உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

நிற்பானேன்—கடலையும் கடந்து எல்லா எல்லைக் கோடுகளையும் கலைத்தொழித்துக்கூட ‘உலகு ஒன்று’ என்ற உன்னதம் காணலாம் என்று உள்ளன்புடன் கூறத் தயங்குவதில்லை.

ஆனால், அவர்கட்கும் ஒற்றுமை ஓரரசு பேரரசு என்பதன் பேரால் அநீதி நடந்திடும்போது மனம் வெதும்புகிறது—இடித்துரைக்க முற்படுகின்றனர். ஆட்சியாளர்களோ, அரசியல் துறையினர் பேசும்போது, இதெல்லாம் அரசியல்வாதிகள் கிளப்பிவிடும் கேடுகள் என்று சுடுசொல் கூறியும், தமிழாசிரியர்கள் பேசும்போது, ஆத்திசூடியும் கொன்றை வேந்தனும் படித்துக்கொண்டு கிடப்பதைவிட்டு இந்த ஆசிரியர்கள் ஏன் அரசியலில் தலையிடவேண்டும் என்று அலட்சியமாகப் பேசியும் ஆணவப்போக்குடன் உள்ளனர்.

விரட்டல் மிரட்டல் டில்லியிடமிருந்து நாம் பெறுவது இவையே என்று கூறுமுன்னர், டாக்டர் பல நூறு முறை தயங்கியிருப்பார்—சொல்வதா வேண்டாமா? சொல்லிப் பயன் காணமுடியுமா? சொல்வது கேட்டு, நம்மை இன்னார் என்று கண்டுகொண்டு காய்ந்திடமட்டுமே பயன்படுமோ? என்று பலப்பல வகையில் யோசித்துவிட்டு, முடிவிலேதான், இதனைச் சொல்லியே தீரவேண்டும் என்று துணிந்து கூறிவிட்டிருக்கிறார்.

தம்பி! கலைத்துறைப் பிரச்சினையில் மட்டுமே இந்த நிலையா என்றால் இல்லை, இல்லை, கலைத்துறைப் பிரச்சினையிலும் இது, என்றுதான் கூறவேண்டி இருக்கிறது. எந்தத்துறையிலும் இதே நிலைதான்! எந்தத் துறையிலும் டில்லி துரைத்தனம், தமிழர்க்கும் தமிழகத்துக்கும் இதே விதமான மிரட்டல் விரட்டல் அளித்துக் கொண்டுதான் அமுல் நடத்தி வருகிறது. அவ்வப்போது, ஒவ்வோர் துறையினர் உள்ளம் வெதும்பிப் பேசுவர்! மற்றத் துறையினர் அதுபோது, பிரச்சினை, எந்தத் துறையினர் மனம் நொந்து பேசுகின்றனரோ, அந்த ஒரு துறைக்கு மட்டுமே உரியது என்று எண்ணி, தமக்கு உரிய பிரச்சினை அல்ல என்று எண்ணிக் கொண்டு விடுகின்றனர்.

டாக்டர் மு.வ. கலைத்துறையில், டில்லி காட்டும் கருத்தற்ற போக்கினையும், சென்னையில் உள்ள அச்சத்தையும் எடுத்துக் காட்டும்போது, வாணிபத் துறையினர், இது தமக்குத் தொடர்பற்ற பிரச்சினை என்று இருந்துவிடுகின்றனர்; அதுபோன்றே வாணிபத்துறையில் எழும் பிரச்சினையில், டில்லி காட்டும் ஆணவப்போக்கினை, வணிகர் சங்கம் கண்டித்தெழும்போது, டாக்டர் மு.வ. போன்ற தமிழாசிரியர்கள்,