20
பிடி
தது வைணவம் என்ற நிலைமை ஏற்பட்டுவிடும். எனவே, வைணவம் வாழ வேண்டுமானால், பரஞ்ஜோதியாருக்கு அரச அவையிலே, இன்றுள்ள செல்வாக்கு ஒழிந்தாக வேண்டும்—என்று பிரச்சாரம் புரியவும், கட்சி சேர்க்கவும், வைணவர்கள் முனையாமலிருக்க முடியாதல்லவா?
தாய்நாடு சாம்பலானதைக் கண்டு தவித்துக் கொண்டிருந்த சாளுக்கிய வீரன், வில்லாளன், இந்த நிலையை நன்கு அறிந்து கொண்டதுடன், தன் நோக்கத்துக்கு, இச் சூழ்நிலையைச் சாதகமாக்கிக் கொண்டான்.
“பரஞ்ஜோதி! எமது வாதாபிக்கு நெருப்பிட்டாயல்வவா? தீக்கு இரையாக்கினாய் திருநகரை! இதோ, தோற்ற சாளுக்கியன் மூட்டும் தீ, உன் நாட்டை அழிக்கப் போகிறது பார்!” என்று கூறவில்லை—ஆனால் அவன் செய்தது என்னவோ, அதுதான். வெகுண்ட வைணவருக்கு, வேக மூட்டலானான், அவர்களிடம் பேசி. என்ன பேசினான்?
“புலிகேசி, பிணமானான் களத்தில்! கடும் புயலினால் வேருடன் களைந்து எறியப்பட்ட மரமானான். சாளுக்கியப் படை சின்னாபின்னமாகிவிட்டது. வாதாபி நகரம் தீக்கு இரையாயிற்று. எல்லாம் நமது படைவீரர்களின் தீரத்தால்—அவர்கள் காட்டிய அபாரமான போர்த்திறத்தினால்!”
“சாளுக்கியப் படை தோற்றது உண்மை. பல்லவருக்கு வெற்றி கிட்டியதும் உண்மை. ஆனால் அந்த வெற்றிக்குக் காரணம், பல்லவப்படை காட்டிய வீரம் என்று கூறுவது முழு உண்மையாகாது. நண்பர்களே! என் மீது கோபிக்க வேண்டாம். சாளுக்கியர் கோழைகளல்ல; வீரம், பல்லவருக்கு மட்டுமே உரித்தானதுமல்ல; பல்லவப் படை காட்டிய வீரம் மட்டுமல்ல, வாதாபியின் வீழ்ச்சிக்குக் காரணம்...”
“பேசுகிறாய், பெருமூச்செறிகிறாய், உண்மை அல்லவென்கிறாய். நீ கூறுவதுதானே, பல்லவப் படையின் வெற்றிக்குக் காரணம். அவர்களின் வீரதீரமல்லவா?”
“அதுமட்டுமல்ல என்றுதான் கூறுகிறேன்.”