மேகப் படலத்திற்குப் பின்னால் பாறை தோன்றுவதுபோல வெளுத்த ஆனால் சிறிது எடுப்பான பல். ஒரு கையில் இலையால் மூடிய திருவோடு மறு கையில் சிறு மூட்டை. நிழலுக்காக உள்ளே நுழைகிறான். குழந்தை நின்ற இடத்திற்குப் பின்புறமாக மரத்தடியில் வந்து உட்கார்ந்து திருவோட்டிலிருந்த ஜலம்விட்ட சாதததை எடுத்துச் சாப்பிட ஆரம்பிக்கிறான். துணைக்கறியாக ஒரு துண்டு இலையில் இரண்டு மிளகாய் வற்றல்களும் கொஞ்சம் உப்புக்கல்லும் வைத்துக் கொண்டிருக்கிறான். குழந்தை அவன் வந்ததைக் கவனிக்கவில்லை.
விளையாடிக்கொண்டிருக்கிறது...
வட்டை எடுத்துப் போடுகிறது. குழந்தைக்கு ஒரு பொருளை வாட்டமாக முன்பக்கம் விட்டு எறிவதில் பழககம் கிடையாது. உள்ளங்கையில் வைத்துக்கொண்டு கீழிருந்து மேல்வாட்டமாக எறியும்; அல்லது தலைக்குமேல் ரொம்ப உயர்த்திக்கொண்டு வேகமாகக் கையை வீசிப் பின்புறமாகக் கொண்டுவரும். இந்த முயற்சிகளால் சில சமயங்களில் வட்டு பின்புறமாகப் பார்த்துப் பறந்துவிடும்.
அப்படிச் சம்பவிக்கவே குழந்தை பின்பக்கம் திரும்புகிறது. நாடோடியைப் பார்த்துவிடுகிறது.
"ஐயோ! பூச்சாண்டி... " என்று உச்ச ஸ்தாயியில் கிரீச்சிட்டுவிட்டு பிரமித்து நின்றுவிடுகிறது. குழந்தையின் கண்கள் பயத்தில் வெளியே தள்ளுகிறது.ஒரு கவளத்தை வாயில் போடுவதற்குத் தலையை அண்ணாந்த நாடோடி குழந்தையின் பீதியை உணர்ந்துவிட்டான். கவளத்தைத் திருவோட்டில் கரைத்துவிட்டு, "இல்லம்மா பாப்பா, நான் பூச்சாண்டியில்லே! பயப்படாதே...!" எனச் சிரிக்கிறான்.
குழந்தை அப்படியே நிற்கிறது.
"இதோ பாரு, இது தாடி, வெறும் மசிரு. பயப்படாதேம்மா, இங்கே வாம்மா, கண்ணு என் கண்ணுல்லே..."
குழந்தைக்குப் பயம் இவனது பரிவால் சிறிது தெளிகிறது. ஆனால் இடம் பெயர, கால்கள் சுவாதீனப்படவில்லை.
"அப்பொ நீ பூச்சாண்டியில்லே...?" என சந்தேகத்தோடு வினவுகிறது.
"இல்லெம்மா! நீதான் இப்படி வந்து தொட்டுப் பாரேன்...."
"நெசமா,சத்தியமா, சத்தியமா, சத்தியமா"
"நீ இங்கே வாடி .. கண்ணு ..." என மறுபடியும் அழைக்கிறான்.
குழந்தை மெதுவாக அவன் கிட்டப்போய் நின்றுகொண்டு அவன் தாடியை இழுத்துப் பார்க்கிறது.
"பாத்தியா வெறும் மசிரு; ஒந்தலைலே இருக்கு பாரு, அது மாதிரி" என்று அதன் தலையைத் தடவிக்கொடுத்துக்கொண்டே பக்கத்தில் உட்காரவைத்துக் கொள்ளுகிறான்.
"கண்ணு பயந்தே பூட்டாளே!” என்று குழந்தையின் நெஞ்சைத் தடவிக்கொடுக்கிறான். "கண்ணு பயப்படாதம்மா; இந்தா இங்க பாரு நான் சாப்பிடட்டா!" என்று குழந்தையை ஒரு கையால் அரவணைத்தபடி ஒரு கவளத்தை எடுத்து அண்ணாந்து வாயில் போட்டுக்கொள்ளுகிறான். குழந்தையின் கண்கள் கவளங்களுடன் அவன் வாய்க்கும் திருவோட்டுக்குமாக யாத்திரை செய்கின்றன. தலையை நீட்டி, நீட்டிப் பார்க்கிறது.
ஒரு மிளகாய் வற்றலை எடுத்துக் கடித்துக்கொள்ளுகிறான். குழந்தை அதைக் கவனிக்கிறது.
"எரிக்கலே!" என ஆச்சரியத்துடன் கேட்கிறது.
"இந்தக் கட்டைக்கி இதெல்லாம் எரிக்காது அம்மா" எனச் சிரிக்கிறான்.
"எனக்கும் பசிக்கிது" என்கிறது குழந்தை.
"பாப்பா, இன்னுமா சாப்பிடலே, ரொம்ப நேரமாச்சே!" என அவன் கூறுவதற்குள், ஓடிப்போய்க் கதவருகில் வைத்திருந்த பாட்டில், புஸ்தகம், என்ஜின் வகையராக்களை எடுத்துக்கொண்டு ஓடி வருகிறது. அவன் எதிரில் உட்கார்ந்துகொண்டு, பாலைக் குடிக்கிறது.
குழந்தையின செயல்களைக் கவனித்துக்கொண்ட நாடோடி ஒருவிதமாக, ஆனால் சிறிது தவறுதலாக ஊகித்துக்கொள்ளுகிறான். வீட்டில் குழந்தையைப் பார்த்துக்கொள்ள ஆள் கிடையாது, ஆண் போஷணையில் மட்டும் வளரும் குழந்தை என நினைக்கிறான்."சம்போ மஹாதேவா! இதுவும் ஒரு திருவிளையாட்டா!" என்று சொல்லுகிறான்.
"விளையாடலே பாலு சாப்பிடறேன்; புட்டிலே பாலு இருக்கு பாரு" என வாயிலிருந்து எடுத்துவிட்டுக் காண்பிக்கிறது.
நாடோடி சிரித்துக்கொண்டே "உன் பேரு என்னம்மா?" என்கிறான்.
"குஞ்சு... மீனாச்சின்னும் அப்பா சொல்லுவாங்க" என்கிறது.
குழந்தைக்குப் பைக்குள் இருக்கும் பிஸ்கட் ஞாபகம் வந்துவிடுகிறது. பாட்டிலைக் கீழே வைத்துவிட்டுச் சட்டைப் பைக்குள் கையை விட்டு இரண்டு ஜம் பிஸ்கட்டை எடுத்துக் காண்பித்துவிட்டு, "நீ சாப்பிடு, சாப்டப் பிறவு தாறேன்" எனப் பையில் வைத்துக்கொள்ளுகிறது.
மறுபடியும் பாட்டிலை எடுத்து வாயில் வைத்துக் குடிக்கிறது.
இடையில் நிறுத்திக்கொண்டு, ஒரு கண்ணைச் சிறிது மூடிய வாக்கில் "இனூச்சுக் கெடக்கும்?"
பிஸ்கட்டின் உயர்வை ரசித்துப் சிபாரிசு செய்கிறது.
இருவரும் சாப்பிட்டு முடிக்கிறார்கள்.
நாடோடி, திருவோட்டைக் கழுவ எதிரே ரஸ்தாவுக்கு மறுபுறத்தில் இருக்கும் குழாயடிக்குப் போகிறான். குழந்தை பாட்டிலை எடுத்துக் கொண்டு தொடருகிறது.
"இதையும் கழுவிக் குடு" என்கிறது.
குழந்தையின் பாட்டிலைப் பத்திரமாக வாங்கிக் கழுவிக் கொடுத்துவிட்டு அதற்கும் முகம், கைகால்களைக் கழுவிவிடுகிறான். இருவரும் திரும்புகிறார்கள்.
அவனது ஒரு எட்டுக்கு மூன்று எட்டாக, குழந்தை ஓடி நடந்து வருகிறது.
"அப்பா சாப்பிட்டாச்சு" என்று பெரிய மனுஷி மாதிரி சொல்லிக் கொண்டு, "வெளையாடலாம் வாரியா" என்று ரொம்பச் சரசமாக நாடோடியிடம் கேட்கிறது.
நாடோடியின் கண்கள் ஜொலிக்கின்றன. குழந்தையின் குதூகலத்தைப் பெற்றுவிடுகிறான். "என்ன வெளையாட்டு வெளையாடுவோம்?" என்று கேட்கிறான்.
"ரயில் வெளையாட்டு ஆடுவமா? நாந்தான் ரயிலாம். நீ டேசன், கைகாட்டி" என்கிறது குழந்தை.
குழந்தை அவனை ஒற்றைக் கையை ஸிக்னல் போஸ்ட் மாதிரி நிற்கச் சொல்லிவிட்டு, தூரத்தில் ஓடிப்போய் அங்கிருந்து 'குச் குச் ' என்று சப்தமிட்டுக்கொண்டு கைகளைப் பிஸ்டனாக அசைத்தபடி நாடோடியை நோக்கி வேகமாக வருகிறது. அது போடுகிற 'குச்- குச்'சும்
கை சுழற்றலும் வண்டி மெயில் மாதிரி வருவதாகப் பாவனை. குழந்தையின் முகம், மனசு விளையாட்டில் ரசித்திருப்பதைப் படமெடுத்துக் காட்டுகிறது.'வண்டி' வந்துவிட்டது. கைகாட்டியை நெருங்கிவிட்டது. கை காட்டி கிட்ட வந்துவிட்டது. என்ஜின் ஊதுகிறது. இரண்டு முறை, மூன்று முறை....
கைகாட்டி தன் வேலையை மறந்து குழந்தையைப் பார்த்துக் கொண்டே இருக்கிறது.....
என்ஜின் குழந்தையாகிவிட்டது. "பொடிம்மா... உனக்கு வெளையாடவே தெரியலிலே... கைகாட்டி சாயாமே ரயிலு வருமா? வாண்டாம் போ..." என்று தரையில் காலை உதைத்துவிட்டு முகத்தைத் தொங்கப் போட்டபடி மரத்தடியில் போய் உட்கார்ந்து கொள்ளுகிறது.
தனக்கு விளையாடத் தெரியவில்லை என்பதையும் ரசித்துக் கொண்டு குழந்தையிடம் பக்கத்தில் போய் உட்கார்ந்துகொண்டு, "குஞ்சம்மா, குஞ்சம்மா வேறே வெளையாட்டுச் சொல்லேன், விளையாடுவோம்... வட்டாடுவோமா?” என்று தனக்கு ஞாபகமுள்ள விளையாட்டைக் குறிப்பிடுகிறான்.
மனசில் அது ரசிக்காததினால் "வாண்டாமா, ஒனக்குத்தான் ராசா மாதிரி வெளையாடவே தெரியலியே" என்கிறது.
"ராசா யாரும்மா?" என்று கேட்கிறான் நாடோடி.
"எங்கண்ணன்?' என்று நெஞ்சைத் தட்டிக்கொள்கிறது.
"பள்ளிக்கூடம் போயிருக்கானாம்மா?" என்கிறான் நாடோடி.
"செத்துப்போயிட்டான்" என்றாள் இரண்டு கைகளையும் விரியத் திறந்து காட்டிவிட்டு, "எங்கப்பாதான் பள்ளிக்கொடத்துக்குப் போயிருக்காங்க" என்கிறது.
மரணத்தின் பரிபூரண அர்த்தத்தையும் கிரகியாமல், இரண்டு பிரிவின் தன்மையையும் ஒரே அளவில் வைக்கும் குழந்தையின் மனப்பான்மை அவனை அதிசயத்தில் ஆழ்த்துகிறது.
அவன் வேறு ஏதோ கேட்கிறதற்கு வாயெடுக்கையில், குழந்தை கண்களை 'பூச்சிக் கண் மாதிரி வைத்துக்கொண்டு' "எங்க தாத்தா வரப்போறாங்களே எனக்கு!- அவனுக்குத் தலையை ஆட்டிக் கொண்டு அறிவிக்கிறது.
"உங்கப்பா பேரு என்னம்மா?" என்கிறான்.
"சுந்தலவடிவேரு' என குழந்தை லகர ரகரத்தைக் குழப்பியடிக்கிறது.
"பெரிய பள்ளிக்கூடம் அங்கே இருக்கு பாரு, அதுலெ வாத்தியாரு" என்று வியாக்கியானம் செய்கிறது.
குழந்தையின் மரண ஞானத்தைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள நாடோடிக்கு ஆவல். "உங்க அண்ணெ ராசா எப்பிடியம்மா செத்துப்போனான்?" என்று கேட்டார்.
'அணணெக்கி மளெ பேயலெ பெரிய மளெ - அப்பொ -இந்த சித்தி இருக்காள்ள.. அவென கொடையப் புடிச்சுக்கிட்டு போகச் சொன்னா - அவென் வந்ததும், அப்பா வந்தாங்க கோவிச்சுக்கிட்டாங்க. அவுங்க போனம்பரவு, எப்பவோ செத்துப்போயிட்டான், நானுங்கூடவேதான் இருந்தேன்" என்று உணர்ச்சியுடன் சொல்கிறது.
நாடோடிக்கு அவன் ஓரளவு ஊகித்தது சரியாகிவிட்டது என்ற நினைப்புடன், சுந்தரவடிவேலுவைப் பற்றி வெகுவாகத் தப்பபிப்பிராயம் கொண்டுவிட்டான்.
"நீ என்கூட வந்துடிறியா?" என்று கேட்டுவிட்டான்.
"நான் வந்தா யாரு அவுங்க கூட வெளையாடுறது?" என சாவதானமாகப் பதில் கொடுக்கிறது குழந்தை.
அதன் வாயைக் கிண்டிவிட்டுப் பார்க்கும் தன் அசட்டுத் தனத்தையே நொந்துகொண்டு பராக்காகக் குழந்தையின் நினைப்பை வேறுபுறம் திருப்ப, "அதென்னம்மா புஸ்தகம்" என்கிறான்.
"அதா, ரயில் புஸ்தகம்" என்று அதை எடுத்துக்கொண்டு ஓடி வருகிறது.
"படம் பாப்பமா?" என்று புஸ்தகத்தை விரித்துப் போடுகிறது.
"உனக்குப் படிக்கத் தெரியுமாம்மா?" என நாடோடி கேட்கிறான்.
"ஒனக்குத் தெரியுமா" என குழந்தை திருப்பிக் கேட்கிறது.
"தெரியாதே..." என்கிறான்.
"எனக்கும் தெரியாது" என்றுகொண்டு படத்தைப் புரட்டிக் கொண்டே பையிலிருந்து பிஸ்கட்களை எடுக்கிறது. தான் ஒன்றை வாயில் போட்டுக்கொண்டு மற்றொன்றை நாடோடியிடம் கொடுக்கிறது. "எனக்கு வேண்டாம் நீ சாப்பிடு" என்று சொல்லியும் கேட்காமல், எழுந்து நின்று அவன் வாயில் திணிக்க முயலுகிறது.
அவன் அதை வாங்கிக்கொண்டு, "பாப்பா நான் ஒரு வித்தை செய்கிறேன் பாக்கிறியா" என்று கையில் உள்ள பிஸ்கட்டைக் காண்பித்துவிட்டு, "சூ! மந்திரக்காளி" என்று கையைத் தட்டிவிட்டுக் காண்பிக்கிறான். பிஸ்கட்டைக் காணவில்லை.
குழந்தைக்கு ஆச்சரியம் சகிக்க முடியவில்லை.
"எப்பிடி' எப்பிடி - இன்னொரு தரம் காட்டு" என்கிறது.
"இதோ பாரு, இப்பொ எந்தக் கையிலிருக்கிறது காட்டு!" என்கிறான்.
குழந்தை முதலில் ஒரு கையை விரித்துப் பார்க்கிறது. பிறகு மறு கையை விரித்துப் பார்க்கிறது. இரண்டிலும் இல்லை.
"தின்னுப்புட்டியா?" எனக் கேட்கிறது.
"வரச்சொல்லட்டா" எனக் கையை மூடித் திறந்து காட்டுகிறான்.
பிஸ்கோத்து உட்கார்ந்திருக்கிறது!
"அது எப்படி?"
"மந்திரம்!""நான் செய்யட்டுமா?"
"ஊம்."
"நீ கொஞ்சம் கண்ணெ மூடிக்கோ."
நாடோடி சரியென்று கண்ணை மூடிக்கொள்கிறான்.
"நல்லா மூடிக்கணும்" என்று சொல்லிக்கொண்டே ஒரு பிஸ்கட்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு "உம்" என்கிறது.
அவன் கண்களைத் திறக்கிறான்.
குழந்தை இரு கைகளையும் மூடிக்கொண்டு நீட்டுகிறது. அவன் ஒவ்வொன்றாக விரித்துப் பார்த்துவிட்டு, "வரச்சொல்லு பார்க்கலாம்" என்கிறான். குழந்தை அவசர அவசரமாக வாயிலிருந்ததைக் கையில் போட்டு துடைத்துவிட்டுக் காட்டிச் சிரிக்கிறது.
"அப்படியில்லேம்மா?” என்று அவளுக்கு விரல்களுக்கிடையில் பிஸ்கட்டை மறைத்து மறுபடியும் கொண்டுவரும் சாகசத்தைக் கற்பித்துக்கொடுக்கிறான்.
இப்படியே விளையாடிக்கொண்டிருந்தவன், பற்றற்று இருப்பதற்காக ஓடிவந்த தன்னைப் பாசம் மீண்டும் தன்னை அறியாமலே பிணிப்பதைக் கண்டு திடுக்கிட்டு உணர்ந்துகொண்டவன்போல காரணமற்ற சிறிது கடுகடுப்போடு குழந்தையின் நெற்றியில் திருநீற்றை அள்ளி அப்பிவிட்டுத் திருவோடு மூட்டையுடன் வெளியே விரைந்து விடுகிறான்.
விபூதிப் பொடி கண்ணில் விழும் என்று கண்ணை மூடிக் கொண்டு, சாம்பல் பொடி வாயில் கிடைக்கும் என வாயைத் திறந்து ஒன்றும் கிடைக்காததால் ஏமாந்த குழந்தை கண்களைத் திறந்து கொண்டு அவன் போகும் திசையைப் பார்த்து 'வவ் வவ்' என வலித்துக் காட்டுகிறது.
பிறகு தன் 'மூட்டைகள்' எல்லாவற்றையும் சுருட்டி வாரிக் கட்டிக்கொண்டு வெளிக்கேட்டுக்கருகில் உட்கார்ந்து, கைப்பிடிச் சுவரில் சாய்கிறது. தகப்பனார் வரும் திசையை நோக்கியபடியே தூங்கிவிடுகிறது.
மணி நான்கு இருக்கும்.
சுந்தரவடிவேலு காரில் திரும்பி வருகிறார். மனசு நிலைகொள்ளாதிருக்கிறது. குழந்தையின் நினைவு பகல் முழுவதும் மனதை வாட்டியது, அவரது முகத்தில் பிரதிபலிக்கிறது.
தூரத்திலிருந்தே குழந்தை வாசலில் சாய்ந்திருப்பதைக் கண்டு, காரைத் துரிதப்படுத்துகிறார். அருகே வரவரக் குழந்தை தூங்குவது தெரிகிறது. தானும் சிறு குழந்தை மாதிரி மரகதத்திடம் நடந்து கொண்டதின் விளைவே இம்மாதிரி வீட்டில் பிளவு ஏற்படவும், குழந்தைக்கு இந்தத் தனிமை லபிக்கவும் காரணம் என அவர் தீர்மானித்து, அதை உடனே நிவர்த்திக்க வேண்டும் என நினைக்கிறார்.பலமாக 'ஹார்ண்' அடித்துக்கொண்டு வெளிவாசலை நெருங்குகிறார். குழந்தை விழித்துக்கொண்டு, கொட்டாவி விட்டபடி கண்ணைத் துடைத்துக்கொண்டு நிற்கிறது.
சுந்தரவடிவேலு காரை நிறுத்தி இறங்கி குழந்தை, 'குழந்தையின் பரிவாரம்' சகலத்தையும் காரில் ஏற்றிக்கொண்டு வண்டியை உள்ளே திருப்பிக்கொண்டு வீட்டுக்குச் செல்லுகிறார்.
வீண் முரண்டால் மனக்கசப்பைத் தவிர ஆகிற காரியம் ஒன்றுமில்லை என்ற முடிவுக்கு வந்த மரகதம், அன்று தலையை ஒழுங்காகச் சீவி முடித்துக்கொண்டு, சாயங்காலக் காப்பி எல்லாம் தயாரித்து வைத்துவிட்டு, வெளியே கார் வரும் சப்தத்தைக் கேட்டு நடுக் கூடத்திற்கு வரும்போது வெளியிலிருந்து, "சித்தியைக் கூப்பிட்டு காப்பியை இங்கே கொண்டாரச் சொல்லுவோம். மரகதம்! மரகதம்" எனக் கூப்பிடும் குரல் கேட்கிறது.
"வாண்டாம் அப்பா,நாம் போயி வெளையாடுவோம்" என்கிற குழந்தையின் குரலும் கேட்கிறது.
சுந்தரவடிவேலு விழுந்து விழுந்து சிரிக்கும் சப்தம்....
"சித்தி நல்லவள்ளா - அண்ணெக்கேதான் பூனெய அடிச்சு வெரட்டியாச்சே" என்கிறார்.
"பூனைக்கில்லெப்பா..." என்கிறது குழந்தை.
இவ்வளவையும் கேட்டுக்கொண்டே காப்பி பலகாரங்களுடன் வெளியே வருகிறாள் மரகதம். அவள் முகத்தில் நாணம், வருத்தம் இரண்டும் கலந்திருந்தும் ஒரு மலர்ச்சியும் புன்சிரிப்பும் இருக்கிறது.
"ஏதேது" எனத் தமது 'வேலையில்' பாதி முடிந்துவிட்டதை உணர்ந்துகொண்ட சுந்தரவடிவேலு, "இந்தா நான் நாக்காலியே எடுத்துப் போடுறேன்; இந்தச் சட்டையெல்லாம் போட்டுகிட்டு வா" என தன் கோட்டைக் கழற்றிக் கொடுக்கிறார்.
பக்ஷணத் தட்டை ஒரு மேஜை மேல் வைத்துவிட்டு கோட்டை வாங்கிக்கொண்டு உள்ளே செல்லுகிறாள் மரகதம்.
தகப்பனாரும் குழந்தையுமாக. நாற்காலிகளை இழுத்துப் போடுகிறார்கள்.
"குஞ்சு, குஞ்சு, நீ கொஞ்சம் சும்மா இரு, நானே போடுகிறேன்."
"ஒனக்குத் தெரியாதப்பா..." என்று ஒரு நாற்காலியை முக்கி முனகி இழுக்கிறது.
மரகத்ம் திரும்பி வருகிறாள்.
மத்தியில் மேஜையை வைத்து அதில் பலகாரங்களை வைக்கிறாள். ஒரு புறம் குழந்தையையும், மறுபுறம் மரகதமுமாக உட்காருகிறார்கள்....
"என்ன மரகதம், நீயும் என்ன சிறுபிள்ளைத்தனமா அண்ணக்கி நடந்துக்கிட்டே அவ 'அக்கா' என்று சொல்லிட்டா குத்தமென்ன; அதிலெ என்ன வசெ..." என்று ஒரு டீ பிஸ்கட்டை முறிக்கிறார் சுந்தரவடிவேலு....
"இது ஒங்கிளுக்குத் தெரியாதாக்கும். அக்கான்னா மூதேவி; நல்ல ஆம்பிளைதான்" என்கிறாள்.
"குஞ்சம்மா நீ ஏண்டியம்மா அண்ணெக்கி சித்தியை அக்காண்ணெ."
"அண்ணெக்கி, ஊருலே, மோளம் அடிச்சுதே அண்ணெக்கி நீ சொல்லலே, அக்கா என்று சொல்லப்படாதுன்னு!" என அந்த வார்த்தை தனக்கு வசவாக மாறிய விதத்தை விளக்குகிறது குழந்தை. இருவரும் விழுந்துவிழுந்து சிரிக்கிறார்கள்....
"குஞ்சு நீ இண்ணைக்கி எங்கெல்லாம் வெளையாட்டு வெளையாடினே சொல்லு பார்ப்போம்" என்றுகொண்டு நாற்காலியில் சாய்ந்துகொள்ளுகிறார்.
"இண்ணெக்கா, வட்டாடுனேன்; அப்பறம் பூச்சாண்டி வந்தான் ..."
"பூச்சாண்டியா?" எனக் குழந்தை பயந்துவிட்டதோ என்ற கவலையும் கொள்கிறார்; மரகதத்தின் முகத்திலும் கவலை தேங்குகிறது.
"ஆமாம்ப்பா! நல்ல பூச்சாண்டி; அவன்கூட விளையாடினேன்...."
"பாத்தியளா, குழந்தை கண்ட பிச்சைக்காரனோட எல்லாம் போய் சேர்ந்து உழப்புது" என்கிறாள் மரகதம்.
"அப்பா அவன் பிச்சைக்காரன் இல்லை, பூச்சாண்டி. சாப்பிட்டுப் புட்டுக் கையைக் கொளாயிலே களுவினான்; பிச்சைக்காரன் மாதிரி, துணிலெ தொடச்சுக்கலெ" என்கிறது.
இருவரும் குழந்தையின் வியாக்கியானத்தைக் கண்டு சிரிக்கிறார்கள்.
"அவன் கூட என்ன வெளையாடினே?"
"மந்திரம்" என்கிறது.
"என்ன மந்திரம்" என்கிறார் சுந்தரவடிவேலு ஆச்சரியத்துடன்
"ஒரு பிசுக்கோத்துக் குடு. செஞ்சு காட்டுறேன்" என்கிறது. அவர் ஒரு பிஸ்கட் துண்டை எடுத்துக் கொடுக்கிறார்.
குழந்தை கைமாற்று வித்தையை தனக்குத் தெரிந்தபடி செய்து செய்து சிரிக்க வைக்கையில், வாசலில் ஒரு ரிக்ஷா வந்து நிற்கிறது.
அதிலிருந்து ஒரு பெரியவர் மடிசஞ்சியுடன் இறங்குகிறார்.
குழந்தை அவரைக் கண்டுகொண்டு "தாத்தா!" எனக் கத்தியபடி நாற்காலியைவிட்டு அவரை நோக்கி ஓடுகிறது.
மரகதமும் சுந்தரவடிவேலும் எழுந்து நிற்கிறார்கள்.
"மாமா வாருங்க!" எனக் கும்பிடுகிறார்.
"அப்பா சேவிக்கிறேன்" என்று விழுந்து வணங்குகிறாள் மரகதம்.
"மங்களமா இருக்கணும்." எனக் கிழவனார் ஆசீர்வதிக்கிறார்."மரகதம், நீ போய் முருகனைப் பாத்து மாமாவுக்கு வென்னிப் போடப் பாரு; சீக்கிரம் - அவுசரமா ரயில்லே ஏறி உக்காந்தாங்கண்ணா பல்லுலே தண்ணி பட்டிருக்காது என்று அர்த்தம்" என்கிறார் சுந்தரவடிவேலு.
"நாந்தான். ஏ முருவா தாத்தாவுக்கு வென்னிப்போடு!" என்று கீச்சிட்டுக்கொண்டு உள்ளே ஓடுகிறது குழந்தை.
"ஏட்டி பைய, பைய எதமாப்போ!" என்று எச்சரிக்கிறார் பாட்டனார். குழந்தையின் கீச்சுக் குரல் "முருவா முருவா!" என உள்வீட்டில் முழங்குகிறது.
மரகதமும் பின்தொடருகிறாள்.
"ராசாவுக்கு என்ன சீக்கு! அப்பிடித் திடீரென்று..." என்கிறார் மாமனார்.
"எம் முட்டாத்தனம்: அவன் எண்ணெக்கிமே பெலகீனம்: நான் வெளிலே போனாப்போ மழையிலே சுத்தியிருக்காப் போலிருக்கு ; திடீருன்னு ஜன்னியும் வலிப்பும் கண்டுது... அவனுக்கு அடிக்கடி ஒரு வலிப்பு வந்துகொண்டிருந்தது..." என்கிறார் சுந்தரவடிவேலு குரல் கம்மலுடன்.
இருவர் கண்களும் கலங்குகின்றன.
"அவ்வளவுதான் நமக்கு அதிஷ்டம். குடுத்து வைக்கலே, வருத்தப்படாதே போ..." என்கிறார் கிழவர்.
இருவரும் மௌனமாக இருக்கின்றனர். சுந்தரவடிவேலு மனம் அவரையே சுடுகிறது.
"நம்மூரிலே ஒரு பிள்ளையார் கோயில் கட்டணும் என்று எனக்கு ரொம்ப நாளா ஆசை. வாய்க்கால் பக்கம் இருக்கே முக்கோணமாக ஒரு நெலம், நந்தவனத்துக்குப் பக்கத்திலே, அதே நீ குடுத்தா நல்லாருக்கும்" என்று பேச்சை வேறு திசையில் திருப்புகிறார் கிழவர்
பிராயச்சித்தம் போல இவ்வார்த்தைகள் சுந்தரவடிவேலுக்கு ஒரு மனக்குளுமையை ஏற்படுத்துகிறது.
"அப்படியே செய்துவிடுவோம். அதற்கென்ன" என்கிறார்.
மனக்கண்முன் பிள்ளையார் சிலை ஒன்று பூதாகரமாக ஆனால் மனசுக்குக் குளுமை ஏற்படுத்தும் தன்மையோடு கூடி நிலைக்கிறது...
❍❍
மறுநாள் விடியற்காலம்....
"தும்பிக்கையொன்றே துணை" என்ற கிழவனார் குரல்....
"தும்பிக்கையொன்றே தொணை" என்கிறது குஞ்சுவின் குரல்.
கி : காட்டு வழியானாலும்...
கு : காட்டு வழியானாலும்...
கி : கள்ளர் பயமானாலும்...கு : கள்ளர் பயமானாலும்...
கி : ஏட்டு வழிக்காரருக்கே...
கு : ஏட்டு வழிக்காரருக்கே...
கி : இதமுண்டு...
கு: இதமுண்டு...
இவ்வாறு கிழவர் குழந்தையை எழுப்பி வைத்துக்கொண்டு சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கிறார். முகம் தெரியாத இருட்டு. குஞ்சு போர்வைக்குள் உட்கார்ந்துகொண்டிருக்கிறது; சின்னக் கட்டிலில்.
"மகாதேவா - சொல்லு."
"மகாதேவா..."
"இங்கே எழுந்திரிச்சி வா!"
குழந்தை எழுந்து ஒரு கால்சட்டையை முடிந்துவிடும்படி, தாத்தாவிடம் கொண்டு வருகிறது.
தாத்தா : ஏட்டி! பாவாடெ எங்கே?
கு: இருட்லெ தெரியலெ தாத்தா! இதைத்தான் கட்டிவுடு.
கி : இதெ எப்பொ எடுத்தாந்தெ?
கு: கட்டில்லெ கெடந்தது...
கி: நல்லாத்தான் இருக்கு; நீ என்ன ஆம்பளப்புள்ளெயா...? என்று நாடாவை முடித்துவிடுகிறார்.
கு : ரொம்ப இறுக்காதே வயித்தெ வலிக்குமாம்.
"இங்கே வா! திருநூறு பூசட்டும்" எனத் தானும் இட்டுக்கொண்டு, குழந்தைக்கும் பூசுகிறார். சிறிது வாயில் போடுகிறார்.
"இன்னும் கொஞ்சுண்டு தாத்தா" என்கிறது குழந்தை.
"உம்! அதெல்லாம் சோகெ புடிக்கும். ஒண்ணு, ரெண்டு, மூணு சொல்லு... ஒனக்குத் தெரியுமா?"
"நீ சொல்லு, நான் கேட்டுக்கிட்டிருக்கேன்."
"அடி போடி, சொல்லுடின்னா!"
"தாத்தா! நீ இங்கியே உக்காந்துகிட்டு இரு, நான் உள்ளே போயிட்டு வாரேன்" எனப் புறப்படுகிறது.
"எங்கடி இருட்டிலே, இப்படி உக்காரு."
"நீ இரேன், இதோ வாறேன்..." என்று சொல்லிக்கொண்டே உள்ளே போய் மச்சிலுக்கு ஏறுகிறது.
இருட்டில் கஷ்டப்படக் கூடாதே எனக் கிழவரும் தொடர்கிறார். அதன் வேகத்தைப் பிடிக்க முடியவில்லை.
அது மச்சிலில் நேராக ஒரு அறைக்குள் நுழைவதைக் கண்டு பின்தொடர்கிறார்.வாசலை நெருங்கியதும் திக்பிரமையடைந்து நின்றுவிடுகிறார்.
குழந்தை தாயாரின் படத்தின்முன் கும்பிட்டுக்கொண்டு நிற்பதையும் பார்த்துவிடுகிறார்.
குமுறிக்கொண்டு வரும் அழுகையை வாயில் துணியை வைத்து அமுக்கிக்கொண்டு இறங்கிவந்து படுக்கையில் உட்கார்ந்துவிடுகிறார்.
சிறிது நேரம் கழித்துக் குழந்தை திரும்பி வருகிறது.
"தாத்தா பல்லு வெளக்கலெ; அப்பா ஏந்திரிச்சாச்சு!" என்று அவரை அசைக்கிறது.
மெதுவாக எழுந்து அவள் கையைப் பிடித்துக்கொண்டு தொடருகிறார்.
❍❍
பகல் மத்தியானம் இரண்டு மணி இருக்கும்.
குழந்தை சிவப்பழமாக வாசலில் நின்றுகொண்டிருக்கிறது. நெற்றியில் விபூதி, சந்தனப்பொட்டு. உடம்பிலும் மூன்று மூன்று வரைகள் - புலிவேஷம் போட்ட மாதிரி. குழந்தை அதைப் பார்த்துப் பார்த்து ரசித்துக்கொண்டு நிற்கிறது.
வீட்டு உள்கூடத்தில் தாத்தா நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். எதிரில் கலங்கிய கண்களுடன், தன் குறைகளை எல்லாம் தெரிவித்துக் கொண்டிருக்கிறாள் மரகதம்.
ஆற அமர அவர் கேட்டுக்கொண்டிருக்கையில் குழந்தையின் குரல் கேட்கிறது.
"தாத்தா, கள்ளன் வந்திருக்கான்" என்று அறிவிக்கிறது.
"என்னட்டி!"
"கள்ளன் தாத்தா - திருடன், களவாணி" என விளக்குகிறது.
இருவரும் பதறிப்போய் என்னவென்று ஓடுகிறார்கள். வாசலில் நீளக் கிராப்புத் தலையும் ஷர்ட்டும், டர்க்கி டவலும் அணிந்த ஒருவன் சிரித்துக்கொண்டு நிற்கிறான்.
"சார் இருக்கிறாங்களா" எனக் கேட்டுவிட்டு, "ஏது, குழந்தை ரொம்ப ஜாக்கிரதை போலிருக்கிறதே!" எனச் சிரிக்கிறான்.
"அது உளறுகிறது. அவாள் இல்லை” என்று சொல்லியனுப்பி விடுகிறார் கிழவனார்.
"பாத்தியளா கூத்தை; இந்த மாதிரிதான்; அண்ணைக்கி ஒருத்தென் இவன் மாதிரிதான் சட்டையும் கிட்டையும் போட்டுக்கிட்டு வந்தான்- இவர் இல்லெ. புள்ளெ வெளிலே தனியா வெளையாடிக்கிட்டிருந்தது. உள்ள கூப்பிடுறதுக்கு இப்படிச் சொல்லி வச்சேன் - நம்மையே பரிசி கெடுத்து விட்டது" என்கிறாள் மரகதம்.
"அப்பொ நான் சொல்லுகிறதைக் கேளு. உன் மாப்பிளைக்கி மொறைக்கு ஒரு அக்கா இருக்கா. வயசானவ. ரொம்ப ஏழை. ஏழெட்டு வயசுப் பையனும் அவளுந்தான். அவளை இங்கே கூட்டி வச்சுக்கோ. வீட்டையும் பாத்துக்குவா - புள்ளையெயும் பாத்துக்குவா -என்ன சொல்லுறே சம்மதமா?"
"நீங்க சொன்னாச் சரிதான், இல்லேங்கப் போறனா நான்" என்கிறாள்.
"நான் இண்ணெக்கே புறப்படுறேன்; புள்ளையும் கூட்டிக்கிட்டுப் போரேன்; அங்கெல்லாரும் பார்க்க ஆசைப்படுறாக" என்கிறார் கிழவர்.
இரவு ரயில்வே ஸ்டேஷன்.
இரண்டாவது வகுப்பு வண்டியில் கிழவனாரும் குஞ்சுவும் உட்கார்ந்திருக்கிறார்கள். பிளாட்பாரத்தில் சுந்தரவடிவேலுவும் மரகதமும் நிற்கிறார்கள்.
ரயில் ஊதிவிட்டது; புறப்படப் போகிறது.
"ஊருக்குப் போறியாக்கும்" எனக் குழந்தையை ஜன்னல் வழியாக முத்தமிடுகிறார்.
ரயில் நகருகிறது.
"ஏட்டி,போயிட்டு வாறியா?" என்கிறாள் மரகதம்.
"ஒன்கூட டூ. ஆனமேலே, அம்பாரி மேலே டு " என ஜன்னல் வழியாகக் கையை நீட்டிக்கொண்டு கத்துகிறது குழந்தை. கிழவனார் அதன் இடுப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இருக்கிறார்.
திருமணம்
ஒரு கலியாண வீடு; அதாவது கலியாண வீட்டின் முன் முகப்பு. சட்டத்தால் வாரிசுகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமே என்று சட்டத்தையும் பொதுஜன அபிப்பிராயத்தையும் ஒருங்கே திருப்தி செய்விக்கும் நோக்கத்துடன் நடப்பதுபோல அவ்வளவு படாடோபமற்ற அலங்காரம்.
வாசலில் தெருவுக்கு எதிர்ப்புறத்தில் ஒரு பூவரச மரம். நாலைந்து பேர்கள் கலியாண 'மஜா'வில் கும்மாளமடித்து நிற்கிறார்கள். அவர்களுள் ஒரு சிறுவன்; ஒற்றைநாடியான சரீரம்; தீட்சண்யமான கண்கள் எண்ணை கொஞ்சம் வழியவிட்டுச் சீவிய கிராப்புத் தலை. இடையில் பட்டு வேஷ்டி; பட்டு ஷர்ட்; இடுப்பில் பட்டுக்கரை மேல்வேஷ்டியைப் பிரிமணையாகச் சுற்றிக் கட்டியிருக்கிறான். வெற்றிலை அளவுக்கு மிஞ்சிப் போட்டதால், வாயும் ஷர்ட்டும் சிகப்புக் கறையுடன் காணப்படுகிறது. வாய் அசைபோட்டுக் கொண்டிருக்கிறது.
சிறுவர்கள் கும்பல் சும்மா நிற்கவில்லை. ஒருவரையொருவர் பிடித்துத் தள்ளி விளையாடிக்கொண்டிருக்கின்றனர். ஒரு பையன் வாழை மட்டை ஒன்றை வைத்துக்கொண்டு பக்கத்தில் யாரும் கவனிக்காமல் பராக்காக இருக்கும் சமயத்தில் பின்பக்கமாகப் போய் படார் என்று தரையில் அடித்து அதனால் திடுக்கிடுவதைக் கண்டு சிரித்து மகிழுகிறான்.
உள்ளே நாதசுரக்காரன் குரலெடுக்கிறான். சாதாரணக் கலியாணம் என்பதைக் காட்டும் சாதாரணத் திறமை.
பட்டு வேஷ்டி அலங்காரத்துடன் இருக்கும் பையன், ரொம்ப பெருமையாக முகத்தை வைத்துக்கொண்டு, அப்பொழுதுதான் அங்கு வந்த ஒருவனிடம் "எங்கப்பாவுக்கு கலியாணம்டா?" என்று பெருமையடித்துக்கொண்டான்.
கேட்டவன், சொன்னவனுடைய அறியாமைக்குப் பரிதவிப்பவன் போல "இவுங்க அப்பாவுக்காண்டா எங்க மதினிக்கு கலியாணன்டா?" என மற்றவர்களுக்கு உண்மையை நிர்த்தாரணம் செய்து பாராட்டு தலை சுற்றும்முற்றும் எதிர்பார்க்கிறான்.
"எங்கப்பாவுக்குத்தாண்டா?" எனக் கிரீச்சிட்டுக்கொண்டு, "கலியாணக் கடுதாசிலேகூட அச்சுப் போட்டிருக்கு" என்றவாறு இடுப்பில் சுற்றியிருந்த பட்டு லேஞ்சியை அவிழ்த்து கந்தரகோளமாகக் கழுத்தில் போட்டுக்கொண்டு, துருத்திக்கொண்டிருந்த மடிப் பொட்டளத்தை அவிழ்க்கிறான். அதில் ஒரு லட்டு, கசங்கி வெதும்பும் ஒரு கட்டு வெற்றிலை, சாயப் பாக்கு வகையறாக்களுடன் நசுங்கும் கலியாணக் கடுதாசியை வெளியே எடுத்து நிமிர்த்தி விரித்து, எழுத்துக்கூட்டி பெயரை வாசிக்க ஆரம்பிக்கிறான்.
"ஏ. எஸ். சு. இந்-தி-ர-வடி - வடி... வேலுப் பிள்ளை!"...அதே சமயத்தில் எதிர்க்கட்சியாடிய பையன்:
"ம - ர - க - தா - ம் -பா -ள்... எங்க அப்பா!"
"எங்க மதினி!"
"அப்படின்னா நாம சொந்தம்!" என்று கழுத்தில் கையைப் போட்டுக்கொண்டு இறுக்குகிறான் மாப்பிள்ளையின் மகன்.
அதே சமயத்தில் கூட்டத்திலிருந்து இன்னொருவனுக்குப் பூவரச மரத்தில் ஏறி தழை பிடுங்கி ஊதல் செய்யவேண்டுமென்று தோன்றி விடுகிறது. விருவிருவென்று ஏறி கிளையில் உட்கார்ந்துகொண்டு ஒரு இலையைச் சுருட்டி வாயில் வைத்துக்கொண்டு ஊதுகிறான். அந்த சப்தத்தைக் கேட்ட மற்ற சிறுவர்கள் இலைக்காகக் கெஞ்சுகிறார்கள்.
கிளை கிளைகளாக ஒடித்துப் போடுகிறான் உயர இருப்பவன்.
கீழே ரகமயமான ஊதல் சப்தம்.
சுந்தரவடிவேலுப் பிள்ளையின் மகனும் ஒரு இலையை எடுத்துக் கொண்டு யாரும் பிடுங்கிக்கொள்ளாமல் தூரத்தில் ஓடி நின்று கொண்டு சுருட்டி வாயில் வைத்துக்கொண்டு ஊதுகிறான். அவசரத்தில் உருட்டியதால் சத்தம்... பக் - பக் - என திக்கித் திக்கி தாரை வாசிக்கிறது.
அச்சமயம் கலியாண வீட்டை நோக்கி ஒரு பெரியவர் கையில் மடிசஞ்சி மூட்டையுடன் நடந்து வருகிறார்.அவரைக் கண்டதுதான் தாமதம். "தாத்தா வந்திட்டாங்க..." என உச்சஸ்தாயியில் கத்திக்கொண்டு உள்ளே ஓடுகிறான்.
ஆளில்லாமல் அலங்காரத்துடன் நிற்கும் மணவறை, பந்தலில் ஒரு மூலையில் மேளக்காரன். நடுவில் வெற்றிலைத் தட்டு. யாரோ ஒரு பெரியவர் மட்டும் உட்கார்ந்திருக்கிறார். அவரையும் தாண்டி விழுந்து உள்ளே ஓடுகிறான். வீட்டு வெளி ஓர வழியாக உள்ளே பெண்கள் கும்பலை சுற்றிக்கொண்டு மச்சுப் படிகளில் வேகமாக ஓடுகிறான்.
ஓடுகிற வேகத்திலும் அவன் வாயில் ஊதல் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
மச்சில் ஒரு அறைக்குள் திரும்புகிறான்.
வாசற்படியில் நின்றுகொண்டு விரைக்க வியர்க்க, "அப்பா, அப்பா! தாத்தா வந்திட்டாங்க!" என்று இளைப்பால் கம்மிக் கம்மிச் செய்தியைக் கக்குகிறான்.
அறையில் விரித்த ஜமுக்காளத்தில் வெற்றிலைத் தட்டைச் சுற்றி ஐந்தாறு பேர் உட்கார்ந்திருக்கிறார்கள்.
ஒருவர் பக்கத்தில் உள்ள திண்டின்மேல் முழங்கையை மட்டும் சாயவைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.
மடியில் ஒரு மூன்று வயதுப் பெண் குழந்தை உட்கார்ந்துகொண்டு அவர் கன்னத்தைத் தொட்டுத்தொட்டு, "அப்பா! அப்பா!" என்ற வண்ணம் பெரியவர்கள் பேச்சில் தலையிட்டு தன் குதலையால் குழப்புகிறது. அவர் குழந்தையின் தலையைத் தடவிக்கொடுத்தபடி மற்றவர்கள் சொல்லுவதைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
மகன் சப்தம் கேட்டதும் ஏறிட்டு அந்தத் திசையைப் பார்க்கிறார்.
"எங்கெடா..."
குழந்தை சிறுவன் கையிலிருக்கும் ஊதலைப் பார்த்துவிட்டு, "எனக்கும் ஊதல்" எனக் கத்துகிறது.
"தரமாட்டேன்... அப்பா, தாத்தாவைக் கூட்டியாரேன்" என்று கத்தியவண்ணம் கீழே ஓடுகிறான்.
குழந்தை ஊதல் வேண்டும் என்று கத்த ஆரம்பிக்கிறது.
"டே! கண்ணு... " எனத் தகப்பனார் பேச்சு எடுக்குமுன் மாடிப்படிகளில் இருவர் மோதிக்கொள்ளும் சப்தம்... சிரிப்பு.
"எங்கடா இந்த ரயில் அவசரம்?" என்ற பெரியவர் குரல்.
"இல்ல தாத்தா; உங்களைக் கூட்டியாரத்தான் ஓடியாந்தேன்...."
"அட போடா? படுக்காளிப் பயலெ, மாடிப் படிலே இப்படி ஓடலாமா?... பல்லு தெறிச்சுப் போகாது, விழுந்தா...?"
"விழமாட்டேன் தாத்தா!"
பாட்டனும் பேரனும் உள்ளே வருகிறார்கள்.
"நமஸ்காரம் மாமா! வரவேணும்...."கிழவனார் தன் பேத்தியை கையில் வாங்கிக்கொண்டு முத்தமிடுகிறார். குழந்தை அவர் தோள்வழியாகப் பின்புறத்தில் நிற்கும் அண்ணனிடமிருக்கும் ஊதலைப் பார்த்துக்கொண்டே அது தனக்கு வேண்டும் எனக் கத்துகிறது.
கிழவனாரும் மருமகனும் ஜமுக்காளத்தில் அமருகிறார்கள்.
பக்கத்தில் நின்ற வாலிபன் வந்தவரைப் பன்னீர் தாம்பூலம் பரிமாறி உபசரிக்கிறான்.
பேரன் பன்னீர்ச் சொம்பை எடுத்துக்கொண்டு அவர் தலையில் பன்னீரைத் தெளித்து வழுக்கையில் அது வழிவதைக் கண்டு ரசிக்கிறான்.
கிழவர் பையனைச் செல்லமாகக் கண்டித்துக்கொண்டு, "சீ! படுக்காளிப் பயலே, இங்கே வா ! இப்படி உட்காரு, படிக்கியால்" என்று கேட்கிறார்.
"இப்பொ ரெண்டாங் கிளாஸ்" என்று பெருமை அடித்துக் கொள்ளுகிற மாதிரி ஆரம்பித்து "பெயிலாப் போச்சு" என்று முடிக்கிறான்.
சிறு குழந்தையின் நச்சுக்காக அவர் எழுந்திருந்து ஜன்னலுக்கு வெளியே நின்ற தென்னையின் மடலிலிருந்து ஒரு ஓலையைப் பிய்த்துக்கொண்டுவந்து உட்கார்ந்து, மடியிலிருந்த சூரிக் கத்தியால் அதைத் திருத்தி, ஊதல் ஒன்று செய்ய ஆரம்பிக்கிறார் கிழவர். முகூர்த்த நேரம் நெருங்கிவிட மாப்பிள்ளைச் சடங்கு ஆரம்பமாகிறது.
மாப்பிள்ளை மணவறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
புகை மண்டிய ஹோமம் நடக்கிறது. பிறகு பெண் சடங்கு.
இந்த நேரத்தில் கிழவனார் தன் பேரப்பிள்ளைகள் இருவரையும் மடியில் உட்கார வைத்துக்கொண்டு மணப்பந்தலில் வருகிற விருந்தினர்களை உபசரிப்பதில் பங்கெடுத்துக்கொள்ளுகிறார்.
மணமேடையில் மாப்பிள்ளையும் பெண்ணும் வந்து உட்காருகிறார்கள்.
திருமங்கல்யதாரண சமயம்... மௌனமும் இரைச்சலும்.
சந்தடியில் பெண் குழந்தை கிழவனார் மடியிலிருந்து நழுவி ஓடி தகப்பனார் மடியில் உட்கார்ந்துகொண்டு கையிலிருந்த ஊதலை வாசிக்கிறது.
மணப்பெண் கடைக்கண் போட்டு குழந்தையைப் பார்க்கிறாள்.. முகத்தில் வெட்கம் கவிகிறது.
அவள் பார்வையைக் கண்டுகொண்ட குழந்தை அவள் மூஞ்சிக்கு நேராக ஊதலை நீட்டிக்கொண்டே ஊதுகிறது.
மணவறையில் ஏக ரகளை; எல்லோரும் சிரிக்கிறார்கள்.
மாப்பிள்ளை சிரித்துக்கொண்டு, "குஞ்சு, பாட்டா மடிலே இருந்துக்கோம்மா!" என்று பக்கத்திலிருந்தவர்களிடம் எடுத்துக் கொடுக்கிறார்.குழந்தை கைமாற்றிப் பாட்டையாவிடம் சேர்ப்பிக்கப்படுகிறது. ஊதல் சப்தத்தை மாத்திரம் விடவில்லை.
அதே சமயத்தில் திருமங்கல்யதாரணமும் நிகழ்கிறது... பெண்ணின் கழுத்தில் தாலி ஏறுகிறது. மாப்பிள்ளையின் கையில் மட்டும் சிறிது நடுக்கம்... முகத்தில் மலர்ச்சியானாலும்...!
கிழவனார் பேரன் கிராப்புத் தலையைத் தடவிக்கொண்டு மணமேடையைப் பார்க்கிறார். என்றாலும் பார்வையுடன் நினைவு லயிக்கவில்லை.
அம்மி மிதித்து அருந்ததி காட்டும் சடங்குகள் ... யாவும் நடை பெறுகின்றன.
ஆசீர்வாதம்...
பெரியோர் யாவர் முன்பும் தம்பதிகள் வந்து வணங்குகின்றனர். ஒவ்வொருவரும் திருநீறு இட்டு ஆசீர்வதிக்கின்றனர்.
கடைசியாக முதல் மாமனார் முறை.
அவர்முன் வந்ததும் சுந்தரவடிவேலு சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கிறார்.... பெண்ணும் விழுந்து கும்பிடுகிறாள்.
பெரியவர் கண் கலங்குகிறது.... திருநீற்றை இருவர் நெற்றியிலும் இடுகையில் அவர் கை நடுங்குகிறது.
சின்னக் குழந்தை?
"அப்பா! நாந்தான் நல்லா ஊதியை ஊதினேன்! அந்த அக்கா மூஞ்சிலேகூட ஊதினேனே ...." என்கிறது. மணப்பெண்ணின் முகம் சிவக்கிறது. யாவரும் சிரிக்கின்றனர்.
மாப்பிள்ளையும் குழந்தையை வாரி எடுத்துக்கொண்டு முத்த மிட்டு "அக்கா இல்லேட - சித்தி" என்றுகொண்டே ஏதோ யோசனை தட்டியது போல பிரகாசமான முகத்துடன் குழந்தையைப் புது மனைவி கையில் கொடுக்கிறார்.
சற்று நேரம் தயங்கி நின்ற பெண் தயக்கத்துடன் வாங்கி பெண்களுக்குரிய பழக்கப்படி இடுப்பில் உட்கார வைக்கிறாள்.
பக்கத்தில் நிற்கும் பெண்கள் சிரித்து ரகளை செய்கின்றனர்.
இடுப்பிலிருந்த குழந்தை இறங்கி, "சித்தி! வா நான் கூட்டிக் கொண்டு போகிறேன்" என அவள் நடுவிரலைப் பிடித்துக்கொண்டு முன் நடக்கிறது.
"ஒனக்கென்னமா கவலெ! மகளே உன்னைக் கூட்டிக்கொண்டு புறப்பட்டுவிட்டாள்" என்கிறாள் பெண் தோழி.
மறுபடியும் சிரிப்பும் அட்டகாசமும்.
பெண்கள் கூட்டம் மணப்பெண்ணுடன் வீட்டுக்குள் செல்லுகிறது.
மாப்பிள்ளையும் முதல் மாமனாரும் தனித்து நிற்கின்றனர்.
மாப்பிள்ளை "என்ன மாமா, நீங்க மட்டுந்தான் வந்தீர்களா? மதினியைக் காணலியே."மாமனார்: "அவள் குளத்தூர் கலியாணத்திற்குப் போயிருக்கிறாள்... நான் உங்களை எல்லாம் கூட்டிக்கொண்டு போகலாம் என்றுதான் வந்தேன். நாளை சாயங்காலம் வந்திடுவாள்."
மாப்பிள்ளை சிரித்துக்கொண்டு, "இரண்டு நாள்தான் லீவு எடுத்து வந்தேன்; நாளை சாயங்காலம் ரயில்லே இருப்போம்..."
ரயிலில்
நல்ல இருட்டு. ஓடுகிற ரயில் வண்டியில் இரண்டாவது வகுப்பு. நீட்டுப் போக்கில் சீட்டுகள் அமைந்த விசாலமான வண்டி. முழுதும் ரிஸர்வ் செய்யப்பட்டிருப்பதால் வண்டியில் சுந்தரவடிவேலு, அவரது புது மனைவி மரகதம், குழந்தைகள் உட்கார்ந்திருக்கின்றனர்.
சுந்தரவடிவேலு வெறும் ஷர்ட்டும் பைஜாமா கால்ச் சட்டையும் அணிந்துகொண்டு உட்கார்ந்திருக்கிறார். மரகதம் ஜன்னலடியில் உட்கார்ந்து வெளியே பார்ப்பதும் உள்ளே குழந்தைகள் விளையாடு வதைக் கவனிப்பதுமாக இருக்கிறாள்.
குழந்தை குஞ்சு ரயில் வண்டி மாதிரி புஸ் புஸ் புஸ் என்ற வண்ணம் கைகளை பிஸ்டனைப்போல் ஆட்டிக்கொண்டு, ரயில் ஊதுகுழலைப்போல் வாயால் ஊதுகிறதும் மறுபடியும் வண்டி பெட்டிக்குள் சுற்றிச் சுற்றி ஓடி வருகிறதுமாக இருக்கிறாள். வண்டி ஓடுவதனால் சில சமயம் தள்ளாடி விழுவாள். மறுபடியும் எழுந்து நின்றுகொண்டு என்ஜின் புறப்படும்.
அவளுடைய அண்ணன் ராஜா பத்திரிகையின் சிகப்பு அட்டை ஒன்றையும் சித்தியின் பச்சைக் கைக்குட்டையையும் வைத்துக் கொண்டு 'ஸ்டேஷன் மாஸ்டர்' உத்யோகம் பார்க்கிறான். எதிர்புறத்து சீட்டு (seat) ராஜா வேலை பார்க்கும் ரயில்வே ஸ்டேஷனின் பதவி வகிக்கிறது.
"என்ன? சின்ன என்ஜினுக்குப் பசிக்கலியா?" என்கிறார் சுந்தர வடிவேலு.
"இன்ஜீன் தண்ணி குடிக்கிற டேஷன் வரலியே அப்பா" என்று குழலூதிக்கொண்டு புறப்படுகிறது குஞ்சு.
"மணி எட்டாச்சு, நீங்கள்ளாம் தூங்க வாண்டாம். டே ராஜா. கையைக் கழுவிக்கடா; மரகதம் குஞ்சுவுக்கு பாட்டில்லெ பாலை ஊத்திக் குடு" என்கிறார் சுந்தரவடிவேலு.
மரகதம் கீழே குனிந்து டிபன் பெட்டியை வெளியே இழுத்துக் கொண்டு அதன் எதிரே உட்கார்ந்து பெட்டியைத் திறந்து துணியில் சுற்றிவைத்திருந்த பாட்டில் ரப்பர் இரண்டையும் எடுத்துக் கழுவிக் கொண்டே, "இன்னும் புட்டியிலா பாலைக் குடுப்பா? ரப்பரைவச்சு உறிஞ்சுனா உதடுல்ல பெருத்துப் போகும்..." என்று அவரைப் பார்த்துக் கேட்கிறாள்.
"பாட்டில்லெ குடுத்தாத்தான் சிந்தாது; அவ உதட்டுக்கென்ன, அழகாகத்தான் இருக்கிறது" என குஞ்சுவை எடுத்து உதட்டில் முத்தமிடுகிறார்."குத்துது அப்பா" என்று முகத்தைப் புறங்கையால் துடைத்துக் கொண்டே இறங்க முயல்கிறது குழந்தை.
"இதோ பாரு குஞ்சு, இந்தப் பாலைக் குடிச்சிட்டு படுத்துக்கணும். நீ குடிக்கிறத்துக்குள்ளே மெத்தையைப் போட்டு வைப்பனாம்...."
"ஆட்டும் அப்பா" என அவர் உட்கார்ந்திருந்த இடத்தில் தலையணை மீது சாய்ந்தபடி பால் பாட்டிலை வாங்கிக் குடித்துக் கொண்டிருக்கிறது.
"டே ராஜா, நீ என்ன சாப்பிடப் போரே? இட்லியா, தயிர்ச் சாதமா...? உனக்கென்ன வேணும்?" என்கிறார் சுந்தரவடிவேலு.
"அப்பா, நான் அந்தப் பழத்தை மாத்திரம் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக்கறனே..."
"சீ, இதென்ன வழக்கம், தயிர்ச்சாதமா பலகாரமா எது வேணும்? மரகதம் நமக்கும் எடுத்து வையேன் ...."
"பின்ன இட்டிலியைத்தான் சாப்பிடுகிறேன்" என வந்து உட்காருகிறான்.
மூவரும் சாப்பிட உட்காருகிறார்கள். "நீ என்ன சும்மா இருக்கே- நீயும் இப்பவே உக்காந்திடேன்...' " என்கிறார் சுந்தரவடிவேலு.
"நீங்கள்ளாம் சாப்பிட்டு முடியுங்க..."
"இதுதானே.. சாப்பாட்டுக் கடையே ஒண்ணா முடிச்சுப்புட்டா எல்லாத்தையும் உதறிக் கட்டி வச்சுப்பிடலாமே, நீயும் உக்காரு- அந்தக் கூஜாத் தண்ணியை எடு..."
"அதுக்காகத்தான் - அப்புறம் என்றேன்." குஞ்சு சாப்பிட்டுவிட்டு, "அப்பா இந்தா பாட்டில்..." என்கிறாள்.
"மரகதம் அதை வாங்கி வை."
எல்லாரும் சாப்பிட்டு முடிக்கிறார்கள்.
சுந்தரவடிவேலு குழந்தைகளைப் படுக்கவைத்துவிட்டு, விளக்கின் மீது கருப்புத் திரையை இழுத்துவிட்டுவிட்டு, சீட்டில் வந்து உட்காருகிறார்.
மரகதம் உடைகளை மாற்றிக்கொண்டு மெல்லிய உடையுடன் வந்து உட்காருகிறாள்.
இருவரும் மெளனமாக இருக்கிறார்கள்.
"என்ன யோசிக்கிறே....?"
"நீங்கதான் சொல்லுங்களே..."
"எனக்கு ஆயிரம் யோசனைகள் இருக்கும்; அதெல்லாம் உனக்குப் புரியாது... நீ என்ன யோசிக்கிறே...."
"குஞ்சுவெப் பாக்கப்போ இவ்வளவு துடியாக இருக்கிறாளே என்று பயமாக இருக்கு! அக்கா எப்படிப்பட்டவர்களோ? என்று நினைச்சுக்கொண்டு இருந்தேன். அக்கா ரொம்ப படிச்சவுகளாமே... எனக்கு கையெழுத்துக்கூடப் போடத் தெரியாது... எங்கம்மா போனப்பறம் என்னெப் பாத்துக்க யாரிருந்தா....?"
"குஞ்சுவெப் பாத்தா அவுக அம்மாளேப் பாக்க வாண்டாம். வயசுக்கு மிஞ்சின புத்தி ... அவளிடம் ரொம்ப ஜாக்கிரதையாக இருந்துகொள்ள வேண்டும் - பளிச்சென்று நம்மைத் தூக்கிவாரிப் போடும்படியாகச் சொல்லுவா, செய்வா -அவுகம்மா... (கொஞ்சும் யோசனையிலாழ்கிறார்) அவுகம்மா போன அண்ணைக்கி கத்துகத் துன்னு கத்தினா. ...அவளை வளர்க்கிறதுதான் பெரும்பாடு... அவள் சில சமயம் என்னையே வளர்க்க ஆரம்பித்துவிடுவாள்....
"நீதான் படிக்காதே போனா என்னா? குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள படிப்பெதற்கு? ஆமாம் மாற்றந்தாய்க் கஷ்டம் என்றால் உனக்கு நல்லாத் தெரியுமே அதுகள் ரெண்டும் சொந்த அம்மா என்று உணரும்படி நடந்துகொள்ள வேண்டும்....
"என்ன ரொம்ப உபதேசம் பண்ரயனேன்னு நினைக்காதே... நீ நல்லதுன்னு நினைச்சு எதையாவது செய்வே; அது தகராறில் கொண்டுவந்து விட்டுவிடும்... எதற்கும் ஜாக்கிரதை ....."
"நிலா வருது பாருங்க.... எப்படி அளகா இருக்கு...."
கிருஷ்ணபக்ஷத்துச் சந்திரன். கிரணங்கள் மெதுவாகத் தூங்கும் குஞ்சுவின் முகத்தில் விழுகின்றன.
அவள் தூக்கத்திலேயே ரயில் எஞ்சின் மாதிரி குச் - குச் என்று கொண்டு முகத்தைப் புறங்கையால் தேய்க்கிறாள்.
சுந்தரவடிவேலு எழுந்து அருகில் சென்று குனிந்து பார்த்துவிட்டு மெதுவாகத் தட்டிக்கொடுக்கிறார். குழந்தை தூங்கிவிடுகிறது.
அவர் விளக்கை அணைக்கிறார்.
வண்டியில் சந்திரனொளியுடன்கூடிய அரைகுறை இருட்டு.
மெதுவாக வந்து மனைவியின் பக்கத்தில் உட்கார்ந்து வலது கையால் அவளை அணைக்கிறார். மரகதமும் அவர்மீது சாய அவளை முத்தமிடுகிறார்...... . "குஞ்சுவுக்கு மட்டுமா குத்தும் ...!" எனச் சிரித்துக்கொண்டு பதில் முத்தம் கொடுக்கிறாள்.
முதல் நாள்
அதிகாலை சுந்தரவடிவேலுவின் பங்களா. இன்னும் யாரும் எழுந்திருக்கவில்லை. குழந்தைகளின் அறை. குஞ்சுவுடைய தாயாரின் பெரிய படம் ஒன்று தொங்குகிறது.
அறையின் ஒரு புறத்தில் குஞ்சுவின் படுக்கை. மற்றொரு புறத்தில் ராஜா...தூங்குகிறான்.
குஞ்சு மெதுவாக எழுந்திருக்கிறாள். தத்தித் தடுக்கி, போர்வையைத் தள்ளிவிட்டு கீழே இறங்கி நின்று தானே சிறு பாவாடையை எடுத்துக் கட்டிக்கொண்டு, சட்டையைப் போட்டுக்கொள்ள முயன்று முடியாமல், கீழே போட்டுவிடுகிறாள்.
தாயார் படத்தின் முன் நின்று, "அம்மா அப்பாக் காப்பாத்து, ராசாக் காப்பாத்து, என்னைக் காப்பாத்து" என்று விழுந்து கும்பிடுகிறாள். காரியம் முடிந்த மாதிரி, மூலையில் ஒரு கயிற்றில் கட்டப்பட்டிருந்த என்ஜினிடம் போகிறாள். ஏதோ ஞாபகம் வந்தவள்போல, படத்திடம் திரும்பிவந்து, "சித்தியைக் காப்பாத்து" என்று படத்திற்கு ஒரு கும்பிடுபோட்டுவிட்டு ரயில் வண்டி சகிதம் சட்டையையும் தூக்கிக்கொண்டு கதவைத் திறந்துகொண்டு மாடிப்படிகள் வழியாக பங்களாவின் பின்புறம் நோக்கிப் போகிறாள்.
வேலைக்காரன் குழாயைத் திறந்து எஜமானுக்கு குளிக்கத் தண்ணீர் நிரப்பிக்கொண்டிருக்கிறான். சன்னலில் வைத்திருக்கும் பல் பொடியை எடுத்துக்கொண்டுபோய் தானே பல் தேய்க்க ஆரம்பிக்கிறாள். எல்லாம் ரொம்ப அவசரமாக நடக்கிறது. வாய் கொப்பளித்தாச்சு. பாவாடையைக்கொண்டு முகத்தைத் துடைத்துக்கொண்டு உள்ளே போக யத்தனிக்கிறாள்.
அப்பொழுது ஸ்நான அறையில் தகப்பனார் துண்டைக் கட்டிக் கொண்டு தலையில் ஒரு சொம்பு ஜலத்தை ஊற்றுவதைப் பார்த்து விடுகிறாள்.
அக்குளில் இருக்கும் சட்டை எறியப்படுகிறது. இடுப்புப் பாவாடையும் கீழே விழுகிறது. என்ஜின் சகிதம் தகப்பனார் காலடியில்போய் நின்றுகொண்டு, அண்ணாந்து பார்த்துக்கொண்டு நிற்கிறாள். அவர் தனது தலை வழியாக ஊற்றுவது இவளையும் நனைக்கிறது. குளிர்ந்த ஜலமாகையால் உடல் வெடவெடக்கிறது. 'சளுக் சளுக்' என்று சிரித்துக்கொண்டு, "எனக்கும் அப்பா!" என்கிறாள்.
முகத்திலிருந்த சோப் நுரையால் கண்ணை மூடியிருந்த சுந்தர வடிவேலு முகத்தைக் கழுவிக்கொண்டு, குனிந்து பார்த்து, "நீ எங்கடி வந்தே, பச்செத் தண்ணிலே குளிக்கப்படாது" என்கிறார்.
"நான்தான் குளிச்சாச்சே; சோப் போடு" என்று கையை நீட்டுகிறது குழந்தை.
அவர் உட்கார்ந்துகொண்டு குழந்தையைக் குளிப்பாட்டுகிறார். குழந்தை என்ஜினுக்குக் குளிப்பாட்டி அதற்கு சோப் போடுகிறது.
"இதோ பார் குஞ்சு; என்ஜின் எங்கேயாவது சோப் போட்டு குளிக்குமோ?" என்கிறார்.
"குளிக்குமே.. என்கிறது குழந்தை.
"எங்கே பார்த்தே..!"
"இதோ" என்று தன்வசம் உள்ள என்ஜினைக் காட்டுகிறது.
அவர் சிரித்துக்கொண்டு அவளைக் குளிப்பாட்டி உலர்ந்த துண்டால் துடைத்து, தூக்கிக்கொண்டு வருகிறார்.என்ஜின் குழந்தையின் கையில் இருக்கிறது. அதன் தனைந்த கயிறு சுந்தரவடிவேலுவின் முதுவில் நனைக்கிறது. "அது என்னடி பின்னாலே?" என்றார்.
குழந்தை, கப்பியில்லாக் கிணற்றில் தாம்புக் கயிற்றுடன் குடத்தைக் குனிந்து கையால் வலித்து இழுப்பது போலத் தூக்கிக்கொண்டு "கயறு அப்பா!" என்கிறது.
அவர் குழந்தையை அறைக்குள் எடுத்துக்கொண்டுபோய், சலவை செய்த சட்டை பாவாடை எல்லாம் அணிவித்து, தலையைச் சீவிவிட்டு, முகத்திற்கு பவுடர் போட்டுவிடுகிறார் .....
"இனிமே நீ யாருகிட்டபோய் சட்டை போடச்சொல்லணும் தெரியுமா - சித்திக்கிட்டே!" என்று சொல்லிக்கொண்டு அவள் கன்னத்தைத் தட்டுகிறார்.
"மாட்டேன்?"
"பின்ன என்ன செய்வே?"
"நானே போட்டுக்குவேன்?"
"நான் போட்டு விடட்டுமா?"
"வாண்டாம்!"
அச்சமயம் பார்த்து மரகதம் காப்பி பலகாரங்களுடன் உள்ளே வருகிறாள்."நீங்கள் இன்னம் உடுத்தி முடியலியா?" என்று சிரித்துக் கொண்டு சொல்லுகிறாள்.
சுந்தரவடிவேலு அவசர அவசரமாக ஷர்ட்டை அணிந்துகொண்டு தலையை வாரிக்கொள்ளுகிறார். அவ்வளவு அவசரம் - ஈரத் துணிகள் யாவும் கீழே எறியப்படுகின்றன.
குழந்தை பொறுக்க ஆரம்பிக்கிறது. அதன் முகம் 'ஊம்' என்றிருக்கிறது.
அதைக் கண்ட மரகதம், "என்ன புத்திசாலி" என்றுகொண்டு குழந்தையை ஒரு கையில் எடுத்தவண்ணம் மறு கையால் ஈரத் துணிகளை எடுத்துக்கொண்டு, "குஞ்சு,நாம ரெண்டு பேரும் சாப்பிடுவோமாம்!" என்கிறாள்.
குழந்தை பேசாமலே இருக்கிறது.
மரகதம் குழந்தையை எடுத்துக்கொண்டு சமையல் கட்டுப் பக்கமாகப் போகிறாள்.
சமையல்கட்டில் ராஜா தயிரிட்டுப் பிசைந்த பழைய சாதத்தை வைத்துக்கொண்டு முழித்துக்கொண்டிருக்கிறான்.
இதைக் கண்டதும் குழந்தை, "ஐயே, தோச்சை திங்கலே!" என்கிறது.
குஞ்சுவைத் தன்முன் உட்காரவைத்துக்கொண்டு, "கணணு! ஒரே ஒரு உருணடை பழையது சாப்பிடு, அப்புறம் காப்பி தாரேன்..... நல்லா தயிரு போட்டு பிசைந்திருக்கிறேன் பாரு!" என்று எடுக்கிறாள்.
"நாங்கள் பழையது தின்கிற சாதியில்லே!" என்கிறது குழந்தைமரகதம் திடுக்கிடுகிறாள் : பிறகு சிரித்துக்கொண்டு எவ்வளவோ செல்லமாக மல்லுக்கட்டியும் 'தூ! தூ!' என்று துப்பி இரைத்து விடுகிறது.
குழந்தையின் வாயைத் துடைத்துவிட்டு பாட்டிலில் காப்பியை ஊற்றிக் கொடுக்கிறாள். குழந்தை பாட்டிலை வாங்கிக்கொண்டு உட்கார்ந்துகூடச் சாப்பிடாமல் வெளியே புறப்பட்டுவிடுகிறது.
இந்த ரகளையில் ராஜா சாப்பாட்டை அப்படியே வைத்துவிட்டு ஓட்டம் பிடிக்கிறான். அவனுக்கு தோசைகூட வேண்டாம் என்றாகிவிட்டது.
இந்தக் கூத்தைக் கண்டு திடுக்கிடுகிறாள் மரகதம். ஆனால் சாவதானமாகத் தனக்குப் பழையதை வைத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பிக்கிறாள். குழந்தையின் அட்டகாசம் அவள் மன நிம்மதியைப் போக்கிவிட்டதால் சாப்பாடு செல்லமாட்டேன் என்கிறது.
சமையல்காரனை அமைக்கக் கூடாது என்றுவிட்டு, தானே வேலைகளை ஆரம்பிக்கிறாள்....
வேலைக்காரியைக் கூப்பிட்டு அரங்கில் இருந்த குத்துவிளக்கைத் தேய்த்துக் கழுவி நடுஹாலில் வைக்கும்படி உத்தரவிடுகிறாள். தினசரி சாயங்காலம் விளக்கு பூஜை நடத்துவதற்குத் தயாராக இருக்கிறது.
❍❍
சுந்தரவடிவேலு சாயங்காலம் கலாசாலையிலிருந்து திரும்பி வருகிறார். இன்று சற்று நேரமாகிவிட்டது; பொழுது மங்கும் சமயம் அவருடைய கார் பங்களா கேட்டில் திரும்பியதுதான் தாமதம்....
குழந்தைகள் இரண்டும் மோட்டார் வண்டியிலேயே போய் விழுந்துவிடுவதுபோல் படிகளிலிறங்கி "அப்பா! அப்பா!" எனக் குதூகலித்துக்கொண்டு ஓடி வருகின்றன.
ராஜா கையில் ஒரு சின்ன foot ball. குஞ்சுவின் என்ஜின் தரையில் மல்லாக்காக இழுபடுகிறது.
அவர் வண்டியிலிருந்து இறங்கி நின்றதுதான் தாமதம். ஆளுக்கொரு காலைப் பிடித்துக்கொண்டு மரமேறுகின்றனர். குஞ்சுவை வாரி எடுத்துத் தோள்மேல் சாத்திக்கொண்டு, ராஜாவைக் கையில் பிடித்துக்கொண்டபடி வீட்டுக்குள் போகிறார்.
நடுஹாலைத் தாண்டி தான் வாசிக்கும் அறைக்குள் செல்லுகிறார். அங்குள்ள அலமாரியைத் திறந்து, குஞ்சுவின் கை ஒன்றுக்கு ஒரு பிஸ்கோத்து கொடுக்கிறார். பையன் "அப்பா, அப்பா" எனப் பையையே திறந்து நீட்டுகிறான்.
"ரொம்ப நேரமாச்சு, ராத்திரி சாப்பிட வேண்டாமா?" என்று கொண்டு அவனுக்கும் அதைப் போலவே இரண்டு மட்டும் கொடுக்கிறார். பிஸ்கட் சாப்பிடும் குஞ்சுவைப் பார்த்து "ஏண்டி கண்ணு, காப்பி சாப்பிட்டாச்சா, எனக்கு ரொம்ப பசிக்கிறதம்மா ஒரே ஒரு துண்டு எனக்குக் குடுக்குறியா" எனக் கெஞ்சுகிறார். குழந்தை கையிலிருப்பதை ரொம்ப சிரமப்பட்டு ஒடித்து ஒரு பொடியை மட்டும் (அதுதான் அதன் பலத்தில் விண்டது) தகப்பனார் வாயில் வைக்கிறது. "அப்பா, இவ்வளவு போதும். வயிறு ரொம்பிப் போச்சு" என்று குழந்தையை முத்தமிட்டுக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வந்து வீட்டுப் பின்புறம் நுழைகிறார்....
"அப்பா வந்ததும் காப்பி சாப்பிடலாம் என்று அம்மா சொன்னாங்க" என்றுகொண்டே அதைப் போடுகிறான் ராஜா.
உள்ளே இரண்டாவது கட்டில் மரகதம் குத்துவிளக்கின் முன் விழுந்து நமஸ்கரித்து கண்ணை மூடியபடி ஏதோ மானஸீகமாகப் பிரார்த்தனை செய்வதைப் பார்க்கிறார், மறுபடியும் விழுந்து நமஸ்கரித்து, விளக்கைத் தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டு திருநீற்றை நெற்றியில் அணிந்துகொண்டபின் திரும்பிப் பார்க்கிறாள்.
பூஜையை எதிர்பாராததினால் அதில் ஒரு ஆச்சரியமும் பிரமிப்பும் பரவசமும் கொண்ட சுந்தரவடிவேலு குழந்தைகளுடன் நடையண்டையில் நின்றுகொண்டிருக்கிறார்.
மரகதம் சிரித்துக்கொண்டு "நீங்கள் வந்தது எனக்குத் தெரியும்" என்று நெருங்கி வந்து, குழந்தை குஞ்சுவின் நெற்றியில் விபூதியை இட்டு, அதன் வாயில் பூஜைக்கு நிவேதனமாக வைத்த திராட்சைப் பழம் ஒன்றைப் போடுகிறாள். திருநீற்றுப் பொடி கண்ணில் விழுவதால் கண்ணை மூடி மூடித் திறந்துகொண்டு நிற்கிறாள் குஞ்சு; வாய் அசைபோடுகிறது.
"ரொம்ப நேரமாச்சே! காப்பி எடுத்துக்கொண்டு வாரேன்; நீங்க இன்னம் என்ன இந்த வேசத்தைக் களையாமே நிக்கறளே" என்கிறாள் மரகதம்.
"நாங்க வெளியே உட்கார்ந்திருக்கோம்; நீ அங்கே கொண்டு வந்துவிடேன்" என்றுகொண்டே குழந்தைகளுடன் வெளியே வாசல் பக்கம் வருகிறார்.
வேலைக்காரனிடம் நாற்காலிகளை எடுத்துப்போடச் சொல்லிவிட்டு குழந்தைகளுடன் பந்து விளையாடுகிறார்.
ஏகக் கூச்சலும் இரைச்சலும் போட்டுக்கொண்டு பந்தை அடிப்பதில் ஏமாறுகிறது குஞ்சு. ராஜா பந்தை உதைக்கிறான். இடைமறிக்க குஞ்சு ஓடுகிறது.
மரகதம் காப்பி பலகார வகைகளை எடுத்துக்கொண்டுவந்து மேஜைமீது வைக்கிறாள்.
"ஆட்டம் குளோஸ், Play over! காப்பி சாப்பிட வாருங்கோ!" என்று கோஷித்துக்கொண்டு குழந்தைகளும் தகப்பனாரும் நாற்காலிகளுக்கு ஓடிவருகின்றனர். குஞ்சு முக்கி முயன்று ஒரு நாற்காலியில் ஏறி உட்கார்ந்துகொள்ளுகிறது. அவளுக்கும் மரகதத்திற்குமிடையே ராஜா உட்காருகிறான்.சுந்தரவடிவேலு முகத்தைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு, "இவ்வளவு மணி நேரத்திற்கப்புறம் இத்தினி பக்ஷணம்...! ராத்திரி சாப்பிடக் கீப்பிட வேண்டாமா? எனக்கு வெறும் காப்பி போதும்!"
"கொஞ்சம் நேரம் கழித்து பசிக்கிறப்ப சாப்பிடுகறது; எட்டு மணிக்குத்தான் சாப்பிடணும் என்று சாஸ்திரத்திலே எழுதியா வச்சிருக்கு!" என்கிறாள் மரகதம்.
"நமக்காக குழந்தைகள் முழித்துக்கொண்டிருக்குமா?" என்று குழந்தைகளுக்குப் பலகாரங்களில் ஓரொரு துண்டு கொடுத்துவிட்டு காப்பியைக் கொடுக்கிறார். தம்ளரில் பாதி முகம் மறைய நாற்காலியில் நின்றுகொண்டு காப்பியைக் குடிக்கிறது குஞ்சு. தம்ளரில் குடிப்பதால் சட்டையில் வழிகிறது. "அவளுக்கு பாட்டிலில் கொடுக்கக் கூடாது?" என்கிறார் சுந்தரவடிவேலு.
பையன் அவர் பக்கமாக வந்து காதோடு காதாக, "எனக்கு பழயது வாண்டாம் அப்பா, அம்மாகிட்ட சொல்லு" என்கிறான்.
அவர் சிரித்துக்கொண்டு, "என்ன மரகதம், குழந்தைகளுக்கு பழையதா குடுத்தே! பிடிக்கலேன்னா விட்டுடு!" என்கிறார்.
"காலம்பர தயிரும் பழையதும் சாப்பிட்டாத்தானே உடம்புக்கும் பெலன்" என்கிறாள் மரகதம்.
"பலத்துக்கு வேண்டுமானால் டானிக்கிருக்கிறது... வேண்டாம் என்றால் விட்டுடு சரி, நாளாண்ணைக்கு ஒரு இடத்துக்குப் போகணும்; சாயங்கால காப்பிக்குக்கூட வரமாட்டேன். இப்போ உள்ளே போனதும் ஒரு கடுதாசிக் கட்டு எடுத்துத் தாரேன்; அதெ ஞாபகமா நான் போரப்ப என் கைப்பையிலே வச்சுப்புடு.. எனக்கு இப்பொ கிப்போ மறதி ஜாஸ்தியாகுது.." என்கிறார்.
"ஆகட்டும்" என்கிறாள் மரகதம்.
நன்றாக இருட்டிவிடுகிறது.
"அப்பா,அப்பா! ஒரு கதை சொல்லு" என்கிறான் ராஜா
"என்ன கதை வேணும்? குஞ்சு நீ சொல்லு!"
"குருவிக் கதை" என்கிறது குழந்தை.
"ஒரே ஒரு மரத்துலெ சின்ன குருவி இருந்துதாம். கூண்டிலே உக்காந்துகிட்டு எட்டி எட்டிப் பாத்துதாம்." "எட்டி எட்டி ..... பாத்துதாம்" என இரு குழந்தைகளும் கோஷிக்கின்றன.
"திடீலுன்னு மழையும் காத்துமா அடிச்சுது. இடி இடிச்சுது; பளிச்சு பளிச்சின்னு மின்னிச்சு; பெரிய காத்தும் மழையுமா அடிச்சுது. அந்த சின்னக் குரிவிக் குஞ்சு நனஞ்சே போச்சு. குரிவி கூண்டிலே இருந்து எட்டி எட்டிப் பாத்துதாம்.. அப்பொ ஒரு கொரங்கு நனஞ்சுகிட்டு உக்காந்திருந்துதாம்."
"கொரங்கு யார் மாதிரிடா இருந்துது?""ராசா மாதிரி" என்கிறது குஞ்சு. "குஞ்சு மாதிரி" என்று கத்துகிறான் ராஜா.
"அப்புறம் குரிவிக் குஞ்சு 'அண்ணே அண்ணே ! நீ ஏன் ஒரு கூண்டு கட்டிக்கப்படாது?' என்று கேட்டுதாம். குரங்கு ஒரே பாச்சல்லே வந்து கூண்டெ பிச்சே எறிஞ்சு போட்டுதாம். குரிவியும் கொரங்கும் மழைலெயும் காத்துலெயும் நனைஞ்சுகிட்டே உக்காந்திருந்துதாம்."
மரகதம் தனிமையாக விடப்பட்டவள் போல ஏதோ யோசனை யிலாழ்ந்திருக்கிறாள் ...
"கதை காட்டிலே, எலி மோட்டிலே,நீயும் நானும் வீட்டிலே..."
"பொசலடிச்சதாம்". '... என மறுபடியும் ஆரம்பிக்கிறது குழந்தை....
புயல் வந்த விதம்
திடீர் என்று காற்றும் மழையும் கவிந்து அடிக்கிறது. கோடைப் புயல் மின்னலும் இடியும கிடுகிடுபாய்கின்றன.
மத்யானம்; சுமார் மூன்று மூன்றரை மணி. இருந்தாலும் புயல். மழைக் கடுமையால் வீட்டுக்குள் வெளிச்சக் குறைவு.
குழந்தைகள் மாடியில் உள்ள தம் அறையில் விளையாடிக் கொண்டிருக்கின்றன. ஆளுக்கொரு சாக் (chalk) கட்டி எடுத்துக் கொண்டு படம் போட்டு விளையாடுகின்றன.
குஞ்சு கையில் உள்ள சாக்குக் கட்டியைக் கரும்பலகையில் மாவு அரைக்கிறது போல இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு வாய் 'ஹோ ! ஹோ!' என்று சப்திக்க மேலும் கீழுமாகத் தேய்த்து கண்டமேனியில் அழுததி அழுத்தி கோணல்மாணலாக கோடு கிழித்துக்கொண்டிருக்கிறாள். மற்றொரு ஓரத்தில் நின்றுகொண்டு கரும் பலகையில் 'பொம்மை' போட்டுக்கொண்டிருக்கிறான் ராஜா.
"ஐயே! என்னடி இப்பிடி சாக்குக் கட்டியைப் போட்டு தேய்க்கரெ?" என்கிறான் ராஜா.
"படம் போடுரேண்டா" என்றுவிட்டு மறுபடியும் மும்முரமாகத் தேய்க்கிறாள்.
"என்ன படமாம்?"
"மளெப் படம், மளெ பெயிது பாரு அந்தப் படம்!" என்று விட்டு கரும்பலகையைவிட்டு சிறிது பின்னுக்கு எட்டி நின்று தன் திறமையை ஏறிட்டுப் பார்த்துவிட்டு மறுபடியும் வேலையில் ஈடுபடப் போகிறாள்.
"ஏடி நாம் போட்ட படத்தைப் பாத்தியா அப்பாவும் அம்மாவும்!", என்கிறான் ராஜா.
"அம்மா இப்படித்தான் இருக்காங்களாக்கும்" - மேலே தாயின் படத்தைப் பார்த்துக்கொண்டு, "நீ இப்பிடியாம்மா இருக்கே!" என்கிறது குழந்தை."நம்ம அம்மா இல்லடி இந்த அம்மா.." என்று விளக்குகிறான் ராஜா.
"ஏ ராசா! ராசா!" என்று கூப்பிட்டுக்கொண்டு உள்ளே நுழை கிறாள் மரகதம்.
"என்னாம்மா!"
"பால்காரன் வரக்காணோம். நம்ம வேலைக்காரனும் போக்களிஞ்சு போனான். நீ போய் அவனை கொஞ்சம் சத்தம் காட்டி விட்டு வரமாட்டியா - அப்பா வார நேரமாச்சு; காப்பி போட வாண்டாம்: கொடையை எடுத்துக்கிட்டு போ - பைய, பதனமா போயிட்டு வரணும்!"
"ஆகட்டும் அம்மா!" என்றுகொண்டு புறப்படுகிறான்.
இருவரும் கீழே இறங்கிவருகிறார்கள். மரகதம் வாசல்வரை வந்து குடையை விரித்து அவன் கையில் கொடுத்துவிட்டு உள்ளே போகிறாள்.
இரண்டு கைகளாலும் நெஞ்சுடன் சேர்த்து அமுக்கிப் பிடித்துக் கொண்டு சிறுவன் தள்ளாடித் தள்ளாடி நடக்கிறான். எதிரே வருவதையும் கவனிக்க முடியவில்லை. குடை மழைக்குப் பாதுகாப்பாக இருப்பதற்குப் பதிலாக, காற்றின் வேகத்தால் அவனுடைய சக்தியை முழுவதும் உறிஞ்சிவிடும் பேயாக மாறிவிடுகிறது.
தள்ளாடித் தள்ளாடி நடக்கிறான். உடல் முழுவதும் நனைந்து தலையும் ஈரம் சொட்டி கண்களை மறைக்கிறது....
இந்த நிலையில்...!
ரஸ்தாவில் கவனிக்காமல் குடையைத் தாழ்த்திப் பிடித்துக் கொண்டு, இவன், சாதுவாக நின்ற பசுவை அணுகிவிடுகிறான். பசு வெறித்துக்கொள்ளுகிறது. வாலை முறுக்கி உயர்த்திக்கொண்டு இவனை விரட்டுகிறது. முதலில் பையனுக்கு மோதலின் காரணம் தெரியவில்லை. பிறகு மாடு தென்படுகிறது. பயத்தில் கிறீச்சிட்டுக் கொண்டு ஸ்தம்பித்து நிற்கிறான். பயம் அவனை உந்த மூளை குழம்பி தெறிகெட்டு ஓடுகிறான். பொத்தென்று விழுந்தவன் குடைப் பிடியை விடாமல் எழுந்திருக்கிறான்.
தெருவில் நின்ற யாரோ ஒருவர் "குடையைப் போட்டுவிடு" என்று கத்தி எச்சரிக்கிறார். உதவிக்கு வரவில்லை. குடையைப் போட்டுவிட்டு ஓடுகிறான். விழுந்ததில் ஊமையடி இருந்தும் பயமே வேகத்தைக் கொடுக்கிறது... ஓடுகிறான்.
மாடு குடையை மிதித்து நசுக்கி ஓடித்து மோந்துபார்த்துவிட்டுச் சாந்தமாக நிற்கிறது.
பையன் ஓடுகிறான்.
வீட்டில் வாசல்படியில் பாலுக்காகக் காத்து நிற்கும் மரகதத்திற்கு இவனது பயனற்ற வரவு கடுகடுப்பையும் சீற்றத்தையுமே ஏற்படுத்துகிறது. கணவனுக்கு காப்பி தயார் செய்ய வேண்டும் என்ற பிரமாதத்தில் குடையைத் தொலைத்துவிட்டு வந்தது பெருங் குற்றமாகப்படுகிறது. பால்காரனிடம் சொல்லி பாலை வாங்கிக்கொண்டுதான் வீட்டுக்குள் வரலாம் என்றுவிடுகிறாள்.
பையனுக்கு மாட்டுப் பயம். தொழுவுக்கே போகமாட்டேன் என்கிறான். இருவரும் நடுஹாலில் நின்று தர்க்கம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
அப்பொழுது வாசலில் திருதிருவென்று கார் வந்து நிற்கிறது. ரௌத்திராகாரமாக சுந்தரவடிவேலு வீட்டுக்குள் நுழைகிறார்.
"ஒரு வேலை சொன்னா அதைச் செய்ய இந்த வீட்டில் ஆள் இல்லை" என்று இரைந்துகொண்டு தன் அறைக்குள் சென்று ஏதோ தஸ்தாவேஜ்களை எடுத்துக்கொண்டு திரும்பவும் விரைந்து வருகிறார்.
"இங்கே பாருங்க உங்க மகனெ, புதுக்கொடையைத் தொலச்சுப்புட்டு வந்து நிக்கிற நெலையை! நீங்களும் செல்லம் குடுத்து செல்லம் குடுத்து ...."
தகப்பனார் சப்தத்தைக் கேட்டுக்கொண்டு மச்சிலிருந்து ஓடிவந்த குஞ்சு, ரௌத்திராகாரமான இரைச்சலைக் கேட்டு வெருகிப்போய் படிக்கட்டிலேயே நின்றுவிடுகிறது.
"ஏ கொரங்கே, முந்தாநாளே உனக்கு அந்தக் கடுதாசிக் கட்டெ எடுத்துவை என்று சொன்னது மண்டெலெ உறைக்கலையாக்கும்" என்று மரகதம் கன்னத்தில் ஒரு அறை கொடுக்கிறார்.
பையன் சமயம் தெரியாமல், "நான் போடலே அப்பா, மாடு வந்து..." என்று ஆரம்பிப்பதைக் கண்டு தன்னை மீறிய மிருகத்தனத்துடன் அவன் நெஞ்சில் பூட்ஸ் காலால் உதைத்துவிட்டு, கதவைப் படால் என்று சாத்திக்கொண்டு, "எல்லாக் குரங்குகளையும் ஒரேயடியாத் தொலச்சு முழுகினாத்தான் க்ஷேமம்" என்று இறைந்த படி ஓடுகிறார்.
கார் புறப்படும் சப்தம்.
பட்ட அறையில் பிரமித்துப்போன மரகதம் உள்கதவைப் படாரென்று சாத்திக்கொண்டு வீட்டுக்குள் சென்றுவிடுகிறாள்....
உதைவிழப் போவதைக் கண்டதும் "அம்மாகிட்ட சொல்றேன்" என்று முணுமுணுத்துக்கொண்டு மச்சுக்கு ஓடுகிறது குழந்தை.
மாட்டின் முட்டலுடன் இந்த உதையும் வர்மத்தில் விழுந்துவிட அழவும் முடியாமல் துடிக்கிறான் ராஜா. உள்வாக்கில் என்ன அடியோ ..? அது பலவீனமான குழந்தை. சுருண்டு சுருண்டு முனங்குகிறான்... அழுகை வரவில்லை...!
முனகல் மட்டும் கேட்கிறது.
உள்ளே எங்கிருந்தோ தேம்பல்.
மற்றப்படி நிசப்தம்.குஞ்சு மறுபடியும் கீழே வருகிறாள்.
அண்ணனிடம் வந்து மெதுவாகக் குனிந்து பார்க்கிறாள்
"பத்துக்கோ - வா" என்று அழைக்கிறாள்....
அவன் எழுந்து நிற்க முடியாமல் ஊர்ந்து ஊர்ந்து வெகு கஷ்டத்தின் பேரில் மச்சை அடைகிறான். குழந்தை தன் பலம் கொண்ட மட்டும் மேலே இழுக்கிறது.
இவ்வாறு மச்சை அடைகிறது குழந்தைகள்...
ராஜா குஞ்சுவின் சின்னக் கட்டிலில் படுத்துக்கொள்ளுகிறான். குழந்தை தன் சிறு துணிகளை எடுத்துப் போர்த்திப் பார்க்கிறது. சரியாக மூடாததினால் சிரமப்பட்டுக்கொண்டு வருகிறது.
அவனுக்குப் போர்த்துகிறது.
கட்டிலுக்குப் பக்கத்தில் தன் சிறிய நாற்காலியை இழுத்துப்போட்டு உட்கார்ந்துகொண்டு - "வலிக்கிதாம்மா கண்ணு? தடவட்டா" எனப் போர்வைக்குமேல் அவன் கையைத் தடவுகிறது. நெஞ்சில் தடவ கட்டிலின் மேல் ஏறுகிறது....
"நெஞ்சு வலிக்குடி.... அம்மாடி!" என்கிறான் ராஜா.
குழந்தை மறுபடியும் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு அவன் கையையும் காலையும் தடவுகிறது.
ராஜா முனகிக்கொண்டு படுத்திருக்கிறான்.
மழை ஓய்ந்துவிட்டது.
சந்திரன் உதயமாகிவிட்டது.
அறையில் மற்றப்படி வெளிச்சமில்லை.
"குஞ்சு, அப்பா வந்திட்டாங்களா?" என்கிறான் ராஜா.
"இல்லியே" என இரு கைகளையும் விரிக்கிறது குழந்தை.
"குஞ்சு, கொஞ்சம் தண்ணி கொண்டாரியா?" என்கிறான் மறுபடியும்.
"பாலு இருக்குது குடிக்கிறாயா?" மத்யானம் தான் குடிக்காமல் மிச்சம் வைத்திருந்த பாலை பாட்டிலுடன் எடுத்துக்கொண்டுவந்து அவன் வாயில் வைக்கிறது. அவன் குழந்தை மாதிரி பாட்டிலில் பாலைக் குடிக்கிறான்....
கொஞ்ச நேரம் கழித்து....
"குஞ்சு அப்பா வந்திட்டாங்களா? எனக்கு எப்டியெல்லாமோ வருதே!" என்றான் ராஜா.
"இல்லியே!" என்றுவிட்டு, "நான் 'ரா ரா ரோ' சொல்லட்டுமா, தூங்கு?" என "ஆராரோ ஆரிரரோ என்னப்பன் ரா ரா ரோ! ரா ரா ரோ!" எனத் திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டிருக்கிறது.ராஜாவுக்கு அந்திம தசை அணுகிவிட்டது... "அம்மா, குஞ்சு" என்ற ஏக்கத்துடன் ஆவி பிரிகிறது....
குழந்தை அவனை ஏறிட்டுப் பார்க்கிறது. அவன் செத்துவிட்டான் என்பதை அறியாமல், "கண்ணெ முளிச்சிருக்காதே தூங்கு" எனக் கட்டிலில் ஏறி அவன் கண்களை மூடுகிறது. ராஜாவின் தலை கொளக்கென்று சாய, "நல்லா படுத்துக்கடா” எனத் தலையை இழுத்து வைத்துவிட்டு, "ரா ரா ரோ! ரா ரி ர ரோ!" எனத் திருப்பி ஆராட்டுகிறது.
சொல்லிச் சொல்லிக் குழந்தைக்கும் தூக்கம் வந்து விடுகிறது. 'ரா ரா ரோ' என்ற இழுப்புடன் அவன் கையில் தலைசாய தூங்குகிறது....
வெகு நேரம் கழித்து....
வெளியே கார் வந்து நிற்கும் சப்தம்.
சுந்தரவடிவேலு இறங்குகிறார். மனதில் புயலோய்ந்துவிட்டது. ஆனால் மிருகத்தனமாக நடந்துகொண்டதின் சுமை விலகவில்லை. அவசர அவசரமாக வீட்டுக்குள் நுழைகிறார்.
இருட்டிக் கிடக்கிறது.
சுவிட்சைப் போடுகிறார்.
நிசப்தத்தைக் கண்டு கோட்டைக் கழற்றி கையிலேந்தியபடி மச்சுக்கு ஓடுகிறார்.
அங்கும் இருட்டு. மறுபடியும் சுவிட்சைப் போடுகிறார்.
பையன்மேல் சாய்ந்து தூங்கும் குழந்தையை எடுத்துத் தோளில் சார்த்திக்கொண்டு பையனைத் தொடுகிறார்.
குழந்தை தூக்கக் கலக்கத்தில் கொட்டாவி விட்டு கண்களைப் புறங்கையால் துடைத்தபடி 'ரா ரா ரோ' எனச் சொல்லுகிறது.
சுந்தரவடிவேலு பையன்மேல் வைத்த கையை திடுக்கிட்டு எடுத்து விட்டு "மரகதம்! மரகதம் " என அலறுகிறார்.
எதிர்பாராத துயரத்தால் நிராதரவாக்கப்பட்ட மனதின் பிளிறல்...!
"என்ன! என்ன!" என்று கீழிருந்து கவலையுடன் எதிரொலிக்கும் மரகதத்தின் குரல் ... தடதடவென்று மாடிப்படியேறும் சப்தம்.
"இங்கே வா, ராசாவைப் பாரு! என்னமோ மாதிரியா கெடக்கானே! மேலெல்லாம் குளுந்திருக்கே!" எனப் பதறுகிறான்.
அவள் பையனைத் தொட்டுப் பார்த்துவிட்டு அடித்து விழுந்து அலறுகிறாள்.சுந்தரவடிவேலு குழந்தையைத் தூக்கிக்கொண்டு கீழுள்ள டெலிபோனுக்கு ஓடுகிறார்.
குழந்தை, "என்னப்பா?" எனக் கேட்கிறது.
சுந்தரவடிவேலு தன்னையறியாமல் "ராசா செத்துப் போயிட்டாண்டா?" என்றுவிடுகிறார்.
"நம்ம அம்மா மாதிரியா செத்துப்போயிட்டான் அப்பா?" எனக் கவலையுடன் ஆனால் மரணம் என்பதின் அர்த்தம் புரியாமல் கேட்கிறது குழந்தை.
"ஆமாண்டா! நம்ம அம்மா மாதிரி செத்துப்போயிட்டாண்டா" என எதிரொலித்து அலறுகிறார் சுந்தரவடிவேலு.
சுந்தரவடிவேலு குழந்தையை இறக்கிவிட்டுவிட்டு டெலிபோனில் எண்களைப் பதட்டத்துடன் திருப்புகிறார்....
டாக்டரை விரைவாக வரும்படி அழைக்கிறார்.....
உயரவிருந்து மரகதத்தின் பிலாக்கணம். அலைமேல் அலையாகச் சுருண்டு புடைத்து விம்முகிறது. அதனுடன் சங்கு சப்தமும் ஒலித்து ஓய்கிறது.
ராஜாவின் அந்திமக் கிரியைகள் கழிந்து இரண்டு மூன்று நாட்கள் கழிந்தபின்....
சுந்தரவடிவேலுவுக்கு எதிரில் உள்ள ரேடியோவிலிருந்து ராகம் வருகிறது. அவரது வாசிக்கும் அறைதான். அவர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். கையில் கர்மத் தொடர்பை விளக்கும் சித்தாந்த புஸ்தகம் - ஆங்கிலத்தில்! புஸ்தகத்தில் மனம் பதியவில்லை.
திறந்த பக்கங்கள் கர்மத் தொடர்பின் ரகசியங்களை அவர் மனதில் பதிய வைக்கவில்லை. பக்கங்களிலிருந்து ராஜாதான் எட்டி எட்டிப் பார்க்கிறான். மனம் அவரையே குத்திக்கொண்டிருக்கிறது.
நினைவு தேங்கிய கண்களுடன் ஒன்றிலும் பதியாத பார்வையுடன் உட்கார்ந்திருக்கிறார். எப்பொழுதும்போல் அல்லாமல் தலை சிறிது குலைந்து கிடக்கிறது. ஷர்ட்டில் பட்டன்கள் துவாரம் மாறிப் போடப் பட்டிருக்கின்றன.
குஞ்சு மெதுவாகக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வருகிறது. அதன் கையில் என்ஜின்கள் படம் உள்ள பெரிய படப்புஸ்தகம்....
தகப்பனார் புஸ்தகத்தை விரித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதைக் கண்டு "நீ பாட்டுக்குப் படியப்பா, நான் பாட்டுக்குப் படிக்கிறேன்" என்று தரையில் உட்கார்ந்துகொண்டு படங்களைப் புரட்ட ஆரம்பிக்கிறது....
தகப்பனார் குழந்தை வந்ததைக் கவனிக்கவில்லை....குழந்தைக்குப் படத்தில் சுவாரஸ்யம்... ரயில் பிஸ்டன் மாதிரி கைகளை ஆட்டிக்கொண்டு 'குச் குச் ...' என்கிறது...
படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த குழந்தை திடீரென்று அப்பாவைப் பார்க்கிறது. அப்பா எப்பொழுதும் போலல்லாமல் வித்தியாசமாக இருப்பதைக் கண்டுகொள்ளுகிறது.
"ஏம்ப்பா, என்னமோ மாதிரியா இருக்கே?" என்கிறது.
குழந்தையிருப்பதை உணர்ந்த சுந்தரவடிவேலு, "இங்கவாடி கண்ணு, எப்பம்மா வந்தே!" என்கிறார்.
"அப்பவே வந்தேனே! ஏம்ப்பா ஒரு மாதிரியா இருக்கே! கிச்சுக் கிச்சு காட்டட்டா" என்று அவருக்கு கூச்சம் காட்டி சிரிக்கவைக்க முயலுகிறது. முயற்சி பலிக்கவில்லை. குழந்தையின் தலையைக் கோதிக் கொடுத்துவிட்டு, மடியில் தூக்கிவைத்துக்கொண்டு அதன் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறார்.
குழந்தை அவர் மனதைத் தேற்ற மறுபடியும் முயற்சிக்கிறது.
"அப்பா, ஒரு கதை சொல்லட்டுமா? என்ன கதை சொல்ல குருவிக் கதை சொல்லட்டா, காக்காக் கதை சொல்லட்டா?" என்கிறது.
அவர் சிரித்துக்கொண்டு "காக்கா கதை சொல்லம்மா" என்கிறார்.
"ஒரே ஒரு ஊர்லெ ஒரு வடை இருந்துதாம். அந்த வடை ரொம்ப ரொம்ப நல்ல வடையாம்... நல்ல ருசியா இருக்குமாம்.
"ஒரு காக்கா அதைத் தூக்கிக்கிட்டே பறந்து ஓடிபோயிட்டுதாம். ஒரு மரத்துலெ ஏறி உக்காந்துகிட்டுதாம்...
"அப்பொ ஒரு நரி வந்துதாம்...நரி வந்து,ஏ! காக்கா, காக்கா நல்லா ஒரு பாட்டு பாடேன்னு கேட்டுதாம்... காக்கா, கா -கா- கா -கா-கா....
(இச்சமயத்தில் காக்கையாகவே தன்னைப் பாவித்துக்கொண்டி ருக்கிறாள்.)
"அப்புறம்..." என்கிறார்.
"அப்புறம் நரி வடையைத் தூக்கிக்கிட்டு ஓடியே போயிட்டுதாம்... ஓட்டம் ஓட்டம் ஓ ... அதே காட்லே எலி..." என்று ஆரம்பிக்கிறது குழந்தை
"அந்த நரிதாண்டா விதி. அந்த நரிதாண்டா விதி" எனச் சொல்லிக்கொண்டே குழந்தையை வெறிகொண்டவர்போல முகத்திலும் கன்னத்திலும் முத்தமிடுகிறார். குழந்தைக்குத் திணறுகிறது.
இறுக இறுகக் கட்டியணைத்துக்கொள்ளுகிறார்.
"குஞ்சம்மா, நீ பாலு சாப்பிட்டியா?" என்கிறார்."நான் அப்பவே சாப்பிட்டேனே, அம்மா குடுத்தாளே" என்கிறது குழந்தை - மரகதத்தை முதல் முறையாக அம்மா என்று அழைக்கிறது.
"நீ மடிலே படுத்துக்கோ!.. கொஞ்சம் படிக்கிறேன்..." என புஸ்தகத்தில் மன உளைச்சலை மறக்க முயற்சிக்கிறார்.
குழந்தை சிறிது நேரத்தில் அயர்ந்துவிடுகிறது.
மரகதம் மெதுவாகக் கதவைத் திறந்துகொண்டு வருகிறாள்.
அவள் தலை குனிந்து மனம் நிலைகுலைந்து கிடப்பதைக் காட்டுகிறது. அவரை ஏறெடுத்துப் பார்க்கவும் கூசி காலடியில் வந்து உட்காருகிறாள். பேச வாயெழவில்லை. கைவிரல் நகத்தால் தரையைக் கீறிக்கொண்டிருக்கிறாள். அவள் கண்களிலிருந்து நீர்ச் சொட்டு தரையில் விழுந்து அவள் நகத்தையும் நனைக்கிறது.
சுந்தரவடிவேலு மெதுவாக அவள் தலையைத் தடவுகிறார்.
"குஞ்சு தூங்கிவிட்டாள், நாற்காலியில் படுக்க வைக்கிறேன் ..." என்று எழுகிறார்.
"நானே படுக்க வைக்கிறேனே" எனக் குழந்தையை வாங்கி பக்கத்து சோபாவில் கிடத்தி தட்டிக்கொடுத்துவிட்டு மறுபடியும் வந்து உட்காருகிறாள்.
"எண்ணைக்குமே எனக்கு கோபம் வராதே...ஏன் அப்படி வந்தது தெரியுமா?..." என ஒரு கைத்துப்போன புன்சிரிப்புடன் கேட்கிறார்.
பதிலை எதிர்பார்க்காதவர் போல, "நேத்து வந்தானே அந்த டாக்டருக்குத்தான் குஞ்சுவோட அம்மாவுக்கும் அவன்தான் பார்த்தான்... அப்பொ எங்கிட்ட அவ்வளவு ஜாஸ்தியாகக் கிடையாது ... சினேகிதத்துக்காக எவ்வளவோ செஞ்சான் ... இப்பொ ஒரு கஷ்டம் அவனுக்கு வந்தது... வேலையே போயிடும்... அதுக்காக நான் நம்மாலானதைச் செய்யத்தான் ஆசைப்பட்டேன்... அவனுக்காகத்தான்... நீ மறந்துபோனேன்னதும் அதனாலேதான் அவ்வளவு கோபம் வந்தது... என்று சொல்லிவிட்டு... சிறிது நேரம் கழித்து, "எல்லாம் விதி" என்கிறார்.
"விதியா எங்க குடும்பப் பாவம் நாஞ் செய்த வெனே... எங்கம்மா பாவத்தை என் தலையிலே வச்சிட்டுப் போயிட்டா.. எங்கப்பாவுக்கு எங்கம்மா இரண்டாந்தாரமில்ல. முதல் தாரத்துக்காரிக்கு ஒரு அண்ணா இருந்தான். அவனுக்குப் பதினாலு வயசு இருக்கும். வயத்துவலின்னு பளெயது சாப்பிட மாட்டான், பள்ளிக் கூடம் போகமாட்டேன்னான். அம்மெ போய் அப்பாகிட்ட சொன்னா... அப்பாவுக்கு கோவமா வந்திட்டுது. அவனைத் தூணொடே கெட்டி வச்சு உதைத்து அவுத்து விடாதே சோறு போடாதேன்னு. மத்தியானமா அவன் கத்துக்கத்துன்னு கத்தினான். அவுத்தே விடலே - அவ்வளவுதான்; செத்தே போனான். தூண் வெடிச்சுப் போயிருந்த பொந்திலே ஒரு பாம்பு இருந்து கடிச்சுப்புட்டுது... சாயங்காலமா அவுத்து விடரப்ப பொணமாத்தான் இருந்தான் - அந்தப் பாவந்தான் ...."
இவ்வாறு நிலைகுலைந்த இரு மனங்களும் காரண காரியத் தொடர்பு கண்டுபிடிக்க முயன்றுகொண்டு குழம்பின....
வெளியிலே வழிப்போகும் பிச்சைக்காரன் "உலகமே பைத்தியக்காரக் கும்பல், காரண காரியத் தொடர்பற்ற குழப்பம்" என்ற பொருள்கொண்ட பாட்டை உச்சஸ்தாயியில் கர்ணகடூரமான குரலில் பாடுகிறான்.