கடிதம்: 72
வாழ்க தமிழகம்!
வருக திராவிடம்!
பாரதத்தில் தமிழ்நாடு.
தம்பி!
தமிழகம் திருநாள் கொண்டாடுகிறது—தாயகம் விழாக்கோலம் பூண்டிருக்கிறது—திருநாட்டைப் பெற்றோம், இனி இதன் ஏற்றம் வளரத்தக்க வகையிலே பணிபுரிதலே நமது தலையாய கடன் என்று, தமிழ்ப் பெருங்குடி மக்களெல்லாம் உறுதிகொண்டிடும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது - கொடியும், படையும், முரசும் அரசின் முறையும் வேறு வேறு எனினும், எல்லா முற்போக்குக் கட்சிகளும், தாயகத்தின் திருவும் திறனும் செழித்திடப் பணியாற்ற வேண்டும் என்பதிலே, முனைந்து நிற்கின்றன—புதிய தமிழகம் கண்டோம், இது புதியதோர் உலகிலே உரிய இடம் பெற்றுத் திகழ்ந்திட வேண்டும்—நாம் அனைவரும் அதற்கான வழியிலே தொண்டாற்றும் திறன் பெறல் வேண்டும் என்ற ஆர்வம் மலர்ந்திருக்கிறது.
நவம்பர் திங்கள் முதல் நாள், புதிய தமிழகம் உருவாகிறது. ஓர் அரை நூற்றாண்டுக் காலமாக, அரசியல் தெளிவும் நாட்டுப் பற்றும் கொண்டோரனைவரும், நடத்தி வந்த