குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்/மெய்யுணர்தல்
மெய்யுணர்தல்
நான்காம் நாள் பாவலர் குயிலைச் சந்திக்கிறார். பொய்மாயக் குயில் காதல் பாட்டுப் பாடுகிறது. 'ஆசைக் குரங்கினையும் அன்பார் எருதினையும் எண்ணி நீ பாடும் இழிந்த புலைப்பாட்டை நீசக்குயிலே, நான் கேட்கவா வந்தேன்?’ என்று கேட்கிறார்.
குயில் பாவலரிடம் மட்டுமல்லாமல் குரங்கிடமும் மாட்டிடமும் காதல் உரையாடியதை மறுக்கவில்லை. ஆனால், அது விதியின் பயன் என்று கூறுகிறது. அதை மெய்ப்பிக்க அது தன் முன்பிறப்புக் கதையைக் கூறுகிறது.
குயில் ஒரு மாஞ்சோலையில் ஏதோ தனியாகச் சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் முக்காலமும் உணர்ந்த முனிவர் ஒருவர் அச்சோலைக்கு வருகை புரிகிறார்.
அவர் காலில் விழுந்து வணங்கி தன் நிலைமைக்கு விளக்கம் கேட்கிறது. அற்பமான பறவைச் சாதியில் பிறந்த எனக்கு எல்லா மொழியும் புரிவது ஏன்? மானிடர்போல் நான் சிந்தனை பெற்றது எப்படி? என்று முனிவரைக் குயில் கேட்டது.
முனிவர் அதன் முன் பிறப்பு பற்றி எடுத்துரைக்கிறார்.
குயிலே, முன்பிறப்பில் வீரமுருகன் என்ற வேடர் தலைவன் மகளாகப் பிறந்தாய். அப்போது உன் பெயர் சின்னக் குயிலி. வேடர் குலத்தில் உனக்கொரு மாமன் மகன் இருந்தான். அவன் உன்பால் மையல் கொண்டிருந்தான். அவன் மையலுக்கு இரங்கி நீ அவனை மணந்து கொள்ள ஒப்பினாய். ஆனால் உனக்கு அவன்மேல் காதல் கிடையாது.
உன் அழகைக் கேள்விப்பட்டு தேன்மலை வேடர் தலைவன் மொட்டைப் புலியன், தன்மகன் நெட்டைக்குரங்கனுக்கு உன்னைப் பெண் கேட்டான். உன் தந்தை அதற்கு ஒப்புக் கொண்டுவிட்டான்.
இதைக் கேள்விப்பட்ட மாடன் உன்னிடம் வந்து கோபித்துக் கொண்டான். கோபம் கொள்ளாதே மாடா, அப்பா பேச்சை நான் தட்ட முடியாது. நெட்டைக் குரங்கனுக்கு மனைவியாய்ப் போனாலும் மூன்று மாதத்தில் அவனுடன் சண்டை போட்டுக் கொண்டு வந்து விடுகிறேன். பிறகு உன்னை மணந்து கொள்கிறேன் என்று சொன்னாய். அப்போதும் உன் மாமன் மகன்மேல் காதல் கொண்டு நீ இப்படிச் சொல்லவில்லை. அவன்மேல் உள்ள இரக்கத்தால் தான் இப்படிக் கூறினாய்
ஒரு நாள் காட்டில் நீ தோழியருடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது, சேர இளவரசன் வேட்டைக்கு வந்தான். சேர இளவரசனும் நீயும் உண்மையாக ஒருவரையொருவர் காதலித்தீர்கள். ஆவி கலந்து விட்டீர்கள். இருந்தாலும் நீ ஏற்றத்தாழ்வை எடுத்துரைத்து மறுத்தாய். சேர மகன் உன்னையே திருமணம் செய்து கொள்வதாக உறுதி கூறினான். அதன் பிறகு நீ நாணந்தவிர்ந்து அவனைக் கூடி நின்றாய். இருவரும் ஆரத்தழுவி இதழ்பருகிக் கொண்டிருக்கும் வேளையில் நெட்டைக் குரங்கன் பார்த்து விட்டான். அவனைத் தேடிக் கொண்டுவந்த மாமன்மகன் மாடனும் பார்த்துவிட்டான்.ஆவிக் கலப்பின் அமுத சுகந்தனிலே
மேவியங்கு மூடி இருந்த விழிநான்கு
ஆங்கவற்றைக் கண்டமையால் ஆவியில் தீப்பற்றி
மாடனும் குரங்கனும் ஆத்திரத்தோடு ஓடிவந்து இவவரசனை வாளால் வெட்டினார்கள். முதுகில் வாள் பாய்ந்ததும் துள்ளி எழுந்த மன்னர் மகன் இரண்டு வீச்சில் அவர்கள் இருவரையும் வெட்டி வீழ்த்தினான். ஆக மூவரும் அக்கணமே பிணமாய் விழுந்தார்கள்.
நீ மன்னர் மகனை வாரியெடுத்து மடியில் வைத்துக் கொண்டு புலம்பினாய், மறுபிறவியில் உன்னுடன் கலந்து வாழ்வதாக உறுதி கூறி உயிர் விட்டான் சேர இளவரசன். அவன் இப்போது ஓர் மானிடனாய்த் தோன்றியுள்ளான். உன்னை அடைவான் என்றார் முனிவர்.
இவ்வாறு முனிவர் கூறியதைக் கேட்டுக் குயில் கேட்கிறது! சாமீ, குயிலாக இருக்கும் நானும், மானிடராக இருக்கும் அவரும் எப்படி வாழ்க்கை நடத்துவது? அதற்கு முனிவர் சொல்வார்:
இந்தப் பிறவியிலும் நீ ஓர் வேடர் மகளாகத்தான் பிறந்தாய். ஆனால் பேயாய் அலைகின்ற மாடனும் குரங்கனும் உன்னைக் கண்டு கொண்டார்கள். அதனால் மாயம் செய்து உன்னைக் குயிலாக்கி, பின்தொடர்ந்து திரிகின்றார்கள். அவர்கள், செய்யும் மாயத்தால், உன் காதலர் உன்மேல் ஐயுறுவார். ஆனால் பின்னால் நடப்பதெலாம் நீ பிறகு தெரிந்து கொள்வாய். எனக்கு ஜபம் செய்யும் நேரமாகி விட்டது என்று கூறி அவசரமாக முனிவர் போய்விட்டார்.
இதுதான் உண்மை. என்னை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் விருப்பம் என்று கூறிப் பாவலரின் கையில் வந்து விழுகிறது குயில், மோக வெறி மூளப் பாவலர் அந்தக் குயிலை முத்தமிடுகிறார். அது தெய்வ அழகுமிக்க பெண்ணாக மாறிவிடுகிறது.
கவிதைக் கனிபிழிந்து
பண் கூத் தெனும் இவற்றின்
சாரமெலாம் ஏற்றி
அதனோடே
இன்னமுதைத் தான் கலந்து
காதல் வெயிலிலே
காயவைத்த கட்டியினால்
என்று களிகொண்டு அவளைக் கண்டு தழுவி முத்தமிட்டு முத்தமிட்டு மோகப் பெருமயக்கில் சித்த மயங்கிச் சில போதிருக்கையிலே பாவை, சோலையெல்லாம் மறைந்து விடுகிறது. கனவு கலைந்து, தன் அறையில் புத்தகங்களுக்கு மத்தியில் இருப்பதை யுணர்கிறார் பாவலர்.
சோலை குயில் காதல் சொன்னகதை யத்தனையும்
மாலை யழகின் மயக்கத்தால் உள்ளத்தே
தோன்றிய தோர் கற்பனையின்
இவ்வாறு கதையை முடித்த பாரதியார் அதை வெறுங் கற்பனையாக விட்டுவிட விரும்பாமல்,
ஆன்ற தமிழ்ப் புலவீர் கற்பனையே யானாலும்
வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க யாதானும்
குயில் தன் முன்பிறப்பு அறிதல், இங்கே மெய்யுணர்தல் என்ற தலைப்பில் கூறப்பட்டது.
இந்த முன்பிறப்புக் கதை குயில் தான் நடத்திய மூன்று காதல் நாடகங்களுக்குச் சமாதானமாகச் சொன்னது என்று கூறலாம்.
தன்னை நாடிவந்த பாவலனிடம் காதல்மொழி பேசிய குயில், குரங்கிடமும், மாட்டிடமும் தான் காதல் கொண்டிருப்பதாகவே பாடுகிறது.
தன் மாயப்பாட்டாலும், பேச்சாலும் அவற்றின் காதல் உணர்வுகளைத் துாண்டி விட்டுத் தன்னைக் காதலிக்கும்படி செய்கிறது. தன் அற்புதமான பாட்டுத் திறத்தால், அது தன்னைக் கேட்பாரை மோகவெறி கொள்ளச் செய்யும் ஆற்றல் பெற்றதாக அமைகிறது.
குயிலின் பாட்டில் பாவலன் தன்வயமிழந்ததைக் கூறுவது-தன்னை மறந்து பாட்டோடு பாட்டாகத்தான் கலந்து நின்றதைக் கூறுவது- மிக அருமையாய் அமைந்துள்ளது.
பாட்டு முடியும்வரை பாரறியேன் விண்ணறியேன்
கோட்டுப் பெருமரங்கள் கூடிநின்ற காவறியேன்
தன்னை யறியேன் தனைப்போல் எருதறியேன்
பொன்னை நிகர்த்த குரல் பொங்கிவரும் இன்பமொன்றே
காட்டு நெடுவானம் கடலெல்லாம் விந்தையெனில்
பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசையில்லையடா..!
பூதங்கள் ஒத்துப் புதுமைதரல் விந்தையெனில்
நாதங்கள் சேரும் நயத்தினுக்கு நேராமோ!
ஆசை தருங் கோடி யதிசயங்கள் கண்டதிலே
ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ!
இப்படி ஒர் அற்புதமான பாட்டுத் திறத்தைப் பெற்றிருந்த குயில், பாவலனையும் காதலித்து மாட்டையும் குரங்கையும் காதலித்து, இவர்கள் மூவருமே தன்மேல் காதல் பித்தேறித் திரியச் செய்கிறது. இந்தக் குயிலை நாணமிலாப் பொய்க் குயில் என்று கூறிய பாரதியார் இதன் முற்பிறப்பை முனிவர் வாயிலாகக் கூறும்போது, மூன்று பேரிடமும் காதல்மொழி பேச நேர்ந்ததற்கு-முன்பிறப்பினால் ஏற்பட்ட விதியே காரணம் என்று கூறித்தான் முற்பிறப்பு வரலாற்றைத் தொடங்குகிறார். -
இப்பிறப்புக் குயில் தன்னைக் கண்ட ஒவ்வொருவரையும் காதலிக்கிறது. அவர்களைத் தன் மீது பெருமோகம் கொள்ளச் செய்கிறது. இந்த நாணமிலாச் செயல் ஒன்றே செய்கிறது. முற்பிறப்புக் குயில்-அதாவது சின்னக் குயிலி-மோசம் நாசம் நீலிவேசம் என்றவற்றிலே திறனுடையதாக விளங்குகிறது.
முதலில் மாமன் மகனைத் திருமணம் செய்துகொள்ள ஒப்புகிறது.
மாலையிட வாக்களித்தாய்
மையலினால் இல்லை; அவன்
சால வருந்தல்
இது உண்மையான காதலினால் கொடுத்த வாக்கல்ல; மாடன் மீது கொண்ட இரக்கத்தால் என்கிறார். தந்தை சின்னக் குயிலியை நெட்டைக் குரங்கனுக்குக் கட்டிக் கொடுக்க முடிவு செய்கிறான். இதை யறிந்த மாடன் குயிலியிடம் வந்து சினம் பேசுகிறான். அப்போது குயிலி,
கட்டாயமாக நான் நெட்டைக் குரங்கனுக்கு மாலையிட்டாலும், மூன்று மாதத்தில் பேதம் விளைவித்து வந்து விடுவேன்; மீண்டும் உனக்கே மனைவியாக வருவேன் என்று சொல்கிறது. இதுவும் காதலினால் இல்லை; இரக்கத்தால் என்கிறார்.
கடைசியில் சேர இளவரசனையே காதலிக்கிறாள் சின்னக் குயிலி.
மாடனிடம் காதல் இல்லாமலே மணம் புரியச் சம்மதிக்கிறாள். நெட்டைக் குரங்கனைக் கட்டிக் கொண்டு, அவனோடு சிலநாள் வாழ்ந்துவிட்டு மீண்டும் தான் காதலிக்காத மாடனிடம் வந்து விடுவதாகக் கூறுகிறாள். கடைசியில் இளவரசனைக் கண்டதும் காதல் கொண்டு அவனைக் கூடுகிறாள். இங்கே சின்னக் குயிலியின் செயல்-காதல்-எந்தப் பண்பாட்டின் அடிப்படை என்பது விளங்கவில்லை.
மாலையழகின் மயக்கத்தால் உள்ளத்தே
தோன்றியதோர் கற்பனையின் சூழ்ச்சி
என்று இந்தக் கனவுக் கதையைக் கூறும் பாரதியார், இந்தக் காதல் கதையின் மூலம் எதைக் கூற வருகிறார். உண்மையான காதலையா? தெய்வீகக் காதல் என்பது இப்படித்தான் இருக்குமா? எல்லாம் புரியாத புதிராய் இருக்கிறது. மனம் போன போக்கில் கதையைக் கொண்டு சென்றிருக்கிறார்.
கண்டது காட்சி; கொண்டது கோலம் என்று சொல்லுவார்களே அந்தப் போக்கில் அமைந்துள்ளது குயிலின் காதல் கதை. அதன் முற்பிறப்புக் கதையோ இன்னும் மோசமாக இருக்கிறது. இப்படித்தான் வாழவேண்டும் என்று சொல்லுவதை விட்டு, எப்படியும் வாழலாம் என்று எடுத்துக் காட்டுவதாகவே குயிலின் காதல் அமைகிறது. அழகான வருணனைகள், கடவுள் படைப்பு விளக்கம், காதல் பற்றிய கருத்தோவியங்கள், இசையின் உயர்வு, ஒட்டமான கவிதை இத்தனையும் சேர்த்து ஒரு மாயக் குயிலைப் படைத்துள்ளார் பாரதியார். இந்த மாயக் குயிலின் கதைக்கு, வேதாந்தப் பொருள்தான் கூற வேண்டியிருக்கிறதே தவிர, சித்தாந்தப் பொருள் கூற முடியவில்லை.
மாயக் கதையின் பொருளறிய மீண்டும் ஒரு மாயா லோகத்திற்குச் செல்ல வேண்டிய நிலையில் கதை முடிவு அமைந்துள்ளது.
குயிலின் மெய்யுணர்தல் முன்பிறப்பு வரலாறு அறிதல் என்ற நிலையில் அமைந்துள்ளது. சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் மெய்யுணர்தல் நாட்டு நிலையுணர்தல் என்ற நிலையில் அமைந்துள்ளது. இங்கே ஓர் அற்புதமான காட்சியைப் படைக்கிறார் பாரதிதாசன்.
இங்கிலாந்து தேசத்தான் பேசி முடிந்தவுடன், இடையில் காதல் உணர்வு தோன்றுகிறது. குப்பன் வேண்டுகோளுக் கிணங்கி வஞ்சி முத்தமிட நெருங்குகிறாள். முத்தமிடப் போகையிலே ஐயையோ! ஐயையோ! என்ற அவலமொழி காதில் விழுந்தது! முத்தம் கலைந்தது. ஐயையோவைக் தொடர்ந்து கவனிக்கிறார்கள்!
“இதோ ஒரு நொடியில் சஞ்சீவி மலையை வேரோடு பெயர்த்து எடுத்து வருகிறேன்”
இந்தச் சொற்கள் அவர்கள் காதில் விழுகிறது. தாங்கள் இருக்கும் சஞ்சீவி மலையை யாரோ பெயர்த்தெடுக்கப் போகிறார்கள் என்றவுடனே குப்பன் நடுங்குகிறான். தங்கள் இருவரின் கதி என்ன ஆகும் என்று அஞ்சுகிறான்.
அவன் நடுக்கத்தைக் கண்டு வஞ்சி தெம்பூட்டுகிறாள். “இவ்வளவு பெரிய மலையை யாரால் பெயர்க்க முடியும் இது பொய்! நம்பாதீர்கள்” என்கிறாள்.
அவன் அச்சம் மாறுவதற்கு முன் தொடர்ந்து சொற்கள் காதில் விழுகின்றன. “இராமன் அருள் உண்டு. ஏன் தயங்குகிறாய்? உன்னால் வானுயரம் வளரமுடியுமே! தயங்காதே! ஓடிப்போய் மலையை எடுத்துவா”! என்று கட்டளையிடும் பேச்சுக் கேட்கிறது.
இதைக் கேட்டுக் குப்பன் பெரிதும் நடுங்குகிறான். மலை அசைவதுபோல் தோன்றுகிறது. எங்கோ பெயர்ந்து நகருவது போல் இருக்கிறது. உடல் வெடவெடவென்று நடுங்க அவன் வஞ்சியைப் பார்த்து
“இப்போது நாம் என்ன செய்வோம்? யாரோ இராமன் அருள் பெற்றவனாம். இவ்வளவு பெரிய மலையைப் பஞ்சு மூட்டையைத் தூக்குவது போல் தூக்குகின்றான். இனி இறங்கிச் சென்றி தப்பித்திடவும் நேரம் இல்லையே. பேசிப் பேசிப் பொழுதைக் கழித்து விட்டாயே! இதோ முத்தம் தருகிறேன் என்று சொல்லிச் சொல்லி நேரத்தைக் கடத்தி விட்டாயே! இப்போது மலையைத் தூக்கிச் சென்று கடலில் போடப் போகிறானே! நாம் எப்படித் தப்புவோம்! இனிப் பிழைக்க மாட்டோமே!’ என்று கலங்கித் தவிக்கிறான் குப்பன்.
குப்பன் எதையும் எளிதில் நம்பிவிடும் இயல்புள்ளவனாய் இருக்கிறான். எளிதில் உணர்ச்சி வசப்படுபவனாய் இருக்கிறான். வஞ்சியோ, எதையும் அமைதியாக ஆராய்ந்து பார்த்து, முடிவு செய்பவளாக விளங்குகிறாள். அவன் குப்பனுக்குத் தெளிவு மொழி கூறுகிறாள்.
ஏன் வீணாகப் பயப்படுகிறீர்கள்? இந்த உலகம் தோன்றிய நாள் தொட்டு மலையைத் தூக்கும் மனிதன் பிறந்ததில்லை. இனிப் பிறக்கவும் முடியாது. ஒரு மனிதன் எப்படி பூமிக்கும் வானத்துக்குமாக வளர முடியும்? எவனோ சொல்லுகிறான் என்றால் அதை நீங்கள் ஏன் நம்பவேண்டும்? வஞ்சி பேசிக் கொண்டிருக்கும் போதே குரல் தொடர்கிறது.
இந்நேரம் போயிருப்பார்!
இந்நேரம் பேர்த்தெடுப்பார்!
இந்நேரம் மேகத்தில்
ஏறிப் பறந்திடுவார்!
உஸ் என்று கேட்குதுபார்
ஒர்சத் தம் வானத்தில்
விஸ்வரூபம் கொண்டு
குப்பன் மலை பெயர்ந்து பறப்பதாகவே எண்ணுகிறான்.
அறிவுள்ள வஞ்சி தொடர்ந்து அந்தப் பேச்சைக் கவனிக்குமாறு கூறுகிறாள். குரல் தொடர்கிறது.
இப்படியாக அனுமார் சஞ்சீவி மலையை எடுத்துச் சென்று இலங்கையில் வைத்தார். சஞ்சீவி மருந்தின் சக்தியால் ஏற்கெனவே செத்துக் கிடந்த இராமனும் இலட்சுமணனும் உயிர் பெற்று எழுந்தார்கள். மீண்டும் அனுமார் மலையைத் தூக்கிக் கொண்டு போய் இருந்த இடத்தில் வைத்துவிட்டு வந்தார். மறுபடி ஒரு நிமிடத்தில் திரும்பிவந்து செத்துப் பிழைத்த இராமன் காலில் விழுந்து வணங்கினார். “எனக்குப்பயம்தான். இருந்தாலும் ஒரு நம்பிக்கை -ஒர் ஆபத்தும் இராதென்று நினைத்தேன்-நல்லவேளை என் நம்பிக்கை பலித்தது-தப்பித்தோம்” என்று மூச்சு விடுகிறான் குப்பன்.
வஞ்சி கேட்கிறாள்: “அன்பரே, நாம் இந்த மலைக்கு வந்தது முதல் இந்த நேரம் வரை நடந்த ஆச்சரியமான நிகழ்ச்சி என்ன?”
“என்னடி, இது தெரியவில்லையா? இந்த மலையில் நாம் இருக்கும்போதே அந்த அனுமார் வந்ததும், மலையைப் பெயர்த்து இலங்கையில வைத்ததும், திரும்ப எடுத்துவந்து பழைய இடத்தில் வைத்ததும் நினைத்துப் பார்த்தால், ஆடாமல் அசையாமல் மலையைப் பெயர்த்து சற்றுக் கூடக் குலுங்காமல் கண்ணாடிப் பாத்திரத்தைக் கல் தரையில் வைத்ததுபோல் அவ்வளவு மெதுவாக வைத்தாரே அந்த இடம்தான் ஆச்சரியம்! தலைமாட்டிக்கொள்ளாமல் கெட்டிக்காரத் தனமாகக் குனிந்து வைத்தாரே அது பேராச்சசியம்!
குப்பனுக்கு வஞ்சி பதில் சொல்லத் தொடங்குமுன் மீண்டும் குரல் ஒலிக்கிறது.
இதுவரை இந்தக் கதையை நிறுத்துகின்றேன். நாளை மீண்டும் தொடர்ந்து சொல்லுகின்றேன். இந்தச் சத்திய ராமாயணக் கதையைக் கேட்டவர்கள் சொன்னவர்கள் எல்லாரும் இந்த உலகத்தில் உள்ள செல்வ போகம் அனைத்தும் அனுபவித்து, வைகுண்டம் போய் அங்குள்ள தேவலோக இன்பங்களையும் குறையாது அனுபவிப்பார்கள்! ஜானகி காந்தஸ்மரனே! ஜயஜயராம்!
மானோ தென்ன என்றான் வையம் அறியாக் குப்பன்
முன்புதான் உங்களுக்கு முத்தம் கொடுக்கையிலே
சொன்ன ஐயையோ தொடங்கி இதுவரைக்கும்
ஏமாந்தார் காசுக் கெசமானன் என்றுரைக்கும்
பாகவதன் சொன்னான் பலபேரைக் கூட்டியே,
ஆகியதும் இத்த அரிய உழைப்புக்குப்
இதில் வியப்பதற் கொன்றும் இல்லை. இதோ இந்தக் காட்சி தரும் மூலிகையை விழுங்கிப் பருங்கள் என்கிறாள். ஒரு மாளிகையில் பாகவதர் ஒருவர் இராமாயணம் படிப்பதும், மக்கள் இராமாயணம் கேட்டுவிட்டுத் திரும்புவதும், பாகவதர் தமக்குக் கிடைத்த பணத்தைத் தட்டிப் பார்ப்பதும் மகிழ்ச்சி கொள்வதும் ஆகிய காட்சிகள் தெரிகின்றன.
வஞ்சி ஒரு பெரிய சொற்பொழிவு நடத்துகிறாள். மூடத் தனங்களை வளர்க்கும் இராமாயணம் போன்ற கதைகளைப் பற்றியும் பகுத்தறிவு கொள்ள வேண்டியதைப் பற்றியும் பேசுகின்றாள்.
ராமாயணம் என்ற நலிவு தருங்கதை
என்று கூறிக் குப்பன் திருந்துகின்றான். மூடப்பழக்கத்தை ஒடச் செய்ய உறுதி யெடுக்கின்றான். பிறகு இருவரும் சாரலுக்கு இறங்கிவந்து இன்பமாகக் கூடுகிறார்கள்.
சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் மெய்யுணர்தல் பகுதி இவ்வாறு குப்பன் பகுத்தறிவு பெறும் காட்சியாக அமைகிறது.