உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

155

களுடன் கூட்டம் முடித்துக்கொண்டு வருகிறபோது, ‘சலசல’வென்ற ஒலி சூழ்ந்து கேட்கிறது! கதிரவனின் பொன்னிறக் கதிர் கிளம்பியவுடன், இயற்கையின் கோலம் காண்கிறேன்; உண்மையிலேயே இயற்கை கொஞ்சுகிறது. துரைத்தனத்தாரின் அலட்சியப்போக்கின் காரணமாகச் சிற்சில இடங்களில் ‘உடைப்புகளும்’ ‘சேதங்களும்’ ஏற்பட்டுவிட்டன; பட்டிகள் பலவற்றிலே மக்கள் அல்லற்பட நேரிட்டது; எனினும் மொத்தத்திலே, இயற்கை எழிலுடன் காணப்படுகிறது! இந்தப் பேருண்மை தெரியாமலா, ‘மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!’ என்று மனம் கனிந்து பாடினார் இளங்கோ அடிகள்! வெண்ணிற மேகங்கள், உலவிய வண்ணம் உள்ளன—ஆடலழகிகள் நீலநிறத் திரைகொண்ட அரங்கிலே அன்னமென ஊர்ந்தும், அழகு மயிலென நடந்தும் காட்டும் பான்மைபோல! சூல் கொண்ட மங்கை புது எழில் பெறுதல்போல, மழை முத்துக்களைக் கருவிற்கொண்டு கருநிறம் பெறுகின்றன—காணக் காட்சியாகின்றன—பிறகு, முறையும் நெறியும் மறந்தோரின் பிடியிலே சிக்கிவிட்ட நாட்டவருக்கு நாமேனும் இதம் அளித்திடல் வேண்டுமே என்ற நோக்கு கொண்டதுபோல, இயற்கை தன் அன்பைச் சொரிந்திடக் காண்கிறோம்.

வாரி வாரி இறைக்கிறார்கள் தம்பி, பணத்தை, கோடிக்கணக்கில். கிராமப்புனருத்தாரணம் என்கிறார்கள், தேசீய விஸ்தரிப்புத் திட்டம் என்கிறார்கள், சீரமைப்பு என்று செப்புகிறார்கள், சமாஜப் பணி, மாணவர் சேவை, என்று ஏதேதோ பேசுகின்றனர்—எனினும் இயற்கை மழை பொழிந்தானதும், தம்பி, பல கிராமங்கள் தீவுகளாகிவிடக் காண்கிறோம்—பாதைகள் வாய்க்கால்களாகி விடுகின்றன—கிராமங்கள் சகதிக்காடாகி விடுகின்றன! அந்த இலட்சணத்திலே இருக்கிறது, துரைத்தனம் அமைத்துள்ள பாதைத் தொடர்புகள்! பாலங்கள் ஓலமிடுகின்றன! மழை நீர் ஒழுங்காகச் செல்வதற்கான வழிகால்கள் சரியாக அமைக்காததால், ஆங்காங்கு குப்பை கூள மேடுகள் கிளம்புகின்றன! இத்தனை கேடுபாடுகளையும் நாம் மறந்திடச் செய்யும் விதத்தில், இயற்கை கொஞ்சுகிறது-இன்ப வாழ்வுக்கான வழி அளித்திருக்கிறேன்—வளம் கொழித்திட வகை தந்துவிட்டேன்—மகிழ்ச்சிப் பெருக்கெடுத்திடவேண்டும் என்பதற்காக மாமழை பெய்வித்துள்ளேன், மாந்தரே! காண்மின்! என்மீது குறை ஏதுமில்லை அறிமின்! வாழ்வில் இன்பம் பெறுவதற்குத் தடையாக நான் இல்லை என்பதை உணருமின்! உமக்கு உள்ள கொற்றம், குடிமக்களின் நல்வாழ்வு காணும் குறிக்கோள் கொண்டதாக அமைந்தால், உமக்கு வாழ்வில் இடர் ஏதும் வருவதற்கில்லை.