133
வடக்கே நடைபெறும் கும்பமேளாக்களின்போது, தம்பி! இந்தச் சாதுக்கூட்டம் கோலாகலமாகப் பவனி வருவதுண்டு. பல்லக்கில் ஏறிடும் சாமி, குதிரை ஏறிடும் சாமி, யானைமீது அம்பாரி அமைத்து அதிலே பவனி வந்திடும் சாமி, உடலை மறைத்திட உடை தேடாது, உள்ளது காண்க என உலவிடும் சாமி, முகாம் அமைத்து முழங்கிடும் சாமி, யாகம் வளர்த்திடும் பெரிய சாமி இவ்விதம் பலர் அரசோச்சுகின்றனர், அந்தக்கும்பமேளாக்களில். உடை அணியா உருவங்களைத் தெரிசிக்க, விழுந்தடித்துக்கொண்டு செல்லும் இலட்சக்கணக்கான பக்தர்களில் சிலர், இடிபட்டு மிதிபட்டுச் செத்தனர் என்றும் செய்தி வந்திருக்கிறது.
உள்ளதில் கெட்டது எதுவோ அது மட்டுமே உன் கண்களில் படுகிறது; உண்மைச் சாதுக்களே இல்லையோ என்று என்னைக் கேட்பர், தம்பி! நான் சொல்லக்கூடியது இதுவே. உண்மைச் சாதுக்கள் மிக மிகக் குறைவு, உடையார் சாதுக்களாக உள்ளோரே மிக அதிகம்; உண்மைச் சாதுவைக் கண்டறிவதும் கடினம் என்று குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சென்ற கிழமைதான் பேசியிருக்கிறார்—திருத்தணியில் என்று நினைக்கிறேன்.
உண்மைச் சாதுவைக் கண்டுபிடிக்கிறோம் என்றே வைத்துக்கொள். அவர்கள், நந்தா கூறிடும் வேலைகளையா மிக முக்கியமானது எனக் கருதுவர். ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்பின் தன்மை, மகிமை ஆகியவற்றிலே மனத்தைச் செலுத்திக்கொண்டு இருக்கும் சாதுக்களிடம் நந்தா, நியாய விலைக்கும் அநியாய விலைக்கும் உள்ள தாரதம்மியத்தைப் பற்றியும், சந்தைக்கும் கள்ளச்சந்தைக்கும் உள்ள தொடர்பு பற்றியும் ஆராய்ந்தறிந்து நல்வழி காட்டுக! என்று கூறினால் என்சொல்வர்! ‘பாலகா! உலக மாயை எனும் இருளில் சிக்கிச் சீரழிகிறாய்! சந்தை என்கிறாய் கள்ளச் சந்தை என்கிறாய்! பொருள் என்கிறாய் விலை என்கிறாய்! இந்த உலகமே சந்தை! கள்ளச் சந்தை! மாயச்சந்தை! பரம்பொருளன்றி மற்றவை பொருளே அல்ல! இதனை அறிந்திட நீ தரவேண்டிய விலை நிராசை! போ! போக போகாதிகளில் ஈடுபடும் சுபாவத்தை மாற்று! இந்திரியச் சேட்டைகளை அடக்கு! இகத்தை மற! பரத்தைத்தேடு! ஓம் தத்சத்!’ என்று கூறுவரேயன்றி, ஒயிலூர் கடைத் தெரு-