உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

வும் டில்லியில் கோலாகலம், இறுதியில் வந்தவரும் பண்டிதரும் சேர்ந்து உலகுக்கு அறிக்கை வெளியிடுவது. இது ‘விழா’ முறையாக இருந்து வருகிறது! புல்கானினுக்கும் இது தான், டல்லசுக்கும் இதுவேதான்!! நேபாள மன்னர் இந்தச் ‘சுவை’யினை ரசித்துக்கொண்டிருக்கிறார், புல்கானின் வந்துபோன பிறகு, சவுதி அரேபியா மன்னர், இந்தச் சுவைகளைப் பெறப்போகிறார். சவுதி அரேபிய மன்னர், உலகிலே உள்ள பெரும் பணக்காரரில் ஒருவர்! அவருக்குச் சொந்தமாக உள்ள எண்ணெய்க் கிணறுகள் மூலமாக மட்டும் ஆண்டு ஒன்றுக்கு 200 கோடி ரூபாய் வருமானம் வருகிறதாம். புல்கானின் ‘விஜயம்’ செய்து, அதன் பயனாக இங்கு ‘சமதர்ம’ மணம் நமக்கெல்லாம் மகிழ்வூட்டியதும், சவுதி அரேபிய மன்னர் வருவதும், அவருடைய ‘விஜயம்’ ‘முதலாளித்துவ’ மோகத்தை தேவைப்படுவோருக்கு ஊட்டுவதுமாக எவ்வளவு நேர்த்தியான முறையிலே அமைந்திருக்கிறது பாரீர், பாரதப் பண்பாடு. எதற்கும் இடம் உண்டு, எதுவும் எதனுடனும் இருக்கும், இது இன்னாருக்கு உரியது என்று இராது.

பர்ணசாலை என்றால், அங்கு, பஞ்சேந்திரியங்களைக் கட்டுப்படுத்தவும், மூவாசையைத் துறந்திடவும் மூலத்தை உணர்ந்திடவும், முறையும் நெறியும் கிடைக்கும் இடம் என்றுதான் கூறுவர்—பாரதப் பண்பாடு அப்படி அல்ல!—இங்கு பர்ண சாலையில், துஷ்யந்தன் சகுந்தலையை அடைகிறான்! நல்லது மட்டுமே சொல்கிறேன், கல்லான கதையை விட்டுவிடுகிறேன். அந்தநாள் தொட்டு இந்த நாள்வரை எது செயல் முறை, எதைக் கொள்ளல் வேண்டும், எதைத் தள்ளிடவேண்டும், என்பதைப் பற்றி அதிகமான அளவு அக்கரை காட்டாமல், கிடைப்பதை இருப்பதுடன் சேர்த்துக்கொள்வதும், ‘பத்தோடு பதினொன்று, அத்தோடு இதுவொன்று’ என்று திருப்தி அடைவதுமாகவே காலந்தள்ளி வந்திருக்கிறார்கள்; இதைப் பெருமைக்குரியதாகவும் போற்றிப் புகழ்கிறார்கள்.

பிரிட்டிஷ் —அமெரிக்க முதலாளிகள் திட்ட வட்டமாகக் கூறுகிறார்கள், ‘இந்தியா’ தொழிற்கூடமாவதற்கான முயற்சிக்குப் பணம் பெரும் அளவுக்கு நாங்கள் போடத்தயாராக இருக்கிறோம். ஆனால், தொழில்களைத் தேசீய உடைமை ஆக்குவது என்ற திட்டமோ, அன்னிய நாட்டாருக்கு இங்கு பொருளாதாரத் துறையிலே ஆதிக்கம் இருத்தல் ஆகாது என்ற திட்டமோ கிடையாது என்று எங்களுக்கு உறுதி அளிக்கப்பட வேண்டும்.

தொழிலில் கிடைக்கும் இலாபத்தை எங்கள் நாட்டுக்குக் கொண்டு செல்வதற்குத் தங்கு தடை இருக்கக்கூடாது—என்று கேட்கிறார்கள்.