உள்ளடக்கத்துக்குச் செல்

கட்டடமும் கதையும்/தஞ்சைப் பெரிய கோவில்

விக்கிமூலம் இலிருந்து

2. தஞ்சைப் பெரிய கோவில்

முற்காலச் சோழர்களில் புகழ்பெற்றவன் கரிகாற் பெருவளத்தான். பிற்காலச் சோழர்களில் புகழ்பெற்றவன் முதலாம் இராசராச சோழன், இராசராசன் தமிழக வரலாற்றில் முதலிடம் பெறத்தக்க சிறப்பு வாய்ந்தவன். இவன் வெற்றிச் சிறப்பில் சந்திரகுப்த மௌரியன், சமுத்திரகுப்தன், நெப்போலியன், அலெக்சாந்தர் போன்ற பெருவீரர்களுக்கு இணையானவன்; ஆட்சிச் சிறப்பில் மொகலாயப் பெருவேந்தனான அக்பருக்கு இணையானவன். தமிழக வேந்தர்களில், தென்னாடு முழுவதையும் வென்று ஒரு பேரரசை அமைத்த பெருமை இவனையே சாரும். கடல் கடந்து சென்று வெளிநாடுகளை வென்று, அங்கெல்லாம் தமிழர் அரசாட்சியை. நிறுவிய முதல் மன்னன் இவனே. சேரன் செங்குட்டுவன் போன்றவர்கள் கடல்கடந்து சென்று, எதிரிகளைத் தோற்கடித்தார்களே தவிர, அங்கெல்லாம் தங்கள் ஆட்சியை நிறுவவில்லை.

இரண்டாம் பராந்தகச் சோழனுக்கு, அவன் மனைவியான வானவன் மாதேவியாரிடத்திலே பிறந்த அரும்பெறற் செல்வனே முதலாம் இராசராசன். இவன் ஐப்பசித் திங்கள் சதய நாளிலே பிறந்தான். பெற்றோர்கள் இவனுக்கு இட்டு வழங்கிய பெயர் அருண்மொழி வர்மன் என்பது. சேரனையும் பாண்டியனையும் வெற்றிகொண்ட காரணத்தால். இராசராசன் என்ற பட்டப் பெயர் இவனுக்கு ஏற்பட்டது. இப்பெயரே இவன் வாழ்நாள் முழுதும் நிலைத்துவிட்டது.

இவன் அரியணையேறியதும் முதன் முதலாகப் பாண்டியரையும், சேரரையும் வென்றான்; பிறகு குடகு நாட்டையும், மைசூரின் ஒரு பகுதியான கங்கபாடியையும் வென்றான் ; பல்லவர்களை வென்று நுளம்பபாடியைக் கைப்பற்றினான் ; தெலுங்க நாட்டையும், கீழைச் சாளுக்கிய நாட்டையும், கலிங்க நாட்டையும் வென்று கைப்பற்றிக் கொண்டான்; ஈழநாட்டின் வடபகுதியைக் கப்பற் படையின் துணைகொண்டு வெற்றிகண்டான்; 'பழந்தீவு பன்னீராயிரம்' என்று பண்டைக் காலத்தில் குறிப்பிடப்பட்ட மாலத்தீவுகளையும் வென்றான். இவ்வாறு அரிய பல வெற்றிகளைப் பெற்ற இராசராச சோழன், தன் பெயர் என்றும் நிலைத்து நிற்பதற்காகத் தன் பெயரால் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டினான். அது 'இராசராசேச்சுரம்' என்ற பெயரைத் தாங்க இன்றும் அவன் புகழைப் பறை சாற்றிக் கொண்டு உயர்ந்து நிற்கிறது.

இராசராசன் தஞ்சைப் பெருங் கோவிலைக் கட்டியதற்கு வேறு பல காரணங்களும் உண்டு. அவன் கலைப்பிரியன். எனவே சிறந்த கலைக்கோவில் ஒன்றைக் கட்ட விரும்பினான். மற்றொரு சிறந்த காரணம், அவன் சைவ சமயத்தின்பால் கொண்டிருந்த அளவு கடந்த பற்றாகும். சோழர்கள் தில்லையிலுள்ள சிவன் கோவிலுக்குத் திருப்பணி புரிவதைக் கடமையாகக் கொண்டிருந்தனர். இவனும் அப் பணிகளைக் குறைவறச் செய்தான். இருந்தாலும் , தன் தலை நகராகிய தஞ்சாவூரில், தில்லைக் கூத்தப் பெருமானின் கோவிலைப்போன்று சிறந்த ஒரு கோவிலைக் கட்ட வேண்டும் என்னும் பேரவாக் கொண்டிருந்தான்.

பெருங்கற்களினால் கோவில் கட்டும் கலை பல்லவர் காலத்திலிருந்தே தமிழகத்தில் சிறப்புற்றிருந்தது. தமிழ் நாட்டின் முக்கிய ஊர்களிலெல்லாம் சிற்பக் கலையழகு மிக்க கோவில்கள் எழுந்தன. நாடெங்கும் சிற்பிகள் வாழ்ந்தனர். அவர்களையெல்லாம் இராசராசன் தஞ்சைக்கு வரவழைத்தான். தலைமைச் சிற்பி கலைக்குப் பிறப்பிடமான காஞ்சி மாநகரத்தைச் சார்ந்தவன்.

இக் கோவிற்பணி கி. பி. 1005 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு நான்கு ஆண்டுகளில் முடிவுற்றது. தஞ்சை வயற்பாங்கான இடம். இங்கு மலைகளோ குன்றுகளோ இல்லை. இராசராசன் கட்ட விரும்பிய கோவிலோ பெரிய கோவில், பெருங்கோவில் அமைப்பதற்குப் பெரிய கருங்கற்கள் வேண்டும். ஆதலாலே கருங்கற்கள் நெடுந்தொலைவிலிருந்தே கொண்டு வரப்பட்டன. சிற்பிகள் குறிப்பிட்ட அளவிலே, கல் தச்சர்கள் பாறைகளைப் பிளந்தெடுத்தனர். யானைகள் அக்கற்களைத் தஞ்சைக்கு இழுத்து வந்தன. இக் கோவிற் பணியில் ஆயிரக் கணக்கானவர் ஈடு பட்டனர். இக்கோவில் கட்டப்பட்ட காலம், இராசராசன் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதி. நாட்டில் போர் ஒழிந்து அமைதி பெற்றிருந்த காலம். எனவே இராசராசன் தன் முழு முயற்சியையும் கோவில் கட்டுவதிலேயே ஈடுபடுத்தி இருந்தான். நாடெங்கும், தஞ்சையில் உருவாகும் இப்பெருங் கோவிலைப்பற்றியே பேச்சாக இருந்தது.

தஞ்சையில் சிவகங்கைச் சிறு கோட்டையின் தென்பகுதியில் இக்கோவிலுக்கு அடிக்கல் நாட்டத் தொடங்கினர். இக்கோவிலின் நீளம் ஏறத்தாழ 242 மீட்டர். அகலம் ஏறக்குறைய 121 மீட்டர். கோபுரத்தின் உயரம் சிறிது ஏறத்தாழ 65 மீட்டர், 65 மீட்டர் உயரம் உடைய கோபுரத்தை நடுவிலே கொண்ட பெரிய கோவிலுக்கு இடும் கடைக்கால் எவ்வளவு ஆழமும் அகலமும் பெற்றிருக்க வேண்டும் எனச் சிற்ப நூல்வல்லார் கணக்கிட்டுக் கடைக்கால் வெட்டுவித்தனர்.

அடிக்கற்கள் நாட்டப்பட்டபின், கருவறையையும், அதைச் சுற்றித் திருச்சுற்றுகள் முதலியவற்றையும் சிற்பிகள் கட்டத் தொடங்கினர். தமிழகத்தில் பொதுவாகக் கோபுரங்களைக் கருவறைக்கு எதிரே தனியாக அமைப்பது வழக்கமாக இருந்துவந்தது. ஆனால் இச்சிற்பியோ கோபுரத்தைக் கருவறைக்கு மேலேயே எழுப்பினான். இக்கோவிலும் கோபுரமும் கருங்கல்லால் கட்டப்பட்டவை. அக்காலச் சிற்பிகள் கல்லைக் கல்லோடு சேர்ப்பதற்கு ஒருவகைக் கூட்டு மருந்தைப் பயன்படுத்தினர்; அது அட்டபந்தன மருந்து என்னும் பெயரோடு வழங்கியது; கீழ்க்கல்லில் துளையும், மேற்கல்லின் கீழ்ப் பொருத்தும் அமைத்து, இடையில் மருந்திட்டுக் கல்லைக் கல்லோடு சேர்ப்பர்; கற்களின் அளவுத்திட்டம், ஒவ்வொரு கல்லிலும் செதுக்குதற்குரிய சிற்ப வேலைப் பகுதிகள் முதலியவற்றையெல்லாம் முன்னரே முடிவு செய்துவிடுவர்; பின்னர் மிகச் சிறியவற்றையும் தவறின்றிப் பொறுமையாகச் செய்யத் தொடங்குவர்.

சிற்பிகளின் தலைவன் வகுத்துக் கொடுத்த அளவிலும் வடிவத்திலும், துணைச் சிற்பிகள் கற்களைச் செதுக்கிச் செப்பனிட்டு மெருகிடுவர். கோவில் எழுப்பக் குறித்திருந்த இடத்தைச் சுற்றிக் கல்லுளிகளின் ஓசையும், கற்களைச் சுமந்து செல்லும் கூலியாட்களின் ஏலப் பாட்டும், மிகவும் பாரமான கற்களை இழுத்துச் செல்லும் யானைகளின் பிளிற்றொலியும், பணியாளர்க்கு மோர் விற்கும் ஆய்ச்சியர் கூவும் பண்டமாற்றொலியும், மற்றும் பலவகை ஒலிகளும் முழங்கிக்கொண்டிருக்கும்.

நாற்சதுரமான அடித்தளத்தின்மீது கருவறை அமைக்கப்பட்டது. அதைச் சுற்றித் திருச்சுற்றும் அமைக்கப்பட்டது. கருவறைக்கு எதிரில் 58* மீட்டர் நீளமும் 321 மீட்டர் அகலமும் உடைய மண்டபம் அமைக்கப்பட்டது. கருவறைக்குக் குறித்திருந்த நாற்சதுரமான அடித்தளத்திலும், அதற்கு முன்னிலையில் எழுப்பிய மண்டபத் தளத்திலும் நிறுத்தவேண்டிய தூண்கள், அமைக்க வேண்டிய சுவர்கள் யாவும் தத்தமக்குரிய இடங்களில் அமைக்கப்பட்டபின் பணியாளர் கட்டி, முடித்த அளவிற்கு மணலைக் கொட்டி மூடிச் சாரம் அமைத்தனர். கட்டடம் வளர வளரச் சாரமேடும் வளர்ந்தது.

கருவறையின் முன் மண்டபத்தைக் கல்லால் மூடிச் சாந்து பூசியதும், அதனையும் மணல்மேடு மூடியது, கருவறைக்குமேல் கோபுரம் நாள்தோறும் வளர்ந்து கொண்டு வந்தது. தமிழகத்திலுள்ள மற்றக் கோவில்களில் அமைந்துள்ள கோபுரங்களி னின்றும் இது உருவத்தால் மாறுபட்டது. மற்றக் கோபுரங்களின் சதுர அளவு மேலே செல்லச் செல்லப் படிப்படியாகக் குறைந்திருக்கும். ஆனால் இக்கோவிற் கோபுரமோ மேலே செல்லச் செல்லச் சதுர அளவு மிகவும் குறைந்து, கூம்பி எழுந்துள்ளது. இது பதின்மூன்று மாடிகளைக் கொண்டது. கற்களாலேயே அமைக்கப்பட்டுள்ள இக்கோபுரம் சிற்பக் கலைக்குப் பெயர் பெற்றது. புராண நிகழ்ச்சிகளைச் சித்தரிக்கும் அரிய சிற்பங்கள், உள்ளத்தைக் கவரும் முறையில் அமைக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்கள் ஒவ்வொன்றும், சிற்பக் கலையின் நுண்ணிய வேலைப்பாட்டுக்குச் சான்றுகளாக விளங்குவதோடு, அவற்றை அமைத்த சிற்பிகளின் கலை ஆற்றலையும் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது.

கோபுரத்தின் உச்சியைப் பிரமரந்திரதளம் என்று சொல்லுவார்கள். இது சுமார் 7 மீட்டர் சதுரமுடையது, இந்த அளவுள்ள ஒரே கல்லைத் தேடிப் பொருத்த, அரசனும் சிற்பிகளும் விரும்பினார்கள். இந்தக் கல்லைப் பற்றிப் பல கதைகள் வழங்குகின்றன.

ஒரு நாள் அரசன் உறங்கிக் கொண்டிருந்த போது சிவபெருமான் கனவில் தோன்றி, "நாம் கிழவியின் நிழலில் மகிழ்ந்திருப்போம்" என்று கூறினாராம். உறக்கம் தெளிந்து எழுந்த அரசன் மறுநாட் காலை பலரையும் அழைத்துக் கனவில் ஆண்டவன் கூறிய கிழவியைப் பற்றி விசாரித்தான். மக்கள் அழகி என்ற கிழவியைப் பற்றியும், அவள் சிவபக்தியைப் பற்றியும் அரசனிடம் எடுத்துக் கூறி விளக்கினர். உடனே அரசன் அக்கிழவியை அழைத்து விசாரித்தான். பிரமரந்திர தளத்தில் அமைப்பதற்கு ஏற்ற அளவுடைய ஒரு கல் தன் வீட்டு முற்றத்தில் கிடப்பதாக அக்கிழவி சொன்னாள். அரசன் தன் ஆட்களையும் யானைகளையும் அனுப்பி அக்கல்லைக் கொண்டு வருமாறு கட்டளை யிட்டான்.

தஞ்சாவூர் மாவட்டக் கழகப் பனகல் கட்டடத்திற்கு அருகில் 'அழகி குளம்', 'அழகி தோட்டம்' என்ற குளமும் தோட்டமும் உள்ளன. இவற்றை இராசராசன் அக்கிழவிக்குத் தீர்வையின்றிப் பதிவு செய்து கொடுத்தான் என்ற வரலாறு ஒன்று வழங்குகிறது. இதைப்பற்றிக் கூறப்படும் வேறொரு கதையும் உள்ளது. கோபுர வேலை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தபோது, அழகி என்ற ஒரு கிழவி நீரும் உணவும் சிற்பிகளுக்குக் கொடுத்து உதவி செய்தாளாம். அவளுடைய பணிவிடையைப் பாராட்டக் கருதிய சிற்பிகள், அவள் வீட்டில் கிடந்த ஒரு கல்லைக் கொண்டுவந்து பிரமரந்திர தளத்தில் பொருத்தினார்கள் என்றும் கூறப்படுகிறது. இதைப்பற்றி வழங்கும் மூன்றாவது கதை பின்வருமாறு:

இக்கல்லை ஓர் இடையர் குலப்பெண் கொடுத்து உதவினாள். அவளுடைய சிவ பக்தியை வியந்த அரசன் அவளுடைய ஊரில் இராசராசேச்சுரம் என்ற பெயரால் ஒரு சிவன் கோவிலைக் கட்டினான். அக்கோவில் நாளடைவில் தாராசுரம் என்ற பெயர் மாற்றத்தைப் பெற்றது. கும்பகோணத்திற்கு அருகில் தாராசுரம் என்ற சிற்றூர் உள்ளது. அதுவே இந்த இடைச்சியின் ஊர் என்று கூறப்படுகிறது. எப்படியோ பிரமரந்திரக்கல் கிடைத்தது.

இக்காலத்தில் இருப்பது போன்ற பாரந்தூக்கிகள் அக்காலத்தில் இல்லை. பிரமரந்திர தளக் கல்லின் எடை ஏறத்தாழ 8½ மெட்ரிக் டன். அவ்வளவ பளுவான ஒரு கல்லைக் கோபுரத்தின் உச்சிக்குக் கொண்டு செல்வதென்பது எளிதான செயலா? இப்போது தஞ்சாவூருக் கருகில் சாரப்பள்ளம் என்ற ஓர் ஊர் உள்ளது. அவ்விடத்திலிருந்து மண்ணைக் கொட்டிப் பல மீட்டர் தொலைவிலுள்ள ஒரு சார மேட்டை அமைத்தனர். யானைகள் அக்கல்லை உருளைகளின்மேல் வைத்து உருட்டிச் சாரப்பள்ளம் வரை கொண்டுவந்து சேர்த்தன. பிறகு சில யானைகள் முன்னிருந்து இழுத்தன; சில யானைகள் பின்னிருந்து மேலே உந்தித் தள்ளின. சாரத்தின் மேல், கல் மெதுவாக ஏறிக் கோபுர உச்சியை அடைந்தது.

சிற்பிகள் பிரமரந்திர தளக்கல்லின் மீது அரைக்கோள வடிவமான கல் கட்டுமானம் அமைத்தனர். அதற்குத் தூபித்தறி என்பது பெயர். அதன்மீது வைக்கப்பட்டுள்ள செப்புக் குடத்தின் நிறை சுமார் 108 கி. கிராம் ஆகும். அதன்மீது தங்கத்தினால் ஆன தகடு போர்த்தப்பட்டு உள்ளது. இக்கோவில் விமானம் தக்கண மேரு எனப்படும். இதன் நான்கு மூலைகளிலும் முறையே இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. அவை தனித்தனி ஏறத்தாழ 2 மீட்டர் நீளமும், 1½ மீட்டர் அகலமும் கொண்டவை.

இக்கோவிலின் கருவறையில் அமைக்கப்பட்டிருக்கும் சிவலிங்கம் மிகவும் உயரமானது. இதனை நருமதை ஆற்றின் கரையில் உள்ள கரும்பாறையில் செதுக்கிக்கொண்டு வந்தனர் என்று கூறுவர், சிவலிங்கத்திற்கு எதிரே தனியாகக் கட்டப்பட்டுள்ள மண்டபம் ஒன்றில் சிற்பி, சிவபெருமானின் ஊர்தியாகிய நந்தியை ஒரே கல்லில் அமைத்து வைத்தான். இதன் உயரம், முன்பக்கத்தில் பீடத்திலிருந்து தலை வரை சுமார் 3½ மீட்டர் எனவும், அதன் பின்பாகத்தின் உயரம் சுமார் 2½ மீட்டர் எனவும், நடுவில் பீடத்திலிருந்து முகப்பு வரை சுமார் 3.15 மீட்டர் எனவும், அதன் மூக்கு நுனிமுதல் பின்பாகம்வரை சுமார் 4.87 மீட்டர் நீளம் எனவும், முதுகின் குறுக்களவு சுமார் 2.13 மீட்டர் எனவும் தொல்பொருளாராய்ச்சி வல்லார் கணக்கிட்டுக் குறித்திருக்கின்றனர். இந்நந்தியைத் தஞ்சைக்கு 640 கி.மீட்டர் தொலைவிற்கப்பாலிருந்து கருங்கல்லில் செதுக்கிக் கொண்டு வந்தனர் என்றும் கூறுகின்றனர். கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் உயரமும், நந்தியின் உயரமும் ஒரே அளவு எனவும், இரண்டும் சம மட்டத்தில் இருப்பவை எனவும் கூறுகின்றனர்.

தஞ்சைக் கோவிலின் திருப்பணி நடைபெற்ற காலத்தில் இராசராசன் நாள் தோறும் சிற்பிகளின் வேலையை மேற்பார்வையிட வருவது வழக்கம், சில நேரங்களில் சிற்பிகளின் மீது வெயில் படாத வாறு தானே குடை கவித்து நிற்பான். ஒரு சமயம் சிற்பிகளின் தலைவன் நுணுக்கமான சிற்ப வேலையில் ஆழ்ந்திருந்தான். அருகில் அரசன் வந்து நிற்பதையும் அவன் அறியவில்லை. சிற்பி, தன் அடைப்பைக்காரனின் பெயரைச் சொல்லி, 'வெற்றிலை மடித்துக் கொடடா' என்று சொன்னான். அந்நேரத்தில் அடைப்பைக்காரன் ஏதோ வேறு வேலையாகச் சென்றிருந்தான். அடைக்காய் இல்லாமையால் சிற்பியின் கவனம் சிதையுமே என்று அரசன் கருதினான். ஆகையால், அரசன் தானே அடைப்பைக்காரனாக இருந்து, வெற்றிலை மடித்துக் கொடுத்தானாம். அவ்வெற்றிலைச்சுருளை வாயிலிட்டு மென்ற சிற்பி, அது வழக்கத்திற்கு மாறாக நறுமணம் வீசுவதை உணர்ந்தான். தலை நிமிர்ந்து நோக்கினான். எதிரில் மன்னர் மன்னன் நின்று கொண்டிருந்தான். சிற்பி மனங்கலங்கினான். "அரசர் பெரும! நான் பெருந் தவறிழைத்து விட்டேன். நான் அறியாமல் செய்த பிழையை மன்னித்தருள வேண்டும்" என்று வேண்டினான்.

"நீவிர் ஏதும் பிழை செய்யவில்லை. ஆண்டவன் திருப்பணியில் ஈடுபட்டிருக்கும் உமக்குத் தொண்டு செய்வதை என் நற்பேறாகக் கருதுகிறேன். ஆண்டவன் அழகன். அவனை அழகுக் கோவிலில் அமைக்கிறீர் நீவிர். அவ்வழகுப் பணிக்குத் தொண்டு செய்வது என் கடமை" என்று கூறினான் இராசராசன். மன்னனின் அழகுணர்ச்சியை உணர்ந்த சிற்பி பெருமகிழ்ச்சியடைந்தான்; பெரிய. கோவிலின் வேலை முற்றுப் பெற்றதும், அங்கேயே அழகுத் தெய்வமான முருகப் பெருமானுக்கு எழில்மிக்க ஒரு கோவிலை அமைத்தான். அக் கோவிலே அமைப்பதில் தன் முழுத் திறமையையும் காட்டினான் அச்சிற்பி.

பெரிய கோவிலின் திருப்பணிகள் யாவும் முடிவுற்றன. இனிச் சிவலிங்கத்தைக் கருவறையில் எழுந்தருளச் செய்ய வேண்டும். அதற்காக அரசன் ஆதிசைவர்களை வரவழைத்தான். அவர்களும் மருந்து அறைத்து இலிங்கத்தைப் பந்தனம் செய்தனர். ஆனால் இலிங்கம் பொருந்த வில்லை. மருந்து இளகிப் போயிற்று. அரசன் உள்ளம் மிகவும் வருந்தினான்; யாது செய்வதென்று அறியாமல் மனம் குழம்பினன். அப்போது வானத்தில் ஓர் அசரீரி கிளம்பியது. "கருவூர்த் தேவரை அழைத்து இப்பணியைச் செய்! உன் கவலை தீரும்” என்று கூறியது அக்குரல். உடனே அரசன், “கருவூர்த் தேவர் என்பவர் யார்? அவர் எங்கிருக்கிறார்? அவரை இப்பொழுதே இங்கு அழைத்து வர வேண்டும்” என்று ஆணையிட்டான்.

ஆனால் அருகிலிருந்த ஒருவருக்கும் கருவூர்த் தேவர் யார் என்பது புரியவில்லை. அரசன் மீண்டும் பெரும் குழப்பத்திலாழ்ந்தான். அரசனின் குழப்பத்தைப் போக நாதர் என்ற சித்தர் உணர்ந்தார். சித்தரால் ஆகாத செயலும் உண்டோ? கருவூர்த் தேவர் எங்கிருக்கிறார் என்பதை அவர் தம் ஞானநோக்கால் உணர்ந்து தெரிவித்தார். கருவூர்த்தேவர் சேரநாட்டைச் சேர்ந்த ஒரு மலையில் வாழ்ந்து வந்தார். இராசராசன் வேண்டுகோளுக்கு இசைந்து, அவர் தஞ்சைக்கு எழுந்தருளினர். தம்முடைய வாயிலிருந்த தம்பலத்தை மருந்தாகப் பயன்படுத்தி இலிங்கத்தைக் கருவறையில் பொருத்தினர் தேவர். வியக்கத்தக்க முறையில் உருக்கி வார்த்தாற் போல் அது பொருந்தியது.

தஞ்சைப் பெரிய கோவில் இந்திய நாட்டிலேயே தலைசிறந்த கோவில் என்று பிரித்தானியக் கலைக்களஞ்சிய நூல் (Encyclopaedia Brittanica) கூறுகிறது. இக்கோவில் தஞ்சையின் நடுவிலுள்ள சிவகங்கைச் சிறு கோட்டையின் தென் பாதியில் அமைந்துள்ளது. கோட்டையைச் சுற்றி ஆழமான அகழி ஒன்று அமைந்துள்ளது. கோவிலுக்குள் செல்பவர்கள் அகழி மேலுள்ள பாலத்தைக்கடந்து கோட்டைச் சுவரிலுள்ள வளைவுக்குள் நுழைந்து உள்ளே செல்ல வேண்டும். அகழியைக் கடந்ததும் அழகிய கோபுரம் ஒன்று தென்படும். அதைக் கடந்து உள்ளே சென்றால் அகன்ற கோபுரம் தென்படும். பிறகு ஏறத்தாழ 152 மீட்டர் நீளமும் 764 மீட்டர் அகலமும் உடைய பெருமன்றம் உள்ளது. அதன் எதிரில் அமைந்துள்ள பீடத்தின் மேல் மிகப் பெரிய நந்தி படுத்திருக்கிறது. தமிழகத்திலுள்ள வேறு எந்தக் கோவிலிலும் இவ்வளவு பெரிய நந்தியைக் காண முடியாது. இதன் கலையழகு கண்ணைக் கவரும் தன்மையது. உயிருள்ள காரெருது ஒன்று இளைப்பாறுவதற்காகப் படுத்திருப்பது போல் இது தென்படும். நாக்கை வெளியில் நீட்டி வளைத்து, மூக்கிற்குள் செலுத்தியிருக்கும் சிற்ப நயத்தை வியவாதார் எவரும் இருக்க முடி யாது. அந்நந்தியின் பெருமிதமான தோற்றமும், காதுகளின் நெரிப்பும், முகப்பின் சரிவும், முதுகின் பரப்பும், வயிற்றின் வடிப்பும், கால்களின் மடிப்பும் குளம்புகளின் பிளப்பும் சிற்பியின் கைவண்ணத்தைப் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.

இந்நந்தியைப் பற்றி ஒரு கதை வழங்குகிறது. இந்நந்தி இராக் காலங்களில் வெளியில் சென்று பயிர்களை அழித்து வந்ததாம். இதனால் சினம் கொண்ட தஞ்சைப் பெருவுடையார், இதைக் கல்லாகுமாறு சபித்தாராம். இந்நந்தியின் அடியில் ஒரு தேரை இருந்ததாம். ஆண்டவன் சாபத்திற்குள்ளாகாத அத்தேரை நாள்தோறும் வளர்ந்ததாம். தேரை வளர வளர நந்தியும் வளர் தொடங்கியது. இப்படியே விட்டு விட்டால் நந்தியின் வளர்ச்சி அளவற்றதாகி விடும் என்று உணர்ந்து, அதன் முதுகில் ஓர் இருப்பாணியை அடித்தார்களாம். அதன் பிறகு நந்தி வளருவதில்லையாம். நந்திக்கு முன்னால் இறைவன் கோவில் விமானமும், பக்கத்தில் பெரிய நாயகி கோவிலும் இருக்கின்றன.

கோவிலைக் கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், ஆடல் அரங்கம், இசை அரங்கம் எனப் பல பிரிவுகளாகப் பிரிக்கலாம். இக்கோவிலுக்கும் 'கேரளாந்தகன் வாயில்', 'இராசராசன் திருவாயில்' 'அணுக்கன் திருவாயில்' எனப் பல வாயில்கள் உள்ளன. கருவறையைச் சூழத் 'திருச்சுற்று மண்டபம்' உள்ளது. துவாரபாலகர் வடிவங்களை வாயிலின் இருபுறமும் அமைத்துள்ளார்கள். பெருவுடை யார் சந்நிதி தரை மட்டத்திற்குமேல் உயர்ந்த மேடையில் நிறுவப்பட்டிருப்பதால், மாடக்கோவில் என்று இது பெயர் பெற்றது போலும். படிகளில் ஏறி, உள்ளே செல்ல வேண்டும். துவாரபாலகர்களின் உருவம் மிகவும் கம்பீரமானவை; ஏறத்தாழ 5½ மீட்டர் உயரமும், 2½ மீட்டர் சுற்றளவும் உடையவை.

தென் வாயிலின் கிழக்குப்பகுதியில் திருமகளின் உருவமும், வடக்கு வாயிலின் கிழக்குப் பகுதியில் கலைமகளின் உருவமும் அழகுடன் அமைந்துள்ளன. முன்னால் உள்ள திருவணுக்கன் திருவாயிலுக்கு இருபக்கமும் அமைந்த படி வழியாகவே செல்ல வேண்டும். இராசராசன் கட்டிய காலத்தில் இப்படிகளே இருந்தன. இதற்கு எதிரில் இப்போது தென்படும் படிகள் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னனான சரபோஜியினால் கட்டப்பட்டவை.

இராசராசன் சிறந்த சிவபக்தன் என்றும், அவன் சைவ சமயத்தின்பால் கொண்டிருந்த பற்று அளவற்றது என்றும் நாம் முன்பே அறிந்தோம். ஆனால் சமய வெறி அவனுக்கு இல்லை. பிற சமயங்களையும் போற்றும் பண்பு அவனிடம் உண்டு. எனவே கோவில் விமானத்துத் தென் பக்கத்து மதிற் சுவரில் திருமாலின் உருவத்தைப் பொறித்து வைத்தான். அவ்வுருவத்தைச் சுற்றிச் சோழ வீரர், பிள்ளையார், பிச்சாடனர், சூல தேவர், தக்கணாமூர்த்தி, மார்க்கண்டேயர், ஆடல்வல்லான் ஆகியோரின் உருவங்கள் அமைந்துள்ளன.

கோபுரத்தின் மேற்குப் பக்கத்து மதிலில் இலிங்கோற்பவர், அர்த்த நாரீச்சுவரர் ஆகியோரின் உருவங்கள் அழகாக வடித்து வைக்கப்பட்டிருக்கின்றன. வடபுறத்தில் கங்காதரர், கலியாண சுந்தரர், மகிடாசுரமர்த்தனி ஆகியோரின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

திருச் சுற்று மண்டபத்தின் தென் பக்கத்தைத் தவிர மற்றைய பகுதிகளில் மகாலிங்கங்களும், நாக கன்னிகைகளின் பதுமைகளும், அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர், மாணிக்க வாசகர் ஆகியோரின் சிலைகளும் அழகுடன் காட்சியளிக்கக் காணலாம். தென்பக்கத்திலுள்ள விக்கிரமன் வாயிலில் பௌத்த சிலைகள் தென்படுகின்றன. இச்சிலைகள் இராசராசன் சமயப் பொது நோக்கிற்கு மற்றொரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

கோபுரத்தின் கிழக்குப் பக்கத்தில் ஓர் ஐரோப்பியனின் உருவம் காணப்படுகிறது. இராசராசன் காலத்தில் யவனர், அராபியா போன்ற வெளிநாட்டு வணிகர்கள் வாழ்ந்தார்களல்லவா? அவர்களில் ஒருவனுடைய உருவமாக இது இருக்கலாம் என்று கருதுகிறார்கள். 'இச்சிலை இராசராசர் காலத்தில் வடிக்கப்படவில்லை; மராட்டிய மன்னர்களின் காலத்தில் அமைக்கப்பட்டது' என்று சிலர் கூறுகிறார்கள். 'பதினேழாம் நூற்றாண்டில் தஞ்சை இரகுநாத நாயக்கர் சபையில் இருந்த கிழக்கிந்தியக் கம்பெனியின் தலைவனான ரோலண்டு கிரேப் என்ற பிரித்தானியனின் வடிவமே இது' என்றும் சிலர் கூறுகிறார்கள். 'பதின்மூன்றாம் நூற்றாண்டில் தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்த மார்க்கோ போலோ என்ற இத்தாலியப் பிரயாணியின் சிலையே இது' என்று வேறு பலர் கூறுகிறார்கள். இப்படியாகப் பல கருத்துக்கள் இச்சிலையைப் பற்றி வழங்குகின்றன. தஞ்சைப் பெரிய கோவிலின் கோபுரத்தை அமைத்த சிற்பி, தன் முன்னறிவால் சோழ மன்னன் சிலையையும், சோழர்களுக்குப் பிறகு தஞ்சையை ஆண்ட பரம்பரைகளையும் வடித்தான் என்றும் கூறுகிறார்கள்.

தஞ்சைப் பெரிய கோவில் கருவறையின் உட்புறச் சுவரில் இராசராசன் காலத்தில் தீட்டப்பட்ட ஓவியங்கள் உள்ளன. அவை இடைக்காலச் சோழர்களின் ஓவியக் கலைச் சிறப்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன. இந்த ஓவியங்களின் சிறப்பை உணராத நாயக்க மன்னர்கள், பதினேழாம் நூற்றாண்டில், இவற்றின்மீது சுண்ணச் சாந்தைப் பூசிவிட்டு வேறு ஓவியங்களைத் தீட்டி யிருக்கின்றனர். அச்சாந்து உதிர்ந்துள்ள இடங்களில் சோழர் கால ஓவியங்கள் தென்படுகின்றன. இதைக் கண்டு தமிழ் நாட்டிற்கு வெளிப்படுத்தியவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வரலாற்று விரிவுரையாளராக இருந்து, அண்மையில் காலஞ்சென்ற திரு. ச. க. கோவிந்த சாமிப் பிள்ளையவர்கள். இவ்வோவியங்களைப் பற்றி எழுதிய தம் கட்டுரையில், "இவ்வோவியங்கள் இக்கோயில் கட்டி முடிக்கப்பட்டபோது, அதாவது கி. பி. 1010 ஆம் ஆண்டு வாக்கில் தீட்டப்பட்டிருக்க வேண்டும்" என்று குறிப்பிடுகிறார். இவ்வோவியங்களின் சிறப்பைப் பார்ப்போம். மேற்புறச் சுவரில் நடராசப் பெருமானின் சிற்ப வடிவம் அமைந்துள்ளது. இவ்வடிவத்தின் இரு புறங்களிலும் ஒவியங்கள் காணப்படுகின்றன. ஒரு பக்கத்தில், சிவபெருமான் மான்தோல் இருக்கையின்மீது கண்ணை மூடிக்கொண்டு யோகத்தில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு எதிரில் சிவனடியார்களும், சிவகணங்களும் நின்றுகொண்டு பணிவோடிருக்கும் காட்சி தீட்டப்பட்டிருக்கிறது. அதை அடுத்து அழகான போர்வையும், நான்கு தந்தங்களும் உடைய வெள்ளை யானை ஒன்றும் தென்படுகிறது. அதன்மீது தாடியோடு கூடிய ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவர் தம் கையிலுள்ள தாளத்தை முழக்கி இன்னிசை பாடிக் கொண்டிருக்கிறார். அந்த ஓவியத்திற்கு அருகில் வெள்ளைக் குதிரையின்மீது ஏறிக்கொண்டு உடற்கட்டுடைய ஒருவர் விரைவாக வான வீதியில் சென்று கொண்டிருக்கிறார்.

மற்றெரு பக்கத்தில் வேதியர் பலர் கூடி அமர்ந்துள்ள அவை ஒன்று உள்ளது. அவ்வவையின் எதிரே ஓலையைக் கையில் தாங்கியபடி முதியவர் ஒருவர் தென்படுகிறார். அவருக்கு எதிரில் அடக்கமே உருவான இளைஞன் ஒருவன் நின்று கொண்டிருக்கிறான். அவனுக்கு வலப்பக்கத்தில் கோவில் விமானமொன்றும், அதற்குள் நுழைவதற்கு விரைந்து செல்லும் வேதியர் கூட்டமொன்றும் தெரிகின்றன.

மேலே குறிப்பிட்டுள்ள ஒவியங்கள் யாவும் சைவ சமய ஆசிரியர்களுள் ஒருவரான சுந்தர மூர்த்தியின் வாழ்க்கையைக் குறிப்பிடுகின்றன. சுந்தரமூர்த்தி நாயனாரை இறைவன் முதியவர் வேடந்தாங்கி வந்து, திருமணத்தின்போது தடுத்தாட் கொண்ட நிகழ்ச்சியையும், வேதியர் அவையில் அவ்விருவரும் வழக்குரைத்த நிகழ்ச்சியையும், சுந்தரர் வெள்ளை யானையின்மீது ஏறிக் கைலாயம் செல்லும் நிகழ்ச்சியையும், அவர் பிரிவைப் பொறுக்க முடியாத சேரமான் பெருமாள் நாயனர் குதிரைமீது ஏறி அவருக்கு முன் கயிலையை அடைந்த நிகழ்ச்சியையும் இந்த ஒவியங்கள்யாவும் அழகாக விளக்குகின்றன.

வேறோர் இடத்தில் இல்வாழ்க்கையை இனிது விளக்கும் ஓவியங்கள் உள்ளன. பல பெண்கள் சமையல் கூடத்தில் உணவு சமைக்கும் காட்சியும், சமைத்த உணவினைக் கணவனுக்கு இட்டு மகிழும் காட்சியும் எழுதப்பட்டுள்ளன.

இச்சுவரின் மற்றொரு பகுதியில் தில்லைப் பொன்னம்பலம் போன்றதொறு மண்டபத்தின் கூரையும், கூத்தப் பெருமான் உருவத்தின் ஒரு பகுதியும் எழுதப்பட்டுள்ளன. அதன் அருகில் ஒரு சிவனடியாரும், மூன்று பெண்களும் கைகூப்பி ஆண்டவனை வணங்கும் காட்சி எழுதப்பட்டுள்ளது. மண்டபத்தின் வெளியே அரசனும் அரசியும் நின்று கொண்டிருக்கின்றனர். மற்றும் நான்கு பெண்களும், ஆறு ஆடவர்களும் பக்தியோடு வணங்கும் காட்சிகள் கண்ணைக் கவரும் விதத்தில் வரையப்பட்டுள்ளன. இங்குக் காணப்படும் பெண்ணுருவங்கள் நுண்ணிய கலைச்சிறப்போடு விளங்குகின்றன. இம்மகளிர் அனைவரும் பூவேலை செய்த கரைகளையுடைய ஆடைகளும், முத்து மாலைகளும், பலவித அணிகளும் பூண்டுள்ளனர். இவர்களுக்கு எதிரில் அழகிய ஆடை ஆபரணங்கள் அணிந்து எழிலோடு அமர்ந்திருக்கும் இரு பெண்களின் உருவமும், அடியில் மூன்று பெண்களின் தலைகளும் காணப்படுகின்றன. இந்த ஒவியங்களுக்கு அடுத்தாற்போல், கூட்டமாக அமர்ந்துள்ள இருபது பெண்கள் சிறு அளவில் வரையப்பட்டுள்ளனர்.

வடக்குப்புறச் சுவரில் சிவபெருமான் முப்புரத்தை எரித்த காட்சி எழுதப்பட்டுள்ளது. ஒரு பக்கம் தேவர்களும், மற்றொரு புறம் அசுரர்களும், நடுவில் உயர்ந்த தேரில் சிவனும் வரையப்பட்டுள்ளனர். சிவபெருமானின் எட்டுக் கைகளில் எட்டுவிதப் படைகள் திகழ்கின்றன. அவருடைய புருவங்கள் வில்லைப்போல் வளைந்திருக்கின்றன. மூன்றாவது கண் பிதுங்கிக் கொண்டிருக்கிறது. மூக்குத் தொளைகள் அகன்று திறந்துள்ளன. தலையின் நிலை போருக்கு அறைகூவும் பாவனையில் அமைந்துள்ளது. முகத்தில் சினக்குறி இல்லாவிடினும், பெருமிதமும், வீரமும், ஆற்றலும் பொலிகின்றன. உதடுகளிலும் கண்களிலும் ஒருவித ஏளனச் சிரிப்புத் தவழ்கின்றது. இந்த ஓவியம் இடைக்கால ஓவியக்கலையின் சிகரம் என்று சொல்லலாம்.

இச்சுவரில் காணும் அரக்கரும், அரக்கப் பெண்டிரும் அழகாகவே தீட்டப் பட்டுள்ளனர்.

உருண்டு திரண்ட தசை நார்களும், அச்சத்தை ஊட்டும் கண்களும், மீசையும் உடைய அரக்கர் அஞ்சாமையோடு போர் செய்கின்றனர். அச்சங் கொண்ட அரக்க மகளிர் தங்கள் வீரக் கணவரின் கழுத்தைக் கட்டிக் கொண்டு புலம்புகின்றனர். அரக்க மகளிர் மானிட மகளிரைப் போலவே மெல்லினத்திற்குரிய அங்க அழகுகளோடு காட்சியளிக்கின்றனர். இச்சுவருக்கு எதிரே உள்ள சுவரில், சுண்ணாம்புப் பூச்சுக்கு அடியில் பலவித அரிய அணிகலன்கள் அமைக்கப் பெற்ற திருமுடிகளைத் தரித்த நான்கு தேவர்களின் முகங்கள் தென்படுகின்றன. காதளவு நீண்டு ஒளிவிடும் கண்களும், வளைந்த புருவங்களும், காதிலும், கழுத்திலும் மிளிரும் பலவித ஆபரணங்களும் இம்முகங்களுக்குப் பேரழகூட்டுகின்றன.

பழைய இந்திய ஓவியங்களைப் போலவே, இவை யாவும் முதலில் எல்லைக் கோடுகள் வரைந்து பின்னர் வண்ணந் தீட்டப்பட்ட ஒவியங்களாகும். இக் கோடுகள் மிக நுண்மையான தூரிகைகளால் எழுதப்பட்டிருப்பது வெளிப்படை. தசையின் நிறத்தைக் காட்டத் தூய வெள்ளை, மஞ்சள், நீர்க்காவி, பச்சை ஆகிய வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. விரல்கள், மூக்கு முதலிய உறுப்புக்கள் மிக நுண்மையாக வரையப்பட்டுள்ளன. பல வித ஓவிய வேலைப்பாடுகள் அமைந்த கரைகளை உடைய ஆடைகளும், பல வித முடியணிகளும், காதணிகளும், கழுத்தணிகளும் உருவங்களுக்கு அழகு தருகின்றன. இங்குக் காணப்படும் குதிரையிலும் யானையிலும் கூட அலங்காரங்களைக் காணலாம். யானையும் குதிரையும் மட்டுமன்றி எருது, மயில் போன்ற விலங்குகளும் பறவைகளும் காணப்படுகின்றன. இங்குள்ள ஆண் உருவங்களிலெல்லாம் தாடி காணப்படுகிறது. சோழர் காலச் சிற்பங்களிலும் தாடி காணப்படுவதால், இக்கோலம் சோழர் காலத்தின் பழக்க வழக்கங்களில் ஒன்று போலும். கைதேர்ந்த ஓவியர்களால் வரையப்பட்ட இவை யாவும் அஜந்தாவின் மிகச்சிறந்த ஓவியங்களுடன் ஒப்பிடுவதற்குரியனவென்பதில் சிறிதும் ஐயமில்லை.

இராசராசன் தஞ்சைப் பெரிய கோவிலைத் தன்னுடைய நேரான மேற்பார்வையில் வைத்துக் கொண்டான். அவனுக்குப் பிறகு வந்த மன்னர்களும் அவ்வாறே செய்தனர். இராசராசன் கோவிலுக்கெனப் பேரளவில் நிலங்கள் மானியமாக அளித்தான்; ஆபரணங்கள் வழங்கினான்; நாள் வழிபாடுகளுக்கு வேண்டிய வசதிகளும் செய்து வைத்தான், திருமுறை ஒதுவதற்கென ஒதுவார்களையும், இன்னிசை முழக்குவதற்கென்று இசைக் கலைஞர்களையும்; திருவிழாக் காலங்களில் ஆடல் நிகழ்த்துவதற்கென்று ஆடல் மகளிரையும் அமர்த்தினான். அவர்கட்கு ஆண்டுதோறும் மானியமாக நெல்லும், பொருளும் வழங்கினான். கோவிலின் நடுவிலுள்ள திறந்த வெளியில் ஒரு மேடை அமைந்திருப்பதை இன்றும் காணலாம். அதன் எதிரில் அழகிய ஒரு மண்டபம் உள்ளது. விழாக்காலங்களில் ஆடல் மகளிரும் கூத்தரும் அம்மேடையில் ஏறித் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்துவர். அரசர் தம் பரிவாரத்தோடு அம்மண்டபத்தில் அமர்ந்து ஆடலைக் கண்டு களிப்பார். இவ்வழக்கம் சரபோஜியின் காலம் வரையில் இருந்து வந்தது. சரபோஜியின் காலத்தில் ‘சரபேந்திர பூபாலக் குறவஞ்சியை’ ஆடல் மகளிர் இம்மேடையில் ஏறி நடித்துக் காட்டுவர்.

தஞ்சை இராசராசேச்சுரம், காலத்தை வென்ற ஒப்பற்ற கலைத்திறனுக்குச் சான்று பகருகிறது. இது கடவுளின் கோவில் மட்டுமன்று; கலையின் பெரிய கோவில் என்றும் கூறலாம். இதனுடைய கோபுரம் தஞ்சையை அணி செய்யும் கலைப் பெரும் ஓவியம்! தஞ்சையின் வரலாற்றுக்கு ஒரு முன்னுரை! எத்தனையோ கோபுரங்கள் மிடுக்குடன் அடுக்கடுக்காய் அமைந்து தமிழகத்தை அலங்கரிக்கின்றன. ஆனால் அழகு வளர்க்கும் கோபுரம் பெரிய கோவில் கோபுரமே. இது தமிழகத்துப் பெருஞ்செல்வம்.

——————————