உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

ஆகவே, அன்றிருந்தோர் கூறிச் சென்ற அரிய கருத்துக்களையும், இன்றுள்ள நூலோர் தந்திடும் நற்கருத்துக்களையும் அறிந்து. மற்றவர்க்கும் அறிவித்து அதற்கேற்ப, நமது முறைகளை, ஏற்பாடுகளைத் திருத்தி அமைத்துக் கொள்ளவேண்டும். மாக்கோலம் போடக் காண்கிறாயே, உன் மனத்தை வென்றாள்! வெண்குழம்பினைக் கலயத்திட்டு, தரைதனைக் கூட்டித் துப்புரவாக்கி, என்ன வரைவது எனத் தேர்ந்தெடுத்துத் திட்டமிட்டு, கோலம் போட்டிடக் காண்கிறாய்—வெண்குழம்பைக் கீழே கொட்டிவிட்டு நடப்போர் கால்பட்டுப் பட்டு ஏதேனும் ஓர் கோலம் உண்டாகட்டும் என்றா இருந்து விடுகின்றாள் உன் ஏந்திழை! இல்லையே? சமுதாயம் புதுக்கோலம் கொள்ள, நீயும் நானும் இன்னமும் என்ன வண்ணக் குழம்பு தேவை? எத்தகைய வட்டிலில் இடுதல் வேண்டும்? என்பது குறித்தே கூட, ஒரு திட்டவட்டமான எண்ணம் கொண்டிடத் தயக்கப்படுகிறோமே! புத்துலகு சமைத்திட எங்ஙனம் இயலும்?

நமக்கு நெடுங்காலத்துக்குப் பிறகு, அடவி நிலையினின்றும் விடுபட்டு, நாடு கண்ட இனத்தவரெல்லாம் இன்று தத்தமது நாட்டினைப் புதுமைப் பூங்காவாக்கிப் பொலிவுடன் திகழ்கின்றனர். நாமோ, வித்திடும் செயலைத் தானும் முறையாக மேற்கொண்டோமில்லை. சமூக அமைப்பிலும் செயலிலும் நெளியும் கேடுகளைக் கண்டித்திடும் துணிவுடன் நம் பேச்சும் எழுத்தும் உள்ளனவா? இல்லை! ஒரு சிலர் துணிவு பெற்றிடினும், பாய்கின்றனர் அவர்மீது; பாவி! பழிகாரன்! பழைமையை அழிக்கின்றான்! பாபக் கருத்தைப் புகுத்துகின்றான்! நாத்திகம் பேசுகிறான்! வகுப்பு வெறி ஊட்டுகிறான்!! என்றெல்லாம் கதைக்கின்றனர். ஜாதிப் பிடிப்புகளையும் அவைகளுக்கான மூடக் கோட்பாடுகளையும், ‘புதிய நாடுகள்’ என்று நாம் வெகு எளிதாகக் கூறிவிடுகின்ற இடங்களில், எத்தனை காலத்துக்கு முன்பே, எத்துணைத் துணிவுடன் தாக்கினர், தகர்த்தனர் என்பதனை அறியும் போது, வியப்படைகிறோம்.

ஏழையர்க்காக வாதாடினவர்கள், செல்வபுரிக் கோட்டைகள்மீது தாக்குதல் நடாத்தியவர்கள்; மூடநம்பிக்கைகளை முறியடித்தவர்கள்; அங்கெலாம் இருநூறு ஆண்டுகட்குமுன்பே வீரஞ்செறிந்த பாக்களை இயற்றினர்; புரட்சிக் கருத்தினை அளித்தனர்.