உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

தன்னை நோக்கிப் பாய்ந்துவரும் எதிர்ப்பை முறியடிக்க முனையும்.

அடிப்படை பிரச்சினை, ‘ஏக இந்தியா’ எனும் பொறி உடைக்கப்பட்டாகவேண்டும்; இந்தியப் பேரரசு எனும் திட்டம் தகர்க்கப்பட்டாக வேண்டும் என்பதுதான் என்பதை மறத்தல் ஆகாது.

இன்று. ‘ஏக இந்தியா’—‘இந்தியப் பேரரசு’— எனும் ஆட்சிமுறைத் திட்டம், ஏட்டளவிலோ, பேச்சளவிலோ, விவாத அரங்கிலோ அல்ல, சட்டமாக்கப்பட்டு, நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த ‘நடைமுறை’ நிலை குலையாதிருக்க, நாளும் நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளப்பட்டு வருகின்றன.

புன்னகையுடன் நல்லுரை கூறுவோராகச் சில வேளைகளிலும், புருவத்தை நெரித்தபடி மிரட்டும் பேச்சினராகச் சில வேளைகளிலும், ஏக இந்தியாக்கள் உள்ளனர். அவர்களின் ஒரே எண்ணம், தன்னாட்சி தனி அரசு என்ற உரிமை உணர்ச்சி, விடுதலை வேட்கை, எழாமல், கருக்கிவிடவேண்டும் என்பதுதான்.

இந்தியப் பேரரசுக்குக் காவலர்களாக உள்ளவர்கள், இதனைத்தான் நோக்கமாகக்கொண்டு, ‘தேசியம்’ இருக்கின்றனர்—தேனில் குழைத்த நச்சுப்பொடி தருகின்றனர்.

தமிழ்நாடா? திராவிடநாடா? என்று விவாதம் நடத்திக் கொண்டு அவர்கள் இருக்கட்டும்...அதுதான் நமக்கு இலாபம்—அப்படி ஒரு சச்சரவு உருவானால்தான், நம்மீது பாய, நேரமோ, நினைப்போ, வலிவோ, வாய்ப்போ, கிடைக்காது போகும், என்பது, ‘ஏகஇந்தியா’க்களின் எண்ணம்.

அந்த எண்ணம் காரணமாகத்தான், எப்போது திராவிட நாடா? தமிழ்நாடா? என்ற பேச்சு, விவாதமாக்கப்பட்டாலும், தூபமிட, தூக்கிவிட, ஏகஇந்தியாக்கள் துடியாய்த் துடிக்கிறார்கள்; துந்துபி முழக்குகிறார்கள்.

ஏக இந்தியாக்களைப் பொறுத்தவரையில், தமிழ் நாடு, திராவிடநாடு, என்ற திட்டம் எந்த வகையினதாக, அளவினதாக, முறையினதாக இருப்பினும் கூடாது என்பதுதான், எண்ணம். சில வேளைகளிலே ‘தமிழ் .