குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்/தொடக்கம்
தொடக்கம்
குயில் பாட்டு நிகழ்ச்சி, புதுவைக்கு மேற்கேயுள்ள ஒரு மாஞ்சோலையில் நடக்கின்றது. சஞ்சீவி மலைச்சாரலில் நடக்கிறது பாரதிதாசனின் பாட்டு நிகழ்ச்சி, கவிஞர்கள் தத்தம் பாட்டு நிகழும் இடங்களை அறிமுகப்படுத்துகிறார்கள்.
இந்த அறிமுகம் ஒரே மாதிரியாக இருக்கிறது. இடத்தின் இயற்கை நிலையை இரு கவிஞர்களும் அழகு ததும்ப வருணிக்கிறார்கள்.
இந்த அறிமுகம் அவர்கள் பாடப்போகும் போக்கையே அறிமுகப்படுத்துவதாக அமைந்துள்ளதைக் காணலாம்.
நீலமணியொன்று நெருப்பின் எதிரில் வைத்தால் எப்படி ஒளி பொருந்தித் திகழுமோ அப்படி ஒளிபெற்றுத் திகழ்கிறது காலையிளங்கதிர் பட்ட நீலக்கடல்.
அந்த நீலக்கடல் வேதத்தின் கருத்தைப் பாடிக் கொண்டிருக்கும் அலைக் கைகளினால் கரையை மோதித் தழுவுகின்றது. இப்படிப்பட்ட வளமான கரைகளையுடைய புதுவை நகரின் மேற்கே சிறிது தொலைவில் ஒரு மாஞ்சோலை யிருக்கிறது. அந்தச் சோலையில் வேடர்கள் பறவை சுட வருவது வழக்கம். இப்படிப்பட்ட அழகிய பெருஞ் சோலையில், வேடர்கள் வராத ஒரு நல்ல நாளில் பெட்டைக்குயில் ஒன்று இனிய பாடலை இசைத்துக் கொண்டிருக்கிறது.
குயில் பாட்டு மேற்கண்டபடி தொடங்குகின்றது.
குயில் கூவிக் கொண்டிருக்கும். அழகு மிக்க மயில் ஆடிக் கொண்டிருக்கும். மணமிக்க காற்று குளிர்ச்சியாக வீசும். கண்ணாடி போன்ற தெளிந்த நீர் ஊற்றுகள் இருக்கும். பழமரங்கள் நிறைய உண்டு. பூக்களிலே தேனீக்கள் இருந்து இசைபாடிக் கொண்டிருக்கும். இந்த இடத்தில் வேட்டுவப் பெண்கள் விளையாடப் போவதுண்டு, காட்டு மறவர்கள் அப்பெண்களைக் கண்டு காதல் மணம் புரிவதுண்டு. இப்படிப்பட்ட அழகான இடம்தான் சஞ்சீவி மலைச்சாரல்.
இப்படிக் கதை நடக்கும் இடத்தை அறிமுகப்படுத்துகின்றார் பாவேந்தர் பாரதிதாசன்.
கதைத் தலைவியான குயிலின் பெயர் பாரதியாரின் பாடல் தலைப்பாகிறது.
கதை நிகழும் இடமான சஞ்சீவி பர்வதத்தின் சாரல் பாவேந்தரின் பாடல் தலைப்பாகிறது.
இருபுலவர்களும் வெண்பாவை மிக எளிதாகக் கையாளுகிறார்கள். பாடல்கள் இயற்கையாக உள்ளன. எளிமையாக உள்ளன. சுவையாக உள்ளன. பண்டித வல்லமைகள் எதுவும் இல்லாமல்–ஒளிவு மறைவான பொருள் எதுவும் இல்லாமல்–சொல்லவந்த கருத்தைப் படிப்பவரின் மனத்தில் சேர்க்கும் எளிமையான முறையில் நேரடியாக அழகு ததும்பச் சொல்லப்படுகிறது.
பாரதியாரின் சிறந்த படைப்புக்களிலே தலையாயது குயில் பாட்டு. இலக்கிய நயம் ததும்பும் அரியபாடல். அது போலவே பாரதிதாசனின் அரிய படைப்பு சஞ்சீவி பர்வதத்தின் சாரல், கவிதை நயம் காட்டும் அற்புதமான அடிகள் பலவற்றைச் சாரலிலே காணலாம்.