178
சிக்கல்களையோ, இந்திக்கு ஆதரவான அணியினர், ஒரு சாதகமான, சமரசச் சூழ்நிலை எழவிடாதபடி தடுக்க, வன்முறைக் கிளர்ச்சிகளையும், அமளிகளையும் தென்னகம் மேற்கொண்டு விட்டிருக்கிறது என்பதைக் காட்டி வாதாடி, சிக்கலை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதனையோ, மொழிப்பிரச்சினைக்குத் தீர்வுகாண, மிக மிகப் பொறுப்புணர்ச்சியும் பொறுமை உணர்ச்சியும் தேவைப்படுகிறது என்பதனையோ உணர மறுத்து மாணவர்கள் இவ்விதமான போக்கினை மேற்கொண்டிருப்பது, தாங்கிக்கொள்ள முடியாத வேதனை தருகிறது. நாவலர் மாணவர்களுக்கு விடுத்த வேண்டுகோள் இன்று மாலை வானொலி மூலம் அறிந்து ஆறுதல் அடைந்தேன். அவர் கேட்டுக்கொண்டது போலவே நானும் மாணவர்களைக் கேட்டுக்கொள்வதாக இதழ்களில் அறிக்கை வெளியிடும் படிக்கேட்டுக்கொண்டேன்.
இங்கு, நான்கு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பத்திரிகை நிருபர்கள் மாநாட்டில், நான் பேசியதில், தொடர்பு—பொருத்தம் நீக்கிச் சில பகுதியை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு, முதலமைச்சர் பக்தவத்சலம் சட்டசபையில் பேசியது குறித்தும், அதற்கு மதியழகனும் தாமும் தக்க விளக்கம் அளித்ததுபற்றியும் நாவலர் கூறக்கேட்டேன்.
என் பேச்சிலே துண்டு துணுக்குகளைத் தூக்கி வைத்துக்கொண்டு, காங்கிரஸ் தலைவர்கள் விளையாடுவது இது முதல் தடவை அல்ல; ஒவ்வொரு தடவை அவர்கள் இந்த விதமான விளையாட்டிலே ஈடுபடும்போதும், “இதோடு தொலைந்தான் பயல்! இதோடு கழகம் ஒழிந்தது!” என்று எக்களிப்புக் கொள்ளுவதை நாடு நன்கு அறியும்.
“உங்கள் அண்ணாதுரை இந்திக்குச் சம்மதம் தெரிவித்துக் கையெழுத்துப் போட்டு விட்டான், தெரியுமா!” என்று முன்பு ஒருமுறை காங்கிரஸ் தலைவர்கள் மேடை தவறாமல் பேசியது எனக்கு நினைவிலிருக்கிறது. சட்ட சபையிலே நான் திட்டவட்டமாக, நான் அவ்விதம் கையெழுத்துப் போட்டேனா? என்று கேட்டபோதுதான், அப்போது அங்கு அமைச்சராக இருந்த சுப்பிரமணியம்,