உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதி அறுபத்தாறு/கோவிந்தசாமி புகழ்

விக்கிமூலம் இலிருந்து

கோவிந்த ஸ்வாமி புகழ்

மாங்கொட்டைச் சாமி புகழ் சிறிது சொன்னோம்;
வண்மை திகழ் கோவிந்த ஞானி, பார்மேல்

யாங் கற்ற கல்வி யெலாம் பலிக்கச் செய்தான்,
எம் பெருமான் பெருமையை யிங்கிசைக்கக் கேளீர்!
தீங் கற்ற குண முடையான், புதுவை யூரார்
செய்த பெருந் தவத்தாலே யுதித்த தேவன்,
பாங் குற்ற் மாங் கொட்டைச் சாமி போலே
பயிலு மதி வர்ணாசிரமத்தே நிற்போன், (37)

அன்பினால் முக்தியென்றான் புத்தனந் நாள்;
அதனை யிந்நாட் கோவிந்த ஸாமி செய்தான்;
துன்ப முறு முயிர்க் கெல்லாந் தாயைப் போலே
சுரக்கு மரு ளுடைய பிரான் துணிந்த யோகி;
அன்பினுக்குக் கடலையுந் தான் விழுங்க வல்லான்,
அன்பினையே தெய்வ மென்பானன்பே யாவான்;
மன் பதைகள் யாவு மிங்கே தெய்வ மென்ற
மதியுடையான், கவலை யெனு மயக்கந் தீர்ந்தான்; (38)

பொன்னடியா லென் மனையைப் புனித மாக்கப்
போந் தா னிம் முனி யொரு நாள் ; இறந்த வெந்தை
தன்னுருவங் காட்டினான் ; பின்ன ரென்னைத்
தரணிமிசைப் பெற்றவளின் வடிவ முற்றான்;
அன்னவன் மா யோகி யென்றும் பரமஞானத்
தனுபூதி யுடைய னென்று மறிந்து கொண்டேன்;
மன்னவனைக் குரு வென நான் சரணடைந்தேன்;
மரண பய நீங்கினேன்; வலிமை பெற்றேன். (39)