உள்ளடக்கத்துக்குச் செல்

வள்ளிநாயகியின் கோபம்/வெள்ளி ரதம்

விக்கிமூலம் இலிருந்து

 4 

வெள்ளி ரதம்

கைலாயத்தில் ஓர் உரையாடல்


உமாதேவியார்: பிராணபதே! என்ன இது! வாட்டமுற்றவர்போலக் காணப்படுகிறீரே! மலர்ந்த முகத்துடன், பெருமிதத்துடன், வெற்றிக்களையுடன், காட்சி அளிக்க வேண்டிய சமயத்தில், சோகமுற்ற கோலம் கொள்வானேன்?

ஏகாம்பரேஸ்வரர்: பார்வதி! பேசாமல் போய்ப்படு. பிராணனை வாங்காதே. போதும் எனக்குள்ள வேதனை!

உமா: இதென்ன விந்தை! என்றையத் தினம் நாம் திருப்தியுடன், பூரிப்புடன், இருக்கவேண்டுமோ, அந்நாளாகப் பார்த்தா, இந்தக் கோபமும் சோகமும் கொள்வது? என் மனம் துள்ளி விளையாடுகிறது! பாமாலையின் விசேஷத்தைப் புகழ்வதா? பூமாலையின் மணத்தினைப் புகழ்வதா? பக்தகோடிகளின் தோத்திரத்தை எண்ணிப் புகழ்வதா? இரவைப் பகலாக்கும் விதமான அலங்கார விளக்கொளியின் விசேஷத்தைப் புகழ்வதா? எதை விடுவது, எதை மறக்க முடியும்! அவ்வளவு அபூர்வமான அகமகிழ்ச்சியைப் பெற்ற நாம், அருள் பொழியவேண்டியது முறையாயிருக்க, நீர், அழுதுவிடுவீர் போலிருக்கிறதே! காரணம் என்ன இந்தக் கலக்கத்துக்கு! ஒருவேளை, அலுப்போ, பிராணபதே!

ஏகாம்: என் கலக்கத்துக்குக் காரணம் தெரியாமல் திகைக்கிறாய், தேவி! நானோ, உன் மனம் என்னமோ, துள்ளி விளையாடுகிறது என்று கூறினாயே, அந்தக் களிப்புக்கு என்ன காரணம் என்று அறியாமல், திகைக்கிறேன். பேதைப் பெண்ணே! சிந்தித்தால் சித்தம் குழம்பும் சம்பவம் நடந்திருக்க, நீ, சிறுகுழந்தைபோல, ஆடிப்பாடி அகமகிழ்கிறாய். வா வா, இமயவன் மகளே! நீ, சிந்தனைத் திறத்தையே இழந்துகொண்டு வருகிறாய். நாம், இழிவு செய்யப்படுகிறோம், கேலிக்கு ஆளாக்கப்படுகிறோம், வீணரின் விளையாட்டுக் கருவிகளாக்கப்பட்டிருக்கிறோம். இந்த விபரீதத்தைப் பற்றித் துளியாவது, எண்ணிப் பார்த்தால், விசாரத்தில் ஆழ்ந்து போவாய்.

உமா: நாதா! என்ன வார்த்தை பேசுகிறீர்கள். பொருள் விளங்கவில்லையே! பித்தா என்று பக்தர்கள் உம்மை அழைப்பது, நிந்தாஸ்துதி என்பீர்களே, அல்ல, அல்ல, நிஜமான வார்த்தையே அது. சித்தம் தடுமாறிப் பிதற்றுகிறீரே! நம்மையா, கேலி செய்தார்கள்! யார் அத்தகைய ‘சண்டாளர்கள்?’ நேற்று நமக்கு நடைபெற்ற ராஜோபசாரத்தைக் காணாத கயவர்களா அவர்கள்! இலட்சோப லட்சம் மக்கள் புடைசூழ, நவரத்னங்கள் விண்ணிலிருந்து பொழிவதுபோல, வாண வேடிக்கையும், நந்தியின் முகம் வெட்கத்தால் சிவந்துவிடச் செய்யும் அளவுக்கு, வெடி வேட்டும், உடனிருக்க, பக்தகோடிகள், வாழ்த்த, அழகிய, அலங்கார மிக்க, வெள்ளி ரதத்திலே, நாம் வீற்றிருந்து, வீதிவலம் வந்த காட்சி இன்னமும், அடியாரின் மனக் கண்ணில் தோன்றிய வண்ணம் இருக்கிறதே! முக்தி தரும் நகரேழில் முக்கியமாம் காஞ்சியம்பதியிலே, பல இலட்ச ரூபாய் செலவிலே, நமக்காக வெள்ளிரதம் செய்து, விழாக்கொண்டாடினரே, பக்தர்கள், இரவு பகலாகிவிட்டதே, ஊர் இந்திரலோகம்போலக் காட்சி கொண்டதே, எங்கும் எவரும், வெள்ளிரத உற்சவத்தின் விசேஷத்தைப் பற்றித்தானே வியந்து பேசினர்! அவ்விதம், நம்மைப் பக்தர்கள், பெருமைப்படுத்திக் கொண்டாடி, தோத்தரித்திருக்க, நீர், ஏன் விசாரப்படவேண்டும்? நாத்திகப் புயல் அடிக்கிறதோ என்று நாம் எண்ணிக்கொண்டிருந்தோம் ஏக்கத்துடன்! பூஜா உணர்ச்சி புகைந்து போய்விட்டதோ என்று சந்தேகப்பட்டோம். காஞ்சி க்ஷேத்ரவாசிகள் நமது சந்தேகத்தைப் போக்கி, அழகான வெள்ளிரதத்தைக் காணிக்கையாக்கினரே, நமக்கு...

ஏகா: பார்வதி! உன் பூரிப்புக்கு எது காரணமாக இருக்கிறதோ, அதுவே, என் விசாரத்துக்குக் காரணமாக இருக்கிறது. எந்த வெள்ளித் தேர் வைபவத்தைக் கண்டு உன் மனம் துள்ளி விளையாடுகிறதோ, அதே வைபவந்தான் எனக்கு வாட்டத்தைக் கொடுத்திருக்கிறது.

உமா: விளங்கவில்லையே, நாதா!

ஏகா: விளங்காது உனக்கு, நான் விளக்கினாலொழிய! பார்வதி! வெள்ளிரத உற்சவம் கொண்டாடினார்களே, அது நமக்குப் பெருமை என்றா எண்ணிக்கொண்டாய்?

உமா: இல்லையா, நாதா! அத்தனை இலட்சம் செலவு செய்தது, நம்மைப் பெருமைப்படுத்துவது என்றுதானே பொருள்!

ஏகா: இங்குதான், நான் சிந்திக்கிறேன்—சித்தம் சோர்கிறேன்—நீ சிந்திக்காமலிருக்கிறாய், ஆகவே மகிழ்ச்சி பெறுகிறாய்! சிந்தனை வேண்டும் சிவகாமி! நாமாவது சிந்திக்காவிட்டால், பிரபஞ்சம் என்ன கதியாவது! இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வந்தார்களல்லவா...?

உமா: ஆமாம்—பல்வேறு ஊர்களிலிருந்து—மோட்டரிலும் ரயிலிலும்......

ஏகா: ஊரே திரண்டுவிட்டதல்லவா?

உமா: ஆமாம்—ஆடவரும் பெண்டிரும்—குழந்தைகளும் வயோதிகரும்—பாமரரும் படித்தவர்களும், பட்டிக்காடுகளும் பட்டணவாசிகளும், சகலரும் திரண்டு வந்தனர்......

ஏகா:—வந்தனால்லவா......!

உமா: வந்தனர் — வந்தனர் — பன்னிப் பன்னிக் கேட்கிறீரே இதனை......

ஏகா: காரணமின்றி அல்ல நான் கேட்பது. இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வந்தனர்—எதற்கு...?

உமா: விளையாடுகிறீரா! எதற்கு! இது ஒரு கேள்வியா? எதற்கு வந்தனர் என்றால், வெள்ளித்தேர் பார்க்க!

ஏகா: இன்னொரு முறை கூறு! கோபியாமல் சொல், கோமளமே! எதற்கு வந்தனர் அவ்வளவு மக்களும்.........?

உமா: வெள்ளித்தேர் பார்க்க!

ஏகா: சரியாகச் சொன்னாய் பார்வதி! உண்மையை உரைத்தாய்! வெள்ளித்தேர் பார்க்க வந்தனர், லட்சக் கணக்கான மக்கள்—உன்னையும் என்னையும் பார்க்க அல்ல—நம்மைத் தரிசிக்க அல்ல—நமக்குப் பூஜை செய்ய வரவில்லை—வெள்ளித்தேர் பார்க்கவே வந்தனர்! பார்வதி! வெட்கமும் துக்கமுமின்றிக் கூறுகிறாயே, வெள்ளித்தேர் பார்க்க வந்தனர் என்று! நம்மைப் பார்க்க வரவில்லை!! இலட்சக் கணக்கான மக்களைப் பக்தகோடிகளை, நீ, விவரித்தபடி, பலரகமான மக்களை, திரட்டிக்கொண்டு வரும் மகிமை, சக்தி, நமக்கு இல்லை! கேவலம், வெள்ளித்தேர் கொண்டுவந்து சேர்த்தது இவ்வளவு பெருந்திரளான மக்களை! கைலைவாசி, திரிபுராந்தகன், கபாலி, பிறை சூடி, என்றெல்லாம் எனக்குச் சிறப்புப் பெயர்கள் பல உள! தோடுடைய செவியன்! தூவெண்மதிசூடி காடுடைய சுடலைப்பொடி பூசி! என்றெல்லாம் கவிதாவடிவிலே, பல பட்டங்கள் உள்ளன எனக்கு. உனக்கும், உயர்வளிக்கும் பட்டங்கள் பல! எனினும், பிராணநாயகி! நமது பெருமை, மகிமை, போதுமானதாக இல்லை. அவ்வளவு பக்தகோடிகளைத் திரட்டிக் கொண்டுவா! நம்மைப் பற்றி, நால்வர் பாடியுள்ள பாசுரங்கள், புராணிகர்கள் இழைத்துள்ள கதைகள், போதுமானவைகளாக இல்லை, பக்தகோடிகளைக் கூட்டிவர! வெள்ளித்தேர், தேவைப்படுகிறது! வேதனையாக இல்லையா! வேலவன் தாயே! நீயே, கூறினாய், மக்கள் எதற்காகக் கூடினர், என்பதை! வெள்ளித்தேர் பார்க்க வந்தனர்—நம்மைத் தரிசிக்க அல்ல!

உமா: நாதா! எனக்கும் இப்போதுதான் ஓரளவுக்கு விளங்குகிறது.........

ஏகா: உமா! நீயும், அன்று மக்களைப்போலவே, பொழுது போக்கிவிட்டாய்—கொட்டு முழக்கு கேட்டு மெய் மறந்து போனாய்—வாண வேடிக்கையைக் கண்டு வாய் பிளந்து நின்றாய்—சிந்திக்கவில்லை—பக்த கோடிகள் பேசிக்கொண்டதையும், கேட்கவில்லை. கேட்டிருந்தால், நான் அடக்கிக்கொண்டதைப்போல, உன்னால் ஆத்திரத்தையும் அழுகையையும் அடக்கிக்கொண்டிருந்திருக்க முடியாது.

உமா: என்ன பேசினார்கள் பிராணபதே!

ஏகா: என்ன பேசினார்களா! எல்லாம் பேசினார்கள்—நம்மைப்பற்றி மட்டுந்தான், ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்தபோதெல்லாம், அந்த ஜனங்கள், வெள்ளித்தேர் எந்தத் தெருவில் இருக்கிறது—இந்த வீதிக்கு வெள்ளித்தேர் வர, எவ்வளவு நேரம் பிடிக்கும்—வெள்ளித்தேர், எத்தனை மணிக்குக் கிளம்பிற்று—எத்தனை மணிக்குக் கோயில் போய்ச் சேரும்—என்று, வெள்ளித்தேர், வெள்ளித்தேர் என்று ஓயாமல் பேசினரேயொழிய, நம்மைப்பற்றிச் சிந்திக்கவே இல்லை. வெள்ளித் தேருக்குத்தான், சகல மரியாதையும், வெள்ளித்தேரின் மீதுதான்—இறைவன் வீற்றிருக்கிறானே தேவியுடன் என்று எண்ணினரோ? இல்லை! இறைவனைப்பற்றி அறவே மறந்தனர். வெள்ளித்தேர், எவ்வளவு செலவுசெய்து கட்டினார்கள்? எவ்வளவு வசூலாயிற்று! யார் வசூலித்தார்கள்? எங்கெங்கு சென்று வசூலித்தனர்? என்று கேள்விச் சரங்கள் பூட்டுவோரும், “சொல்லுகிறார்கள் நாலு இலட்சம் என்று யார் கண்டார்கள்—” என்று ஒரு சந்தேகப் பேர்வழி கூற, சளைக்காத சைவ மெய்யன்பர், சரியான கணக்கு—சத்யமான கணக்கு என்று வாதாட, சமரசப் பிரியர், செலவு கிடக்கட்டும், கணக்குச் சரியா தவறா என்பதுகூடக் கிடக்கட்டும். வேலைப்பாடு நேர்த்தியாக இருக்கிறது என்று பேச—இப்படி, பேச்செல்லாம் வெள்ளித்தேர் பற்றியதாக இருந்ததேயொழிய, நமது மகிமையைப்பற்றி ஏதும் பேசவே இல்லை. உமா! வெள்ளித்தேர், நம்மை மறைத்தேவிட்டது! வெள்ளித்தேர் உற்சவ வைபவத்தில், மக்கள் இலயித்துப்போய், நம்மைத் தொழவும் மறந்து போயினர். ஆஹா! தேரின் அழகைப் பார், பளபளப்பைப் பார், அலங்காரத்தைப் பார், என்று இப்படித், தேரைப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தனரேயன்றி, உன் அருளொழுகும் கண்களைப்பற்றியோ, என் ஜடாமுடிபற்றியோ, கையிலுள்ள மழு, சிரத்திலுள்ள கங்கா, மார்பில் புரளும், நாகமாலை, எனும் இவை பற்றிப் பேசுவாரே காணோம்! வேதனை பிறவாமல் இருக்குமா!

உமா: உண்மைதான், நாதா! தாங்கள் கூறியது கேட்டு, நானும் உள்ளம் வாடுகிறேன்.

ஏகா: தேடித் தேடிப் பார்த்தேன், நம்மை நாடி வந்தவர் ஒரு பத்துப் பேராவது கிடைக்கமாட்டார்களா, என்று, நீறு பூசிகள்கூட, வேறு சிந்தனையிலீடுபட்டு, என்னை மறந்து போயினர்.

உமா: மன்னிக்க வேண்டும், நான், இவ்வளவு ஆழ்ந்த சிந்தனையைச் செலுத்தவில்லை.

ஏகா: பார், பார்வதி! ஒரு வேடிக்கையை. பக்த கோடிகள், நம்மைப் பற்றிப் பேச மறந்து, அந்தத் தேரைப் பற்றிப் பெருமை பல பேசியதுடன், அதை முன்னின்று அமைத்தவரின் குணம், பணம், ஆகியவை பற்றியும் பேசினர்! பக்தி என்ற பதத்துக்குரிய இலட்சணத்தைத் துளியும் அன்று நான் காணவில்லை.

உமா: இருந்தாலும், இறைவன் பொருட்டு இவ்வளவு சிரத்தை காட்டினார்களே, என்பதை எண்ணும்போது, மகிழ்ச்சி பிறக்கவில்லையா?

ஏகா: இதென்ன கேள்வி பார்வதி! நம்மைத் தரிசித்து அருள் பெற, தோத்தரித்து முக்தி கோர, மிக மிகச் சிறு கூட்டமே வரக் காண்கிறோம் வழக்கமாக! ஒவ்வொரு நாளும் ஆலயம் வருகிறவர்களின் தொகையை நீ அறியாயா? அவ்வளவு பேரும், தூய்மையான நோக்கத்துடனே வருபவர்கள் அல்ல! அதுவும் உனக்குத் தெரியும். நமது தரிசனத்துக்கு மிகச் சிறு கூட்டம்—ஆனால் வெள்ளித்தேர்—தங்க ரிஷபம் பொன் பல்லக்கு—என்று இப்படி ஏதாவது காட்சி காட்டினால், ஊர் திரண்டு விடுகிறது. இதன் பொருள் என்ன?உண்மையாகக் கூறுகிறேன் உமா! அன்று அவ்வளவு பெருங் கூட்டத்தைப் பார்க்கும்போது, எனக்குக் கோபந்தான்! இறைவனின் பெருமையை உணராத மக்களே! நித்தமும் தான் வீற்றிருக்கும் கோயிலுக்கு, இவ்வளவு ‘அக்கரையுடன்’ நீங்கள் வருவதில்லையே! இன்று மட்டும் குவிந்துவிட்டீர்களே! என்னைவிட, உங்களுக்கு, வெள்ளித்தேர் மீது அமோகமான ஆசை என்று தெரிகிறதே! என்னிடம் உள்ளன்பு இருக்குமானால், உண்மையான பக்திமான்களாக நீங்கள் இருந்தால், இன்று வருவது போலத்தானே, ஒவ்வோர் நாளும்—உள்ளுர்க்காரர் வரையிலாவது—பெருவாரியாக வரவேண்டும்? வருவது கிடையாதே! இன்று வந்துவிட்டீர்களே!!—என்று அந்த மக்களைப் பார்த்துக் கேட்கலாமா என்றுகூட எண்ணம் பிறந்தது.

உமா: கேட்டிருக்கலாம்...............

ஏகா: கேட்டிருந்தால்கூட அந்த ஜனங்களின் செவியில் விழுந்திருக்காது. அவர்கள்தான், அவ்வளவு, ஆனந்த அமளியில் ஈடுபட்டுக் கிடந்தனரே! ஆறுமுகத்தைப் பார், அருணாசலத்தைக் கூப்பிடு, புவனா மாதிரி இருக்கிறது, பொன்னியின் தங்கை போகிறாள்—பாண்டியாக் மோட்டார், பர்மாஷெல் கம்பெனி, சரிகை கலந்த வெண்பட்டு, சர். தேசிகாச்சாரி வீட்டு மனஷாள், S.O.C. கம்பெனி, இன்கம்டாக்ஸ் ஆபீசர், என்று இப்படித்தான், பல விஷயங்களைப் பற்றி இரைச்சலிட்டுக் கொண்டிருந்தார்களே தவிர, என்னைப் பற்றியோ, உன்னைப்பற்றியோ ஒரு சொல்லும் சொல்லக் காணோமே! வெள்ளித்தேராம், வெள்ளித்தேர்! வேதனையைத் தந்தது! நமது பெருமையையே குறைத்துவிட்டது. உண்மையாகச் சொல்கிறேன் உமா! இதே வெள்ளித்தேரில் வினாயகரோ, விஷ்ணுவோ, நாரதரோ, நந்தியோ, பூதகணமோ, சித்ராபுத்ரனோ, ஊர்வசியோ, எவனாவது தவசியோ, ஏசுவோ புத்தரோ, எந்த மூர்த்தியை அமர்த்தியிருந்தாலும், இதே கூட்டம் கூடிவிட்டிருக்கும்! கூட்டம், தேருக்கு—தேவனுக்கு அல்ல! இதை அறிந்தபோதுதான் நான் ஆத்திரமடைந்தேன். மேலும், உமா! நீயே சொல்லு, நமது பெருமையும் மகிமையும் என்ன காரணத்தினாலோ, ஜனங்களை வசீகரிக்கவில்லை என்பதற்காகத்தானே, இப்படி வெள்ளித்தேர் போன்ற வைபவங்களை ஏற்பாடு செய்கிறார்கள்! இது நமக்குப் பெருமை தருவதா! நம்மைக் கேலி செய்வதல்லவா இது? பார்த்தாயா பரமனே! பக்தர்கள், அத்தி பூத்தது போலாகிவிட்டனரே, ஆலயம் வருவோரின் தொகையே குறைந்துவிட்டதே என்று கூறினீரே, இதோ பாரும் கும்பல் சேர்க்கும் வித்தையை, ஒரு தேர் செய்தோம் வெள்ளியில், இலட்சம் மக்களைக் கொண்டுவந்தோம் உம் எதிரில்! எப்படி எங்கள் சமர்த்து!—என்று நம்மிடம் கூறி, முன்வரிசைக்காரர்கள் நம்மைக் கேலி செய்வதுபோலவே தோன்றிற்று. பத்தே பத்துபேர் வந்தாலும் போதும் பக்தியுடன் நம்மைத் தரிசிக்க! அதுதான் நமக்குப் பெருமை—பூரிப்பு! இப்படி ஊரே திரண்டுவந்து என்ன பயன்? வெள்ளித் தேருக்குத்தானே, பெருமை! நமக்கா? தேராகச் செய்த அவ்வளவு வெள்ளியையும், தேள் உருச்செய்து தெருவில் கொண்டுவத்தால்கூடத்தான் பெருங்கூட்டம் கூடிவிடும். நமக்குப்பதில், வேறு தேவன் இருந்தாலும், மக்கள், வித்தியாசம் பாராட்டப்போவதில்லை. ஆகவேதான் எனக்கு ஆத்திரமாகிவிட்டது.

உமா: இவ்வளவு விளக்கமாகச் சொன்ன பிறகுதான், எனக்கும் வெட்கமும் துக்கமும் பிறக்கிறது, நம்மைப் பெருமைப்படுத்தவே இல்லை அந்த நடிப்புப் பக்தர்கள்.

ஏகா: விழா நடத்தியவர்கள், நம்மை, எவ்வளவு கேலிக்குரிய நிலையில் கொண்டுவந்து வைத்தனர் தெரியுமோ? ஊரூருக்கும், விளம்பரத்தாள் அனுப்பி வைத்தனர், விசேஷத்தைத் தெரிவிக்க— கூட்டம் சேர்க்க! அதிலே, பூசணைக்காய் அளவிலே, வெள்ளிரத உற்சவம் என்ற வாசகம்—உருத்திராட்ச அளவுகூட இராது, நமது பெயர்! என்ன பொருள் இதற்கு? ஏகாம்பரேஸ்வரரைக் காண வாருங்கள்! ஈசனின் அருளை நாடுங்கள்! பக்தி செலுத்துங்கள்!—என்று கூறினால் கூட்டம் வராது, வெள்ளி ரதம் பார்க்க வாருங்கள் என்று கூப்பிட்டால்தான், கும்பல் சேரும் என்று தீர்மானித்துவிட்டனர். நம்மைப் பெருமைப்படுத்துவதா, அந்தத்திருக்கூட்டத்தின் நோக்கம்?

உமா: நிச்சயமாக இல்லை—நம்மை நையாண்டியே செய்தனர் நாதா!

ஏகா: யார் கேட்டார்கள் இவர்களை வெள்ளித்தேர் வேண்டுமென்று!

உமா: மிதமிஞ்சிய பணம்!

ஏகா: அதுவும் இல்லையே! அதே ஊரில், மூன்று ஆண்டுகளாக, ஒரு “காலேஜ்” கட்டுவதற்கு, இந்தக் கனதனவான்களால் முடியவில்லை—முகாரி பாடினார்கள்—கூடிக் கூடிப் பேசினார்கள், பெட்டியைத் திறக்கவே இல்லை—இதற்கு மட்டும் கொட்டிக் கொடுத்தனர். ஒரு வாசகசாலை உண்டா அந்த ஊரில்! ஒரு விளையாட்டு மைதானம் உண்டா! ஏழைக் குழந்தைகளுக்கு ஒரு பராமரிப்புச்சாலை உண்டா! ஒரு நகரப் பொது மண்டபம் உண்டா? நல்ல ரோடு உண்டா? சாக்கடை நாற்றம் போனதுண்டா! எதுவும் இல்லை! எதைச் செய்யவும் பணம் கிடைப்பதில்லை. இதற்குமட்டும் கிடைத்தது இலட்சக்கணக்கில். இந்தத் தேர், நம்மை மறைத்து நமது மகிமையைக் குறைத்து உண்மைப் பக்தியைச் சிதைத்தது. வெறும் பொழுது போக்குக்கு, வீண் களியாட்டத்துக்கு, பலவகையான நடமாட்டத்துக்கு, வம்பளப்புக்குப் பயன்பட்ட இந்தத்தேர், பல இலட்ச ரூபாய்களை விழுங்கிவிட்டு, பயன் என்ன தருகிறது! வருஷத்தில் ஒருநாள்! இதற்கு இவ்வளவு பணம் விரயமாவதா? இந்தத் தொகையைக்கொண்டு, உமா நெசவுத்தொழிற்சாலையோ, சிவா சாயத்தொழிற்சாலையோ, ஏகாம்பரா காலேஜோ, அமைத்திருந்தால், ஒவ்வொரு நாளும் பயன்தருமே—ஏழை எளியவர் பிழைப்பரே, அறிவுக்கதிர் பரவுமே—செய்தனரா?

உமா: செய்யவில்லையே!

ஏகா: வேலையில்லாமல் வேதனைப்படுபவர்கள், படிக்க வழியின்றி வாட்டமடைகிறவர்கள், தங்க இடமின்றி திண்டாடுகிறவர்கள், அதே ஊரில், வருஷத்திற்கு ஒருதினம் நாம் சவாரி செய்வதற்காக, இவ்வளவு பெருஞ் செலவில் வெள்ளித் தேர் அமைத்திருப்பதை எண்ணிடும்போது, உமா! அவர்கள் மனம் என்ன பாடுபடும்! என்னென்ன பேசுவர்! இவ்வளவுக்கும் இடம் வைத்து, நம்மை இடர்ப்படச் செய்கிறார்கள், பக்தி என்ற தத்துவத்தையே புரிந்து கொள்ளும் பண்பும் அற்ற, பணந்தேடிகள்!!

உமா: விசித்திர சித்தர்களாக உள்ளனரே நாதா! இவர்கள். ஒரு இலட்சரூபாய் திரட்டி, காலேஜ் அமைக்க முன்வராத, முன்வரிசைச் சீமான்கள், பல இலட்சத்தை வெள்ளித்தேர் ஆக்க மட்டும், என் சம்மதித்தார்கள்.........

ஏகா: ஏனா! என்னை ஏய்க்கலாம் என்ற எண்ணம். கல்லூரி அமைத்தால், பலர் படித்துவிடுவார்களே! படித்தால், அவர்கள் நிலை உயருமே! அதை எப்படிக் கண்டு சகிக்க முடியும் அவர்களால்! வெடியாகவும் ரதமாகவும் பணம் பாழானால், பரவாயில்லை, என்று எண்ணுகிறார்கள். பிறரை வாழவைக்கவோ, நிலையை உயர்த்தவோ, அறிவைப் பரப்பவோ முன்வரமாட்டார்கள்—அச்சம்—அசூயை—அவநம்பிக்கை—மக்களின் வறுமைப்பிணி குறைந்துவிட்டால், அறியாமை நீங்கிவிட்டால் பிறகு, தங்களுடன் சமமாகிவிடுவரே என்ற சந்தேகம், சஞ்சலம்.

உமா: மக்களிடம் அன்பு இல்லை அவர்களுக்கு?

ஏகா: இருந்தால், மக்களுக்கு இதம் தரும் காரியத்துக்குப் பணம் இல்லை என்று கூறிவிட்டுத், தேருக்குத் தருவார்களா, தேவி!

உமா: நாதா! என்னால் வேதனையைத் தாங்க முடியவில்லையே......

ஏகா: தேவி! நமது மனோ வேதனையும், நாட்டு ஏழை மக்களின் மனோ வேதனையும் வீண் போகாது.

உமா: நான் இப்போதே, இந்த வீண் காரியத்தை முன் நின்று நடத்தியவர் சொப்பனத்தில் தோன்றி புத்தி புகட்டப் போகிறேன்.

ஏகா: வீண்வேலை, பார்வதி! வீண்வேலை! அந்த ஆசாமி ஏற்கனவே சொப்பனம் கண்டபடிதான் இருக்கிறார்! அவருடைய சொப்பனத்திலே, புண்யம் குவிவதும், பவுன்களாக மாறுவதும், புதுப் புது ‘வியாபாரம் கிடைப்பதும்’ புண்யமூர்த்தி என்று தந்திரக்காரர் புகழ்வதுமான, பல காட்சிகள் தோன்றியபடி இருக்கின்றன!

உமா: புண்யம் வேண்டுமாம், புண்யம்! சொப்பனம் தான் காணவேண்டும்! யார், ஏழையின் துயரைத் தீர்க்க முன்வராமல், நடமாடும் தெய்வத்தை வழிபடாமல், இருக்கின்றனரோ, அவர்களை, நாம் நமது அருளைப் பெரும் அருகதையற்றவர் என்று ஒதுக்கித் தள்ளிவிடுவோம், என்பதை அவர்கள் அறியாரோ!

ஏகா: அறிவர் சிற்சில சமயங்களில் மட்டும்—உமா! நாம் கேட்டால் போதாது, மக்கள் கேட்கவேண்டும்! வேதனையுள்ள நிலையில் நாங்களிருக்க, வெள்ளித் தேர் உற்சவமா, அடுக்குமா, நியாயமா, ஆண்டவன் இதை ஏற்றுக் கொள்கிறாரா, என்று கேட்கவேண்டும், ஏழைகள்......

உமா: கேட்பார்களா, நாதா!

ஏகா: நிச்சயமாகக் கேட்கப் போகிறார்கள். மக்களுக்கு அதற்குத் தேவையான நெஞ்சு உரம் அளிப்பதற்காகவே. நாம், நமது திருக்கூட்டத்தை அனுப்பிவைத்திருக்கிறோம்.

உமா: நமது திருக்கூட்டமா? யார்?

ஏகா: நீறு பூசாதவர்கள்; ஆனால் நேர்மையாளர்கள், உருத்திராட்சம் அணியார்; ஆனால் உள்ளம் தூய்மையானது, பாசுரம் பாடார்; ஆனால் பாசாங்குக்காரரல்ல......

உமா: யார் நாதா அவர்கள்?

ஏகா: அறிவு பரப்பும் திருக்கூட்டம்....

உமா: அதற்கெனப் பெயர் உண்டோ, இல்லையோ?

ஏகா: உண்டு, உமா! உண்டு; அந்தத் திருக்கூட்டத்தாரின் பெயர்தான் தன்மான இயக்கத்தினர், என்பது.