உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

181

லும் பரவாயில்லை, எனக்கு ஓர் உல்லாச ஓடம்வேண்டும், அதனை நான் களிப்புக் கடலில் செலுத்தி மகிழப்போகிறேன் என்று செப்பிய வன்னெஞ்சக்காரியா! என்ன குறை கண்டாயடா மகனே! புதியதாய் தேடிடவேண்டிய விபரீதம் நேரிட்டதா, மகனே! மகனே! மதி இழந்தனையோ! மயக்க முற்றனையோ! பேதைமகனே! எதனையும் பெறலாம், அதற்கும் ஓர் வழி கிடைக்கும், ஆனால் அன்னையின் அன்பு என்பதனை, அறியாச் சிறுவனே! விலைபோட்டு வாங்க இயலுமா! அன்னையின் அன்பு, பெற்றவள் பாசம், மலிவு விலைக்குத் தருகிறோம், வருக! பெறுக! என்று யாரோ அங்காடியில் கூவிக்கூவி விற்பதாகக் கூறுகிறாயே! விளையாட்டுப் பருவத்தினன் நீ எனினும், கூடுகட்டி வாழும் குருவிகளைப் பார்க்கத் தெரியுமே உனக்கு - தாய்க் குருவியிடம் தானே குஞ்சுகள் தீனியைக் கேட்கின்றன—ஊட்டப்பெறுகின்றன? மடியிலே பாலைச் சுமந்து நிற்கும் பசு எதுவோ அதுவே நமக்குத் தாய் என்று ஊட்டிடச் செல்லும் கன்று, நீ பார்த்ததுண்டா! ஏடுகள் புகட்டுவதைக்கூடக் கவனிக்க வேண்டாம்; பக்குவம் வேண்டும் அதற்கு! கண்ணுள்ளோர் காணக்கூடிய காட்சிகளடா இவை குருவிக் கூட்டிலே காணப்படும் குடும்ப பாசமும், துள்ளிடும் கன்றுக்குப் பாலும் அளித்து பரிவுடன் உடலை நாவினால் நீவியும்விடும் தாய்ப்பசுவின் பாசமும்!! இந்தக் காட்சிகள் போதுமே, தாய் உள்ளத்தைத் தாயிடம்தான் பெறமுடியும் என்ற உண்மையை உணர்த்த!” என்றெல்லாம் தம்பி! தாயகம் கேட்கிறது! நான் காணுகின்ற வயலும் அதற்கு வளமூட்டும் நீர் நிலையங்களும், அந்த வளத்தை விளக்கக் குலுங்கிடும் மணியும் கனியும், அவைதமைப் பெற உழைப்பு நல்கிடும் உத்தமரின் வியர்வையும், குன்றும் குளமும், கூத்தும் பாட்டும், மக்களின் மாண்பும் பிறவும், எல்லாம் எனக்கு இதனைத்தான் காட்டுகின்றன! உனக்கு மட்டுமென்ன, நீயும் இதே எண்ணம்தான் பெறுகிறாய்!!

தம்பி எனக்கும் உனக்கும் காமராஜருக்கும் என்றுகூட வேண்டுமானால் சேர்த்துக்கொண்டே பேசுவோம், தேசிங்குராஜன் என்ற உடனே சுரக்கும் வீர உணர்ச்சி, வங்கத்திலும் கலிங்கத்திலும் ஏற்படமுடியுமா? பாக்தாதிலும் டமாஸ்கசிலும் எப்படி தேசிங்கு ராஜன் கதை கேட்டால், வியந்து பேசுவரோ அவ்வளவுதான் கல்கத்தாவிலும் கான்பூரிலும்! கட்டப்பொம்மன் என்றதும் இங்கு தோள் பூரித்து, மாற்றானின் தாள் வணங்கமாட்டேன், என் கரத்தில் வாள் உண்டு! என்று ஆர்த்தெழத்தக்க வீரம் நமக்கு எழுவதுபோல, பிற எங்கு காணமுடியும்? பாஞ்சாலங் குறிச்சியின் வீரக் காதையைக்