உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரஷியாவுக்கு இதம் செய்யச் சென்று பல ஆண்டுகள் அங்கே தங்கிவிட்டது போலவும், இவர்கள் இங்கே இல்லாத நேரமாகப் பார்த்து நாம் வளர்ந்தது போலவும், இவர்கள் இங்கே இருந்திருந்தால் நம்மை வளரவிடாமல் அப்பொழுதே செய்துவிட்டிருக்க முடியும் என்பதைப் போல எண்ணிக் கொண்டு பேசுகிறார்கள்! இவர்கள் அவ்வளவு பேசிக் கொண்டும் இருந்து வந்த நேரத்திலேயேதான், கழகம் வளர்ந்தது.

67000 அடி ஆழமான குழி தோண்டப் போவதாகப் பேசும் இந்த வல்லவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

வளர்ந்தால் வளரட்டும் அது நம்மை என்ன செய்யும் என்று இருந்துவிட்டர்களா என்றால் அதுவும் இல்லையே! அப்போதும், இதே விதமான பேச்சு.

ஒழித்துக் கட்டுவோம்
குழி தோண்டிப் புதைப்போம்
கூண்டோடு தொலைப்போம்
பூண்டோடு ஒழிப்போம்

என்ற முழக்கங்கள்; உருட்டல் மிரட்டல்கள்!

இன்றைய இந்தியக் காங்கிரஸ் தலைவர் காமராஜர் அன்று சொன்ன திருவாய் மொழி தெரியாதா! கழகத்தாருடைய கை கட்டை விரலை வெட்டி விடுவோம் என்பதல்லவா!!

எத்தனை விதமான எதிர்ப்புகளை,

எத்தனைக் கலவரங்களை மூட்டிவிட்டனர்!

என்னென்ன விதமான வழக்குகளைத் தொடுத்தனர்;

எத்தனை தடிஅடி! சிறைவாசம்!

சதிச் செயல்களுக்குத்தான் குறைவா?

தூத்துக்குடி சாமியிலிருந்து வண்ணை பாண்டியன் வரையில் கொலை செய்யப்படவில்லையா!