99
வித்திடுகிறோம் என்றனர் ஆட்சியினர், முளை காணத்துடித்தனர் தாய்மார்கள்; கதிர் ஒருமுழம் காணீர்! என்றனர் நாட்டின் காவலர், களிநடமிடுவோம் என்றனர் மாதர்கள்; பசிப்பிணி ஒழிந்திடும், வறுமை ஒழிந்திடும் என்று கருதினர். ஆனால், மேலும் மேலும் அறுவடை நடந்தது; நிரம்பி நிரம்பி வழிந்தது களஞ்சியம், ஏழை எளியோர் குடிலில் அல்ல, எத்தர்கள் கட்டிய சூதுக்கோட்டைகளில். வயலின் பசுமை, தொழிலின் மாண்பு என்பவை பொன்னாகிப் பொருளாகிப் பருகுவனவாகிப் பூசுவனவாகி உடுப்பனவாகி உல்லாசமுமாகி, உப்பரிகை வாழ்வோரிடம் சென்று சிறைப் பட்டிடவே, ஏழையர் வறியராயினர், ஏக்கமே அவர்கள் கண்டு பெற்றது. இந்நிலை இவராட்சியின்போது ஏற்பட்டுவிட்டதனை எத்தனை பக்குவமாகச் சுட்டிக்காட்டுகின்றனர் தாய்மார்கள், எமக்கொரு வரம்தாரும்! உயிர் இருந்திட வழி கூறும்!! என்று.
எவரும் மலைத்து நிற்பர் இந்நாட்டில் இந்தப் பதினேழு ஆண்டுகளாக கொட்டப்பட்ட பணத்தின் அளவினை அறிந்திடும்போது — எனினும், அத்தனையும் தமக்குப் பயன்படாமல் எங்கெங்கோ சென்றுவிட்டதை உணரும்போது, உள்ளம் நொந்திடத்தானே செய்யும்? அந்நிலை பெற்றவரெனின் அரிவையர், இடித்துரைப்போர் பலர் உளர், நாம் இவர் இதயம் தொட்டிடும் இனிய முறையில் நாடு உள்ள நிலையைக் கூறுவோம் என்று கருதி—மெல்லியலாரன்றோ மாதர் – நோன்புக் கயிறு கட்டிவிட்டு, லால்பகதூரிடம் கேட்டிருக்கிறார்கள்,
விலைகளைக் கட்டுப்படுத்துக
கள்ளச் சந்தையை ஒழித்திடுக
கலப்படத்தை ஒழித்திடுக!
என்று. ஆண்டு பதினேழு ஆகியும் இந்த மூன்று அடிப்படைகளையும் செய்திடக்காணோமே, நாங்கள் எங்ஙனம் குடும்பம் நடாத்துவது? உண்ணும் பொருளில் மண்கலந்து உள்ளதை மறைத்து விலை ஏற்றி, அளப்பதில் நிறுப்பதில் அநியாயம் செய்து எமை அலைக்கழிக்கின்றார் அறமறியார், அரசுமுறை அறிந்தவரே! ஏழையின் துயர் ஈதெனத் தெரிந்தவரே! விலைகளைக் கட்டுப்படுத்தி, கள்ளச் சந்தையை அழித்து, கலப்படத்தை ஒழித்து எமைக் காத்திடுவீர் என்று கேட்டனர் அக்காரிகையர்.